எம்.ஜி.ஆர் 
சிறப்புப்பக்கங்கள்

பொன்மனச்செம்மல்!

அ.தி.மு.க. 50 ஆண்டுகள்

அந்திமழை இளங்கோவன்

’அடியேன்  எழுதிய ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்‘, ‘நான் ஆணையிட்டால்!‘,  ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தான்‘, ‘உதயசூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே‘, ‘நான் செத்துப் பிழைச்சவன்டா!‘, ‘ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை‘ இவையெல்லாம் கதாநாயகனுக்கான பாட்டாகக் கருதப்படாமல் எம்.ஜி.ஆருக்காகவே எழுதப்பட்ட பாடலாகவே கருதப்பட்டது. இந்த பாடல்களால் எம்.ஜி.ஆர் ஏழை-எளிய உள்ளங்களில் போய் உட்கார்ந்து கொண்டார். ‘வாத்யார்‘ என அவரை வாஞ்சையுடன் கூப்பிட்டு குலதெய்வமாக குலவையெழுப்பின. ‘சினிமாவுக்குப் போன சித்தாளு' எனும் தலைப்பில் என் நண்பர் ஜெயகாந்தன் ஒரு கதையே எழுதும்படி எம்.ஜி.ஆர் அடித்தட்டு மக்களை ஆக்கிரமித்திருந்தார்,' - கவிஞர் வாலி எழுதிய இந்தப் பகுதி சினிமாவின் மூலம் எம்.ஜி.ஆரின் கட்டமைக்கப்பட்ட பிம்பத்தைக் கோடிட்டுக் காட்டுகிறது. வாலியின் வார்த்தைகளை மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரியின் புள்ளியியல் துறை 1986இல் நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள் உறுதி செய்கின்றன.

‘கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் நாற்பது  சதவீதம் பேர் திரு. எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களைத் தீவிரமாக ஆதரிப்பதாகவும், முப்பது சதவீதம் பேர் அவர் மீது நன்மதிப்பு கொண்டவர்களாக இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள். எம்.ஜி.ஆர் தனக்கான அதிகபட்ச ஆதரவை குக்கிராமங்கள் மற்றும் கிராமங்களில் நிலமில்லா வேளாண் தொழிலாளிகளிடம் இருந்தே பெறுகிறார். கல்வியறிவில்லா மக்களில் அறுபது சதவீதம் பேர் எம்.ஜி.ஆரின் தீவிர ஆதரவாளர்கள்; ஆனால் கல்லூரிப் படிப்பை முடித்தவர்கள் வெறும் இருபது சதவீதம் பேர் மட்டுமே அவரின் தீவிரமான ஆதரவாளர்கள்.

வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் எம்.ஜி.ஆர் தனக்கான மிகப்பெரிய ஆதரவை வறியவர்களிலும் வறியவர்களிடமிருந்தே பெறுகிறார்,' இது மேலே குறிப்பிட்டுள்ள A State Wide public Opinion Survey of Tamilnadu என்ற கருத்துக் கணிப்பின் ஒரு பகுதி.

இந்த இரண்டு விஷயங்கள் ஒரு பிம்பம் எப்படி கட்டமைக்கப்படுகிறது, அது ஏற்படுத்தும் விளைவுகள் என்ன என்பதைச் சொல்கின்றன.

எம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மையை, வசீகரமான முகப்பொலிவை, மக்களின் ஏகோபித்த ஆதரவை குறிப்பிட்டு கடவுளுக்கு இணையான பிம்பமாக வளர்த்தெடுக்கும் பதிவுகள் எண்ணிலடங்கா. கடும் விமர்சனங்களால் வறுத்தெடுக்கும் பதிவுகளும் அதே அளவிற்கு உண்டு. இரண்டு எல்லைக்கும் போகாமல் நடுநிலைமையோடு எம்.ஜி.ஆரின் அரசியலை பதிவு செய்யும் முழுமையான கட்டுரைகள் மிகக்குறைவுதான். இந்த குறையை சரிசெய்ய முயற்சி செய்யும் கட்டுரை இது.

திமுகவில் எம்.ஜி.ஆர்.

அது 1953 ஆம் ஆண்டு. திருச்சியில் ஏப்ரல் 25-, 26இல் திமுக மாநாடு நடைபெற்றது. அதில் எம்.ஜி.ஆருக்கு பேச வாய்ப்பளிக்கப்பட்டது. என்.எஸ்.கிருஷ்ணனுக்கு அடுத்ததாக எம்ஜிஆர் பேசினார் அவருக்கு அடுத்து பேசியவர் சிவாஜி கணேசன். (பக்கம்-75, MGR A Life)

திமுகவில் எம்.ஜி.ஆர் காலூன்ற உதவியவர்கள், சிவாஜி கணேசனை ‘திருப்பதி‘ சர்ச்சையில் சிக்க வைத்து காமராஜர் பக்கம் தள்ளினர்.

‘நான் ஏன் பிறந்தேன்' தொடரில் தனது சினிமா வாழ்வில் நடந்த முக்கிய திருப்பங்களை குறிப்பிடுகிறார். அதில் நான்காவது திருப்பம், ‘மலைக்கள்ளன்' திரைப்படம். கோவையைச்

சேர்ந்த பட்சிராஜா ஸ்டூடியோவின் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு தனது அடுத்த படத்திற்கு சிவாஜியை நடிக்குமாறு கேட்டு வந்தார். கைநிறைய படங்களுடன் இருந்த சிவாஜி சென்னையில் நடித்துக் கொடுக்க வேண்டியது நிறைய இருக்கையில் கோவை வந்து சில மாதங்கள் தங்குவது முடியாத காரியம் என்று சொல்லி எம்.ஜி.ஆரை பரிந்துரைக்கிறார். மறுநாள் காலை எம்.ஜி.ஆர் ஒப்பந்தமாகிறார். படத்திற்கு கதை வசனம் மு.கருணாநிதி. படம் வெளியான போது படத்தின் டைட்டிலில்  முதல் ஸ்லைடில் இடம்பெற்றவர் கதாநாயகன் அல்ல; கதை வசனகர்த்தா. எம்.ஜி.ஆர்-மு.கருணாநிதி நட்பு திரையில் தொடங்கி பல தளங்களில் நெருங்கி வளர்ந்தது. 1971 தேர்தலுக்கு முன்னும் பின்னும் மு.க.- எம்.ஜி.ஆர் உறவில் விரிசல், ஈகோ, யுத்தம் என்று கட்சியினரிடையே புகைய ஆரம்பித்தது. பற்ற வைத்தது டெல்லி என்ற பேச்சும் இருந்தது.

காங்கிரஸின் மோகன் குமாரமங்கலமும், சி.சுப்பிரமணியமும் இந்தப் புகைச்சலுக்கு காரணமென்று கிசுகிசுக்கப்பட்டது. பிரிவுக்கு முந்தைய காலகட்டத்தில் பொது வெளிகளில் எம்.ஜி.ஆர் கருணாநிதியை மிக உயர்வாகவே பேசினார்.

‘இதுவரை எந்த பொதுக் கூட்டத்திலும் சொல்லாத விஷயம் இது. பேரறிஞர் அண்ணா மறைவுக்குப் பின் முதல்வர் பதவி பற்றி கலைஞர் கூறியது, ‘முதல்வர் ஆவதில் எனக்கு விருப்பமில்லை. எனக்கு அது வேண்டாம்' என்றார். தம்பி மாறனை அனுப்பியும் அதை தெரிவித்தார். ஆனால் அதை நாங்கள் நிராகரித்து விட்டோம். பதவி சுமையை அவரின் தோளில் ஏற்றி விட்டது நாங்கள்தான். அவர் படங்களுக்கு தொடர்ந்து எழுதியிருந்தால் பல்லாயிரக் கணக்கில் சம்பாதித்து இருப்பார். இது 8 &9 ஏப்ரல் 1972 இல் நடந்த செங்கல்பட்டு திமுக மாநாட்டில் எம்ஜிஆர் பேசியது.

எம்ஜிஆர் ‘உலகம் சுற்றும் வாலிபன்‘ படப்பிடிப்பிற்காக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டபோது, விமான நிலையத்திற்கு வந்து வழியனுப்பிய கலைஞர், அவர் படப்பிடிப்பு முடிந்து வரும் போதும் விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றார்.

ரிக்‌ஷாக்காரன் படத்திற்காக சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.ஜி.ஆருக்கு நடந்த பாராட்டு விழாவில் (28 ஜூலை 1972) எம்.ஜி.ஆர் மற்றும் மு.க நிகழ்த்திய உரைகளைக் கேட்ட யாரும் இவர்கள் இன்னும் சில மாதங்களில் பிரியப் போகிறார்கள் என்று நம்ப மறுப்பார்கள். 30 ஆகஸ்ட் 1972 அன்று திமுக அரசு மதுவை அனுமதித்தது. எம்ஜிஆர் அதை சோக நாள் என்றார்.

8 அக்டோபர் 1972 அன்று திருக்கழுக்குன்றத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர் பேசிய பேச்சு பிரிவிற்கான தொடக்கம். அதே தினம் மாலையில் ராயப்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எம்.ஜி.ஆர் விரிசலை பெரிதுபடுத்தினார்.

அன்று மதுரையில் இருந்த முதல்வர் கருணாநிதி,  போலீஸ் ஒயர்லெஸ் சாதனம் மூலமாக எம்.ஜி.ஆர் ராயப்பேட்டையில் பேசிய முழு பேச்சையும் கேட்டுக்கொண்டிருந்தார்.

பத்தாம் தேதி திமுக செயற்குழு கூடியது.  நாஞ்சில் மனோகரன், இரா.செழியன், முரசொலி மாறன் மற்றும் ராம அரங்கண்ணல் ஆகியோர் எந்த நடவடிக்கையும் வேண்டாம், விளக்கம் மட்டும் கேட்போம் என்றனர். மற்றவர்கள் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்றனர்.

அன்றைய தினம் ‘நேற்று இன்று நாளை' படப்பிடிப்பிலிருந்த எம்.ஜி.ஆர் பத்திரிகையாளர்களை வரவழைத்து பாயசம் கொடுத்தார்.

சமாதான முயற்சிகள் 11, 12, 13ஆம் தேதிகளில் நடந்தன. சமாதான முயற்சிகள் தோல்வியடைய 14ஆம் தேதி எம்.ஜி.ஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.

எம்.ஜி.ஆருக்கும் மு.க-விற்கும் இடையே நடந்த விரிசல்களுக்கு டெல்லியைத் தவிர வேறு சில காரணங்களும் இருந்தது.

1966ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடித்து வெளிவந்த படம் ‘சந்திரோதயம்‘. படத்தில் பத்திரிகை நிருபராக நடித்திருந்த எம்.ஜி.ஆர் பத்திரிகை அதிபரை வில்லனாக சித்திரித்திருப்பார். இந்தப் படம் எம்ஜிஆருக்கு பிடிக்காத ஒரு நாளிதழின் அதிபரை குறிவைத்து எடுத்ததாக கூறப்படும். அந்த நாளிதழின் அதிபர் மு.க.வுக்கு நெருக்கமானவர்.

1972 தேர்தலுக்குப்பின் எம்.ஜி.ஆர் விரும்பிய சுகாதாரத்துறை அமைச்சர் பதவி கிடைக்காமல் போனது.

எம்.ஆர்.ராதா தண்டனைக் காலம் முடிவதற்கு சற்று முன் விடுதலை செய்யப்பட்டது என பல காரணங்கள் விவாதிக்கப்பட்டன.

எம்.ஜி.ஆர் சொன்ன காரணங்கள் இரண்டு, ஒன்று மதுவிலக்கு நீக்கம்; மற்றொன்று அமைச்சர்கள் வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்தது. ‘பல விதங்களில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் வருமான வரி, அந்நியசெலாவணி விதிமீறல்கள் போன்றவை தொடர்பான எம்ஜிஆரின் பிரச்சனைகள் தொடர்பாக மறைமுக எச்சரிக்கை அளிக்கப்பட்டது,'- இவ்வாறு எம்.ஜி.ஆருடன் மிக நெருக்கமாக இருந்த முன்னாள் டிஜிபி மோகன்தாஸ் 1992இல் MGR: The Man andh The Myth என்ற புத்தகத்தில் பதிவு செய்கிறார்.

ஜூனியர் விகடன் இதழில் ‘போலீஸ் மனிதர்கள்' என்ற கட்டுரைத் தொடர் வந்தது. 23 மார்ச் 1992 இதழில் ஒரு புலனாய்வுத்துறை அதிகாரியின் பேட்டி வெளியானது, அதில் கூறப்பட்டதாவது: ‘இந்தியாவில் தமிழகம் தீவு போல் காங்கிரஸுக்கு உறுத்தியது. அப்போது திமுகவிற்கு 15 எம்பிகள் இருந்தனர். அவர்களது ஆதரவு இந்திராகாந்திக்கு தேவைப்பட்டது. ஆனால் அவர்கள் தங்கள் பேச்சைக் கேட்டு செயல்பட வேண்டும் என விரும்பினார். புலனாய்வுத்துறையினர் களத்தில் இறக்கப்பட்டனர். ஒரு சீனியர் காங்கிரஸ் நிர்வாகி புலனாய்வுத் துறை அதிகாரிக்கு திட்டம் போட்டுக் கொடுக்க, எம்.ஜி.ஆரை பல்வேறு துறைகள் நெருக்கின. கலக்கத்தில் இருந்த எம்.ஜி.ஆரை நெருங்கிய போலீஸ் அதிகாரி டெல்லி சென்று மேடத்தை பாருங்கள் பிரச்னை தீரும் என்றார்.

குறிப்பிட்ட காங்கிரஸ் நிர்வாகியுடன் டெல்லி சென்ற எம்.ஜி.ஆர் தனது ஆடிட்டர் மற்றும் வக்கீலுடன் இந்திரா காந்தியை சந்தித்தார். சந்திப்பிற்கு பின் மகிழ்ச்சியாக திரும்பினார் எம்.ஜி.ஆர்' இப்படி ஜூ.வி பதிவு செய்திருக்கிறது.

மேலே குறிப்பிட்டுள்ள சில (அ) எல்லா காரணங்களாலும் பிரிவு நிகழ்ந்தது.

16 அக்டோபர் 1972 அன்று இஸ்மாயில் என்ற இளைஞன் உடுமலையில் தீக்குளித்து உயிரிழந்தான். 17ஆம் தேதி அதிமுக அதிகாரப்பூர்வமாக ஆரம்பமானது.

புதுப்பயணம்

அதிமுக பிறந்த பின், யார் யார் எந்தப் பக்கம் என்ற ஆள் சேர்க்கும் படலம் ஆரம்பித்தது. ‘பெற்றோர் சண்டையிடும் குடும்பத்தில் பிள்ளைகளின் நிலையில் நாங்கள் இருந்தோம். கலைஞரோடு பிரியமும் நெருக்கமும் இருந்தாலும் தாயுள்ளம் கொண்ட எம்ஜிஆர் பக்கம் சேர்ந்தேன்' இது காளிமுத்துவின் வாக்கு. 1, நவம்பர் 1972 நிலவரப்படி ஒன்பது சட்டமன்ற உறுப்பினர்களும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் திமுகவிலிருந்து அதிமுகவில் சேர்ந்தார்கள். திமுக அரசு கலைக்கப்பட்ட 31 சனவரி 1976இல் அதிமுகவுக்கு 16 சட்டமன்ற உறுப்பினர்கள் தாவி இருந்தனர், திமுக 167 சட்டமன்ற உறுப்பினர்களை தக்க வைத்துக் கொண்டது.

கட்சி பிறந்தபின் 1972இல் ஒருநாள் டெல்லியில் உள்ள திமுக எம்பி நாஞ்சில் மனோகரன் வீட்டு தொலைபேசி ஒலித்தது மறுமுனையில் எம்.ஜி.ஆர். ‘மூத்த சகோதரனாக பிரியத்துடன் கேட்கிறேன், நீங்கள் என்னுடன் இருக்க வேண்டும்' என்று உருக்கமாக பேசினார். பின் டெல்லியிலிருந்து நாஞ்சிலார் சென்னை வந்தபோது மாலையில் சந்திக்க முடியுமா? என்று கேட்க, சந்திப்பு நிகழ்ந்தது. நேரிலும் உருக்கமாக பேசிய எம்.ஜி.ஆர்., இன்றே என்னோடு சேருங்கள் என்று அழுத்தம் கொடுக்க, நாஞ்சிலார் அமைதியாக இருந்தார். பேப்பரும் பேனாவும் நாஞ்சிலார் முன்பு நீட்டப்பட, அதிமுகவில் சேருகிறேன் என்று எழுதி கையெழுத்திட்டார்.

வீட்டிற்கு திரும்பிய நாஞ்சிலாரிடம் குடும்பம், அதிர்ச்சியில் ஏன் இந்த திடீர் முடிவு என்று கேட்டது. அதற்குள் எப்படி தெரியும் என்பதாக நாஞ்சிலார் புருவம் உயர்த்த, ரேடியோவில் பிளாஷ் நியூஸ்-ஆக செய்தி வெளியானது தெரிந்த நாஞ்சிலார் எம்.ஜி.ஆரின் வேகத்தை கண்டு அதிர்கிறார்.

சுதந்திராக் கட்சித் தலைவர் மருத்துவர் ஹண்டேவை தொடர்பு கொண்ட எம்.ஜி.ஆர், ‘we had the masses but not the intellectuals, Rajaji is no more, why don't you be with me?‘ என்று கேட்டதாக மருத்துவர் ஹண்டே தெரிவித்தார். பின் அவரும் எம்ஜிஆருடன் இணைந்தார்.

திண்டுக்கல் தேர்தல் அதிமுகவின் முதல் திருப்புமுனை. தேர்தலுக்கு முன் நடந்த இரண்டு சம்பவங்கள் முக்கியமானவை. எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளிவருவதற்கு திமுக அரசு பல சிக்கல்களை உருவாக்கியது என்று பல செய்திகள். தடைகளை மீறி தேர்தலுக்கு ஒன்பது நாட்களுக்கு முன் உலகம் சுற்றும் வாலிபன் வெளியாகி வெற்றிநடை போட்டது. வத்தலகுண்டு அதிமுக துணை அமைப்பாளர் ஆறுமுகம் மே 3ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த இரண்டு நிகழ்வுகளும் அதிமுகவிற்கு சாதகமாக அமைந்தன. திண்டுக்கல்லில் அதிமுகவின் மாயத்தேவர் பெரு வெற்றி பெற்றார்.

வெற்றிப்பயணம் தொடர, 24 பிப்ரவரி 1974 அதிமுக கோவை நாடாளுமன்றத் தொகுதியையும், கோவை (மேற்கு) சட்டமன்றத்தொகுதியையும் வென்றது. அதே தினம் அதிமுக, பாண்டிச்சேரி சட்டமன்ற தேர்தலில் வென்றது. அதிமுக பன்னிரண்டு இடங்களிலும், திமுக இரண்டு இடங்களிலும், காங்கிரஸ்(இ) ஏழு, காங்கிரஸ்(ஓ) 5 இடங்களிலும் வெல்ல, 6 மார்ச் 1974இல் காங்கிரஸ்(இ) துணையுடன் அதிமுக ஆட்சி அமைத்தது. இருபது நாட்களுக்கு பின் காங்கிரஸ்(இ) ஆதரவை விலக்க ஆட்சி கவிழ்ந்தது.

12 ஜூன் 1975 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றம் ரேபரேலி தொகுதியில் பெற்ற இந்திரா காந்தியின் வெற்றி செல்லாது என்று அறிவித்தது. 25 ஜூன் 1975 அன்று இந்திரா நாடு தழுவிய எமர்ஜென்சியை அறிவிக்கிறார். 28ஆம் தேதி நடந்த பொதுக் கூட்டத்தில் காமராஜர் தன் கண்டனத்தை தெரிவிக்க, 27ஆம் தேதி நடந்த திமுகவின் செயற்குழுக் கூட்டம் எமர்ஜென்சியைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றுகிறது.

ஆனால் அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் எமர்ஜென்சியை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றியது. அதன் நகலோடு எம்.ஜி.ஆர் டெல்லி சென்று இந்திரா காந்தியிடம் சமர்ப்பிக்கிறார். எம்.ஜி.ஆரின் நடவடிக்கையை தி ஹிந்து பத்திரிகையின் என்.ராம் வன்மையாகக் கண்டிக்கிறார்.

டெல்லி சென்று எமர்ஜென்சிக்கு ஆதரவுக்கரம் நீட்டிய எம்.ஜி.ஆர் அதற்கு பதிலாக என்ன கேட்டு இருப்பார் என்பது எல்லாருக்கும் தெரிந்தது தான்.

‘திமுகவில் இருந்து விலகி, அதைக் கடுமையாக எதிர்த்துவந்த எம்.ஜி.ஆர் காங்கிரஸ்(இ) கட்சியை நெருங்க முனைவதை காமராஜர் விரும்பவில்லை. ‘கடந்த ஆறு ஆண்டுகளாக திமுக எதிர்ப்பு உணர்ச்சிகளை எல்லாம் திரட்டி நாட்டு மக்களை தயார்ப் படுத்தி வைத்திருந்தோம். உழைத்தது நாம், விதைத்து, நீர் பாய்ச்சியது, களை எடுத்தது எல்லாம் நாம், சம்பாதித்து வைத்திருந்ததை இவர் திருடிக்கிட்டுப் போகிறார். மக்களுக்காவது புத்தி வேண்டாமா?‘ (தீக்கதிர் 28.6.1973).

இது காமராஜர், அதிமுகவின் பெருகிய ஆதரவைப் பற்றி குறிப்பிட்டது.

31, ஜனவரி 76 அன்று குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமதுவின் கையெழுத்து திமுக அரசைக் கலைத்தது.

‘இது தைரியமான முடிவென்றும், ஜனநாயகத்தைக் காக்கும் இந்திராவின் முயற்சிகளுக்குத் துணை நிற்பதாகவும்' எம்.ஜி.ஆர் அறிவித்தார்.

1976இல் எம்ஜிஆர் தனது கட்சிக்காரர்களை கைகளில் இரட்டை இலை சின்னத்தைப் பச்சைக்குத்தச் சொன்னார். கோவை செழியன், ஜி.விஸ்வநாதன் மற்றும் பி.சீனிவாசன் போன்றோர் இது பகுத்தறிவுக்கு எதிரானது என்றனர்.

மார்ச் 1977இல் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. தமிழகத்தில் அதிமுக 17/20, காங்கிரஸ் (இ) 14/15, சிபிஐ 3/3 ஒரு அணியிலும் திமுக 2 /19, ஜனதா 3/18, சிபிஎம் 0/2 மற்றொரு அணியிலும். அதிமுக காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் அதிகமாக வென்றாலும் மத்தியில் ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்தது.

கூட்டணியைத் தீர்மானிப்பது கொள்கை அல்ல; அந்த நேரத்தில் வெற்றிக்கான சாதக பாதக சூழ்நிலை என்பதை ஜூன் 1977இல் நடந்த சட்டமன்றத் தேர்தல் நிரூபித்தது. மூன்று மாத இடைவெளியில் அதிமுகவும் காங்கிரஸ்(இ)யும் பிரிந்தன; அதேபோல் திமுகவும் ஜனதாவும் பிரிந்தன. நான்கு முனை தேர்தலில் அதிமுக அணி 33.5% வாக்குகளும் திமுக 24.9% வாக்குகளும் காங்கிரஸ் அணி 20.4% வாக்குகளும் ஜனதா 16.7% வாக்குகளும் பெற்றனர். 130 தொகுதிகளில் வென்று அதிமுக ஆட்சியைப் பிடித்தது.

சினிமாவைப் போல் ஆட்சிக் கட்டில் எம்.ஜி.ஆருக்கு அவ்வளவு சுவாரசியமானதாக இல்லை. அவர் நினைத்த வேகத்தில் காரியங்கள் நடக்கவில்லை.

12, பிப்ரவரி 1978 அன்று மதுரையில், தனது சம்பளத்திலிருந்து வருமான வரி பாக்கியைக் கட்ட முடியவில்லை என்றும் இன்னும் இரண்டு மாதத்தில் நடிக்க போவதாகவும் அறிவித்தார்.

மற்றொரு பாராட்டு விழாவில் தான் மாதத்தில் 15 நாட்கள் நடிகராகவும் மீதமுள்ள 15 நாட்கள் முதல்வராகவும் இருக்க விரும்புவதாக தெரிவித்தார். இதைக் கேள்விப்பட்ட பிரதமர் மொரார்ஜி தேசாய் இது சரிப்படாது என்று தெரிவித்ததாக தகவல். அதற்கு பின் ராணி இதழுக்கு பேட்டி அளித்த எம்.ஜி.ஆர், ‘நான் நடிப்பை விட்டு விலகவில்லை, என்னால் இரண்டையும் ஒரே நேரத்தில் சமாளிக்க முடியும்' என்றார்.

1979 இல் ‘இமயத்தின் உச்சியில்‘ பட அறிவிப்பை வெளியிட்டார். சட்டம் அனுமதிக்காவிட்டால் பொறுப்பை நண்பர்களிடம் கொடுத்துவிட்டு நடிக்கப் போவதாக அறிவித்தார்.

14 ஏப்ரல் 1979இல் எம்.ஜி.ஆர் நாயகனாக நடிக்கும் ‘உன்னை விடமாட்டேன்' என்ற படத்தில் நடிப்பதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டது. அதே தினம் இந்தியன் எக்ஸ்பிரஸ், எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிப்பது தனக்கு ஆட்சேபணை இல்லை என்று பிரதமர் கூறியதாக ஒரு செய்தி வெளியானது.

பிரசாத் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு தொடங்கிய நாளில் விவசாய சங்கம் நடத்திய போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது.

எம்.ஜி.ஆரின் சினிமாவிலிருக்கும் போது அரசியல், அதிகார ஆசையும், ஆட்சிக்கு வந்தபின் சினிமா ஆசையும் கொண்டிருந்தது ‘ வாழ்க்கையின் முதல் பாதி முதிர்ந்த மனிதன் ஆவது எப்படி என அறிந்து கொள்வதாகும், இரண்டாவது பாதி குழந்தையாக ஆவது எப்படி என அறிந்துகொள்வதுமாகும்‘ என்ற பாப்லோ பிகாஸோவின் வார்த்தைகளை நினைவூட்டுகிறது.

தோல்வியடைந்திருந்த இந்திராகாந்தி 1979இல் நடந்த இடைத்தேர்தலில் தஞ்சாவூரில் போட்டியிட விரும்பினார்.

19 மே 1979 அன்று எம்.ஜி.ஆரும், ஜி.கே.மூப்பனாரும் இந்திராகாந்தியை சந்தித்தனர். ஆதரவளிக்க எம்.ஜி.ஆர் சம்மதித்தார். டெல்லியிலிருந்த எம்.ஜி.ஆரை மொரார்ஜி தேசாய் அழைத்து எச்சரித்தார். அதற்கு பின் ஆதரவு நிலையிலிருந்து எம்.ஜி.ஆர் பின்வாங்கினார்.

பின் கர்நாடகாவில் நடந்த சிக்மகளூர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றார் இந்திராகாந்தி. ஆனால் எம்.ஜி.ஆரின் வாக்கு மீறலை இந்திராகாந்தி மறக்கவில்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் பதிவு செய்தனர்.

செப்டம்பர் 1979ஆம் வருடத்தில் ஒரிசாவைச் சேர்ந்த மத்திய அமைச்சரான பிஜு பட்நாயக், கலைஞரை தொலைபேசியில் அழைத்து சென்னைக்கு சந்திக்க வரலாமா என்று கேட்க, 12ஆம் தேதி சந்திப்பு நிகழ்ந்தது.

அவர் தனிப்பட்ட முறையில் இரு கழகங்களை இணைப்பது பற்றி பேசினார். கருணாநிதி ஆறு நிபந்தனைகளை முன் வைத்தார். மறுநாள் காலை எம்.ஜி.ஆர்- கருணாநிதி சந்திப்பு மாநில விருந்தினர் மாளிகையில் நடந்தது. இரு தலைவர்களும் 40 நிமிடங்கள் தனிமையில் பேசினர். நிபந்தனைகளை ஏற்று கொண்ட எம்.ஜி.ஆர் இரு கட்சிகளின் பொதுக்குழு, செயற்குழு ஒரு குறிப்பிட்ட நாளில் கூடி இணைப்பு குறித்த தீர்மானங்களை நிறைவேற்றும் என உறுதியளித்தார். மறுநாள் வேலூரில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய எம்.ஜி.ஆர் அதிமுகவின் கொடி இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு உயரத்தில் பறக்கும் என்றார். இணைப்பைக் கெடுத்தது பண்ருட்டி ராமச்சந்திரன் என்றார் கருணாநிதி. வேலூருக்கு போகும் முன் ஜி.கே.மூப்பனார் மற்றும் ஜி.ராமசந்திரனையும் எம்ஜிஆர் சந்தித்தார். யார் காரணம் என்பது யாருக்கும் தெரியாது.

டெல்லியை எம்.ஜி.ஆர் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பது 77-- &- 80 காலகட்ட நிகழ்வுகள் சொல்லும் உண்மை.

72இல் காங்கிரஸ் பக்கம் நின்ற எம்.ஜி.ஆர் 77இல் ஜனதா ஆட்சிக்கு வந்தபோது விலகி நின்றார். தஞ்சாவூர் இடைத்தேர்தலில் முன்னுக்கு பின் முரணாக நடந்தவருக்கு ஜூலை 1979 அக்னிப்பரிட்சையாக மாறியது. தேசாய் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் 11 ஜூலை 1979இல் விவாதத்திற்கு வந்தது. டெல்லி சென்ற எம்.ஜி.ஆரை தேசாய்க்கு ஆதரவு அளிக்க சோ வற்புறுத்தினார். அதேசமயம் சரண்சிங்குக்கு ஆதரவளிக்க எம்ஜிஆரை ராஜ்நாராயணன் வேண்டினார்.

தேசாய்க்கு ஆதரவளிக்க எம்.ஜி.ஆர் முடிவு செய்தபோது வாக்கெடுப்பை சந்திக்காமலே 15 ஜூலை அன்று தேசாய் பதவி விலகினார். 28, ஜூலை 79இல் சரண்சிங் பதவி ஏற்றார். ஸ்திரதன்மைக்காக சரண் சிங் அரசை ஆதரிப்பதாக 1 ஆகஸ்ட் அன்று அறிவிக்க, 19 ஆகஸ்ட் அன்று அதிமுக சார்பில் சத்தியவாணி முத்து மற்றும் பாலா பழநூர் மத்திய மந்திரியானார்கள். 20 ஆகஸ்ட் அன்று சரண்சிங் காங்கிரஸின் ஆதரவு கிடைக்காது என்ற நிலையில் ராஜினாமா செய்தார். தொடர்ந்து ஜெகஜீவன்ராமை பிரதமராக்க நடந்த முயற்சியில் எம்.ஜி.ஆரின் உதவி கேட்கப்பட்டது. எம்.ஜி.ஆர் யோசனையில் முடிவை கூறாமல் இழுத்தடித்தார். சோ உடனடியாக ஆதரவு கொடுங்கள் இல்லை என்றால் நாடாளுமன்றத்தை கலைத்து விடுவார்கள் என்றார். எம்ஜிஆர் முடிவெடுக்கும் முன் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

டெல்லியின் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வந்த இந்திராகாந்தி, எம்.ஜி.ஆர் உறவை மறுபரிசீலனை செய்தார். அவரின் நம்பிக்கைக்குரிய சி.எம்.ஸ்டீபன், முரசொலி மாறனை தொடர்புகொண்டார். நான்கு ஆண்டுகளுக்கு பின் செப்டம்பர் 15 அன்று டெல்லியில் கருணாநிதியும் இந்திராவும் சந்தித்தனர்.

பெரியாரின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க சென்னை வந்த இந்திரா காந்தி, ‘எமர்ஜென்சி காலத்தில் நடந்தவைகளுக்கு' மன்னிப்பு கேட்டார்.

ஜனவரி 1980 தேர்தலில் திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் கூட்டணி 37 நாடாளுமன்ற தொகுதிகளில் வெல்ல, அதிமுக சிவகாசி மற்றும் கோபிசெட்டிபாளையம் ஆகிய இரு தொகுதிகளில் மட்டும் வென்றது. இந்தத் தோல்வியிலிருந்து அதிமுக பல பாடங்களை கற்றது.

1980- 87

1980 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தோற்றதற்கு சில முக்கிய காரணங்கள் இருந்தன. அவை

1. ஒன்பது அம்ச கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் நடத்திய போராட்டம் இரும்புக் கரங்களால் அடக்கப்பட்டது. சங்கத் தலைவர் நாராயணசாமி திண்டுக்கல்லில் கைது செய்யப்பட, போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் விவசாயிகள் மரணமடைந்தனர்.

2. ஜூலை 1979இல் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வருமானத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு என்ற ஆணையைக் கொண்டு வந்தது.

3. மதுவிலக்கு கொள்கையும் கெட்ட பெயரை ஏற்படுத்தியது. 1978இல் சட்டசபையில் சுமார் 2 லட்சம் பேர் தமிழகத்தில் கள்ளச்

சாராயம் காய்ச்சுவதாகவும் பத்து லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபடுவதாகவும் குற்றம்

சாட்டப்பட்டது. குடித்திருப்பதாக, விற்றதாக எண்ணற்றோர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் ஏழைகள்.

4. அக்டோபர் 1979இல் நைனார் தாஸ் மற்றும் ஜான் பிரிட்டோ தலைமையிலான போலீஸ்காரர்கள் தங்களுக்கான சங்கம் அமைப்பது தொடர்பான போராட்டங்களை ஆரம்பித்தனர். போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு கடுமையான முறையில் அடக்கப்பட்டார்கள்.

1980 தோல்விக்குப் பின் அரசின் தவறுகளைத் திருத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இட ஒதுக்கீடு சம்பந்தமாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டிய எம்.ஜி.ஆர் கி.வீரமணியை விரிவாக பேசச்

சொல்லி கேட்டார். 24 ஜனவரி 1980 இல் வருமானத்தின் அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்ற ஆணையை ரத்து செய்ததுடன் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடை 31 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தினார்.

மதுவிலக்கு கொள்கையிலும் பல மாற்றங்களை கொண்டு வந்தார். பர்மிட் வயது 45 லிருந்து 30 ஆனது. பர்மிட்டுக்கு மருத்துவ சான்றிதழ் தேவையில்லை. பர்மிட் கட்டணம் 100 லிருந்து 25 ஆக குறைந்தது. வீட்டிலோ ஹோட்டலிலோ குடித்தால் தப்பில்லை என்று குடிப்பவர்களுக்கு பல சலுகைகள். காவல்துறைக்கும் பல சலுகைகள் வழங்கினார்.

17,பிப்ரவரி 1980 அன்று அதிமுக அரசு கலைக்கப்பட்டது. கூடவே எட்டு மாநிலங்களும் கலைக்கப்பட்டன.

எந்தெந்த இடங்களில் பலவீனமாக இருக்கிறோம் என்பதை நம்பகமானவர்கள் துணையோடு ஆராய்ந்த எம்ஜிஆர் தவறுகளை திருத்தி கொள்ள முனைந்தார். பத்திரிகையாளர் சோலை எம்ஜிஆருக்கு ஆதரவாக முக்கியமான நான்கு விஷயங்களை செய்தார். இரண்டு கம்யூனிஸ்டுகளையும் எம்ஜிஆரை சந்திக்க வைத்ததோடு, கோவை வையம்பாளையத்திற்கு சென்று விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமியை சந்தித்து எம்ஜிஆர் சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார். பின் எம்ஜிஆர் வீட்டிற்கு போய் நாராயணசாமியை சந்திக்க பகை மறந்து ஆதரவு கிடைத்தது. சோலை திருச்சியில் போலீஸ் சங்கத்து ஜான் பிரிட்டோ மற்றும் நிர்வாகிகள் எம்ஜிஆரை சந்திக்க ஏற்பாடு செய்தார். காட்சிகள் மெல்ல மெல்ல மாறின. 15 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தல் களம் கண்டார்.

அச்சமயம் வெற்றியை ருசித்திருந்த திமுக-காங்கிரஸ் கூட்டணியில் நிலவரம் சுமுகமாக இல்லை. இந்திரா - மு.க இடையே இருந்த இணக்கம் காங்கிரஸின் மற்றவர்களிடம் இல்லை. குறைவான தொகுதிகளில் போட்டியிட்டது திமுகவிற்கு எதிராக போனது. காங்கிரஸின் உட்கட்சி பூசல் உச்சத்தில் இருந்தது. வளர்ந்து வரும் ஜி.கே.மூப்பனாரின் ஆட்களை அழிக்க நடந்த முயற்சி கூட்டணிக்குப் பாதகமானது.

‘உங்களுக்காகத் தானே உழைத்தேன்? நான் என்ன தப்பு செய்தேன்? என்னை ஏன் தண்டித்தீர்கள்?' என்று தழுதழுத்த குரலில் பேசிய எம்ஜிஆரின் பொதுக்கூட்டங்கள் பரிதாபத்தையும் வாக்குகளையும் குவித்தன.

129 இடங்களில் வென்று அதிமுக மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. அதிமுக கூட்டணி 93,28,839 வாக்குகளையும் திமுக கூட்டணி 83,71,718 வாக்குகளையும் பெற்றது.

நடித்த காலத்தை விட எம்.ஜி.ஆர் அவரது இரண்டாவது மூன்றாவது ஆட்சிக்காலத்தில் அவ்வளவாக சந்தோஷமாக இல்லை என்பது அவருக்கு நெருங்கிப் பழகிய பத்திரிகையாளர்களின் கருத்தாக இருக்கிறது.

16, செப்டம்பர் 1984 தஞ்சை பெரிய கோவிலில் லேசாக மயக்கமுற்ற எம்.ஜி.ஆருக்கு உடல் நலமற்றிருப்பது வெளியே தெரிந்தது. ஆனாலும் மன உறுதியுள்ள எம்.ஜி.ஆர் மருத்துவப்

பரிசோதனையைத் தவிர்த்தார். 5, அக்டோபர் 1984 அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எம்.ஜி.ஆர், ‘நான் இங்கிருக்கிறேன் என்று யாரிடம் சொல்ல வேண்டாம்' என்று தான் முதலில் உத்தரவிட்டார். எம்.ஜி.ஆர் தன் பிம்பத்தின் மீது கவனமாக இருந்ததன் தொடர்ச்சி இது. ஒரு மாதம் கழித்து 5, நவம்பர் 1984 சிறப்பு விமானம் மூலம் அமெரிக்காவில் ப்ரூக்ளின் மருத்துவமனைக்குப் பயணமானார்.

தொடர்ந்துவந்த 1984 தேர்தலில் ஆர்.எம்.வீரப்பனின் திட்டமிடுதலும் ஜெயலலிதா மற்றும் பாக்கியராஜின் பிரசாரமும் சிறப்பாக இருந்தது. திமுக பதட்டத்துடன் அணுகிய தேர்தல் அது. இந்திராவின் மரணம் அதிமுக கூட்டணிக்கு

 சாதகமானது. ‘சாவுக்கு ஒரு ஓட்டு; நோவுக்கு ஒரு ஓட்டு' என்று அனுதாப மனநிலையில் மக்கள் வாக்களித்ததாக கூறப்பட்டது. அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது.

எம்.ஜி.ஆர். நலமுற்றுத் திரும்பியவுடன் இங்கே என்ன நடந்தது? யார் யார் எதிராக நடந்து கொண்டனர் என்று தனக்கு நெருக்கமான ஒவ்வொருவரையாக அழைத்துக் கேட்டார். ஜெ-விற்கு எதிராக பல புகார்கள் வாசிக்கப்பட்டன. சில காலம் ஜெ-வை சந்திக்க மறுத்த எம்.ஜி.ஆர் பின் தூதுவர்கள் மூலம் ஜெ தரப்பு நியாயங்களை கேட்டபின் அவரை சந்தித்தார்.

இரண்டாவது, மூன்றாவது எம்.ஜி.ஆரின்

ஆட்சிக்காலத்தில், உலகத்தமிழ் மாநாடு, வன்னியர் போராட்டம், பத்திரிகைகளுக்கு எதிரான சட்டம், மத்திய அரசு போதுமான அரிசியைத் தரவில்லை என்று நிகழ்ந்த உண்ணாவிரதம், தலைநகரை மாற்றும் திட்டம், கிருஷ்ணா நதி நீர் திட்டம், தென்னக முதல்வர்களின் கூட்டம், விடுதலைப் புலிகளுக்கான உதவி என்ற நிகழ்வுகள் ஞாபகம் வரலாம்.

19, பிப்ரவரி 1981 அன்று திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரம் கிராமத்தில் 150 ஆதிதிராவிடர்கள் இந்து மதத்தை விட்டு இஸ்லாம் மதத்தை தழுவினார்கள். அதை தொடர்ந்து 8 மாதத்திற்குள் 2000 பேர் இந்து மதத்தை விட்டு மதம் மாறியதாக கூறப்பட்டது.  அடல்பிகாரி வாஜ்பாயும், காங்கிரஸ் அரசின் உள்துறை அமைச்சரும் மீனாட்சிபுரம் வந்தனர். இந்த சம்பவம் அடங்குவதற்குள் ராமநாதபுரத்தில் மதமாற்றம், துப்பாக்கிச்சூடு நிகழ, மலேசியாவில் இருந்து எம்.ஜி.ஆர். உடனே தமிழகம் திரும்பினார்.

23, டிசம்பர் 1987, மாலை 5 மணிக்கு தனது மருத்துவரை அழைத்தார் எம்.ஜி.ஆர். மருத்துவர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வற்புறுத்த, எம்.ஜி.ஆரும் ஜானகி அம்மாளும் மறுத்ததாக தகவல். இரவு எம்ஜிஆரின் உடல்நிலை மோசமானது. மறுநாள் அதிகாலை மூன்று மணிக்கு கோடிக்கணக்கான தமிழர்களை துயரத்தில் ஆழ்த்தி, எம்ஜிஆர் மறைந்தார்.

எம்.ஜி.ஆர் ஆட்சியில் நடந்த நான்கு முக்கியமான திருப்புமுனைகள்

1. லட்சுமணசுவாமி முதலியார் குழுவின் பரிந்துரையின்படி எம்.ஜி.ஆர் Pre University Courseஐ மாற்றி 10+2 பாடதிட்டத்தைக் கொண்டு வந்தார். சுமார் 170 கல்லூரிகள் பியூசி பாடதிட்டத்தை நடத்திவந்த நிலை மாறி அதிகப்படியான மாணவர்கள் 10+2வில் சேர்ந்தார்கள். பியூசி தேர்வை 80,000 மாணவர்கள் எழுதிய நிலை மாறி, குறுகிய காலத்தில் அதைவிட பத்து மடங்கு மாணவர்கள் 10+2 எழுதினார்கள். தமிழகத்தில் பட்டதாரிகள் அதிகரித்ததற்கு இது முக்கியக் காரணம்.

2. இரண்டாவது முறை எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வருகையில் 10 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள் இருந்தன. 25 இலட்சம் டெபாசிட், 25 ஏக்கர் நிலம் மற்றும் 50 சதவீத இடங்கள் அரசிற்கு என்ற அடிப்படையில் தனியார் பொறியியல் கல்லூரிகள் அமைக்கும் முயற்சியை எம்.ஜி.ஆர் முன்னெடுத்தார். அதிகப்படியான விமர்சனங்களை சந்தித்தாலும் தமிழகத்தில் ஐடி பலமாக காலூன்றுவதற்கு இது ஒரு முக்கிய காரணம்.

3. திருச்சி மாவட்டத்தில் உள்ள பாப்பா குறிச்சி கிராமம் 1 ஜூலை 1980 அன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. சத்துணவு திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களோடு எம்.ஜி.ஆர் மதிய உணவை சாப்பிட்டார். முதலில் கிராமப்புற மாணவர்களுக்கு மட்டும் தொடங்கப்பட்டது. 56.9 லட்சம் கிராமப்புற மாணவர்கள் பயன் பெற்றதாக கூறப்பட்டது. செப்டம்பர் 1982இல் நகர்ப்புறத்திற்கு விரிவுபடுத்தப்பட்டு 65.7 லட்சம் மாணவர்கள் பயன் பெற்றார்கள்.

4. மருத்துவக் கல்லூரியில் இடம் கொடுப்பதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள், வழக்குகள் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்தாலும், +2 மதிப்பெண்கள் அடிப்படையில் கட் ஆப் முறையில் தொழிற்கல்லூரிக்கு அட்மிஷன் வழங்கியதால் ஏழை எளிய மாணவர்கள் தொழில்கல்வி பட்டதாரிகள் ஆனார்கள்.

திமுகவிலிருந்து பிரிய எம்.ஜி.ஆர் சொன்ன முக்கியமான காரணங்கள் இரண்டு. ஒன்று மதுவிலக்கு மற்றொன்று வருமானத்தை மீறி சொத்து சேர்த்தது.

‘என் இறுதி மூச்சு இருக்கும் வரை மதுவிலக்கு கொள்கையை நான் நிறைவேற்றுவேன் என என்னைப் பெற்ற அன்னை மீது உறுதி எடுத்து கொள்கிறேன்‘ (2-12-1979, 'அண்ணா' நாளிதழ்) என சொன்ன எம்.ஜி.ஆர் 1980இல் மதுவிலக்கு கொள்கையில் கொண்டு வந்த தளர்வுகளை ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளோம்.

25 மே 1983 அன்று எம்.ஜி.ஆரின் அரசு 2 கார்ப்பரேஷன்களை ஆரம்பித்தது. ஒன்று Tamilnadu State Marketing Corporation (TASMAC) மற்றும் Tamilnadu Sprit Corporation (TASCO). முன்னது மதுவை மொத்தமாக விற்க, பின்னது மதுவை தயாரிக்க. இந்த நிறுவனங்களை ஆரம்பிக்க சொல்லப்பட்ட காரணம்: மது அருந்தும் ஏழைகளுக்கு மலிவான தரமான மதுவை வழங்குவதும் மது அருந்தும் பொதுமக்களின் ஆரோக்கியத்தைக் காப்பதும்.

77 -87 காலகட்டத்தில் அதிமுக மீது பல  குற்றச்சாட்டுகள் எழுந்தன.

பூம்புகார் கப்பல் கழகம் 8.4 கோடிக்கான கப்பலை 10.4 கோடிக்கு என்ற அதிக விலையில் 3 கப்பல் வாங்க முயற்சித்தது, திருச்செந்தூர் கோவில் வழக்கு என்று பல ஊழல் குற்றச்சாட்டுகளை அப்போதைய எதிர்க்கட்சியான திமுக முன்வைத்தது. திமுகவின் பார்வையை விட்டு தள்ளி நின்று கட்டுரையை எழுத பணிக்கப்பட்டதால் இந்த கட்டுரையில் திமுகவின் வாதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

அதிமுக ஆட்சியில் பெரிதும் பேசப்பட்ட முதல் ஊழல் ராபின்மெயின் ஊழல். ஜெ போட்டுக் கொடுத்ததால் மத்திய அரசு இந்த வழக்கை கையில் எடுத்ததாக காளிமுத்து குற்றஞ்சாட்ட, தொடர்ந்து ஜெவுக்கு காளிமுத்துவிற்கும் இடையே தரம் குறைந்த வார்த்தைப் போர் நடந்தது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு 32 வருடங்கள் கழித்து குற்றம் நிரூபணமாகி குற்றவாளிகள் தண்டிக்கப்படும் போது எம்.ஜி.ஆர் மட்டுமல்ல காளிமுத்துவும் மறைந்து போய் இருந்தார்.

அகமதுகான் என்ற கேரள ஒப்பந்ததாரர் கேரளா அரசுக்கு எழுதிய கடிதத்தில், நிறைய கஷ்டப்பட்டு அதிகமான பணம் செலவழித்து தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிசாராயம் கொண்டு வந்ததாக குறிப்பிட, பிரச்னை பெரிதானது. அந்த காலகட்டத்தில் மாநிலத்திற்கு வெளியே எரிசாராயம் கொண்டு செல்ல தடை இருந்தது. பின் அகமதுகானுக்காக தடை விலக்கப்பட்டு 10 லட்சம் லிட்டர் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டு, ஆனால் 15 லட்சம் லிட்டர் கொண்டு செல்லப்பட்டதாக எம்.ஜி.ஆர் ஒப்புக்கொண்டார். தவறைக் கண்டுபிடிக்க நீதிபதி கைலாசத்தை எம்.ஜி.ஆர் நியமித்தார்.

முன்னாள் ஐஜி ஆர்.என்.மாணிக்கம், மார்ச் 1981 ஒரு குண்டை தூக்கிப் போட்டார். அவரது மருமகன், சகோதரன் மற்றும் நண்பருக்கு சாராயம் மற்றும் IMFL மொத்த வியாபார உரிமைக்காக 10.75 லட்சம் ரூபாய் எம்.ஜி.ஆரின் சகோதரர் சச்கரபாணி மற்றும் அவரது மகன்களிடம் நான்கு தவணையாகக் கொடுத்ததாகவும் உரிமம் கிடைக்காதபோது

சக்கரபாணியின் மகன் திரும்பக் கொடுத்த 3 லட்சம் காசோலை பௌன்ஸ் ஆனதாகவும் விஷயத்தை எம்.ஜி.ஆர் மற்றும் சக்கரபாணியிடம் கொண்டு சென்ற பின் 10.75 லட்சத்தில் பிராமிசரி நோட்டு கொடுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு. தொடர்ந்து எம்.ஜி.ஆர் தனது அண்ணன் குடும்பத்துடன் உறவை முறித்துக் கொண்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டார்.

எம்.ஜி.ஆர் திமுகவிலிருந்து விலகும்போது முதல்கட்டத்திலேயே அவருடன் வந்தவர்

எஸ்.டி. சோமசுந்தரம். திறமையானவர். அவர் அமைச்சராக இருந்தபோது விற்பனைவரி 250 கோடியிலிருந்து 750 கோடியாகவும், மதுவின் மூலம் அந்த வருமானம் 150 கோடியிலிருந்து 250 கோடியாகவும் உயர்ந்ததாக தரவுகள் கூறுகின்றன. அவரே கட்சியின் மேல் பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார். எம்.ஜி.ஆர் அவரிடம் சமாதானம் பேசினார். பின்னர் அதிமுகவினரே அதிமுக அமைச்சரான

எஸ்.டி. சோமசுந்தரத்துக்கு கருப்புக் கொடி காட்டினர். ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த சோமசுந்தரம் கட்சி விரோத நடவடிக்கைக்காக அமைச்சர் பதவி மற்றும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். எஸ்டிஎஸ்ஸின் இலாகாக்கள் அவரது ஆதரவாளர்களான டி.வீராசாமி மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு கொடுக்கப்பட்டது.

‘எம்.ஜி.ஆர் அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் மக்கள் அரசாங்கத்தைக் குற்றவாளியாகப் பார்த்தார்களே ஒழிய, அவரது கொடுக்கும் குணத்திற்காகவே அவரை குற்றவாளியாகப் பார்க்க மக்கள் மனது ஏற்கவில்லை என்று MGR A LIFE புத்தகம் எழுதிய ஆர்.கண்ணன் குறிப்பிடுகிறார்.

‘அரசியல்வாதி என்பது முழுமையான ஒரு பிராண்ட் ஆகும். என்னைப் பொருத்தவரை பிராண்ட் என்பது ஒரு கருத்தாக்கம். அரசியல்வாதி என்பது ஒரு

சக்திவாய்ந்த கருத்தாக்கம். லட்சக்கணக்கான மக்களின் மனங்களில் வாழ்வது' என்று ஹரிஷ் பிஜூர் என்கிற இந்தியாவின் புகழ்பெற்ற பிராண்ட் நிபுணர் கூறுகிறார்.

எம்.ஜி.ஆர் என்கிற பிராண்டை மிகத் திட்டமிட்டு கவனமாக உருவாக்கி, தொடர்ச்சியாகக் காத்துவந்த விதம் ஆச்சரியத்திற்குரியது. சினிமா எம்.ஜி.ஆரின் நீட்சியாகத்தான் நிஜ எம்.ஜி.ஆரையும் மக்கள் தரிசித்தனர். ஒருமுறை எம்.ஜி.ஆர் சுற்றுப் பயணம் போன போது ஒரு மூதாட்டி ‘இந்த நம்பியாரிடம் கொஞ்சம் கவனமாக இரு ராசா' என்று கூறியது முக்கியமான செய்தி.

சென்னை சட்டக்கல்லூரியின் ஆண்டு விழாவிற்கு எம்.ஜி.ஆர் வந்திருந்தார். விழாவில் மிமிக்ரி செய்த ஒரு பையனின் நடிப்பு பிடித்துப் போக எம்.ஜி.ஆர் உடனே தான் கட்டியிருந்த கடிகாரத்தை கழற்றி அந்த பையனுக்கு கொடுத்துவிட்டார். அடுத்து 12 வயதான சிறுமியின் நாட்டியம். சிறுமியின் நாட்டியத்திலும் மனதைப் பறிகொடுத்தார் எம்.ஜி.ஆர். ஆனால்

சிறுமிக்கு கொடுக்க எந்த பொருளும் எம்.ஜி.ஆரிடம் இல்லை. உடனடியாக ஒரு வெள்ளி கோப்பையை வாங்கி வரச்சொல்லி சிறுமிக்கு கொடுத்து விட்டுப் போனார்.

சிறுமியின் பெயர் ஜெ.ஜெயலலிதா.

எம்.ஜி.ஆரை விட மிகவும் வெளிப்படையானவர் ஜெ. 1972இல் ‘குமுதம்' இதழில் ‘மனம் திறந்து சொல்கிறேன்' என்று தனது வரலாற்றை ஜெ சொல்லச் சொல்ல எஸ்.ரஜத் எழுதினார்.

தொடரின் ஆரம்பத்தில் ‘நான் ரொம்ப யோக்கியமானவள், நான் ரொம்ப நல்லவள், யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யலை, ரொம்ப புண்ணியவதின்னு எல்லாம்  சொல்லிக்க மாட்டேன். நான் நானாக இருக்கிறேன். அவ்வளவுதான்' என்று தன்னை பற்றியே சொல்ல ஆரம்பிக்கிறார்.

அதிமுக எம்.ஜி.ஆரிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தலைமையின் கீழ் பயணித்தது.

(படங்கள்: சுபா சுந்தரம், படங்கள் உதவிக்கு நன்றி: வைட் ஆங்கிள் ரவிசங்கரன்)

தகவல்கள் ஆதாரம்:

1. நான்  ஏன் பிறந்தேன் - எம்.ஜி.ஆர் பாகம் 1

2. நான்  ஏன் பிறந்தேன் - எம்.ஜி.ஆர் பாகம் 2

3. M.G.R 1  எழுத்தும் பேச்சும்- வே.குமரவேல்

4. M.G.R 2  எழுத்தும் பேச்சும்- வே.குமரவேல்

5. நான் ஆணையிட்டால் ....! பொன்மனச் செம்மலின் பொக்கிஷம்! தொகுப்பு எஸ்.கிருபாகரன்

6. எனக்குள் எம்.ஜி.ஆர்  - காவியக் கவிஞர் வாலி

7. பாகம் 1 திராவிட இயக்க வரலாறு அண்ணாவுக்குப் பிறகு

ஆர். முத்துக்குமார்

8. M.G.R  A lIfe - R.Kannan

9.பிம்பச் சிறை எம்.ஜி.ராமச்சந்திரன் - திரையிலும் அரசியலிலும் எம்.எஸ்.எஸ்.பாண்டியன்

10 .எம்.ஜி.ஆர் நடிகர் முதல்வரான வரலாறு - அருணன்

11. M.G.RAMACHANDRAN BLOOD BROTHER

12. எம்.ஜி.ஆரின் தீர்க்க தரிசனம்- சோலை

13. யாரைத்தான் எதிர்க்கவில்லை?- ப.திருமாவேலன்

14. பெரியோர்களே... தாய்மார்களே! ப.திருமாவேலன்

பிப்ரவரி, 2022