சிறப்புப்பக்கங்கள்

மியாவ் என்றொரு உறுமல்...!

தாமிரா

நா என்னை ஒரு இஸ்லாமியனா எப்பவுமே உணர்ந்தது இல்ல. இன்னும் சொல்லப்போனா,  நானா சொல்லாத வரைக்கும் யாருக்கும் என்னை ஒரு இஸ்லாமியனா பாக்கத் தோணாது.

 அது நண்பர்கள் தயவுல  பசியை போக்கிட்டு சினிமா வாய்ப்புக்கான தேடலில் இருந்த காலம். எனக்குன்னு ஒரு தனி அறை எடுத்து தங்கற வசதில்லாம் இல்ல. என் நண்பன் வி.கே.சுந்தர் வீட்ல தங்கியிருந்தேன். சாலிக்கிராமம் லோகையா காலனில இருந்தோம். வீட்டு உரிமையாளர் ரொம்ப தங்கமான மனுசன். அவரு கீழ குடியிருந்தாரு. நாங்க மாடில குடியிருந்தோம். தினமும் வெளிய போறப்ப செடிகளுக்குத் தண்ணி ஊத்திட்டு இருப்பாரு. என்னைப் பாத்தா வணக்கம் சொல்லி ரெண்டு வார்த்தை பேசாம இருக்க மாட்டாரு. சினிமான்னா சிரமம் தான சார்.. நீங்க நல்லா வருவீங்க சார்ன்னு நம்பிக்கையான வார்த்தைகள் சொல்வார். அவர் அப்படிக் கனிவா சொல்ற ஆறுதல் எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்குத் திருமணமாகி மனைவியை ஊர்ல விட்டுட்டு சினிமா வாய்ப்பு தேடறேன்னு தெரிஞ்சப்ப இன்னும் ரொம்பக் கனிவாயிட்டாரு... அதன் பிறகு பாக்கறப்பல்லாம் ஊருக்கு எப்ப சார் போவீங்க... இப்படியே சுத்திட்டு இருக்காம ஊருக்கு அப்பப்ப போயிட்டு வாங்க சார், அது ஒரு தனி எனர்ஜியா இருக்கும். நமக்கான உறவுகள பாக்கும்போது இன்னும் நம்பிக்கையா முயற்சி பண்ணலாம் சார்ம்பாரு. இன்னும் சொல்றதா இருந்தா என்னை அடிக்கடி சார்ன்னு மரியாதையா கூப்புடற முதல் மனுசனா அவர் இருந்தாரு.

பிராமின், நான் பிராமின்ங்கற வேறுபாடு அவர் பேச்சுல எப்பவுமே இருந்ததில்ல. சில சமயம் அசைவம் சமைக்கறப்ப வாசனை தூக்கலா இருக்கும். அப்ப சிரிச்சுகிட்டே என்ன சார் இன்னைக்கு பலமான விருந்து போலன்னு கேப்பாரு. என்ன சார்  வாசனை பிடிக்கலயான்னு கேட்டா அதே சிரிப்போட இல்ல சார் பழகிப் போச்சு. அசைவ வாசனையத்தான் வாரத்துக்கு நாலு நாள் சாப்பிடறோமே இப்பல்லாம் நீங்க வைக்கற குழம்பு வாசனைய வச்சே அது மீன் குழம்பா, கறிக் கொழம்பான்னு கரெக்டா சொல்லிடுவேன். அது உங்க உணவு பழக்கம் அத நான் எப்படி சார் தப்பு சொல்ல முடியும்? நான் சாதி மதமெல்லாம் பாக்கறது இல்ல சார், எல்லாரும் மனுசங்க தானேன்னு சொல்வாரு. மாடிப் படிக்கட்டு இறங்கறப்ப அவரு கீழ இல்லன்னா அவரு செருப்பு இருக்குதா அவர் வாகனம் இருக்குதான்னு தேடற அளவுக்கு அவர எனக்குப் பிடிக்கும்.இப்படியே ஒரு வருசம் போச்சு. ஒரு முறை என் மனைவி ஊர்லருந்து வர்றேன், உன்னை பாக்கணும் போல இருக்குன்னு சொன்னா..தோழி சந்திரா  இது பெரிய வீடுதானடா அவ வரட்டும் பத்து நாள் இருந்துட்டுப் போகட்டும்னு சொன்னா. அது பணத்தட்டுப்பாடு உள்ள நேரம் ஆனாலும் சுந்தர் எங்கெங்கயோ கடன் வாங்கி காசு குடுத்தான், நான் என் மனைவியை அழைச்சுட்டு வந்தேன். அதிகாலைல டிரெய்ன்ல இறங்கி வீடு வந்து சேந்தப்போ டயர்டா இருந்ததுனால நான் தூங்கிட்டேன். அரைத் தூக்கத்துல சுந்தரும் சந்திராவும் சத்தமா சண்டை போடறது கேட்டுது. விசயம் இதுதான். நானும் என் மனைவியும் மாடிப்படியேறிப் போறத பாத்திருக்கறாரு வீட்டு உரிமையாளர். என் மனைவி முக்காடு போட்டுட்டு வர்றதப் பார்த்துருக்கறாரு. தாமிரா சார் முஸ்லீம் பொண்ணை கல்யாணம் பண்ணிருக்கறாரான்னு கேட்டிருக்கறாரு. சுந்தர், இல்ல சார் அவனே முஸ்லீம்தான்னு சொல்லியிருக்கறான். சார் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க, அவங்க ரெண்டு பேரையும் உடனே வீட்டை விட்டு அனுப்பி வச்சிருங்கன்னு சொல்லியிருக்கறாரு. சந்திரா எப்பவுமே போல்டான பொண்ணு. ‘அத சொல்றதுக்கு நீ யாருய்யா? அவன் எங்க குடும்பத்துல ஒருத்தன். அவனை வெளிய போவச் சொல்ல முடியாது'ன்னு பதிலுக்குக் கத்தி இருக்கறா. அவரு ரொம்ப தீர்மானமா என் வீட்ல ஒரு முஸ்லீமுக்கு இடம் இல்லன்னு சொல்லிட்டாரு. அந்த முஸ்லீம் கூடத்தான்  சார் நீங்க ஒரு வருசமா பழகி இருக்கறீங்க. ஒரு வருசமா இந்த வீட்லதான் இருந்திருக்கறான். அவன் தாமிராவா இருந்த வரைக்கும் பிரச்சனையில்ல அவம் பேரு சேக்தாவூதுன்னு தெரிஞ்சதும் பிரச்சனை பண்றீங்கன்னா என்ன சார் நியாயம்னு கேட்டிருக்கறான் சுந்தர். ஒன்னு அவர வீட்டை விட்டு அனுப்பிருங்க இல்லன்னா நீங்க வீட்டைக் காலி பண்ணிருங்கன்னு திட்டவட்டமா சொல்லிட்டாரு. போய்யா நீயுமாச்சு உன் வீடுமாச்சு இதுக்கு மேல இந்த வீட்ல இருந்தா எங்களுக்குத்தான் அசிங்கம்ன்னு சந்திரா திட்டிட்டு மேல வந்தா. நாங்க வேணா கிளம்பறோம்ண்ணே திடீர்ன்னு எப்படி வீடு பாக்க முடியும்னு சொன்னா என் மனைவி. இல்லம்மா நீங்க இங்கதான் இருக்கணும், சென்னைல எல்லா வீடுகளும் என்ன இவனுக கைலயா இருக்கு. விடு தேடுவோம்ன்னு ஒரே நாள்ல எனக்காக வீடு பாத்து வீட்டை மாத்தினான் சுந்தர். வீடு காலி பண்றப்ப நா அவரப் பாத்து, நாங்க கௌம்பறோம் சார், எனக்கு உங்க மேல எந்த வருத்தமும் இல்லன்னு சொல்லிட்டுக் கௌம்பினேன்.  அவர் பதிலேதும் சொல்லாம இறுக்கமா நின்னுட்டு இருந்தாரு.

 பொதுவா வீட்டு உரிமையாளர்கள் இஸ்லாமியர்களுக்கு வீடு தரமாட்டேன்னு  சொல்றதெல்லாம் பூனையின் உறுமல்தான். என்னதான் நீங்கள் உரக்க உறுமினாலும் அது மியாவ்தான்.

மே, 2018.