சிறப்புப்பக்கங்கள்

பேசித் தீர்த்த பொழுதுகள்

அந்திமழை இளங்கோவன்

கண் விழித்துக் காத்திருந்து, தலைவர்களின் பேச்சுகளைக் கேட்ட ஒரு தலைமுறை மெல்ல தமிழ்நாட்டில் ஓய்ந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழ் மேடைகளின் ஊடாக ஓர் எழுத்துப் பயணம்.

கடையநல்லூர் தினசரி சந்தைத் திடல், 1967 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்து இரவு, சீட் கிடைக்காததால் காங்கிரஸிலிருந்து விலகிய ஏ.ஆர். சுப்பையா சுயேச்சையாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். ஆதரித்துப் பேசப் போகும் அறிஞர் அண்ணாவின் பேச்சைக் கேட்க இரவு ஏழு மணியிலிருந்து மக்கள் பெருந்திரளாக காத்திருக்கிறார்கள். இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடுவார் என்கிற அறிவிப்பு தொடர்ந்து கொண்டே இருந்தது. அதிகாலை சுமார் நாலரைமணிக்கு அண்ணா மேடை ஏறினாராம். கூட்டம் ஆர்ப்பரித்ததாம். ஐந்து மணியளவில் ஆரம்பித்த அண்ணாவின் பேச்சு தொடர்கிறது: வானம் சிவந்துவெளுக்கப் போனது. ‘காங்கிரஸ் பேரியக்க மென்ற காரிருள் விலகப்போகிறது இன்னும் சற்று நேரத்தில் உதயசூரியன் உதிக்கப் போகிறான்’ என்று உரையை முடிக்கிறார் அண்ணா. கலைந்து போன கூட்டத்தின் ஆரவாரம் ஏ.ஆர்.சுப்பையாவை 446 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்தது 1967ல் திமுக ஆட்சியமைத்தது.

சிறுவனாக ஒரு கட்சி மாநாட்டின் மூன்று நாள் பேச்சுக்களை என் தந்தையுடன் சென்று புரியாமலேயே ஒருவித பரவசத்துடன் கேட்டிருக்கிறேன். இளம் பிராயத்தில் சினிமா நடிகர்களை விட மேடைப் பேச்சாளர்களே என்னை வசீகரித்தனர். கட்சி சார்பு இருந்தாலும், மாற்றுக் கட்சி, இலக்கிய, ஆன்மீகக் கூட்டங்களையும் பேச்சுக்களையும் விரும்பிக் கேட்டதுண்டு.

மேடைப்பேச்சு இல்லையென்றால் 1947க்கு பிந்தைய தமிழக அரசியலே இல்லையெனலாம். தமிழகத்தில் நடந்த சில பொதுக்கூட்டங்கள் அரசியலின் போக்கை தீர்மானித்துள்ளன.

இவை என் பார்வையில் 1947க்கு பின் நடந்த சில திருப்புமுனைக் கூட்டங்கள்:

17 செப்டம்பர் 1949 அன்று சென்னை பவளக்காரத் தெருவில் ராபின்சன் பூங்கா பொதுக் கூட்டம் - திராவிட முன்னேற்றக் கழகம் உருவெடுத்தது.

1969 பிப்ரவரியில் அண்ண காலமான பின் மெரினா கடற்கரையில் மு.க பேசிய இரங்கல் கூட்டம்.

 1972ல் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின் எம்.ஜி.ஆர் கலந்து கொண்ட கூட்டம்.

 அவசர நிலையின் போது திமுகவை துரத்தி துரத்தி அடித்த காங்கிரசிற்கு ஆதரவாக 1980ல் மெரினா கடற்கரையில் ‘நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக’ என்று மு.க பேசிய கூட்டம்.

1991ல் ராஜிவ் காந்தி படுகொலையான திருபெரும்புதூர் கூட்டம்.

 1993 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ‘வைகோவின் அரசியல் நலன்களுக்காக, விடுதலைப்புலிகள் கருணாநிதியைக் கொலை செய்யத் திட்டமிட்டு உள்ளார்கள்’ என்ற பழிக்குப் பின் தீக்குளித்த நொச்சிப்பட்டி தண்டபாணி தகனக்கூட்டத்தில் வைகோ ஆற்றிய உரை.

2009-ல் ஈழத்திற்கு ஆதரவாக ஜெ.ஜெயலலிதா பேசிய ஈரோடு கூட்டம்.

 பள்ளிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு மாமாவின் கடையில் வேலை பார்த்து வந்த காமராஜரின் மனதில் அரசியல் ஆசையை வேர்விடச் செய்து காங்கிரஸ் கட்சியின் முழு நேர பணியாளனாக மாற்றியது பி.வரதராஜுலு நாயுடுவின் பேச்சு தான்.

பின்னர் விருதுநகர் வெடிகுண்டு வழக்கில் காமராஜர் மாட்டிக்கொண்ட போது வரதராஜுலு நாயுடு தான் வாதாடி வழக்கைப் பொய்யானதென நிரூபித்தார்.

எல்லா நேரங்களிலும் ஆர்ப்பாட்டமான பேச்சுக்கள் வெற்றி பெறுவதில்லை. 1980 சனவரி திங்களில் காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து தமிழகத்தின் 38 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெறச் செய்தனர். மத்தியில் அமைந்த அரசு எம்.ஜி.ஆரின் அரசை டிஸ்மிஸ் செய்தது.

மே 28, 1980 ல் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வந்தது. அப்போது எம்.ஜி.ஆர் தமிழகம் முழுவதும் பயணம் செய்து கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வாதத்தை முன் வைத்தார். சாம்பிளுக்கு பவானியில், ‘நான் என்ன குற்றம் செய்தேன். இன்னும் இரண்டரை ஆண்டு கால ஆட்சி பாக்கியிருக்கும் போது ஏன் என்னை பதவியிலிருந்து இறக்கினார்கள். நான் லஞ்சம் வாங்கினேன் என்று சொல்கிறார்களா? இல்லை. ஊழல் செய்தேன் என்று சொல்கிறார்களா? இல்லை. அவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? உங்கள் (மக்கள்) மீது தான் குற்றம் சாட்டுகிறார்கள். நீங்கள் நாடாளுமன்றத்திற்கு அவர்களை ஆதரித்து தேர்ந்தெடுத்தீர்களாம். எங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையாம். அதனால் எங்கள் அரசு கலைக்கப்பட்டதாம். எந்த குற்றத்தையும் காணமுடியாத போது, குற்ற தண்டனைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிற அவமானத்தில் இருக்கும் எனக்கு உண்மை தெரிய வேண்டும் என்ற நிலையில் சொல்கிறேன், நான் நிரபராதியா இல்லையா என்பது நீங்கள் வாக்களிப்பதிலிருந்து தெரிய வேண்டும்’ என்றார்.

நீங்கள் எனக்கு வாக்களித்தால் நான் நிரபராதி, என்று எளிமையான தமிழில் பேசிய எம்.ஜி.ஆரின் பேச்சு வாக்குகளை அள்ளிக் குவித்து அரியணைக்கு அழைத்துச் சென்றது.

1984 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது எம்.ஜி.ஆர். அமெரிக்க மருத்துவமனையில். எதிரணியில் திமுக மிக பலமான பேச்சா ளர்-களுடன். எம்.ஜி.ஆரின் உடல் நிலை பற்றிய பல யூகங்களும், கற்பனைகளும் பெரிதாகப் பேசப்பட்டன. அந்த காலகட்டத்தில் அதிமுக ஸ்டார் பேச்சாளர்கள் மேடை தோறும் எம்.ஜி.ஆரின் உடல் நலம் பற்றி பேசினார்கள். அப்போது அதிமுகவிற்கு புதிதாக ஒரு பேச்சா ளர் வந்தார். அவர் மிக சிம்பிளாக, ‘பல கூட்டங்களில் பேசப்படும் செய்திகள் ஒரு வேளை உண்மையாக இருக்குமோ என்ற பயம் எனக்கிருந்தது. அதனால் நான் விமானம் ஏறி நேராக அமெரிக்கா சென்றேன், புரூக்ளின் மருத்துவமனைக்கு சென்று எம்.ஜி.ஆரை சந்தித்தேன். அவர் நலமாக இருக்கிறார்.பொய்களை நம்ப வேண்டாம். மீண்டும் வந்து அவரால் எப்போதும் போல் ஆட்சி செய்ய முடியும்’ என்று மேடைதோறும் மென்மையாகப் பேசினார். அது இயக்குநர் பாக்யராஜ். திமுகவின் பேச்சாளர்களால் வெற்றி வாக்குகளை வாங்க முடியாமல் போன மற்றொரு தருணம் இது.

தமிழக அரசியலில் மு.கவின் மேடைப் பேச்சிற்கு மிக நீண்ட வரலாறு உண்டு. 1967க்கு முந்தைய அவரது ஆவேசப் பேச்சுக்களைப் பலரும் சிலாகிப்பதுண்டு. 1986,செப்டம்பர்15ல், சென்னை கலைவாணர் அரங்கில் மு.கருணாநிதி, ‘காதில் விழுகிறது சில பேரின் கேலி சிரிப்பு. கவியரங்கம் ஒரு கேடா கழகத்திற்கு. விழா நடத்த சிறிதேனும் வெட்கமில்லையா இவர்களுக்கு? வெற்றி பெற்ற நாம் இங்கே வீரவாள் சுழற்றி நிற்க... வீணர்களுக்கு என்ன முப்பெருவிழா வேண்டிக் கிடக்குதென ஆணவக்குரலொன்று கேட்குதங்கே. போர்க்களத்தில் விழுப்புண் பெறுவதே பெருமை என்று இனிய உடன்பிறப்புக்கள் எடுத்துரைத்த காரணத்தால் பணநாயகப் படையை எதிர்த்து நமது ஜனநாயகப் படை மோதிற்று. வீழ்ந்தாலும் விழுப்புண் பெற்றோர் தாம் வீரர்கள் பட்டியலில் இடம்பெறுவார்’ என்று கவியரங்கில் பேசினார்.

தொடர் தோல்விகளால் தொண்டர்கள் சோர்விற்றிருந்த 1976 - 1989 காலகட்டங்களில் நிகழ்த்தப்பட்ட மு.கவின் பேச்சுகளுக்கு திமுக தொண்டர்களை வசியம் செய்யும் சக்தியிருந்திருக்கிறது.

திமுக அந்த காலகட்டத்தில் பல தோல்விகளைச் சந்தித்திருந்தாலும் கருணாநிதியின் பேச்சுக்களால் தனது தொண்டர் பலத்தைத் தக்க வைத்துக் கொண்டது.அப்போது மு.கவின் முன்னாள் நண்பரும் அதிமுகவின் பிரச்சார பீரங்கியுமான க.காளிமுத்துவின், ‘கருவாடு மீனாக முடியாது, கறந்த பால் மடியேறாது, கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது’ என்ற வசனம் பல மேடைகளில் ஒலித்திருக்கிறது. பதிலடியாக மு.கவின் தொண்டர் படைத் தளபதியான வை.கோ, ‘நீண்ட காலமாக போராடும் என் தலைவர், பல யுத்தங்களை இழந்திருக்கலாம்,ஆனால் போரை இழக்கவில்லை.( Have Lost battles, but not the WAR) என்  தலைவர் போர்க்களத்தை விட்டு ஒரு போதும் வெளியேறவில்லை அதனால் தோற்றதாக கூற முடியாது. இன்னும் வாளோடு போர்க்களத்தில் இருக்கும் என் தலைவன் வெற்றி பெற்றே தீருவார்’ என பல கூட்டங்களில் கூறுவதுண்டு.

1989ல் கருவாடு மீனானது. வைகோ மு.கருணாநிதிக்காக கூறிய வார்த்தைகளை, இப்போது வைகோவின் தளபதிகள் தங்கள் தலைவருக்கானதாகவும் கூறலாம்.

அலங்கார நடைகள் துறந்து நீண்ட சொல்வீச்சுகளை தமிழகத்தில் அதிகமாக நிகழ்த்தியது தந்தை பெரியார் மட்டும் தான். தள்ளாத பெரியாரின் 90 வது வயதிலிருந்து 94 வயது வரையிலான ஐந்து ஆண்டுகளில், அந்த 1826 நாட்களில், 807 நாட்கள் பயணம் செய்து 1052 உரைகளை நிகழ்த்தியிருக்கிறார். ஒன்றே முக்கால் நாளுக்கு ஒரு உரை என்ற விதத்தில்.

தனது 95வது வயதில் 98 நாட்கள் உயிரோடு இருந்த அவர் 35 நாட்கள் பயணம் செய்து 42 உரை வீச்சுகளை நடத்தியிருக்கிறார். இறுதிப் பேச்சு 1973 ஆம் ஆண்டு டிசம்பர் 17, ஆம் தேதி தி.நகரில் நிகழ்ந்தது. 7 நாட்கள் கழித்து உயிர் துறக்கிறார். பதவி , பணம், வாரிசுகளை காப்பாற்றவேண்டிய அவசியமில்லாது, தான் நம்பிய கொள்கைக்காக உழைத்த பெரியாரின் பேச்சில் உள்ள உறுதி எதிரிகளையும் பிரமிக்க வைக்கும்.

சென்னைக்கு வந்த பின் பல தலைவர்களின் மறுபக்கங்களைத் தெரிந்து கொள்ள நேர்ந்தது.அப்போது பலரது மேடை பேச்சின் வார்த்தைகளுக்கும், வாய்மைக்கும் இடையே நீண்ட இடைவெளி இருப்பது புரிந்தது. பல வருடங்களாக மனதின் உயர்ந்த பீடங்களில் அமர்ந்திருந்த தலைவர்கள் பதவியிறக்கம் செய்யப்பட்டனர்.

பொது மேடைகளின் கவர்ச்சி குறைந்து கொண்டே வருகிறது. தலைவர்களுக்காக காத்திருக்கும் பொறுமை இளையதலைமுறையினரிடம் இருப்பதாக தெரியவில்லை. தலைவர்கள் தொலைக்காட்சி, பேஸ்புக், டிவிட்டர் வழியாக நம் வரவேற்பறைக்கு வந்து விட்டனர். களங்கள் மாறுகின்றன, ஆனால் காட்சி...?

பொதுவாழ்வில் நேர்மையான தூய்மை, வார்த்தைகளில் வாய்மை உள்ள தலைவர்களுக்கும் மட்டுமே மனங்களில் இடமென்று மனிதர்கள் முடிவெடுக்கும் போது, மானுடம் வெல்லும். அது வரை எந்த ரூபத்தில் வந்தாலும், எந்த அலங்காரத்துடன் வந்தாலும் பேச்சு, வெறும் பேச்சாகத்தானிருக்கும்...

ஆகஸ்ட், 2013.