சிறப்புப்பக்கங்கள்

போர்க் கைதியின் கதை!

போர் முகம்

முத்துமாறன்

நயீம் பாகிஸ்தான் ராணுவத்தில் 1968&ல் சேர்ந்தார். அவருக்கு போரில் நேரடியாக ஈடுபடும் வேலை இல்லை. படைகளுக்குத் தேவையான ஆயுதப் பொருட்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கும் பிரிவில்தான் வேலை.

கிழக்கு பாகிஸ்தானில் 1971&ல் விடுதலைக்காக போரட்டம் நடந்தபோது அங்கே ராணுவப்பணியில் இருந்தார். இந்தியா முக்தி வாகினி புரட்சிப்படையினருக்கு ஆதரவாகக் களமிறங்கியபோது, போர் நடந்தது. பதின்மூன்று நாட்கள் நடந்த இந்தியா& பாக் போருக்குப் பின்னர் அங்கிருந்த பாகிஸ்தான் படையினர் சரண் அடைந்தனர். வங்கதேசம் புதிய நாடாக உதயமானது. அதில் சரணடைந்து போர்க்கைதிகளாகப் பிடிபட்டவர்கள் எண்ணிக்கை 93,000. அவர்கள் அனைவரும் 1974 வரை இந்தியாவுக்குள் ராணுவ முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர்.

அச்சமயம் நயீம் பணிபுரிந்த இடத்தில் இருந்து தெற்கு நோக்கிச் சென்று ஆயுதங்களை அளிக்குமாறு அவருக்குப் பணிக்கப்பட்டது. ஒரு ரயிலில் ஆயுதங்கள் பற்றும் சக ஆயுத சப்ளைப் பிரிவு வீரர்களுடன் அவர் கிளம்பினார். தெற்கு நோக்கிச் செல்வதற்குப் பதிலாக தவறாக வடக்கு நோக்கி ரயிலை ஓட்டிச் சென்றுவிட்டார் அவர். அடர்த்தியான காட்டுப்பகுதியில் இந்திய ராணுவம் அவர்களைத் தாக்கியது. இவர்கள் ஒருவரும் சண்டையிடும் ராணுவப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அல்லர். ஆயினும் எதிர்த்துப் போரிட்டனர். பலர் இறந்தபிறகு இவர்கள் சண்டை முடிவுக்கு வந்தது. நயீம் மீது குண்டுகள் பாய்ந்திருந்தன, இடது கண்ணில் ஒரு குண்டு பாய்ந்தது. தலைக்குள் நிறைய வெடிகுண்டுச் சிதறல்களுடன் அவர் விழுந்து கிடந்தார். இந்தியப்படையினர் காயம் அடைந்தவரை மீட்டு டாக்கா மருத்துவமனைக்கு அனுப்பினர். இவரது முகம் வீங்கிச் சட்டென்று யாராலும் அடையாளம் காணமுடியவில்லை. போரில் காணாமல் போனவர்கள் பட்டியலில் பாகிஸ்தான் இவரது பெயரையும் சேர்த்தது. வீட்டுக்குப் போய் மக்கள் துக்கம் விசாரித்தனர். ஆனால் அவரது பெற்றோரோ மகன் உயிருடன் இருப்பான் என்று நம்பினர்.  பல நாட்கள் கழித்துத்தான் நயீம் அடையாளம் காணப்பட்டார்.

எட்டு மாதம் அங்கே மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தபின் இந்தியாவுக்கு ரயிலிலில் கொண்டு வரப்பட்டு பீகாரில் ஒரு முகாமில் அடைக்கப்பட்டார். அவர் மிகவும் நலிவுற்று மீண்டுவந்துகொண்டிருந்த காலம் அது. சிம்லா ஒப்பந்தத்துக்குப் பின்னால் 1974&ல் அவர் சக 93,000 வீரர்களுடன் பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். அங்கே பாக் அரசு அவர்களை வரவேற்கவில்லை. அந்த வீரர்கள் அனைவருமே கறுப்பு முத்திரை குத்தப்பட்டு  வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள். நயீமுக்கு நல்லெண்ண அடிப்படையில் ராணுவத்தில்  ஒரு வேலை கொடுக்கப்பட்டது. அவர் தலையில் இரு ஆண்டுகளாக இருந்த குண்டு அதன்பிறகு மருத்துவமனையில் அகற்றப்பட்டது. இந்தப் பிரச்னையுடன் அவர் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு இடது கண்ணில் பார்வை சுத்தமாகப் போய்விட்டது. ஆனாலும் அதை அவர் மனைவியிடம் சொல்லவில்லை. மூளையின் பகுதிகளில் குண்டுச் சிதறல்கள் இருந்ததால் மனநலம் கெட்டது. வலிப்பு, பேச்சிழப்பு, மன அழுத்தம், மறதி ஆகியவற்றால் தன் வாழ்நாள் முழுக்க மருத்துவமனைக்கு அலைந்துகொண்டே இருந்த நயீம் தன் மண வாழ்வில் நான்கு குழந்தைகளுக்கும் தகப்பன் ஆனார். வேலையில் இருந்து ஓய்வு பெற்ற அவர் 2000- வது ஆண்டில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கேயே காலமானார். அவருடன் ராணுவத்தில் வேலை பார்த்தவர்களின் முயற்சியால் ராணுவ மரியாதையுடன் அவர் அடக்கம் செய்யப்பட்டார். அல்ஜசீரா இணையதளத்தில் நயீமின் மகள் சன்னியா அஹமது பிர்ஸாதா என்பவர் தன் தந்தையின்  அனுபவத்தை எழுதி இருக்கிறார்.'' என் அப்பா குண்டுக் காயங்களால் தொடர்ந்த வலிமிகுந்த வாழ்வால் தன் வயதுக்கு மீறிய தோற்றத்தைக் கொண்டிருந்தார். பார்ப்பவர்கள் 1971ஆம் ஆண்டு போரில் பங்கேற்றவரான அவர், இரண்டாம் உலகப்போரில் பங்கெடுத்தவரோ என்று நினைக்கும் அளவுக்கு வயதான தோற்றம் கொண்டிருந்தார்,'' என்று எழுதுகிறார்.

எத்தனை நயீம்களின் கதைகள் இப்படி எல்லைக்கு இருபுறமும் இருக்கும்?

இதே போல் 1971- போரின்போது பாகிஸ்தானிடம் பிடிபட்டு அங்கே சிறைக்கைதியாக இருந்த இந்திய ராணுவ அதிகாரிகளில் ஒருவரான கர்னல் அனில் அதாலே (ஓய்வு) தன்னுடைய அனுபவங்களை எழுதி இருக்கிறார். அப்போரின்போது இந்தியாவின் மேற்கு எல்லையில் ஆறு வீரர்களுடன் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது பிடிபட்டார் , இவர். அப்போது கேப்டனாக மூன்று வருட அனுபவமே கொண்டவராக இருந்தார். கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். ராவல்பிண்டியில் வைத்து விசாரித்தார்கள், அச்சமயம் இந்திய விமானப் படையினரின் தாக்குதல் அங்கே காலையும் மாலையும் விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தது. அவர்கள் வீசிய குண்டுகள் நல்லவேளையாக இவர்கள் சிறை வைக்கப்பட்ட கட்டடத்தில் விழவில்லை. விமானப்படைத் தாக்குதல்கள் சில நாட்களில் ஓய்ந்துவிட்டன. ஒருவேளை, போர் முடிந்திருக்கும் என்று நினைத்தார், அதாலே. ஒரு நாள் மேஜர் நிலையில் இருக்கும் பாக். அதிகாரி சிறைக்கு வந்தார். அவர் அதாலேவிடம்,‘‘ ராவல்பிண்டி நகரைப் பார்த்தீர்களா?‘ என்று கேட்டார். அதற்கு, ‘கொண்டுவரும்போது கண்களைக் கட்டி விட்டார்கள். எனவே பார்க்கவில்லை'' என்றார் அதாலே. ‘பரவாயில்லை. ஒரு நாள் வெற்றி வீரராய் வரும்போது பார்க்கலாம்'' என்றார், அந்த மேஜர். இந்தியா வென்றது என்று அதாலே யூகித்துக்கொண்டார். சில நாள்கள் கழித்து முறையான போர்க்கைதிகள் முகாமுக்கு அதாலே மாற்றப்பட்டார். அங்கு மேலும் ஐந்து இந்திய ராணுவ அதிகாரிகள் கொண்டுவரப்பட்டனர். ஏராளமான இந்தியச் சிப்பாய்களும் போர்க்கைதிகளாக அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களை அங்கு வரவேற்ற பாக் அதிகாரி,' நீங்கள் போர்க்கைதிகள். தப்பிக்கும் உரிமை உண்டு. ஆனால் பிடிபட்டால் சுடும் உரிமை எனக்கு உண்டு' என்று சொன்னார். அங்குதான் முதன்முதலாக பாகிஸ்தான் செய்தித்தாள்களைப் பார்த்து என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள முடிந்திருக்கிறது.

அச்சமயம் இந்திய ராணுவம் தன்னிடம் சரணடைந்த பாக். வீரர்களை, ‘நாங்கள் இந்திய ராணுவத்திடம் சரணடைந்துள்ளோம். பத்திரமாக இருக்கிறோம்,'' என்று பேச வைத்து பாகிஸ்தானில் உறவினர்கள் அறிந்துகொள்வதற்காக வானொலியில் ஒலிபரப்பியது. பாகிஸ்தானும் அதேபோல் செய்ய விரும்பி இவர்களிடம், பாகிஸ்தான் ராணுவத்திடம் நாங்கள் சரணடைந்தோம் என்று சொல்லச் சொல்லி இருக்கிறது. அதாலே, ‘நாங்கள் சரணடையவில்லை. பிடிபட்டோம்,'' என்று மறுத்துவிட்டார். இவரைத் தொடர்ந்து பிற இந்திய சிப்பாய்களும் மறுத்துவிட்டனர். 1972&ல் சிம்லா ஒப்பந்தம் நிறைவேறியும் போர்க்கைதிகள் விடுவிப்பது தாமதம் ஆனது. திடீரென ஒரு நாள், பூட்டோ இவர்களின் முகாமுக்கு வந்து அனைவரையும் விடுவிப்பதாக அறிவித்தார். இந்தியாவில் இருந்த 93,000 வீரர்களையும் விடுவிக்க அழுத்தம் கொடுக்கும் முயற்சி அது.

இந்திரா காந்தி, பதிலுக்கு இந்தியாவின் மேற்கு எல்லையில் பிடிபட்ட பாக் வீரர்களை மட்டும் விடுவிப்பதாக அறிவித்தார். இந்தச் சிக்கலில் இந்தியாவின் கையே ஓங்கி இருந்தது. ஒருவழியாக அதாலேவும் பிறவீரர்களும் விடுவிக்கப்பட்டு இந்தியா வந்து சேர்ந்தனர். வாகா எல்லையில் பஞ்சாப் முதல்வர் ஜெயில்சிங் காத்திருந்து சுமார் 600 வீரர்களையும் தனித்தனியாக கட்டி அணைத்து வரவேற்றிருக்கிறார். ரயிலில் ஏறி இவர்கள் டெல்லி ரயில் நிலையம் சேர்ந்தபோது மரபுகளை மீறி ஃபீல்டு மார்ஷல் சாம் மானெக்‌ஷா அங்கே வந்து வரவேற்றது உருக்கமான காட்சி!

1962 - ல் சீனப்போரில் சீனாவிடம் சிக்கிய இந்திய வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டபோது அவர்கள் இந்திய ராணுவத்தால் சிறை வைக்கப்பட்டு மாதக்கணக்கில் விசாரணைக்குப் பின்னரே விடுவிக்கப்பட்டனர். அப்போது இந்திய ராணுவம் தோற்றிருந்தது. ஆனால் இப்போதோ வெற்றி பெற்ற ராணுவம். இரண்டு வாரங்களில் அனைவரும் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இப்போரின்போது இந்தியப் படையைச் சேர்ந்த 54 பேர் காணாமல் போனவர்களாக அறிவிக்கப்பட்டனர். இதற்கு அர்த்தம் இவர்கள் போரில் இறந்திருக்கலாம். உடல் கிடைக்கவில்லை என்பது! ஆனால் இவர்களின் உறவினர்கள் யாரும் நம்பவில்லை. இன்னும் இவர்கள் பாகிஸ்தான் சிறைகளில் வாடுவதாகக் கருதி, அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து வீட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருகின்றனர். பாகிஸ்தான் சிறைகளுக்கு இந்திய வீரர்களின் உறவினர்கள் அனுமதிக்கப்பட்டு தேடுதல் முயற்சியில் ஈடுபட்டதும் எண்பதுகளில் நடந்திருக்கிறது. ஆனாலும் யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவர்கள் நம்புவதற்குக் காரணம், ஒரு சில அதிகாரிகள் பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் இருக்கும் படங்கள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. ஆனால் அவர்கள் திரும்பி அனுப்பப்பட்டவர்களின் பட்டியலில் இல்லை. அத்துடன் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளும் தனிப்பட்ட பேச்சுகளின் போது சில இந்திய அதிகாரிகள் பாக் சிறைகளில் இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். ஒரு சில ராணுவ வீரர்கள் தங்கள் இருப்பை உறுதிப்படுத்தும் செய்திகளும் அனுப்பி உள்ளனர். இந்த 54 பேரின் உறவினர்களும் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல செய்தி வரும் என்று காத்திருக்கின்றனர். சமீபத்தில் அபிநந்தன் பிடிபட்டு விடுவிக்கப்பட்டபோதுகூட இவர்கள் பற்றிய செய்திகள் வந்தன.

எந்தப் போரும் நடந்து முடிந்த பின் வெறும் நிகழ்வு அல்ல. வெற்றியையும் தோல்வியையும் தாண்டி அது  இருதரப்பு மக்களுக்கும் காலம் காலமாக சுமந்து திரியவேண்டிய துயராக மாறிவிடுகிறது.

ஏப்ரல், 2019.