ராஜேஷ்குமார் 
சிறப்புப்பக்கங்கள்

மீண்டும் உசேனைப் பார்ப்பேன்!

ராஜேஷ்குமார்

ஐந்தாண்டுகளுக்கு முன் ஒருநாள் காலையில் மருதமலை செல்லும் பாதையில் வாக்கிங் முடித்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தேன்.

அப்போது எதிரில் வந்த இருசக்கர வாகனம் ஒன்று என் அருகில் வந்து நின்றது. வண்டி ஓட்டி வந்தவருக்கு முப்பது வயதிருக்கலாம். பின்னே அவரது மனைவி. அவரது மடியில் இரண்டு வயது மதிக்கத்தக்கக் குழந்தை.

வண்டியை நிறுத்தியவர், ஸ்டாண்ட் போட்டுவிட்டு, ‘‘வணக்கம் சார். என் பேர் உசேன். நான் உங்க தீவிர வாசகன். உங்களோட ஒரு கதையையும் விடாமல் படிச்சுடுவேன்…'' என்றார்.

‘‘மிக்க மகிழ்ச்சி. எங்கே இந்தப் பக்கம்?'' என்றேன்.

‘‘மருதமலைக்குப் போகிறோம் சார்…'' என்றார். எனக்கு ஆச்சரியம்.

‘‘உங்க பெயர் உசேன். இஸ்லாமியர். ஆனா, இந்துக் கோவிலுக்குப் போறீங்க'' என்று ஆச்சரியம் விலகாமலேயே கேட்டேன்.

‘‘இதில் என்ன சார் ஆச்சரியம் இருக்கு? என் பின்னால் உட்கார்ந்திருக்கிற என் மனைவி பெயர் மேரி'' என்று அவர் அடுத்த ஆச்சரியப் பட்டாசை வீசினார்.

‘‘ஓ.. அப்ப ரெண்டு பேரும் லவ் மேரேஜா? சந்தோஷம். ரெண்டு பேரும் இஸ்லாம், கிறிஸ்தவம் என்கிற இருவேறு மதம். ஆனாலும் வேறொரு மதக் கோவிலுக்குப் போறீங்களே…'' என்று ஆர்வத்துடன் கேட்டேன்.

‘‘ஆமாம் சார்.. என் மனைவியின் மடியில் உட்கார்ந்திருக்கிற மகன் பேரு சுப்பிரமணியன்'' என்று மேலும் ஆச்சரியமூட்டினார்.

‘‘அட…'' என்று நான் ஆச்சரியத்தை வெளிப்படுத்த அவர் தொடர்ந்தார். ‘‘மதத்தை நாங்க பெரிசா நினைக்கிறதில்லை சார். அதனால் எங்களுக்கு எந்தக் கோவிலும் கணக்கில்லை. கோவில், சர்ச், தர்கா எல்லா வழிபாட்டுத் தலங்களுக்கும் போவேன்'' என்றவர் தன் மகனுக்குச் சுப்பிரமணியன் என்று பெயர் வைத்ததற்கான காரணத்தை விளக்கினார்.

‘‘நாங்க லவ் பண்ணி கல்யாணம் பண்ண நினைச்சப்போ எங்க ரெண்டு பேர் வீட்டிலும் எதிர்ப்பு. கைகலப்பு அளவுக்கு நிலைமை போச்சு. இந்த எதிர்ப்பையெல்லாம் சமாளிச்சு நாங்க ஒன்று சேர உறுதுணையா நின்ற நண்பர் பேரு சுப்பிரமணியன். அவருக்கு நன்றி சொல்லும் விதமாதான் என் மகனுக்கு அவரது பேரை வைத்தோம்.'' என்றவர், கங்கா, யமுனா தியேட்டர் பக்கத்தில் பிளாட்பாரத்தில் ரெடிமேட் சட்டைகள், செருப்பு போன்றவற்றை விற்பதாகக் கூறினார்.

‘‘அந்தப் பக்கம் வரும்போது, என் கடைக்கு அவசியம் வரணும் சார்...'' என்று வேண்டுகோள் வைத்துவிட்டு, வண்டியில் புறப்பட்டுச் சென்றார். அவர் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு மினி இந்தியாவே அந்த வாகனத்தில் பயணிப்பதுபோல் உணர்ந்தேன்.

அதன்பிறகு ஒரு மாதம் கழித்து, அந்தப் பக்கம் சென்றபோது உசேன் நினைவு வந்து, அங்கு போய்ப் பார்த்தேன். ஆனால், அங்கு கடைகள் எதுவும் இல்லை. விசாரித்தபோது, சிலதினங்களுக்கு முன்புதான் போலீசார் பிளாட்பாரத்திலிருந்த கடைகளை காலி செய்ததாக அங்கிருந்தவர்கள் கூறினர். எனக்கு வருத்தமானது. இருந்தாலும் மீண்டும் உசேனை நான் பார்ப்பேன் என்று ஏனோ உள்ளுணர்வு கூறிக்கொண்டே இருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு மாலை நேரம். ஒரு வார இதழுக்கான தொடர்கதையின் அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருந்தேன். அன்றே கூரியரில் அனுப்பி வைக்க வேண்டும். டெட்லைன் நெருக்கடி. எனவே யாரையும் சந்திக்க முடியாத சூழல்.

அப்போது ஒருவர் என்னைத் தேடி வந்தார். என் மனைவி நான் எழுதிக்கொண்டிருப்பதைக் கூறி, நாளை வரச்சொன்னார்.

அந்த மனிதரோ, ‘‘எவ்வளவு நேரம் ஆனாலும் சாரைப் பார்த்துட்டுதான் போவேன்…'' என்று வீட்டுக்கு எதிரிலிருந்து ஒரு சிறிய சுவரில்போய் உட்கார்ந்து கொண்டார். ஒருமணி நேரம் கழித்து என் மனைவி வெளியில் சென்று பார்த்தபோதும் அவர் அதேஇடத்தில் காத்துக் கொண்டிருந்திருக்கிறார். இதைப் பார்த்து மனசு கேட்காமல் என் மனைவி என்னிடம் விஷயத்தைச் சொல்லவே நான் அவரை உள்ளே வரச்சொன்னேன்.

வந்தவருக்கு 35 வயதிருக்கும். ‘‘நான் உங்கக் கதைகளை விரும்பிப் படிப்பேன் சார். எனக்கு ஒரு பிரச்னை. நீங்க தீர்வு சொல்லுவீங்க என்ற நம்பிக்கையில்தான் உங்களைத் தேடி வந்தேன்…'' என்றார். என்ன பிரச்னை என்று அக்கறையுடன் கேட்டேன். அவர் தன் பிரச்னையைக் கூறத் தொடங்கினார்.

‘‘கடந்த ஒருமாசமா எப்ப பார்த்தாலும் என் காதுக்கிட்டே யாரோ பேசிக்கிட்டே இருக்காங்க சார். நடந்து போனாலும் அந்தக் குரல் கேட்டுக்கிட்டே இருக்கு. யாரோ பின்தொடர்ந்து வர்ற மாதிரி இருக்கு. திரும்பிப் பார்த்தால் யாரையும் காணோம். ராத்திரியில் படுத்தாலும் அந்தக் குரல் கேட்குது. இதனால் என்னால தூங்கவே முடியலே...'' என்றார் பரிதாபமாக. இது ஓர் உளவியல் பிரச்னை என்பது உடனே புரிந்தது.

‘‘சைக்கலாஜிக்கலா நீங்க பாதிக்கப்பட்டிருக்கீங்க. நல்ல சைக்கியாட்ரிஸ்ட்டைப் பாருங்க. சரி பண்ணிடலாம்.'' என்றேன். தனக்கு எந்த டாக்டரையும் தெரியாது என்று அவர் சொல்லவே, என் நண்பரான பிரபு என்கிற சைக்கியாட்ரிஸ்ட்டின் முகவரி கொடுத்து அனுப்பினேன்.

டாக்டர் பிரபு அவரிடம் விசாரித்தபோது, ஒரு விஷயம் புரிந்தது. அந்த மனிதரின் ஆத்மார்த்தமான நண்பர் ஒருவர் வெகு சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். இருவரும் ரூம் மேட்டாக இருந்தவர்கள். எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்வார்கள். இரவில் வெகுநேரம் பேசிக் கொண்டிருப்பார்களாம்.

அந்த நண்பரின் தற்கொலை இவரை வெகுவாகப் பாதித்திருக்கிறது. அவர் இறந்ததை அவரது உள்மனது ஏற்கவில்லை. அதனால், அவர் தன்னுடன் இருப்பது போலவும் உடன் வருவது போலவும் அவருக்கு ஒரு பிரமை. பிரச்னையைப் புரிந்துகொண்ட டாக்டர் பிரபு அவரிடம் பிரச்னையை விளக்கி மருந்துகள் எழுதிக் கொடுத்திருக்கிறார்.

அதன்பிறகு, என்னிடம் பிரபு நடந்த விஷயங்களைக் கூறினார். என்னைத் தேடி வந்த அந்த மனிதரின் பெயர் இப்போது நினைவில்லை. அவர் போகும்போது தொலைபேசி எண் கொடுத்துவிட்டுச் சென்றிருந்தார். சிலநாட்கள் சென்றபிறகு அவர் எப்படி இருக்கிறார் என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலில் அவருக்குப் போன் செய்தேன். ‘‘இந்த எண் உபயோகத்தில் இல்லை…'' என்று பதில் வந்தது.

அவர் எண் ஏன் உபயோகத்தில் இல்லை? அவர் என்ன ஆனார்? அவரது பிரச்னைகள் தீர்ந்திருக்குமா? காரணம், இதுபோன்ற பிரச்னைகளை உடனடியாகக் கவனிக்காவிட்டால் அது மிகத்தீவிரமான மனநோயாக மாறிப் போகும். தன் பிரச்னை எவ்வளவு தீவிரமானது என்பதை அவர் உணர்ந்திருப்பாரா? அந்தக் கவலை இன்னும் மனதை அரிக்கிறது.

ஜனவரி, 2018.