சிறப்புப்பக்கங்கள்

மு.கருணாநிதி : கன்னித் தமிழில் காந்தப் பேச்சு

வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

மாணவனாக இருந்தபோது கலைஞரின் பேச்சை முதல்முதலாக நான் கேட்டது நாகர்கோவில் இடைத்தேர்தலில் பெருந்தலைவர் காமராசரும் சுதந்திர கட்சியின் டாக்டர் மத்தியாசும் போட்டியிட்டபோதுதான். அது தேர்தல் பிரச்சாரம். பின்னர் தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி. கல்லூரிப் பொன்விழாவில் முழுமையான சொற்பொழிவைக் கேட்டேன். அன்றைக்கு அவருக்கு 47 வயது. 14 வயதில் இந்தியை எதிர்த்துப் பேசி, அரசியலுக்கு வந்தவர். கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் அதற்கு முன்பாக மேடைகளில் முழங்கியிருக்கிறார். இன்றும் தமிழ்நாட்டின் மேடைகளில் அவரது குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ஊருக்கு ஊர் அவர் உரையைக் கேட்க, உடன்பிறப்புகளே என்று விளித்து அவர் விடுகின்ற இடைவெளியைக் கைதட்டலால் நிரப்ப மக்கள் காத்துக் கிடக்கிறார்கள்.

சுருள்முடி, கழுத்தில் கறுப்புத் துண்டு, கரகரப்பான குரல், அவ்வப்போது உயரும் கை, சின்னதான உடல் அசைவு.. இந்த தோற்றமும்உடல்மொழியும்தான் திருக்குவளையில் ஒரு சாமானியனாகப் பிறந்த அவருக்கு தமிழ்நாட்டை ஆளும் சிம்மாசனத்தை அளித்தமுக்கியமான கருவிகள்.

கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டு காலமாக பொதுமேடைகளிலே அரசியல், சமூகம், இலக்கியம் என்று மக்கள் ரசிக்கும் அளவுக்குப் பேசிவருகின்ற தலைவர் கலைஞர் சுமார் மூன்று தலைமுறைகளின் சிந்தனைப் போக்கை மாற்றி அமைத்திருப்பவர். மத்தியில் குடியரசுத்தலைவர்களையும் பிரதமர்களையும் தீர்மானிப்பதில் பங்காற்றி தமிழர்களுக்கு பெருமைத் தேடித் தந்தவர்.

கவியரசு கண்ணதாசனின் 61வது பிறந்தநாள் விழாக் கூட்டத்திலே ம.பொ.சி, வலம்புரி ஜான், மேத்தா போன்ற கவிஞர்கள் இருக்கிற கூட்டத்தில் தலைவர் கலைஞர், கவியரசைப் பற்றி தன் பழைய நினைவுகளைப் பேசும் பேச்சு மிகவும் பிரபலம். எல்லா ஊர்களிலும் காசெட்டுகளைப் போட்டு இதைக் கேட்பார்கள். அப்பேச்சிலே வரும், “ ஒரு இளைஞர் புதுக்கவிதை எழுதினார். விதவை என்றால்கூட பொட்டில்லையே என்று. நான் ஒரு கூட்டத்திலே பேசும்போது சொன்னேன். விதவை என்று வடமொழியில் சொல்வதற்குப் பதிலாக கைம்பெண் என்று தமிழிலே எழுதினால் ஒரு பொட்டுக்கு இரண்டு பொட்டு வைக்கலாம்” என்று..

அப்போது கூட்டம் ஆர்ப்பரித்துக் கேட்கும். உடனே சொல்வார் ”அந்த இளைஞரின் ஆற்றலைக் குறைத்து மதிப்பிட நான் இதைச் சொல்லவில்லை; என் தமிழைக் காப்பாற்ற வேண்டுமல்லவா?” கரவொலி உச்சக்கட்டத்தைத் தொடும். சொற்பொழிவுகளில் அவரது ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு நெகிழ்வு இருக்கும்; தெளிவு இருக்கும். ஒரு தேர்ந்த சிற்பியை போல அவர் தன் பேச்சை மெதுவாக செதுக்கிக் கொண்டே போய் உச்சகட்டத்தில் நிறுத்துவார். ஒரு மணி நேரம் போனது தெரியாது.

பகுத்தறிவுக் கருத்துக்களைப் பேசுவது கலைஞரின் இன்னொரு தனிக்கலை. ஈரோட்டுப் பாசறையில் பயின்றவர் அல்லவா? எத்தனையோ முறை அவர் தமிழ் மாதங்கள் என்று சொல்லப்படும் மாதங்களின் கதையைச் சொல்லியிருக்கிறார். அப்போது அந்த அறுபது மாதங்களின் வடமொழிப் பெயரையும் மூச்சுவிடாமல் சொல்வார். பேச்சாளருக்கு நல்ல ஞாபகசக்தி வேண்டும். அது கலைஞரிடம் எல்லையில்லாமல் இருக்கிறது.

அண்ணா மரணமடைந்தபோது வானொலியில் அவர் படித்த கவிதை ’பூவிதழின் மென்மையிலும் மென்மையான புனித உள்ளம், அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம்” என்று ஆரம்பிக்கும். இதைக் கேட்டு அசையாத இதயங்களே இல்லை. இதை மனப்பாடம் செய்து பேசிப்பார்த்து இளைஞர்கள் எவ்வளவோ பேர் தங்கள் நாவுகளைக் கூர்தீட்டிக் கொண்டார்கள். அவர் வாசித்த இக்கவிதாஞ்சலி, “ நீ இருக்குமிடந்தேடி யான் வரும் வரையில் இரவலாக உன் இதயத்தைத் தந்திடண்ணா . . நான் வரும்போது கையோடு கொணர்ந்து அஃதை உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா. . . என்றுமுடியும். இவ்வரிகள்தான் திமுக மேடைகளில் தேசிய கீதங்களாக ஒலித்தன. பதின்மூன்று ஆண்டுகள் ஆட்சிக் கட்டிலில் திமுக அமர இயலாமல் இருந்த காலத்தில் கட்சியை தன் நாவன்மையால்தான் அவர் கட்டிக்காத்தார். தொண்டர்களை எழுச்சியோடு இருக்க வைப்பதற்காக அவர் மேடைதோறும் சொல்வார், ‘’வென்றாலும் ராமச்சந்திர மூர்த்தி கோழைதானே; தோற்றாலும் வாலி வீரன் தானே.”அக்காலகட்டத்தில் அது மிகவும் பொருள்பொதிந்த தொடர். எதிர்க்கட்சியாக இருந்தபோது நீதிபதி ஒருவர் கலந்துகொண்ட நிகழ்ச்சி அவர் பேசிமுடித்தவுடன் கலைஞர் பேசினார். ‘’இன்று இந்நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி எங்களுக்கு ஆதரவாகப் பேசினார். அவருக்கு என்ன சிக்கல் வருமோ தெரியவில்லை”என்றார். பார்வையாளர்கள் யோசித்தனர். ஏனெனில் நீதிபதி அப்படி ஒன்றும் பேசியிருக்கவில்லை. கலைஞர் தொடர்ந்தார். “அடிக்கடி ஜப்பானைப் பாருங்கள் என்று நீதிபதி அவர்கள் குறிப்பிட்டார். ஜப்பான் என்றால் உதயசூரியன் என்று பொருள்” கைதட்டலும் ஆரவாரமும் அடங்க வெகுநேரம் ஆனது.

1986-ல் உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக அமோக வெற்றிபெற்று ஏராளமான நகராட்சிகளைக் கைப்பற்றியது. முன்னதாக அந்தத் தேர்தலை நடத்தாமல் பல முறை அதிமுக அரசு ஒத்தி வைத்திருந்தது. இறுதியாக அதை நடத்தியபோது திமுகவே வென்றது. அத்தேர்தல்களின் பிரச்சாரத்தின் போது “ சகோதரியின் குழந்தை தன்னைக் கொல்வான் என்பதற்காக கம்சன் ஏழு குழந்தைகளைக் கொன்றான். அவன் கையிலிருந்து தப்பிய எட்டாவது குழந்தையாக திமுக இத்தேர்தலில் நிச்சயம் வெல்லும்.“ என்று கலைஞர் சொல்வார். இதெல்லாம் அக்காலகட்டத்தில் திமுகவை அவர் எழுச்சியோடு வைத்திருக்க, ஊக்கமூட்டி போராட வைக்கப் பயன்படுத்திய உத்திகள். என் திருமணத்தை முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக சென்னையில் பழ.நெடுமாறன் தலைமையில் தலைவர் கலைஞர்தான் நடத்தி வைத்தார். அதில் இரண்டு நீதிபதிகள் மேடையில் இருந்தனர். புலிகள் தலைவர் பிரபாகரனும் பிற ஈழத்தலைவர்களும் வந்திருந்தனர். அந்நிகழ்ச்சியில் பேசிய ஒரு ஈழத்தலைவர் நாங்கள் இக்கட்டில் இருக்கிறோம் என்று பேசினார். அந்த இக்கட்டு என்ற சொல்லைக் கொண்டு அன்றைய அரசியல் சூழலை இணைத்து கலைஞர் அருமையான ஒரு சொற்சிலம்பை அங்கு ஆடினார்.

 இலக்கியம், பகுத்தறிவு, அரசியல் என்று மூன்று பொருட்களில் கலைஞரின் பேச்சு எதில் ஓங்கி நிற்கும் என்று சீர்த்தூக்கிப் பார்ப்பது திருக்குறளின் முப்பாலில் எது சிறந்தது என்று கேட்பது போல் ஆகும். இந்தி எதிர்ப்புப் போர் பற்றிய கலைஞரின் கவிதை ஒன்றைக் கேட்டிருக்கிறீர்களா? “கேடு வந்ததடா இந்தி மொழியால் தமிழருக்கு என்றவுடன் எழடா தம்பி எடடா போர்வாள்’ என்று அவர் வாசிப்பார். அதில்

“பட்டுக் கொடி

கொற்றக் குடை

சுற்றிச் சுழல்

வெற்றித் திரு

முத்துத் தமிழ்

கற்றுச் சுடர்

பெற்றுக் குல” என்கிற வரிகளை அவர் சொல்லுவதைக் கேட்கவேண்டும். சாகக் கிடக்கிறவனும் எழுந்துவிடுவான். மேடைகளை உயிர்க்க வைத்த மாபெரும் பேச்சாளர் அவர். அவரது இடம் தமிழ் மேடைகள் இருக்கும்வரை அழியாது.

(நமது செய்தியாளரிடம் கூறியதில் இருந்து)

ஆகஸ்ட், 2013.