சிறப்புப்பக்கங்கள்

பேச்சில் இருந்து செயலுக்கு!

தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு

செல்வன்

‘மெம்பர்’ என்பதற்குச் சரியான தமிழ்ச் சொல் எனக்கு அகப்படவில்லை. இது ஆச்சரியத்திலும் ஆச்சர்யம். ‘அவயவி’ சரியான வார்த்தையில்லை. ‘அங்கத்தான்’ கட்டிவராது. ‘சபிகன்’ சரியான பதந்தான். ஆனால், பொதுஜனங்களுக்குத் தெரியாது. யாரேனும் பண்டிதர்கள் நல்ல பதங்கள் கண்டுபிடித்துக் கொடுத்தால் புண்ணியமுண்டு. அரை மணி நேரம் யோசித்துப் பார்த்தேன்; ‘உறுப்பாளி?’ ஏதெல்லாமோ நினைத்தேன். ஒன்றும் மனதிற்குப் பொருந்தவில்லை. என்ன செய்வேன்! கடைசியாக ‘மெம்பர்’ என்று எழுதிவிட்டேன். இன்னும் ஆற, அமர யோசித்துச் சரியான பதங்கள் கண்டுபிடித்து மற்றொருமுறை சொல்லுகிறேன்.- மகாகவி பாரதியார்

இன்றைக்கு மெம்பர்  என்ற சொல்லுக்கு உறுப்பினர் என்ற தமிழ்ச் சொல் புழக்கத்தில் இருக்கிறது. ஆனால்  எண்பது ஆண்டுகளுக்கு முன்பாக அந்த சொல்லுக்குப் பதிலாக என்ன எழுதுவேன் என்று அங்கலாய்க்கிறார் பாரதியார்.   ஐம்பதுகளில் வந்த செய்தித்தாள்களை எடுத்துப்பார்க்கும் இந்த காலத்து இளைஞர்கள் எவருக்கும் பெரும் மலைப்பாகத்தான் இருக்கும். எவ்வளவு வடமொழிச்சொற்கள்? இந்த சொற்கள் எல்லாம் மாற்றப்பட்டு தனித்தமிழ் சொற்கள் இன்று புழக்கத்துக்கு வந்துவிட்டன. தனித்தமிழ் இயக்கமும் அதனுடன் பயணம் செய்து ஆட்சிக்கு வந்த திராவிட இயக்கமும் செய்த  மாறுதல் இது. 

அறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்ததும் கோட்டையில் சத்யமேவ ஜெயதே என்றிருந்ததை வாய்மையே வெல்லும் என்று மாற்றுகிறார். சென்னை ராஜதானி தமிழ்நாடு மாநிலம் ஆகிறது.  அக்கிராசனர் தலைவர் ஆகிறார். காரியதரிசி செயலாளர் ஆகிறார். பொக்கிஷாரர் புதைக்கப்பட்டு பொருளாளர்  என்ற சொல்வருகிறது. போஷகர் என்கிற சொல் காப்பாளர்  ஆகிறது. அசெம்ப்ளி சட்டப்பேரவை ஆகிறது. கான்ஸ்டியன்சி தொகுதி ஆகிறது. இது தொடர் நிகழ்வு. கலைஞர் கருணாநிதி ஆட்சியில் பாரீஸ் கார்னர் பாரிமுனை ஆகிறது. கெல்லீஸ் கிள்ளியூர் ஆகிறது. இன்றைக்கு பெரும்பாலும் தெரிந்தோ தெரியாமலோ பல தனித்தமிழ்ச் சொற்கள் புழங்குவதன் பின்னால் தனித்தமிழ் இயக்கத்தினுடையதும் அதனுடன் கைகொடுத்த திராவிட இயக்கத்தினுடையதுமான ஆதரவு இருந்திருக்கிறது.

அதேபோல் தந்தைபெரியார் சொன்ன  தமிழ் எழுத்துச்சீர்திருத்தத்தை செயல்பாட்டுக்குக் கொண்டுவந்ததன் மூலம் தமிழில் எழுதுவதை எளிமையாக்கினார் முதல்வர்  எம்.ஜி.ஆர்.இந்த சூழலை அடுத்துவந்த கணினி காலகட்டத்தில் அதற்காக தமிழ் மொழிசொற்கள் ஆக்கம் பெருமளவில் தேவைப்பட்டது. பலரும் தன்னார்வலர்களாக உழைத்தார்கள். விகடனில் எழுத்தாளர் சுஜாதா விடுத்த அழைப்பின்பேரில் 45 பேர் ஞாயிற்றுக்கிழமைகளில் உழைத்தார்கள். ழ கணினி என்ற திட்டம் அது.

“ cc என்பதற்கு கரிநகல் என்ற சொல்லும் Bcc என்பதற்கு மறைநகல் என்ற சொல்லும் கிடைத்தன” என்று இது பற்றி எழுதுகையில் சுஜாதா பெருமிதம் கொள்கிறார். ‘’ அன்று சிசி என்பதற்கு நான்கு பரிந்துரைகள் வந்தன. கரிநகல் என்றார் ஒருவர்.  இன்னொருவர்  துணைநகல் என்றார். வெறும் நகலே போதும் என்றார் வேறொருவர். கரிநகல் என்பது ஆதாரமாக கார்பன் காப்பியிலிலிருந்து வந்தது. அந்த வார்த்தையில் அதன் சரித்திரம் பொதிந்திருக்கிறது.  இதனால் அது எனக்குப் பிடித்தது” என்று எழுதுகிறார் சுஜாதா.

 முழுக்க முழுக்க தமிழிலே கணினியில் செயல்படவைக்கும் திட்டத்துக்கு மொழியாக்கங்கள் நடைபெற்றன. உலகளாவிய அளவில் தனிப்பட்ட முறையிலும் தமிழறிஞர்களும் ஆர்வலர்களும் உழைத்தார்கள்; உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் தமிழில் கணினியும் இணையமும் சாத்தியம் ஆகியிருக்கின்றன. இதில் உருவான புதுச்சொற்கள் எல்லாம் தனித்தமிழில் இருந்ததுதான் பெருஞ்சுவை! மென்பொருளும் வன்பொருளும் குறுவட்டும் கணினி உலகில் இன்று இருக்கின்றனவே. யாரும் இல்லையென்ற காரணத்தைக் காட்ட இயலாது. ஆனால் எத்தனை இளைஞர்கள் இந்த சொற்களைப் பயன்படுத்துகிறார்கள்? பயன்பாட்டுக்குப் பரவலாக வரவில்லை. ஆனாலும் நம்மிடையே அந்த சொல் இருக்கிறது. ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது என்பதே முக்கியம்.

ஆங்கிலத்தில் புதிய சொற்களை மாதம்தோறும் பரிசீலனை செய்து ஆக்ஸ்போர்டு அகராதியில் இடம்பெறச்செய்கிறார்கள். இது உலகின் மிகப்பெரிய மொழித்திட்டமாகச் செய்யப்படுகிறது.  உலகெங்கும் ஆங்கிலத்தில் புதிய சொற்களைத் தேடுபவர்களின் பரிந்துரையின் பேரில் இந்த சொற்கள் தெரிவு செய்யப்படுகின்றன. குறைந்தது இரண்டு மூன்று ஆண்டுகளாவது பயன்பாட்டில் இருந்த பின்னரே இந்த சொற்கள் ஆக்ஸ்போர்டு அச்சு அகராதியில் இடம் பெறுகின்றன. ஊடகங்களில் பதிவு செய்யப்பட்ட புதிய சொற்களே அங்கீகாரம் அளிக்கப்படுகின்றன என்கிற முறைமையையும் ஆக்ஸ்போர்டு அகராதி கொண்டிருக்கிறது. அவ்வளவு எளிதாக எல்லா மொழிச் சொற்களையும் ஆங்கிலப் பயன்பாட்டுக்கு அவர்கள் கொண்டுவருவதில்லை. இது ஒரு தொடர்ச்சியான செயல்பாடாக நடைபெறுகிறது. இதுபோன்ற தொரு அமைப்பு தமிழிலும் அரசு உதவியுடன்  தொடர்ச் செயல்பாடாக பொதுமக்கள் தன்னார்வலர்கள் பங்கேற்புடன்  நடந்திடவேண்டும். பெரும்பாலும் தனிமனிதர்கள், தனி  அமைப்புகளின் பங்கேற்பிலேயே இந்த புதுச்சொல் உருவாக்கம் இருப்பதை இப்போது  காண்கிறோம்.

புதிய தனித்தமிழ்ச் சொற்கள் பயன்பாட்டுக்கு உடனடியாக வராமல் போகலாம். ஆனால் மெம்பர் என்ற சொல்லுக்கு தமிழ்ச்சொல் தேடி பாரதி தவித்த நிலை யாருக்கும் வரக்கூடாது அல்லவா?

செப்டெம்பர், 2016.