சம்பளமில்லாத வேலைக்காரிகளாக, கொத்தடிமைகளாகத்தான் இந்த சமூகம் மனைவிகளை நடத்திவந்தது. பெண்கள் வேலைக்குப் போய் சம்பாதிப்பதால் இன்றைக்கு நிலைமை சற்று முன்னேறியிருக்கிறது” என்று கம்பீரமாக நம்மிடம் ஆரம்பிக்கிறார் மார்க்கண்டேயரான நடிகர்
சிவகுமார். அவரது முகமும் குரலும் கண்களும் ஆயிரம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றன. “என்ன
சாப்பிடறீங்க.. காபியா டீயா?.. விஸ்கி பிராந்தி எதுவும் இங்கே கிடைக்காது” கடகடவென சிரிக்கிறார் தமிழ்த் திரையுலகின் ‘டீடோட்டலர்’ நாயகன்.
“சாதாரண காவலராக இருந்தவர் டிஜிபி ஆக வரமுடியுமா? பள்ளிக்கூட வாத்தியார் கல்லூரி பேராசிரியர் ஆகமுடியுமா? இதுபோன்ற அரிய சாதனைகளைச் செய்தவராக ஒருவர் இருக்கலாம். ஆனால் நாளை உனக்கு ஓய்வு என்றால் இவன் குளோஸ். அடுத்த விநாடி அவன் நொறுங்கிப் போய்விடுவான். அந்த சமயத்தில் காபி சொல்லி எவ்வளவு நேரமாச்சு என்று குரல்கொடுத்தால்.. என்ன அவசரம் இப்போ? என்று பதில் சமையல் கட்டில் இருந்துவரும். அது வேறு விஷயம்.
ஓய்வு பெறும்வரை நீங்கள் உழைத்தீர்கள்.. சரி. உலகம் கொண்டாடிய அப்துல்கலாமாக நீங்கள் ஆகியிருக்கலாம். அதற்காக நீங்கள் 40 ஆண்டுகள் அர்ஜுனன் தவம் செய்தது மாதிரி உழைத்தீர்கள் அதற்காக ஒரு கொத்தடிமை, சம்பளமில்லாத வேலைக்காரி தேவைப்பட்டது. இப்போது ஓய்வு பெற்றுவிட்டீர்கள் அல்லவா? இப்போதாவது உங்கள் மனைவியைத் திரும்பிப் பாருங்கள். அருகில் அமரவைத்து சாப்பிடச் சொல்லுங்கள்.. இதைத்தான் நான் சொல்கிறேன்.
எனக்கு காலை ஏழுமணிக்கு படப்பிடிப்பு என்றால் ஆறுமணிக்கு வண்டியில் உட்காருவேன். அஞ்சரை மணிக்கு சாப்பிட உட்காருவேன். சில நொடிகள் சாப்பாட்டு மேஜையில் இட்லியும் சட்னியும் வரத் தாமதம் என்றால் ஒன்றும் சொல்லமாட்டேன். விர்ரென்று போய் வண்டியில் உட்கார்ந்துகொள்வேன். நான் எப்பேர்ப்பட்ட ஆள் பார்த்தீர்களா? சிவாஜி கணேசன் ஆறே முக்காலுக்கு வருவார் என்றால் நான் அவருக்கு முன்பே ஆறரைக்குப் போய்விடுவேன். அவர் நான் ரயிலில் வந்தால் நீ விமானத்தில் வருகிறாயா என்று கேட்பார். சிவகுமார், சிவாஜி கணேசனுக்கு முன்னாடி வருவான்யா என்று பெயர் எடுப்பதற்காக, வறட்டு கவுரவத்துக்காக, நாற்பது ஆண்டுகள் என் மனைவியை வாட்டி வதக்கியிருக்கிறேன். இப்போதாவது அருகே அமர வைத்து, உன்னை அதிகமாக வாட்டி வதக்கிவிட்டேன். ஓய்வெடு என்று தலையை ஆறுதலாகத் தடவி கூறினால் என்ன நடக்கும் தெரியுமா? கேதார்நாத் வெள்ளம் வரும். ஆமாம் கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும். இதை எனக்கு மட்டும்
சொல்லவில்லை. உங்களுக்காகவும்தான் சொல்கிறேன். அந்த வெள்ளம்போல உணர்ச்சிப் பிரவாகம் பெருக்கெடுக்கும். அதில் நீ தப்பிப் பிழைத்துக் கொள்! அந்த வெள்ளம் அகன்றபோது அவள் மழை பெய்த பூமியாக மாறியிருப்பாள்.
எங்கோ பிறந்து, தன் பெற்றோரால் வளர்க்கப்பட்டு, தன் நண்பர்களுடன் பேசி விளையாடி மகிழ்ச்சியாக இருந்தவர் என் மனைவி. அவர் பிஎட் படித்து ஆசிரியை ஆக ஆசைப்பட்டார். ஆனால் அவரது தந்தை எனக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டார். செம்மண் பூமியில் வளர்ந்த ஒரு செடியை பாறை நிலத்தில் நடுவது போல..
அவர் எவ்வளவு கனவுகளுடன் ஒரு நடிகனான என்னைத் திருமணம் செய்துகொண்டு இங்கே வந்திருப்பார்? ஆனால் நாற்பது ஆண்டுகளாக நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டார் அல்லவா?
ஆரம்பத்தில் எனக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணமே இல்லை. நாட்டுக்கு இருக்கும் மக்கள் தொகையை நாம் ஏன் கூடுதலாக்க வேண்டும்? நாமோ ஓவியம் வரைகிறோம், அதில் ஏது வருமானம்? நானே சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்று ஆரம்பத்தில் முடிவெடுத்திருந்தேன். கல்யாணம் கெட்டவார்த்தை. காதல்? சுட்டுடுவேன். இப்படி இருந்த ஆள் நான். ஆனால் காலப்போக்கில் நடிகனானேன். திரைத்துறையில் பெரிய ஜாம்பவான்கள் இருந்தார்கள். அவர்களிடம் தாக்குப்பிடித்து துறையில் இருப்பதே பெரிய விஷயம். ஒருபடத்தில் மகனாக ஒரு பாத்திரம் இருக்கிறது என்று சொன்னால், அதுக்கு ஏன் வேறு ஆளை நடிக்க வைக்கிறீங்க, அப்பாவாகவும் மகனாகவும் நானே நடித்துவிடுகிறேனே.. எனக்குப் பேர் கிடைக்கும் இல்லையா.. என்று அவர்கள் சொன்ன காலம். அந்தக் காலகட்டத்தில்தான் இந்த சிவகுமாருக்கும் சின்ன சின்ன இடைவெளிகள் கிடைத்து அதில் காலூன்றி நடிகனானேன். அதற்கே 38 படங்களும் எட்டு ஆண்டுகளும் தேவைப்பட்டன. அப்போதுதான் திருமணம் செய்துகொள்ளலாமே என்ற ஞானோதயம் வந்தது. தாய் தகப்பன் உருவாக்கிய மனிதச்சங்கிலியை ஏன் உடைக்கவேண்டும் என்று தோன்றியது.
செக்ஸுக்காகவோ இல்லறவாழ்வில் ஈடுபடவேண்டும் என்றோ இல்லை. அப்ப ‘கூத்தாடிப் பயலுக்குப்’ பொண்ணு கொடுக்க யாரும் தயாராக இல்லை! பெண் தேடுவதே பெரிய படலம். ஒரு வீட்டுக்குப் பெண் பார்க்கப்போனால் காபி சாப்பிடுவதற்கு முன்னால் இவர்தான் மாப்பிள்ளையா என்று ஒரு நடிகை என் மார்பில் படுத்திருக்கும் படம் வெளிவந்த புத்தகத்தைக் காட்டி அவங்க அப்பா கேட்கிறார். காபி சாப்பிடாம எழுந்து வந்துட்டாங்க. இன்னொரு இடத்தில் பெண் பார்த்து ஜாதகம் வாங்கிக்கொண்டு பஸ் ஏறும்போது, பின்னாடியே வந்து ஜாதகத்தை வாங்கிட்டுபோயிட்டாங்க..
இதையெல்லாம் தாண்டி 13 பொண்ணுகளைப் பார்த்து கடைசியில் ஒரு பைத்தியக்கார தகப்பன்(சிரிக்கிறார்) எனக்குப் பொண்ணு கொடுக்க முன்வந்தார். எங்க வீட்டில் வந்து இஸ்திரி போடாத வெண்ணிறச் சேலையை கட்டிக்கொண்டிருந்த கிராமத்துப் பெண்மணியான என் தாயைப் பார்த்துவிட்டு அதன்பின்னர் நம்பிக்கை வந்து எனக்கு பெண் கொடுத்தார் அவர்.
எந்த சினிமாவிலும் அதற்கு முன்பாக அவர் என்னைப் பார்த்தது இல்லை. திருமணம் ஆனபின்னர் ‘அன்னை வேளாங்கண்ணி’ படத்தில் சட்டித்தலையுடன் நான் பாடிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, அய்யோ நீங்கதானா இது? இதை ஏற்கனவே நான் பார்த்திருக்கிறேனே என்று கேட்டவர் அவர்.
‘வெள்ளிக்கிழமை விரதம்’ படத்தை கல்யாணம் ஆன புதுசில் அவர் பார்த்திருக்கிறார். அந்த படத்தில் ஒரு வீட்டில் என்னையும் ஜெயசித்ராவையும் போட்டு ரவுடிகள் பூட்டிவிடுவார்கள். இரவானதும் ஒரு குரங்கு அங்கு வந்து ரகளை பண்ணும். அப்புறம் எனக்கும் அவருக்கும் உருண்டு புரளும் காட்சிகள்வரும். அந்தக் காட்சியைப் பார்த்தபோது அவருக்கு என்ன உணர்வு தோன்றியதாம் தெரியுமா? அதை அவர் அப்போது சொல்லவில்லை. 40 வயதுக்கப்பறம் ஒரு நாள் சொன்னார்: ‘உங்க படம் ஒண்ணுபாத்தேன். நல்லா தக தகவென தகிக்கும் நெருப்புத் துண்டுகளை என் நெஞ்சில் கொட்டியதுபோல் இருந்தது’. இதுதான் நடிகன் பிழைப்பு.
காலையில் ஆறுமணிக்கு படப்பிடிப்புக்குக் கிளம்புவேன். தினம் இரவு நாடக நடிப்பு. மூணு மாதத்தில் 100 நாடகம் போட்டிருக்கிறோம். எப்படி? சனிக்கிழமைகளில் இரண்டு நாடகங்கள் போட்டுவிடுவோம். 250 பக்க வசனம். அழுது நடித்துவிட்டு, துவைத்துப் போட்ட துணிபோல இரவு வீட்டுக்கு வருவேன். இந்த அழகில் எங்களுக்குக் குழந்தைகளும் பிறந்துவிட்டன.
திருமணமாகி 14 ஆண்டுகள் கழித்து எனக்கு திடீரென ஞானோதயம் பிறந்தது. என் துணைவியாரின் ஜாதகத்தைப் பார்த்து அவரது பிறந்தநாளைக் கண்டுபிடித்தேன். அவருக்குத் தெரியாமலேயே ஒரு புடவையை வாங்கி அன்றைக்குப் பரிசளித்தேன். என்ன இது என்றார். பிறந்தநாள் பரிசு என்றேன். ‘என் பிறந்தநாள் எனக்கே தெரியாதே... இத்தனை ஆண்டுகளில் ஒருநாளாவது என் முகத்தை உத்துப் பாத்திருக்கீங்களா? நான் சந்தோஷமாக இருக்கேனா என்று கேட்டிருக்கீங்களா?” என்றார் கண்ணீரோடு. பிறந்தநாளும் அதுமாக அழவெச்சிட்டோமே என்று என் மனது பதைபதைத்தது. ஆனால் அவர் கேட்டதில் உண்மை இருந்தது.
அவங்களுக்கு பெரிய குழப்பம் வந்திருக்கும். இவர் விரும்பிக் கல்யாணம் பண்ணினாரா? விரும்பாமல் கல்யாணம் பண்ணினாரா? நம்மிடம் பேசவே இல்லையே.. காலையில் ஆறுமணிக்கு வண்டியில் சென்று இரவுதான் வருகிறார். காலையில் அஞ்சரைக்கு டிபன் தயாராக சில நொடிகள் தாமதமானாலும் உர்ரென்று கோபித்துக்கொண்டு வண்டியில் உட்கார்ந்துவிடுவார். மனிதனாகவா நடந்துகொண்டார் என்று நினைத்திருக்கலாம். ஆனால் வாய்திறந்து ஒரு சொல் பேசியதில்லை.
இதுதான் மண்ணின் மகள்களின் பெருமை. அறுபது வயது ஆனபின்னர்தான் எனக்குத் தோன்றியது: இனிமேலாவது உணர். அவளை மதி. அவள் இருப்பை உணர். அவள் உன் இரண்டாம் தாய்!
நம் பெற்ற தாய்க்கு நமது சுபாவம் பெரிதாகத் தெரியாது. அப்பன் புத்தி இருக்கு என்றுதான் சொல்வாரே தவிர வேறு தெரியாது. ஏனெனில் பத்துவயதுக்குப் பின்னர் நாம் தாயிடமிருந்து விலகிவிடுகிறோம். படிப்பதற்காக விடுதிக்கோ பள்ளிக்கோ சென்றுவிடுகிறோம். தாய் நம்மை கூர்ந்து கவனிப்பதில்லை. ஆனால் மனைவி திருமணம் ஆனதில் இருந்து நம் மூச்சை சுவாசித்து வாழ்கிறாள். நான் உங்களுக்கு பேட்டி கொடுக்கும்போது லேசாக இருமினால் கூட அவர் என்ன என்று கவனிப்பார். அப்படிப்பட்ட பெண்களை உங்கள் அறுபது வயதுக்குப் பின்னாவது மதியுங்கள் என்று சொல்கிறேன்.
எழுபது வயது ஆகிவிட்டதா? தயவு செய்து மனைவியைக் கும்பிடுங்கள். எனது நண்பர் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஆசிரியர். அவரது மனைவியும் ஆசிரியர்தான். சென்னையில் மகன்கள் இருந்தார்கள். அவர்களைப் பார்க்க மனைவியுடன் வந்தார். திடீரென அவரது மனைவிக்கு நெஞ்சுவலி வந்துவிட்டது. மருத்துவமனைக்குச் சென்றார்கள். உடனே திரும்பிவிடலாம் என்று நினைத்தால் நாட்கணக்கில் தங்கவேண்டியதாகிவிட்டது. இரவு முழுக்க கண்விழித்து அந்த நாட்களில் கணவன் மனைவியைக் கவனித்துக்கொண்டார். தன் 65 வயதில் வாழ்க்கையிலேயே முதல்முறையாக தன் மனைவிக்காக நர்ஸ் வேலை பார்த்தார். சரி அழைத்துப்போங்கள் என்று மருத்துவமனையில் சொன்னார்கள். ஆனால் கையில் பணம் இல்லை. மகன் இரண்டுநாள் மருத்துவமனையில் இருங்கள் என்று சொல்லி பணம் தயார் செய்து கட்டிய பின் வீட்டுக்கு வந்தார்கள். சக நண்பரை அந்த ஆசிரியர் அழைத்துத் தகவல் சொன்னார்: ‘சாதாரணமாக மருத்துவமனைக்குப் போனோம். ஐம்பதாயிரம் செலவாகிவிட்டது’ என்று.
அந்த நண்பர் பதில் சொன்னார்: ‘நண்பா, உனக்கொரு மனைவி இருக்கிறாள். வாழ்நாள் முழுக்க உனக்குப் பணிவிடை செய்த மனைவிக்கு சேவை செய்ய உனக்கொரு வாய்ப்பு கிடைத்தது. உனக்கொரு வாழ்க்கை இருக்கிறது. என் மனைவி திடீரென்று இறந்துவிட்டாள். நான் மிகப்பெரிய அந்தஸ்தில் இருக்கும் அதிகாரி. வீட்டில் யாரும் இல்லை. என் குழந்தைகள் அமெரிக்காவில் இருக்கிறார்கள். இங்கு எனக்கு வீட்டுக்குப் போகவே மனசு இல்லை. வேலை நேரம் முடிந்தபின்னும் கோப்புகளைப் பார்த்து, இனி முடியாது என்று உடல் சோர்ந்தபின் வீட்டுக்குச் செல்கிறேன். நானே சாவியை எடுத்து கதவைத் திறந்து, நானே சமைத்து சாப்பிட்டு, பாத்திரம் கழுவி, துணி துவைத்து.. நானே எல்லாம் செய்து.. செத்துக்கொண்டிருக்கிறேன். நரகத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்’ என்றார். இதுதான் 70 வயதில் மனைவியின் முக்கியத்துவம்.
அடுத்ததாக எண்பது வயதைத் தாண்டியவர்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் தினமும் காலையில் சாமி கும்பிடும்போது மனைவியின் காலில் பூப்போட்டுக் கும்பிடவேண்டும். கணவன் இறந்தபின் அந்த சோகத்தைத் தாண்டி மனைவி நாற்பது ஆண்டுகள் இருந்து தன் கடமைகளை நிறைவேற்றுகிறாள். மனைவி இறந்துவிட்டால் கணவன் ஐந்தாண்டுகள் இருக்க முடியுமா? மனைவியை அதிகாரம் செய்து பழக்கப்பட்டவன், மருமகளையோ மகளையோ சார்ந்து இருக்கவேண்டும். அவர்கள் நல்லவர்கள்தான். இருப்பினும் அவர்கள் காபி தம்ளரை வைக்கும் ஒலியிலேயே அவன் நொறுங்கிப் போய்விடுவான். எப்படியெல்லாம் மனைவியை அதிகாரம் செய்திருப்பாய்? காபி சூடா இருந்தால்,
சர்க்கரை குறைவா இருந்தால், அதிகமாக இருந்தால் எப்படியெல்லாம் நாயிலும் கீழான வார்த்தைகளை உபயோகித்திருப்பாய்! அதனால்தான் சொல்கிறேன். எண்பது வயதுக்கு மேல் நீ வாழ்ந்தால் உன்னுடன் அப்போது மனைவி இருந்தால், நீ அவளைக் கொண்டாடு.
பெண் என்பவள் குழந்தையாக இருக்கையில் அப்பா அம்மா பாதுகாப்பில் இருக்கிறாள். ஆளானபின்னால் கணவனின் பாதுகாப்பில். வயதான பின் பிள்ளைகளின் பாதுகாப்பில். எப்போதுமே கூண்டுக்கிளி அவள். இதுதானே மனுநீதி சொல்கிறது? ஆண்மகனே.. உன்னைப் பெற்று வளர்க்க ஒரு பெண் வேண்டும், அது தாய். உன் சாதனைகளுக்கு உதவியாகவும் பாராட்டவும் ஒரு பெண் வேண்டும். அது உன் மனைவி. வயதானபின் நீ கொஞ்சி சீராட்ட உன்னைப் பார்த்துக்கொள்ள ஒரு பெண் வேண்டும் அது உன் மகள். பெண் இல்லையேல் ஆண் இல்லவே இல்லை!”
பாய்ந்து வீழும் பெரும் அருவிபோல் சிவகுமார் மனைவியர் குலத்தின் பெருமையை உணர்ச்சிகரமாகப் பேசி முடிக்கிறார்.
அக்டோபர், 2014.