சிறப்புப்பக்கங்கள்

மணவாழ்க்கை ரகசியங்கள்!

அந்திமழை இளங்கோவன்

என்ன சொல்லி என்ன எழுதி என்ன... நான் சொல்ல வருவதைத் தவிர எல்லாம் புரிகிறது உனக்கு...

  -கனிமொழி கருணாநிதி

இதே கவிதையின் சாரத்தை அமெரிக்க எழுத்தாளர் எரிக் ஜாங் ‘ ஒரு பெண்ணை ஓர் ஆண் சரியாகப் புரிந்துகொள்ளாத இரண்டு தருணங்கள் உண்டு. அவை-  திருமணத்துக்கு முன்பு, திருமணத்துக்குப் பின்பு‘ என்கிறார்.

உங்கள் துணையைப் புரிந்து கொள்ளும் முயற்சிகளைக் கைவிட்டுவிட்டு, இந்த கட்டுரையை தொடர்ந்து படிக்கவும்.

அந்தரங்கங்களை, தனது சிக்கல்களை, வெற்றிகளை பகிர்ந்து கொள்ளும் நண்பர் அவர். நீண்ட நாள் தொடரும் நட்பில் அவரது நல்லது கெட்டதில் பங்குபெறும் முதல் ஐவரில் நானும் ஒருவன். அவரது மகள் திருமணத்தில் மாப்பிள்ளை தேடுவதில் தொடங்கி, திருமணம் மற்றும் குடியமர்த்துவது வரை சகலத்தையும் பகிர்ந்து கொண்ட அவர் ஒரே ஒரு விஷயத்தை என்னிடம் மறைத்தார். அவரது மகளின் மணவாழ்வில் ஏற்பட்ட பிரச்னைகளால் திருமணமாகி ஒன்றரை வருடத்திற்குள் அவள் கோர்ட்டில் போய் நின்ற விஷயம் அது. அந்த நேரத்தில் 27 வருடமாக குடித்தனம் நடத்தும் நண்பருக்கும் அவரது மனைவிக்கு இது ஏன் எப்படி எதற்கு என்று புரியவில்லை.

என் நண்பரைப் போன்றோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தமிழகத்தின் இன்றைய நிலவரம்.

பணத்தை எப்படி கையாள்வது? துணையை எப்படி நடத்துவது என்ற இரு விஷயங்களில் தமிழக பெற்றோர் தங்களுக்கு தெரிந்ததை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதில்லை.

ஒரு ஆணும் பெண்ணும் நீண்ட தூரம் சந்தோஷமாக சேர்ந்து பயணிக்க வேண்டுமானால் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதைப் பற்றிய நீண்ட உரையாடல்கள்தான் இந்த சிறப்புப் பக்கங்கள்.

திருமணம் செய்து கொள்ளாமல் கூட நீண்ட நாள் சேர்ந்து வாழும் எண்ணற்ற ஆண் பெண் ஜோடிகளை எனக்குத் தெரியும். அமெரிக்காவின் புகழ் பெற்ற தொலைக்காட்சி பிரபலமான ஓப்ரா வின்ப்ரே, ஸ்டெட்மேன் க்ரஹாம் என்பவருடன் 1986லிருந்து 36 (2022) ஆண்டுகள் சேர்ந்து வாழ்கிறார். ஏழுவருடம் சேர்ந்து வாழ்ந்த பின் திருமணம் செய்து கொண்ட நயன்தாராவும் விக்னேஷும் இணை பிரியாமல்  நீடூழி வாழ வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருமண உறவின் அனேக விஷயங்கள், ஆணின் பார்வையில், ஆணின் தேவைகளை பூர்த்தி செய்யும் விஷயமாகவே உருவாக்கப்பட்டு தொடர்ந்துள்ளன. பெண்ணை ஓர் உடைமையாக, சொத்தாக கருதும் சிந்தனை மனித மனதின் ஆழத்திலிருக்கிறது.

இந்த சிந்தனை ஆணிடமிருந்து பெண்ணுக்கும் பரவ, ஒருவன்/ ஒருத்தி தனக்கே உரியவன்/ள் என்ற எண்ணமும் அதனைத் தொடரும் பொறாமையும் உருவெடுக்கிறது. பிறகு இவையிரண்டும் கலந்ததால் பிறக்கும் சந்தேகம் தான் உறவுச்சிக்கல்களின் ஊற்றாகிறது.

தனக்கே உரியவள் என்ற எண்ணம் (Possessiveness) எதையும் இழந்து விடுவோமோ என்ற பயத்திலிருந்து ஆரம்பிக்கிறது. Mobile Phone, Whatsapp, Social Media மற்றும் நடமாட்டங்களை கண்காணிப்பது (அ) வேவு பார்ப்பது தான் இதன் வெளிப்பாடுகள். உன்னை அதிகமாக நேசிக்கிறேன் அதனால் தான் உரிமை கொண்டாடுகிறேன் என்று சப்பைக் கட்டுக் கட்டுவார்கள். ஆனால், இது அன்பின் வெளிப்பாடு அல்ல.

கணவன் மனைவியில் ஒருவர் மற்றொருவரின் ஒவ்வொரு செயலின் மீதும் ஆதிக்கம் செலுத்தும் போது, ஒவ்வொரு செயலையும் திசைதிருப்பும்போது, தன் பார்வையிலிருந்து அகலவிடாதபோது Possessiveness சிக்கலை நோக்கி நகர்கிறது என்று பொருள். இது அவரது முந்தைய அனுபவத்தின் நீட்சியாக இருக்கலாம். ஆனால் தவறானது.  இதில் இருந்து விடுபட மனநல மருத்துவரை நாடலாம்.

‘உரிமை கொண்டாடுவதற்கான விருப்பமே நமது காதலுக்குக் காரணமானால், அது காதலோ அன்போ அல்ல' என்கிற திச் நாட் சென்னின் வார்த்தைகள் முக்கியமானவை.

‘திருமண பந்தத்தை நாம் அணிவிக்கும் சங்கிலிகளால்  காப்பாற்ற முடியாது. பல ஆண்டுகளாக மனிதர்கள் தைத்து உருவாக்கும் நூற்றுக்கணக்கான சிறுசிறு நூல்களால் ஆன இணைப்பால்தான் காப்பாற்ற முடியும்' என்கிற சிமன் சிக்னோரின் வாசகம் Possessiveness மூலம் திருமணத்தை காப்பாற்ற முடியாது என்பதை அழுத்தமாக சொல்கிறது.

என்னதான் கணவன் மனைவியாக இருந்தாலும் எத்தனை வருடங்கள் வாழ்ந்தாலும் இருவருக்கும் உறவில் அவர்களுக்கென்று ஒரு தனியான இடம் தேவைப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் Space என்கிறார்கள். ‘கொஞ்சம் இடமும், நேரமும், தொலைவும், ஓர் உறவு மலர்ச்சியடைவதற்கு நியாயமான தேவைகள்' என்கிறார் காரென்சால்மன்சன். அந்த Space -இல் அவரவருக்கு சுதந்திரம் வேண்டும். இதைப் பற்றி பேசும் போது என்ன புதுசு புதுசா சொல்றீங்க என்றார் நண்பர்.

Space புதுசு அல்ல அரத பழசு என்று சொல்லி கலில் ஜிப்ரானின் ‘நீங்கள் சேர்ந்திருக்கையில் உங்களுக்குள் இடைவெளிகள் இருக்கட்டும், உங்களுக்கிடையில் விண்ணகத்தின் காற்றுகள் நடனமாடட்டும். ஒருவரை ஒருவர் நேசியுங்கள்; ஆனால் அன்பாலான பிணைப்பை உருவாக்காதீர்கள். உங்கள் ஆன்மாக்களின் கடற்கரைகளுக்கு இடையே நகரும் கடல் இருக்கட்டும். கோவில்களின் தூண்கள் விலகியே நிற்கின்றன. ஓக் மரங்களும் சைப்ரஸ் மரங்களும் ஒன்றின் நிழலில் மற்றொன்று வளர்வதில்லை' என்ற வார்த்தைகளை முன்வைத்தேன்.

இந்த Space கணவன் மனைவிக்கு மட்டுமல்ல எல்லா உறவுகளுக்கும், நட்புக்கும் அவசியமானது.

திருமண உறவில் விசித்திரமானது மனதின் பருவநிலைக்கு ஏற்ப அதன் தேவைகள் மாறுபட்டுக் கொண்டிருக்கும். Space தேடும் மனம், பின் மாறி நெருக்கமான தொடுதலை தேடும்.

தொடுதல் என்றால் அனேக ஆண்களுக்கு செக்ஸ் தான் ஞாபகத்திற்கு வரும் என்பது ஆய்வு முடிவு. தொடுதலில் (Touch) எண்ணற்ற வகைகள் உள்ளன அதில் செக்ஸும் ஒன்று. நடக்கும் போதோ (அ) அருகருகில் அமர்ந்திருக்கும் போதோ விரல்களை பற்றிக் கொள்வது, முதுகை லேசாக நீவிவிடுவது சின்ன முத்தம், அவசரமான (அ) நிதானமான கட்டிப்பிடித்தல், முகத்தோடு முகம் உரசல் என்று எத்தனையே விதமான தொடுதல்களால் உறவுகளை மேம்படுத்தலாம். The Five Love Languages என்ற புத்தகத்தில் Gary Chapman ஐந்தில் முக்கியமான ஒரு காதல் மொழியாக தொடுதலைப் பற்றி விரிவாக பேசுகிறார்.

தம்பதியர்களிடையே வாக்குவாதங்கள் வந்து வார்த்தைகள் தடித்து போகும்போது, ஒருவர் பேசுவதை நிறுத்திவிட்டு, மற்றொருவரை ஏதாவது ஒரு தொடுதல் மூலம் எதிர்வினையாற்றினால் கோபம் கரைந்து போகும். தொட முடியாத பொழுதுகளில் தொடுகையை ஞாபகப்படுத்தி ஒரு குறுஞ்செய்தி அனுப்பி கிளர்த்தலாம்.

மனதையும் உடலையும் கிளர்த்திய தொடுதல்களின் அனுபவங்கள் இரு ஜோடிகளிடையே ஆயிரமாயிரம் இருந்தாலும் ஒரு சண்டையின் போது இருவருக்கும் ஞாபகம் வருவது மோசமான அனுபவங்கள் தான். அந்த அனுபவங்களுக்கு நீர் விட்டு முள்மரங்களாக வளர்த்து காயப்படுத்தும் வேலையைத்தான் பலர் செய்கிறார்கள். மனத் தோட்டத்தில் முள் மரங்களை அகற்றிவிட்டு மகிழ்வாய் இருந்தபோது முளைத்த பூச்செடிகளை பராமரிக்கலாம். அதற்கு நீர் ஊற்றலாம்.

ஒரு முறை புத்தர் மரத்தடியில் அமர்ந்து சீடர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது ஒரு மனிதன் வேகமாக புத்தரை நோக்கி வந்தான். வந்தவன் அவர் அருகில் வந்து முகத்தில் துப்பினான். புத்தர், உமிழ்ந்தவனைப் பார்த்து அடுத்த என்ன என்று கேட்க அவன் செய்வதறியாது நின்றான். இதுவரை அவன் மற்றவரிடம் மரியாதைக் குறைவாக நடக்கும் போது அவர்கள் கோபப்படுவார்கள் அல்லது பயந்து ஒதுங்கி விடுவார்கள். ஆனால் புத்தரின் நடவடிக்கையால் அவன் நிலைகுலைந்து போனான்.

புத்தரின் நெருக்கமான சீடரான ஆனந்தர், ‘இதை சும்மா விடக் கூடாது' என்று கொந்தளிக்க, மற்ற சீடர்களும் அதே மனநிலையில், புத்தர், ‘அவன் மனதிலிருந்ததை உமிழ்ந்திருக்கிறான். என்னைப் பற்றி யாரோ அவனிடம் தவறாக ஏதாவது கூறியிருக்கலாம். அதை நம்பியதன் விளைவு இது. என்னைப் பற்றி முழுவதும் தெரிந்த நீங்கள் கோபப்படலாமா?' என்றார்.

அவன் வீட்டிற்கு திரும்பினான்.அவனால் தூங்க முடியவில்லை. மறுநாள் காலையில் எழுந்து புத்தரின் இடத்திற்கு சென்று காலில் விழுந்து, ‘என்னை மன்னித்து விடுங்கள்' என்றான்.

‘மன்னிப்பா? நீ உமிழ்ந்த அந்த மனிதன் நானல்ல. கங்கை ஓடிக்கொண்டிருக்கும். ஒரே கங்கையை மீண்டும் தரிசிக்க முடியாது. எல்லா மனிதர்களும் நதி தான். நேற்று நீ சந்தித்த மனிதரும் இன்றைய நானும் தோற்றத்தில் ஒன்றுதான், ஆனால் மற்றபடி வேறுவேறானவர்கள். ஒரு நாளில் என்னில் மட்டுமல்ல உன்னிடமும் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. முகத்தில் உமிழ்ந்தவனும் காலில் விழுந்தவனும் ஒன்றல்ல; நாம் வேறு விஷயங்களைப் பற்றி உரையாடலாம்,' என்றார் புத்தர்.

எனக்கு பரிச்சயமான மணவாழ்வு ஆலோசகர் தன்னிடம் வரும் விவாகரத்து கோரும் தம்பதிகளிடம் கீறல் விழுந்த ரிக்கார்ட் போல் இந்த கதையைச் சொல்லி, ‘என்ன குற்றமிருந்தாலும் மன்னித்து விட்டுக் கொடுங்கள், வாழ்வு இனிக்கும்' என்று சொல்கிறார். இதை வேறு விதமாக “Keep your eyes wide open before marriage, half shut afterwards” என்கிறார் பெஞ்சமின் பிராங்கிளின். திருமண பந்தத்தை ஆதிக்கம் செலுத்தியோ அடங்கிப்போயோ தொடர்வதை விட நட்போடு அணுகினால் மகிழ்வோடு தொடரலாம் என்பதை வரும் பக்கங்களில் உணரலாம்.

இந்த சிறப்பிதழ் ஒரு தலைமுறையின் அனுபவத்தை வரும் தலைமுறைக்கு கடத்தும் முயற்சி.

என்றும் உங்கள்

அந்திமழை இளங்கோவன்

ஆகஸ்ட், 2022