சுகுமாரன் 
சிறப்புப்பக்கங்கள்

மறுபடியும் வாழ்ந்த முற்காலம்

வெல்லிங்டன்

சுகுமாரன்

நாவலெழுத்து என்னுடைய இலக்கியக் கனவுகளில் ஒன்றாக இருந்ததில்லை. கவிஞனாகச் செயல்படுவதே உள்ளார்ந்த விருப்பம்.

அந்த விருப்பத்திலிருந்து கிளை பிரிந்தவைதான் இலக்கியத்தின் பிற துறைகள் மீதான அக்கறைகள். கவிஞனாக என்னை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள இந்த அக்கறைகள் அவசியமாக இருந்தன. இவையெல்லாம் சேர்ந்து உருவாக்கிய மனநிலைக்குக் கவிதை மட்டுமே போதுமானதாக இருக்கவில்லை. வாசிப்பில் அறிந்தவற்றையும் அனுபவத்தால் உணர்ந்தவற்றையும் பகிர்ந்துகொள்வதற்கு விரிந்த வடிவம் தேவைப்பட்டது. அதன் விளைவாகவே நாவல் எழுத ஆசைப்பட்டேன்.

நான் நாவல் எழுதுவேனா என்பதில் எனக்கே சந்தேகமிருந்தாலும் அப்படி எழுதும் வாய்ப்பு ஏற்பட்டால் எதை எழுதவேண்டும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமிருக்க வில்லை. மனதில் இன்னும் பசுமையாகத்தெரியும் இடத்தையும் நினைவில் இன்றும் நடமாடிக்கொண்டிருக்கும் மனிதர்களையும் இப்போதும் ஏக்கத்துடன் உணரச் செய்யும் காலத்தையும் பற்றியதாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் முன்பே ஏற்பட்டிருந்தது. அப்படிப் பார்த்த இடம் வெல்லிங்டன். வியந்த மனிதர்கள் அங்கே வாழ்ந்தவர்கள் தாம். நீங்காமல் தொடர்வது அந்தப் பழைய நாட்கள்தாம். அவ்வாறாக என்னுடைய முதல் நாவல் வெல்லிங்டன் கருக் கொண்டது.

எழுதத் தொடங்கியதும் வெவ்வேறு குழப்பங்களில் ஆழ்ந்தேன். பிறந்து ஒரு வயது முதல் ஏறத்தாழக் கல்லூரிப் பருவத்தின் கடைசி நாள்வரை பெரும்பான்மையான காலம் வாழ்ந்த நிலம். அந்த இடத்தைப் புனைகளமாக மாற்ற அதுவே தகுதியா? நிறைய மனிதர்களைத் தெரியும். ஆனால் அவர்களின் நிஜமான பின்புலம் தெரியுமா? அந்த நாளில் நடந்த நிகழ்ச்சிகளை இன்றைய புத்தியுடன் புரிந்துகொள்வது சரியா? இவையெல்லாம் நாவலின் உள்ளடக்கம் சார்ந்த சிக்கல்கள். ஒரு வாசகனாக நூற்றுக் கணக்கான நாவல்களை வாசித்திருக்கிறேன். சில நாவல்கள் வாழ்க்கையை விசாரித்துப் பார்க்கும் அளவுக்குப் பாதிப்பையும் ஏற்படுத்தி உள்ளன. அவற்றின் சாயல் படியாமல் எழுதிவிட முடியுமா? முன்னரே சில சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். அவை கவனத்துக்குரியவையாகவும் இருந்தன. அதை நம்பி நூறு மீட்டர் ஓட்டக்காரனான நான் மராத்தான் போட்டிக்குக் காலை நீட்டலாமா?

 சொல்லிக் கொள்ளும்படியாகச் சில கவிதைகளை எழுதிக் கொஞ்சூண்டு நற்பெயரைச் சம்பாதித்திருக்கிறேன். நாவல் எழுதி அந்தப் பெயரை இழந்து விடலாமா? இவையெல்லாம் வடிவம் தொடர்பான சந்தேகங்கள்.

இத்தனை தடுமாற்றங்களுடன் நாவல் எழுத முயல்வதை விட எழுதாமலிருப்பதே நல்லது என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் அதற்குள் நாவலெழுத்தின்  சாத்தியங்களைக் கற்பனையில் கண்ட ஆழ்மனம் அந்த முடிவை ஏற்றுக் கொள்ள மறுத்தது. இரண்டு சம்பவங்கள் மறுப்பைக் களைய உதவின. ஒன்று: வாசிப்பு. மற்றது சந்திப்பு.

என்னுடைய புத்தகச் சேகரிப்பில்  நீண்ட காலம் வாசிக்கப்படாமலிருந்தது ஃப்ரெடரிக் ப்ரைஸ் எழுதிய ‘ஒட்டகமண்ட் - எ ஹிஸ்டரி' என்ற நூல். அந்தத் தலைப்பின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் வாங்கிய புத்தகம். 1908 இல் வெளியான நூலுக்கு 2002 இல் போடப்பட்ட மறுபதிப்பு. நாவலின் களம் வெல்லிங்டன் என்பதில் மாற்றமில்லை என்பதால் பின்னணி விவரங்களுக்காக ப்ரைசின் புத்தகத்தை ஆழ்ந்து வாசித்தேன். அதன் வரலாற்றுத் தகவல்களுக்கிடையில் நாவலின் பாத்திரங்களில் ஒன்றைக் கண்டடைந்தேன். உதகமண்டலம் என்ற மலைவாச நகரத்தை உருவாக்கிய ஜான் சல்லிவன். அவர் அறிமுகமானதும் அவரைச் சார்ந்த மற்ற பாத்திரங்களும் எழுந்து வந்தனர். சில அத்தியாயங்களின் தோராய வடிவமும் பிடிபட்டது. எனினும் நாவல் எழுதத் துணியவில்லை.

இதற்குள் ஓரிரு ஆண்டுகள் கடந்தன. உதகை நாராயண குருகுலத்தில் தமிழ் மலையாளக் கவிஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை எழுத்தாளர் ஜெயமோகன் 2008, மே முதல்வாரம் நடத்தினார். நானும் பங்கேற்றேன். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மலையாளக் கவிஞர்கள் ராமனுக்கும் கல்பற்றா நாராயணனுக்கும் ஒருநாள் மாலை ஊட்டியைச் சுற்றிக் காட்டும் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். அவர்களுக்குக் காண்பித்த நகரத்தின் ஒவ்வொரு இடமும் என் நினைவுகளில் பிணைந்து கிடப்பதை அப்போது உணர்ந்தேன். அதற்குக் காரணமான மனிதர்களும் அவர்களுடன் தொடர்புடைய சம்பவங்களும் மனதுக்குள் மீண்டும் நிகழ்ந்தன. இவையெல்லாம் ஒரு நாவலுக்குரிய சரக்குகள் அல்லவா என்ற எண்ணம் துளிர்த்தது. எழுதி விடவேண்டும் என்ற உறுதி பிறந்தது.

நீலகிரி ஜில்லாவையும் உதகமண்டலம் நகரத்தையும் தங்களது ஆட்சிக் காலத்தில் உருவாக்கியவர்கள் ஆங்கிலேயர்கள்.அவர்களின் பிரதிநிதியான ஜான் சல்லிவனின் கனவின் நிறைவேற்றம்தான் இந்த மாவட்டமும் நகரமும். இந்தப் பின்னணியைச் சொல்லாமல் வெல்லிங்டனை வரைந்து காட்டிவிட முடியாது என்று தோன்றியது. எனவே ஜான்  சல்லிவனிடமிருந்து நாவலைத் தொடங்கினேன். கணிசமான பக்கங்களை எழுதி முடித்ததும் சந்தேகம் எழுந்தது. நான் எழுத விரும்பியது வெல்லிங்டன் நினைவுகளையா, சல்லிவனின் வரலாற்றையா? இந்தக் கேள்வியில் மாட்டிக்கொண்டு எழுத்துத் தடைப்பட்டது. சில மாத இடைவெளிக்குப் பிறகு சில தீர்மானங்களை மேற்கொண்டேன். எழுத்தை அதன் போக்கில் செல்ல அனுமதிப்பது. நான் கண்டதையும் கேட்டதையும் உணர்ந்ததையும் உணராமல் விட்டதையும் இயல்பாகப் பதிவு செய்வது. கதைப் போக்கில் குறுக்கிடாமல் இருப்பது.

இந்தத் தீர்மானங்களுக்குப் பின்பு நாவல் வளர்ச்சியடையத் தொடங்கியது. ஏறத்தாழப் பாதிவரை முடிந்த நிலையில் மீண்டும் சுணக்கம் ஏற்பட்டது.கருப்பையில் வளரும் சிசு கொடிசுற்றிக் கிடந்ததுபோன்ற அவஸ்தையிலும் நோவிலும் சில நாட்கள் கழிந்தன. பங்களூரு ஹெஸ்ஸரகட்டாவிலுள்ள சங்கம் எழுத்தாளர் உறைவிடத்தில் தங்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி நாவலை முடித்தேன். அப்படியாக எழுத ஆரம்பித்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக்கினேன். காலச்சுவடு பதிப்பகம் 2013 டிசம்பரில் நாவலை வெளியிட்டது. அவ்வாறாக நானும் நாவலாசிரியன் ஆனேன்.

வெல்லிங்டன் நாவலுக்குக் கிடைத்த எதிர்வினைகளில் நேர்நிலையும் எதிர்மறையும் சரிசமமாகவே இருந்தன. ‘எந்த மோஸ்தருக்கும் பின்னால் போகாமல் எதார்த்தமாக எழுதியிருக்கிறீர்கள்' என்று நாஞ்சில் நாடனும் ‘பாசாங்கில்லாத எழுத்து' என்று பிரபஞ்சனும் ‘ இலக்கிய குணமும் நாவலின் குணமும் இருக்கின்றன' என்று மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மாவும் பாராட்டினார்கள். இரண்டு கதைகளை ஒன்று சேர்த்து ஏமாற்றி விட்டதாகவும் சொல்லப்பட்டது. ஒரு படைப்பின் வலுவும் வலுக்குறைவும் அப்பட்டமாகத் தெரிவது அதை உருவாக்கியவனுக்குத்தான். எனவே பாராட்டைச் செம்பொன்னாகவும் விமர்சனத்தை மண்ணோடாகவும் கருதாத மன நிலையை உருவாக்கிக் கொண்டேன்.

இரண்டு நாவல்கள் எழுதி விட்டேன். இனியும் நாவல்கள் எழுதுவேனா என்று எனக்கே தெளிவில்லை. இன்னொரு நாவலையோ அல்லது இன்னும் சில நாவல்களையோ எழுதினாலும் ‘வெல்லிங்டன்' எனக்கு மிகவும் பிடித்த நாவலாகவே இருக்கும். ஏனெனில் வாழ்ந்து தீர்த்த ஒரு வாழ்வை, மீட்க முடியாத வாழ்வை மீட்டிருக்கிறேன். அதை வாழ்ந்திருக்கிறேன்.

ஜனவரி - 2022