இருபதாம் நூற்றாண்டில் போர்களின்போது பல பெண்களுக்கு ஏற்பட்ட துயரங்களை நினைவில் கொள்வோம். இதுபோன்ற பெண்களின் காயமுற்ற இதயங்களின் பக்கம் எப்போதும் நிற்கும் நாடாக இருக்க ஜப்பான் விரும்புகிறது. பெண்களின் உரிமைகள் பறிக்கப்படாத காலகட்டமாக இருபத்தியோராம் நூற்றாண்டை உருவாக்குவதில் உலகில் ஜப்பான் முன்னிலை வகிக்கும்.''
-ஷின்சோ அபே, ஜப்பான் பிரதமர், இரண்டாம் உலகப்போர் முடிந்து 75 ஆண்டுகள் நிறைந்தபோது .
உலகம் பெரும் போரைக் கண்டு சுமார் 75 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இரண்டாம் உலகப்போரின் சீரழிவுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டதனால் இன்னொரு பெரும்போர் நடக்காமல் அல்லது இரு நாடுகளுக்கான போர்கள் அவற்றிற்கு இடையிலான மோதல்களாக முடிந்துபோகின்றவையாக சூழல் மாறிவிட்டிருக்கிறது. இன்னொரு உலகப்போரை மானுடம் தாங்காது என்பது மட்டுமல்ல; இன்னொரு நாட்டை ஆக்கிரமிப்பதே தவறு என்கிற பொதுவான கருதுகோளும் உருவாகி கடைப்பிடிக்கப்பட்டுவருவதால் போர்கள் குறைந்துவருகின்றன. இரண்டாம் உலகப்போரில் மிகக்கோரமான அழிவுகளை ஆரம்பகட்டத்தில் உருவாக்கியவர்கள் ஜப்பானியர்கள்தான். ஆனால் ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு வீச்சில் மொத்தமாக சிதைந்தவர்களும் அவர்களே. சுமார் 30 லட்சம் ஜப்பானியர்கள் உள்நாட்டிலும் தூரதூர நிலங்களிலும் போரில் உயிரிழந்தனர். போரில் தோல்விக்குப் பின், போரே வேண்டாமென ஜப்பான் தன் சுயபாதுகாப்புக்காக மட்டும் ராணுவம் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. பல்வேறு நாடுகளில் போர்க்கைதிகளாக இருந்த சுமார் 60 லட்சம் ஜப்பானியர்கள் பின்னர் நாடு திரும்பி, தங்கள் உழைப்பால் இன்று அந்நாட்டை மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உருவாக்கிக் காட்டி உள்ளனர். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் கொண்டுவரப்பட்ட அந்நாட்டு அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது பிரிவு,‘‘ ஜப்பானிய மக்கள் என்றென்றைக்கும் போரையும் படைகொண்டு அச்சுறுத்தல் மேற்கொள்வதையும் துறக்கின்றனர்'' என்று சொல்கிறது.
தெற்காசியாவில் வியட்நாமிலும், மத்தியகிழக்கு மற்றும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கர்கள் மேற்கொண்ட போர் நடவடிக்கைகள் பற்றியும் அதன் இழப்புகள் பற்றியும் ஏராளமாக எழுதப்பட்டுவிட்டன.
நாட்டுப் பற்றும் ராணுவவீரர்களும் எல்லா காலத்திலேயும் போற்றுதலுக்கு உரியதுதான். நாட்டுக்காக உயிரைத் துறப்பது மிகப் பெரிய தியாகம் என்பதையும் மறுப்பதிற்கில்லை. போருக்குச் சென்று உயிரிழக்கும் அல்லது காயப்படும் வீரனுக்கு நாடு இழப்பீடு வழங்கலாம். ஆனால் அவனது குடும்பத்துக்கு அந்த வீரனின் மரணத்தாலும் காயத்தாலும் உண்டாகும் வெற்றிடத்தை இந்த இழப்பீட்டால் ஈடு செய்யமுடியுமா? அக்குடும்பப் பெண்டிரின் கண்ணீரின் ஒரு துளியைக் கூட உண்மையாக துடைக்க முடியுமா?
கீதை சொல்கிறது: போரில் இறந்தால் சொர்க்கம் செல்வாய்; வென்றால் இந்த உலகை ஆள்வாய். ஆகவே எழுந்து போர் செய். அர்ஜுனனைத் தூண்ட கிருஷ்ணர் உரைத்தது இது. ஆனால் காலங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன. போரில் இறந்தால் இச்சமூகமும் உன் குடும்பமும் துயர்கொள்ளும்; நீ இந்த உலகை ஆளும்போது தோற்றவனின் கண்ணீரை ஈடு செய்ய இயலாது. ‘எந்த பிரச்னைக்கும் போர் என்பது நிலைத்த தீர்வு ஆகாது,‘ என்ற ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் வார்த்தைகள் முக்கியமானவை.
போரை விட்டொழித்து, சக மனிதனின் மீது அன்பு செலுத்து என்று சொல்லவேண்டிய காலம் இது.
ஏப்ரல், 2019.