ரஷ்ய நாவல் ‘தாய்’ மக்ஸிம் கார்க்கியால் எழுதப்பட்டது. எழுதப் படிக்கத் தெரியாத ஒரு தாய் தொழிற்சாலையில் வேலை செய்யும் தன் மகனை போராட்டத்துக்கு தயார்ப்படுத்துவதும், அந்த போதனைகளின் வழியாக அவன் தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்வதும்தான் அந்த நாவலின் சாராம்சம்.
அந்தத் தொழிற்சாலையின் புகை போக்கி ஒரு குண்டாந்தடியைப்போல இருந்தது என்றுதான் அந்த நாவல் ஆரம்பிக்கும். தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் தொழிலாளர்களை, கசடுகள் போல அவர்கள் வெளியே வந்தார்கள் எனவும், ஊர்ந்து போகும் கரப்பான் பூச்சிகளைப்போல அவர்கள் குடிசைக்குப் போய்க்கொண்டிருந்தார்கள் என எழுதியிருப்பார் கார்க்கி. அந்த நாவலில் பாவலின் தாய் பெலகேயா குடிகாரக் கணவனால் தாக்கப்படுகிறாள். அதனால் அவள் முகத்தில் மாறாத தழும்பு ஒன்று உருவாகிவிடுகிறது. அந்தத் தழும்பு பெலகேயாவின் முகத்தில் ஒரு நிரந்தர பய உணர்ச்சியை உருவாக்கிவிடுகிறது என்று விவரிக்கிறார் கார்க்கி. இந்த நாவலைப்பற்றிச் சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது. உலகமே போற்றும் இந்த நாவலை எழுதி முடித்ததும் லெனினிடம் கொடுக்கிறார் கார்க்கி. அதை படித்துவிட்டு நாவலில் கதாபாத்திரங்கள், அவர்களின் வாழ்க்கைப்பார்வை என பல திருத்தங்களைச் சொல்கிறார் லெனின். மீண்டும் நாவலைத் திருத்தி எழுதுகிறார். மறுபடியும் லெனினிடம் படிக்கக் கொடுக்கிறார். இப்படிப் பல திருத்தங்களுக்குப் பின்பு எழுதப்பட்ட நாவல்தான் நமக்கு வாசிக்கக் கிடைப்பது. தத்துவப் பின்புலம் கொண்ட ஒரு படைப்பாளனால்தான் தாய் போன்ற ஒரு நாவலை எழுத முடியும். தத்துவத்தில் ஆழ்ந்த புலமை கொண்ட ஒருவரால்தான் அதில் திருத்தங்கள் சொல்ல முடியும்.
நான் இயக்கிய இயற்கை படத்தின் கிளைமாக்ஸ் காட்சியைப் படமாக்கும் போது, சாண்டா கிளாஸ் முகமூடி செய்ய, தாய் நாவலின் அந்த அம்மா முகத்தில் இருக்கும் தழும்பையும் அதன் உளவியல் பாதிப்பையும்தான் கலை இயக்குநருக்கு மாதிரிக்குறிப்பாகத் தந்தேன். ஷாமின் காதலை கதாநாயகி ஏற்றுக்கொண்ட பிறகு வரும் பாடலில் சந்தோஷமான சாண்டா கிளாஸ் முகமூடி. அவள் பழைய காதலனுடன் திரும்ப சேர்ந்தபின் ஷாம் சோகத்துடன் வெளியேறும் போது துயரம் மிகுந்த சாண்டா கிளாஸ் முகமூடி என இரண்டு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முகமூடிகளைப் பயன்படுத்தினேன். அதற்குத் தாய் நாவலில் வரும் கார்க்கியின் சித்தரிப் புதான் எனக்குப் பயன்பட்டது.
இந்திய அளவில் சொல்ல வேண்டுமானால் மஹபூப் கானிடமிருந்து தொடங்கவேண்டும். அவருடைய மதர் இந்தியா ( 1957 ) முக்கியமான கம்யூனிசச் சிந்தனைகளைத் தாங்கி உருவாக்கப்பட்ட படம். சுதந்திரத்துக்குப் பின்பாக இந்திய நிலவுடைமைச் சமூகத்தில் நிலவிய வர்க்க முரண்பாடுகளை மதர் இந்தியா படத்தில் மிகச் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டிருந்தது. பேராண்மை படத்தில் நான் கம்யூனிசச் சின்னமான அரிவாள் சுத்தியை காண்பித்திருப்பேன். அதற்கு நிறையபேர் ஆச்சரியமாகக் கேட்டார்கள். ஆனால் அதற்கெல்லாம் முன்னோடியாக இருக்கிறார் மஹபூப் கான். மஹபூப் கானின் தயாரிப்பு நிறுவனமான மஹபூப் புரடக்ஷன்ஸின் சின்னமே அரிவாள் சுத்திதான். தயாரிப்பு நிறுவ னத்தை 1946ல் தொடங்கிய மஹபூப் கான் தனது நிறுவனத்தின் சின்னமாக அரிவாள் சுத்தியைத் தேர்ந்தெடுத்தது ஒரு அபூர்வமான, மிக முக்கியமான முயற்சிதான். ஏனெனில் சுதந்திரத்துக்கு முந்தைய அந்தக் காலகட்டத்தில் அதிகமும் வேட்டையாடப்பட்டவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்தான். அந்தச் சிக்கலான காலகட்டத்தில் அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னத்தைத் தேர்ந்தெடுத்தது ஒரு முக்கியமான முன்னெடுப்புதான் என்பது என் எண்ணம்.
பேராண்மை படத்தில் நான் கம்யூனிஸ்ட் சின்னமான அரிவாள் சுத்தியைப் படமாக்கியிருக்கிறேன். படத்தில் உபரி மதிப்பு பற்றி ஜெயம் ரவி பாடம் எடுக்கும் காட்சி இருக்கிறது. உழைப்பு எப்படி உபரி மதிப்பாக மாறுகிறது என்பதும் அந்த உபரி மதிப்பு உழைத்தவனிடம் சேராமல் வேறு யாருக்குப் போகிறது என்பதும் மார்க்சியத்தைப் புரிந்து கொள்வதற்கான அடிப்படை. மேலும் பொதுவுடைமை அரசியலை விடச் சிறந்தது வேறெதுவுமில்லை என்ற வசனத்தையும் அந்தப் படத்தில் வைத்திருக்கிறேன். எனவே அந்தக் காட்சியும் அதன் வசனங்களும் காலம் கடந்தும் நிற்கும் என்பது என் அபிப்ராயம். ஒரு இயக்குநராக நான் மிகவும் பெருமைப்பட்ட தருணம் அது.
கம்யூனிசப் படங்கள் பற்றிய எனது பார்வை முற்றிலும் வேறானது. ஒரு திரைப்படத்தில் கம்யூனிஸ் கட்சியின் சின்னங்கள் அரிவாள் சுத்தி அல்லது சிவப்புக்கொடி காட்டப்பட்டால் அது கம்யூனிஸ்ட் படமாகிவிடாது. ஆனால் மார்க்சியத்தின் சாரத்தை உள்வாங்கி ஒரு திரைப்படத்தில் வெளிப்படுத்த முடியுமானால், அந்தப் படம் எதைப் பற்றியதாக வேண்டுமானால் இருக்கலாம். அதுதான் ஒரு சிறந்த கம்யூனிஸ்ட் படமாக இருக்க முடியும் என நான் நம்புகிறேன்.
சார்லி சாப்ளினிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
நீங்கள் சோஷலிஸ்ட்டா அல்லது கம்யூனிஸ்ட்டா என்ற கேள்விதான் அது. அதற்கு சார்லி சாப்ளின் சொன்ன பதில் நான் ஒரு ஹியூமனிஸ்ட், அதாவது மனிதாபிமானி. அவர், மனிதாபிமானியாக இருந்த ஒரு சோஷலிஸ்ட் என்பது எனது கருத்து. மாடர்ன் டைம்ஸ் என்னும் அவரது திரைப்படம் கார்ல் மார்க்ஸின் மூலதனம் என்னும் நூலின் சாராம்சத்தின் திரைப்பட வடிவம் என்றே சொல்லமுடியும். அப்படத்தின் எல்லாக் காட்சிகளிலும் மார்க்சியத்தின் சாராம்சம் இழையோடிக்கொண்டிருக்கும். படத்தின் முதல் காட்சியே ஒரு ஆட்டு மந்தை போய்க்கொண்டிருக்கும். அதில் ஒன்று கருப்பு ஆடு, அதுதான் சார்லி
சாப்ளின் என்னும் மேதையின் காட்சி மொழி. அடுத்த காட்சியில் கூட்டமாகத் தொழிலாளர்கள் தொழிற்சாலைக்குள் போய்க் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கும் அந்த ஆட்டு மந்தைக்கும் ஒரு வித்தியாசமுமில்லை என்பது அவர் சொல்ல விரும்பிய கருத்தாக்கம். முதலாளித்துவ தொழிற்சா லைகளின் அதன் இயந்திரத்தின் ஒரு பகுதியாக தொழிலாளிகள் மாறிவிடுகிற அவலத்தை சாப் ளின் காட்சிப்படுத்தியிருப்பார். முதலாளித்துவம் பலி கொள்ளும் தொழிலாளவர்க்கம் குறித்த அசலான ஒரு சித்தரிப்பு மாடர்ன் டைம்ஸ் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தப்படத்தில் ஒரு காட்சியில் அவர் இயந்திரத்துக்குள்ளே போய்விடுவார், வெளியே வரும்போது ஒரு கழிவைப்போல
சக்கையைப்போல அவர் வெளிப்படுவார். ஆனாலும் அந்தப் பாதிப்பு அவரை ஒரு மன நோயாளியாக மாற்றிவிடும். எங்கெல்லாம் ஆணிகள் திருகாணிகளைப் பார்க்கிறாரோ அவற்றையெல்லாம் திருக ஆரம்பித்து விடுவார். படம் நெடுகிலும் காட்சிகள் மனிதாபிமானம் குறித்த ஒரு பார்வையை முன்வைத்துக்கொண்டே இருக்கும். உற்பத்தி, முதலாளித்துவம், தொழிலாளிகள் உற்பத்தியின் ஒரு பகுதியாக மாறிவிடும் அவலம், கழிப்பறையில் சிகரெட் பிடிக்கும்போது கூட கண்காணிக்கப்படும் நிலை, உண்ணும் உணவைக்கூட இயல்பின்றி சாப்பிடும் ஒரு வர்க்கமாக தொழிலாளிகள் மாற்றப்படுவதை அல்லது மாறிவிட்டதை ஆழ்ந்த கரிசனத்துடன் கலைப்படைப்பாக்கியிருப்பார் சார்லி சாப்ளின். உற்பத்தி செய்யும் தொழிலாளி வர்க்கத்தினரால் ஒரு தேநீரைக்கூடச் சரியாகக் குடிக்க முடியாது.
சார்லி சாப்ளினின் இன்னொரு படம் ‘த கிரேட் டிக்டேட்டர்.’ ஹிட்லர் சார்லி சாப்ளின் மாதிரி மீசை வைத்திருந்தார். பாரதிதாசன் சாப்ளின் மீசை வைத்திருந்தார். அவர் நண்பர் அது பற்றி அவரிடம் என்னங்க ஹிட்லர் மீசை வைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு பாரதிதாசன், ஹிட்லரே சாப்ளின் ரசிகர்தானய்யா, எனவே இது ஹிட்லர் மீசை இல்ல, சாப்ளின் மீசை என்றாராம். இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் ஹிட்லர் உலகத்தையே கைப்பற்றும் ஆவேசத்தில் சர்வாதிகாரியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். அவரின் அதிகார வேட்கையை இந்தப்படம் அம்பலப்படுத்தியிருக்கிறது. சர்வாதிகாரியின் மனநிலை துல்லியமாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பது த கிரேட் டிக்டேட்டர் படத்தில்தான் என்பது எனது கருத்து. ஹிட்லருக்கு இந்த மொத்த உலகையும் நாம் வெல்லப்போகிறோம், எல்லாமும் உங்கள் ஆளுகைக்கு கீழ் வரப்போகிறது என்று சொல்லப்படும்.ஹிட்லர் சந்தோஷமாக உள்ளே வருவார்.அவர் அறையில் உலகப் பந்து (Global model) இருக்கும். அதை ஹிட்லர் சுழற்றிப் பார்ப்பார். பின் அதைக் கையில் எடுத்து தட்டி, உருட்டி பார்ப்பார். பூமிப் பந்தை மேலே தூக்கி வீசி விளையாடுவார். பின்னர் அதைக் காலால் உதைப்பார். தனது பின்புறத்தால் அதை உதைப்பார். கடைசியில் அந்த பூமிப்பந்தை உடைத்துப் போடுவார். இதுதான் காட்சி. உலகம் ஒரு சர்வாதிகாரியின் கையில் கிடைத்தால் என்ன நடக்கும் என்பதை அந்தக் காட்சியில் நுட்பமாகச் சொல் லியிருப்பார் சார்லி சாப்ளின். படத்தில் அவ்வப்போது வரும் ஒரு காட்சி, ஓர் ஓவியர் ஹிட்லரை வரையக் காத்திருக்கும் காட்சி. ஓவியர் ஹிட்லரை வரைய வெகு நேரமாகக் காத்திருப்பார். சலிப்பும் ஆர்வமற்றும் இருக்கும் அவர் அறைக்கு ஹிட்லர் வருவார், சில நொடிகளில் மீண்டும் வெளியே போய்விடுவார். கிடைத்த சில நொடிகள் இடைவெளியில் இரண்டு கோடுகள்தான் வரைந்திருப்பார் அந்த ஓவியர். மறுபடியும் அந்த ஓவியர் காத்திருப்பார். படத்தில் ஒரு சில நிமிடங்களே வரும் அந்தக் காட்சி ஹிட்லருக்கு கலை என்னவாக இருந்தது என்பதையும், கலைக்கும் ஹிட்லருக்குமான உறவு என்னதாக இருந்தது என்பதையும் நமக்குச் சொல்லிவிடும்.
சார்லி சாப்ளினின் இன்னொரு படம் சிட்டி லைட்ஸ். அது ஒரு காதல் கதை. ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவு இந்தச் சமூகத்தில் என்ன மாதிரியாக இருக்கிறது, ஆண் பெண் உறவு பற்றிய புரிதல் நிலை என்ன, என்னாவாக அந்த உறவு இருக்க வேண்டும் என்பதை சார்லி சாப்ளின் இந்தப் படத்தில் சொல்லியிருப்பார். உலகின் மகத்தான காதல் திரைப்படங்களில் ஒன்று சிட்டி லைட்ஸ்.
எவன் மார்க்சியவாதியோ அவனால்தான் ஒரு சிறந்த கலைப்படைப்பை உருவாக்க முடியும் என நான் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன். சமூகத்தையே மாற்றி அமைக்க விரும்புபவனால் தொழில்நுட்பத்தைக் கையாள முடியும்தான். காலத்தை மீறிச் சிந்திக்கும் ஒருவரால்தான் முற்போக்கான ஒரு படைப்பை உருவாக்க முடியும். அந்த வகையில் சார்லி சாப்ளினை அற்புதமான மார்க்சியப் பார்வைகளுடன் கூடிய திரைப்படங்களைத் தந்தவர் என மதிப்பிடுகிறேன்.
ஃப்லிம் காமெராவில் வேலை செய்துகொண்டிருந்த நான் டிஜிட்டல் கேமராவுக்கு மாறினேன். என்னுடைய ஒளிப்பதிவாளர்களே அதை விரும்புவதில்லை. ஆனால் டிஜிட்டல் கேமராதான் எதிர்காலத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என என் ஒளிப்பதிவாளர்களிடம் நான் சொன்னேன். நான் ஃபிலிம் கேமராவுக்கு எதிரி கிடையாது. ஆனால் டிஜிடல் கேமரா யுகம் தொடங்கிவிட்டது என என்னால் உணர முடிந்தது. அந்த தொலைநோக்குப் பார்வையை என்னுடைய மார்க்சியப் பின்புலம்தான் எனக்கு தந்தது என என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.
(சரோ லாமாவிடம் பேசியதிலிருந்து).