எனக்குப் பேய்களுடன் நேரிட்ட அனுபவம் கால்நடை மருத்துவக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்தபோது நடந்தது.
கல்லூரி விடுதியில் இருக்கும் நியூ பிளாக்கில் எனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் மின் விசிறி ஓடவில்லை. விடுதிக்காப்பாளர் அலுவலகத்திற்கு தினமும் நடையாய் நடந்து ஓய்ந்து போனேன்.
15 பழுதான மின்விசிறிகள் சேர்ந்தால்தான் மொத்தமாகப் பழுது பார்க்க அனுப்புவோம் என்றார்கள், அலுவலகத்தில். அதற்கு குறைந்தது மூன்று நான்கு மாதங்களாவது ஆகும். கொசுக் கடி தாங்காமல் கடைசியாக, விடுதியின் மின்சார ஊழியரைப் பிடித்தேன். என்னால் மின்விசிறி இல்லாமல் இருக்க முடியாது, எப்படியாவது ஏற்பாடு பண்ணித்தாருங்கள் என்றேன். அவர், 'தம்பி, எங்கயுமே ஓடுற கண்டிஷனில் ஃபேன் இல்லை, ஒண்ணே ஒண்ணுதான் இருக்கு, ஆனா, அது வேணாம்,' என்றார். ஏனென்றும் சொல்லவில்லை. மிகுந்த வற்புறுத்தலுக்குப் பிறகு, சீனியர் ஒருவர் தூக்கு மாட்டி இறந்த அந்த மின் விசிறி யாரும் உபயோகப்படுத்தாமல் இருப்பதைச் சொன்னார். அந்த சீனியரைத் தெரியும் எனக்கு. மிக அமைதியானவர். மெஸ்ஸில் கூட கடைசியாக வந்து சாப்பிட்டு விட்டுச் செல்வார். ஏதோ மன உளைச்சலில் தூக்கு மாட்டி இறந்து விட்டார்.
'எனக்குப் பிரச்னையில்லை, அதைக் கழட்டி என்னுடைய அறையில் மாட்டுங்கள்' என்றேன். 'சாயங்கால நேரத்துல செய்ய மாட்டேன், நாளை காலை வா, செஞ்சுறலாம், ஆனா, நல்லா
யோசிச்சுக்க' என்றார்.
அடுத்த நாள் என்னுடைய அறையில் அந்த மின்விசிறி மாட்டப்பட்டது. அன்று என்னுடைய அறையில் தூங்க நண்பர்கள் யாரும் தயாராக இல்லை. கொசுக்கடியை விட பேய் பரவாயில்லை என்பது தான் என்னை பயமுறுத்தியவர்களிடம் நான் கூறியது. தூக்கில் பிரேதம் தொங்கியதால் அந்த விசிறியில் 'கிரீச், கிரீச்' சத்தம் கொஞ்சம் அதிகமாகவே கேட்டது. ஏறக்குறைய ஒன்றரை வருடங்கள் அதே அறையில் அந்த விசிறியுடன்தான் வாழ்ந்தேன்.பேய் வரவில்லை.
பேய்க் கதைகள் நம்மைச்சுற்றி உலவிக் கொண்டேதான் இருக்கும். நாம் அதை எப்படி எதிர் கொள்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. இதில் தைரியம் என்பதை தாண்டி, இல்லை என்பதை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. ஆனால் இன்றைய சினிமாக்கள் திரும்ப திரும்ப பேய், பிசாசு என்று சொல்லி இள மனதுகளில் அச்சத்தையும், குழப்பத்தையும் தோற்றுவிக்கின்றன. இதனால் இருட்டைக் கண்டே பயப்படும் சந்ததிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
சினிமா தொடங்கும் போது புகை, மது உடல் நலத்திற்கு கேடு என்று காட்டுகிறார்கள். அதுபோல பேய்ப்படம் எடுப்பவர்கள் ' கற்பனையான சித்திரிப்பு, உண்மையல்ல' என்ற அறிவிப்பை வெளியிடுவதை கட்டாயமாக்க வேண்டும். மது, புகையை விட இதன் பாதிப்புகள் சிறுவர்களிடம் அதிகம். பேய்ப்படங்களுக்கு நான் எதிரியில்லை. நன்றாக உருவாக்கப்பட்ட பேயை நானும்
ரசிக்கத் தயார்தான், ஆனால் சித்திரிக்கப்பட்டது என்ற அறிவிப்பு அவசியம்.
இந்த சிறப்பிதழில் திரைப்படங்களில் வந்த தமிழ் பேய்களில் தொடங்கி சர்வதேசப் பேய்கள் வரை விரிவாக அலசப்பட்டுள்ளன.
என்றும் உங்கள்,
அந்திமழை இளங்கோவன்.
பிப்ரவரி, 2019.