சிறப்புப்பக்கங்கள்

மஹா வில்லன்

கரு பழனியப்பன்

தமிழ் சினிமாவில் எனக்குப் பிடித்த வில்லன் நடிகராக நான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தையே சொல்வேன். அவர் ஆரம்பத்தில் எதிர்மறையான பாத்திரங்களில்தான் அறிமுகம் ஆனார் என்பது மட்டும் காரணமில்லை. அவர் கதாநாயகனிடமும் எதிர்மறையான குணங்களைக் கொண்டுவந்தவர் என்பதுதான் அவரை மிகப்பெரிய வில்லனாக நான் கருதக் காரணம். அதற்கு முன்பாக கதாநாயகர்கள் என்றால் அதற்கான இலக்கணம் எம்ஜிஆர் நடித்த பாத்திரங்கள்தான். மிகவும் நல்லவர்கள். ரஜினி இதை உடைத்தார். நான் கெட்டவன்தாம்பா என்று அவர் பாத்திரங்கள் முன்பே சொல்லிவிடும். அவரது பாத்திரங்கள் குடித்தன. சிகரெட் பிடித்தன. கெட்டவர்கள் செய்யும் அவ்வளவு காரியங்களையும் செய்தன. ஆனால் நாயகனாக இருந்தன. யாருமே முழுவதும் நல்லவன் கிடையாது; முழுமையாக கெட்டவன் கிடையாது.

ஒரு படத்தில் நமக்கு உடனே பிடிப்பது நகைச்சுவைப் பாத்திரங்கள்தான். ஏனெனில் அந்த பாத்திரத்துக்கு நம்மை விட அதிகமாக தெரிந்திருக்காது. அடுத்து நமக்கு வில்லன் பாத்திரங்களையே பிடிக்கும். கெட்டவன் என்று முதலிலேயே சொல்லிவிடுகிறார்கள். நாயகன் பாத்திரம் ரொம்ப நல்லவனாக இருக்கும்போது, என்னை விட ரொம்ப நல்லவனா நீ என்று ஒரு அச்ச உணர்வு அல்லது பொறாமை உணர்வு தலை தூக்கும்.

இந்த சராசரித் தன்மைதான் அவரை எல்லோருக்கும் பிடித்தவராக ஆக்கி இருக்கக் கூடும். எனக்கும் அப்படித்தான். இன்றைக்கு எல்லா கதாநாயகர்களுமே அதேபோல் ஆகிவிட்டார்கள் என்பது வேறுவிஷயம்.

எல்லோரும் ரொம்ப நல்லவர்களாக இருந்து போர் அடித்த காலத்தில் கொஞ்சம் கெட்டவனாகவும் வந்தார் அவர். என் அப்பா பெரிதும் குறைப்பட்டுக்கொள்வார். ரஜினி பேசும் வசனங்கள் ஒன்றும் புரியவே இல்லை என்று. ஆனால் எனக்கு எப்போதுமே அவர் பேசும் வசனங்கள் புரிந்துவிடும். ஒரு எழுத்துக் குழப்பம் இல்லாமல். ரஜினி வில்லனாக நடித்த ஆரம்பக் கட்ட படங்களில் எனக்குப் பிடித்தது என்றால் மூன்று முடிச்சுதான்.

புவனா ஒரு கேள்விகுறி படத்தில் ரஜினி ஹீரோவாகவும் சிவக்குமார் வில்லனாகவும் நடித்தார்கள். ஆனால் அப்படத்தில் ரஜினி வில்லன்போலவே வசனம் பேசுவார்.

சிவக்குமார் கதாநாயகிக்கு முறையற்ற விதத்தில் குழந்தையைக் கொடுத் ததைத் தவிர மற்ற எல்லா கல்யாண குணங்களுடன் தான் சிவக்குமார் வருவார்.

அவர் நடித்த அவள் அப்படித்தான் ஒரு ஆச்சரியப்படம். அதில் அவர் வில்லன் இல்லை. ஆனால் ஒரு வில்லன் செய்யக்கூடிய எல்லாவற்றையும் அவர் செய்வார். ஒரு நடைமுறை மனிதராக.

அபரிமிதமாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் என் தலைமுறைக்கு அளவாக நடித்தால் போதும் என்று புரிய வைத்தவர் அவர்.

ஜானி படத்தில் தான் மிகவும் நேசிக்கும் பாடகி ஸ்ரீதேவி தன்னைக் காதலிப்பதாகச் சொல்லும் காட்சியில் ரஜினிக்கு அந்த பாத்திரத்தின் கெட்டபின்னணியில் எவ்வளவோ நடிக்க வாய்ப்பு. தான் ஒரு கொள்ளைக்காரன், கெட்டவன்,. இதுக்கு சாத்தியமில்லை. அதை மறுக்கவேண்டும். ஆனால் அவர் சும்மா பார்த்துக் கொண்டிருப்பதைத்தான் தன் ரியாக்‌ஷனாகக் காட்டுவார். இயல்பு வாழ்க்கையில் அப்படித்தான் இருக்கமுடியும். கண்ணே மணியே என்று மூன்று பக்க வசனம் பேச இயலாது.

பைரவிக்குப் பின்னால் அவர் வில்லனாக நடிக்கவில்லை. ஏனெனில் அவர் நடித்த மற்றபடங்களில் எல்லாவற்றிலும் அவர் கதாநாயகனாக நடித்த வில்லனாகவே வந்தார்.

அன்று ரஜினிக்கு எல்லா கதாநாயகர்களும் வில்லன்களாக நடிக்கத் தயாராக இருந்தார்கள். ஆனால் யாரும் தங்களுக்கு ரஜினியை வில்லன் பாத்திரத்த்தில் நடிக்க வைக்கத் தயாராக இல்லை. ஏனெனில் அவர்களுக்கு ரஜினிக்கு முன்னால் தாக்குப் பிடிக்க முடியாது என்று தெரியும்.

முதன்முதலில் திரையில் பரபரவென்று ஒரு மனிதராக ரஜினியைப் பார்த்தோம். இதை ஒழுங்கு படுத்தியதில் இயக்குநர் மகேந்திரனுக்குப் பெரும் பங்கு இருப்பதாக நினைக்கிறேன். முள்ளும் மலரும், கை கொடுக்கும் கை, ஜானி போன்ற படங்களின் ஒர்க்கிங் ஸ்டில்ஸ்களைப் பார்க்கும்போது மகேந்திரனும் ரஜினியும் ஒரே மாதிரி தெரிவார்கள். ரஜினியின் லுக், பாடி லாங்க்வேஜ் எல்லாமே மகேந்திரனிடம் இருக்கும். ஒவ்வொரு நடிகனும் தனக்கென ஒரு இயக்குநரைத் தெரிவு செய்து, உள்வாங்கி அவர் போலவே ஆகிறான். அது ஒரு முக்கியமான நிகழ்வு. எல்லா வெற்றி பெற்ற நடிகருக்கும் பொருந்தும். மணிவண்ணனின் உடல்மொழி, வசன உச்சரிப்பைக் கைக்கொண்டுதான் சத்யராஜ் உருவானார். ஆர்.சுந்தரராஜனிடம் சிக்கிய பிறகுதான் கவுண்டமணி வெற்றிபெற்றார்.

எண்பதுகளில் வந்த கதாநாயகர்கள் படங்களில் எம்ஜிஆர்ன் படங்களை, போஸ்டர்களைக் காண்பித்து தலைவரே என்று கும்பிடுவது போன்ற காட்சிகள் இருக்கும். எனக்குத் தெரிந்தவரை ரஜினி யாரையும் பின்பற்றியதாக தன்னைக் காண்பித்துக் கொண்டது கிடையாது. வேறொருவரைப் பின்பற்றவேண்டாம் என்று அவர் எண்ணியதுதான் அவர் ஜெயிக்கக் காரணம் என நான் கருதுகிறேன்.

பாபாவின் எதிர்பாராத தோல்விக்குப் பின்னால் அவர் தேடித்தேடி கண்பிடித்து நடித்தபடம் சந்திரமுகி. அதில் நமக்கு நினைவில் நிற்கும் பாத்திரம் என்ன? வேட்டைய மகாராஜாவின் லகலகவென்னும் வில்லன் சிரிப்புதான். அதன் பின்னர் சிவாஜி. இதில் படம் சூடுபிடித்து பெரும்வேகம்கொள்வது  தவறான வழிக்குப் போக யோசிக்காத ரஜினியின் வரவுக்குப் பின்னால்தான். எந்திரன் படத்தில் கெட்ட ரோபாவாக ரஜினி வருகையில் அந்த அட்டகாசமான நடிப்பு தமிழ்சினிமாவின் மாபெரும் ‘கெட்டவராக’ ரஜினியை மட்டுமே முன்னிறுத்துகிறது.

ஜூன், 2014.