சிறப்புப்பக்கங்கள்

போராட்டக்களத்திற்கு புத்தகங்களே ஆயுதங்கள்!

மதுக்கூர் ராமலிங்கம்

அ ரசியல் என்பது ஒரு பிழைப்பு என்பதாக இன்று சுருங்கிவிட்டது. புகழையும் அதிகாரத்தையும் ஒரு சேர பெற விரும்புபவர்களின்  துறை தான் அரசியல் என்று ஆகிவிட்டது.

அதிகாரத்தில் உள்ள அரசியல் தலைவர்களின் வாசிப்பு எந்தளவிற்கு வறுமையாக உள்ளது என்பதை அவர்களது உளறல்களே அடையாளம் காட்டி விடுகிறது. ஆனால், அரசியல் என்பது ஒரு போராட்டக்களம். புத்தகங்கள் அந்தக் களத்தில் நிற்பவர்களுக்கு ஆயுதங்களாகும். அதில், ஈடுபட விரும்புபவர்கள் வானத்தைப் போல விரிந்த வாசிப்புப் பழக்கம் கொண்டவர்களாக இருப்பது அவசியம்.

ஒரு அரசியல் தலைவர் சர்வதேச நிலவரம் தொடங்கி உள்ளூர் வரலாறு வரை தெரிந்து வைத்திருக்க வேண்டும். உலகளவில் புகழ் பெற்ற பல அரசியல் தலைவர்களின் வரலாற்றுப் புத்தகங்களை வாசிக்கும்போது அவர்கள் எந்தளவிற்கு மூச்சுவிடுவது போல படிப்பதையும் அன்றாடப் பழக்கமாகக் கொண்டிருந்தனர் என்று புரிந்துகொள்ள முடியும்.

உலக அரசியலையே இன்று வரை உலுக்கிக்கொண்டிருக்கும் ஒரு பெயர் பிடல் காஸ்ட்ரோ. அவர் ஒரு முறை பதுங்கு குழியில் இருந்தபோது மேலே அமெரிக்க விமானங்கள் குண்டுமாரி பொழிந்து கொண்டிருந்தன. ஒரு கையில் துப்பாக்கியை உயர்த்திப் பிடித்தபடியே மறுகையில் லெனின் எழுதிய ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தாராம் இளம் புரட்சியாளர் காஸ்ட்ரோ. அருகிலிருந்த ஒரு தோழர், இந்தச் சூழலில் கூட படிக்க வேண்டுமா? என்று கேட்டதற்கு என் கையில் இருக்கிற துப்பாக்கியைக் கொண்டு  எதிரியின் ஒரு விமானத்தைத் தான் வீழ்த்த முடியும். ஆனால், என் கையில் இருக்கிற புத்தகம் ஏகாதிபத்திய அரசையே வீழ்த்திவிடும் வல்லமை கொண்டது என்றாராம். அவருடைய இணை பிரியா தோழர் சேகுவேராவும் ஆழமான வாசிப்பு அனுபவம் கொண்டவர். அவர் குறித்த நூல்கள் இன்றைய இளைஞர்களையும் ஈர்க்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது.

மனு  நூல் குறித்த  சர்ச்சை தற்போது தமிழக அரசியல், இலக்கிய, பண்பாட்டுத்தளத்தில் முன்னுக்கு வந்தது. அந்த நூலை பலரும் தேடிப்படித்தனர். அந்த நூல் எரிக்கப்பட வேண்டுமா என்பதில் இரு வேறு கருத்து இருக்கலாம். ஆனால், இந்தியாவை, சாதியத்தின் கொடூரத்தை, சனாதன படி நிலைகளை தெரிந்துகொள்ள அந்த நூலும் படிக்கப்படவேண்டியதே.  சிவில் சட்டங்கள் மதத்திற்கு மதம் வேறுபட்டாலும் கிரிமினல் சட்டங்கள் ஒன்றாகவே இருக்கின்றன. ஆனால், மனு நூலை படிக்கும்போது பிறந்த சாதிக்கு ஏற்பவே குற்றங்களுக்கான தண்டனையும் வரையறுக்கப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். சம நீதி, சமூக நீதி களத்தில் நின்று போராடுபவர்கள் இந்த அநீதிகளின் தொகுப்பைப் படிப்பதும் அவசியம்.

கேரளத்தின் முதல்வராகவும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிதாமகர்களில் ஒருவருமான தோழர் இ,எம்,எஸ்  நம்பூதிரிபாட் தன்னுடைய இறுதி நாள் வரை படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருந்தவர். உண்மையான இந்தியாவின் வரலாற்றை முற்றிலும் மாற்றி எழுதப்போவதாகக் கூறி அதற்கு ஒரு குழுவும் போடப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றைப் புரிந்துகொள்ள இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் எழுதியுள்ள இந்திய வரலாறு எனும் பெரு நூல் பேருதவி செய்யும். மார்க்சீய நோக்கில் இந்திய வரலாற்றை அலசும் நூல் இது.

உலக அளவில் நடக்கும் அரசியல், பொருளாதார சதிகளைப் புரிந்து கொள்ளாமல் உள்ளூரிலும் கூட அரசியல் நடத்த முடியாது. ஜான் பெர்க்கின்ஸ் எழுதியுள்ள ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்‘ எனும் நூல் இன்றைய நவீன தாராளமய சகாப்தத்தில் வல்லாண்மை நாடுகள் தங்கள் மேலாதிக்கத்தை நிலை நிறுத்த எந்த அளவிற்கு சதி வேலை செய்கின்றன என இந்த நூல் விரிவாகப் பேசுகிறது.

பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க அரசியல் கலவரங்கள் எவ்வாறு அமெரிக்க வல்லரசால் நடத்தப்படுகிறது என்பதை புரிந்துகொள்ள இந்த நூல் உதவும். அவரே அந்தப் பணியில் முன்பு ஈடுபட்டிருந்தவர் என்ற முறையில் அதிர்ச்சி தரும் தகவல்களுடன் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

அண்ணல் அம்பேத்கர் எழுதிய நூல்கள் அனைத்துமே முக்கியமானவை. அவரைப் புரிந்து கொள்ள குறைந்தபட்சம் ஜாதி ஒழிப்பு என்ற நூலையாவது இளைஞர்கள் படிக்க வேண்டும். 1935&ஆம் ஆண்டு லாகூரில் நடைபெற்ற மாநாட்டிற்காக தயாரிக்கப்பட்ட உரை அது. ஆனால், இந்த மாநாட்டில் அவரது உரை ரத்து செய்யப்பட்டதால் நூலாக வெளியிடப்பட்டது. அரசியல் சீர்திருத்தத்திற்கு முன் சமூக சீர்திருத்தம் அவசியம் என அழுத்தமாக பேசும் இந்த நூல் தொடர்ந்து படிக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் கொண்டிருக்கிறது. மதம் என்பது அதிகாரத்தின் ஆதாரம் என்ற அவரது பார்வை இன்றைய மத அரசியலைப் புரிந்துகொள்ள துணை நிற்கும்.

பேராசிரியர் அருணன் கடவுளின் கதை, காலம் தோறும் பிராமணியம், தமிழர் தத்துவ மரபு உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். இதுவரை இந்தியாவிலும் தமிழகத்திலும் நடைபெற்றுள்ள தேர்தல்களின் பின்னணி, ஆட்சி மாற்றங்கள், மக்களின் கருத்தோட்டம் ஆகியவற்றை எளிமையாகவும் சுருக்கமாகவும் புரிந்துகொள்ள அவர் எழுதியுள்ள ஒரு விரல் புரட்சி என்ற நூல் உதவும்.

அரசியல் என்பது கை கூப்பி வணங்கி வாக்குக் கேட்பது மட்டுமல்ல. கை மடக்கி எப்போதும் படித்துக்கொண்டிருப்பதும் ஆகும்.