செஞ்சி நகருக்கு தேசிங்கு ராஜனின் கோட்டை எப்படி ஒரு அடையாளமோ, அப்படி ஒரு அடையாளமாக இனிக்கிறது முட்டை மிட்டாய்!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அப்பம்பட்டு எனும் கிராமத்தில் 1970 இல் சையத் அப்துல் கப்பார் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று 55ஆவது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கின்றது ’சையத் ஸ்வீட்ஸ் முட்டை மிட்டாய்’ கடை.
தீபாவளி வியாபாரத்தில் பிஸியாக இருந்த கடை உரிமையாளர் சையத் உஸ்மானிடம் பேசினோம். “என் அப்பா சையத் அப்துல் கப்பார், முட்டை மிட்டாயை இங்கு அறிமுகப் படுத்தினார். இப்போது கடை இருக்கும் இடத்தில்தான் 1970இல் சின்னதாக இந்த கடையைத் தொடங்கினார். அப்போது இந்த பெயர் இல்லை.
இஸ்லாமியர்களின் சுபநிகழ்ச்சிகளிலும் பண்டிகைகளிலும் மட்டுமே இதைச் செய்துவந்தனர். இந்தச் சுவையை உலகுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என அப்பா நினைத்தார். அவரின் முயற்சிதான் இந்த முட்டை மிட்டாய் கடை.
எவ்விதமான மாவுப் பொருளும் இல்லாமல் உருவாக்கப்படுவதுதான் இந்த முட்டை மிட்டாயின் சிறப்பு. பால், முட்டை, சர்க்கரை, நெய் ஆகியவையே இதன் உட்பொருள்கள். நாங்கள் பாக்கெட் பாலைப் பயன்படுத்துவதில்லை. என் அப்பா தொடங்கியபோது இருந்த அதே தரத்தை நிலைப்படுத்த நேரடியாக விவசாயிகளிடம் பாலை கொள்முதல் செய்கிறோம்.
முட்டை மிட்டாயை என் அப்பா அவரது காலத்தில் கையால் செய்து வந்தார். இப்போது மெஷினில் செய்கிறோம். ஆனால், தரம் மாற்றப்படவில்லை. இந்த இனிப்புக்கு வாடிக்கையாளர்கள் அதிகமாகவே, என் அப்பா பயன்படுத்திய அதே கடையை 1995இல் சற்று விரிவுபடுத்தினேன்.
இந்த மிட்டாயைத் தயார் செய்வதற்கு இரண்டு நாள்களில் மொத்தமாக ஏழரை மணி நேரம் வரை ஆகும். பால்கோவா செய்வதுதான் முதல் நிலை. முதல் நாளில் 6 மணி நேரம் வரை இந்த நிலை எடுத்துக்கொள்ளும். மறுநாள் காலை 4.30 மணிக்கு அடுத்த செய்முறையைத் தொடங்குவோம். ஏனெனில், பால்கோவா சரியான பக்குவத்தில் இருக்க வேண்டும்.
பின்னர், மூலப்பொருள்களைச் சேர்த்து அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் சுவையான முட்டை மிட்டாய் தயாராகிவிடும். 5 நாள்கள் வரை வைத்து சாப்பிடலாம். குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பயன்படுத்தினால் ஒரு மாதம் வரை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம். ஆனால், நாங்கள் அவ்வாறு வைத்திருப்பதில்லை. அன்று செய்வதை அன்றன்றே விற்பனை செய்துவிடுவோம்.எங்களுடைய கிளைகள் சென்னை, சேலம், விழுப்புரம், திருச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட நகரங்களில் உள்ளன. இந்த எல்லா கடைகளுக்குமான கிச்சன் இங்குதான் உள்ளது.
இத்தொழிலின் மூலம் பலர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பலர் வேலைவாய்ப்பை பெறுகின்றனர். பால், முட்டை, சர்க்கரை ஆகிய அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் நபர்களிடமிருந்தே நேரடியாக வாங்குகிறோம்.
வரும் காலங்களில் வெளிநாடுகளில் கடைகள் திறக்க திட்டம் உள்ளது.” என்கிறார் சையத் உஸ்மான்.