சிறப்புப்பக்கங்கள்

பெரியோர்களே... தாய்மார்களே...

தேர்தல் எதிர்பார்ப்புகள்

Staff Writer

தேர்தல் பிரச்சார மேடைகளில் எதிரணியினரை இடுப்புக்குக் கீழே கட்டையால் அடிக்கும் பேச்சுக்கள் இடம் பெறுவதே வழக்கம். ஆனால் அதே சமயம் மாநில வளர்ச்சிக்கான விஷயங்களையும் பேச கொஞ்சம் நேரம் ஒதுக்குவது நல்லது. அரசியல்வாதிகள் எந்த விஷயங்களைப் பற்றிப் பேசவேண்டும் என்று பல்வேறு தரப்பட்ட புள்ளிகளிடம் கேட்டோம். அவர்கள் தெரிவித்த சில கருத்துகள்.

மகளிர் எதிர்பார்ப்புகள் - வாக்காளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களான பெண்களுக்கு என்ன செய்யவேண்டும் கட்சிகள்?

சென்னைக் கோட்டை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு யார் வசம் என்பதைத் தீர்மானிப்பதற்கான தேர்தல் நாள் விரைவில். ஆட்சியை யாரிடம் ஒப்படைப்பது என்பதைத் தீர்மானிக்கும் வாக்காளப் பெருமக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். என்றாலும் அறுபத்தி எட்டு அகவை கொண்ட இந்திய ஜனநாயக சோசலிசக் குடியரசு, பெண்களின் தனி மனித, சமூக சுதந்திரத்தையும் உரிமைகளையும் ஏன் உயிரையும் உத்தரவாதப்படுத்த முடியாத சோகை  பிடித்த அரசாகவே விளங்குகிறது.

பெண்ணுலகின் பிரதான எதிரியாக, ஆயிரங்கால் பூதமாக அச்சுறுத்தும் மது, போதை மருந்துகள் ஒழிக்கப்பட வேண்டும். பெண்களின் பாதுகாப்புக்கு, மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு, பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் சவாலாக விளங்கும், அரசே முன்னின்று நடத்தும் டாஸ்மாக் கடைகள் நிரந்தரமாக மூடப்படுவதற்கான ‘பூரண மதுவிலக்கு கொள்கை’ முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, எத்தகைய சால்ஜாப்பும், இழுத்தடிப்புகளும் இல்லாமல் உடனடியாக கறாராக அமல்படுத்துவதற்கான உத்தரவாதம் தரப்பட வேண்டும்.

திருமண வயது வரப்பெற்ற எந்த ஒரு ஆணும் பெண்ணும் விரும்பி மணமுடிப்பதும்,  சேர்ந்து வாழ்வதும் சட்டப்படியான உரிமை. இதைச் சாதியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ, பொருளாதார அடிப்படையிலோ தடுப்பதற்கான உரிமை யாருக்கும் கிடையாது. ஆனால், அண்மைக்காலமாக சாதி ஆணவப் பேய் பிடித்த சிலர் தாங்கள் சுவீகரித்துக் கொண்டிருக்கும் போலி கௌரவத்தின் பெயரால் நிகழ்த்தும் கொடுங்கொலைகள் மானுடம் பேணும் அனைவரையும் பதற வைத்திருக்கிறது. சாதி/மத ஆணவக் கொலைகளைத் தடுக்கவும் மூர்க்கர்களைத் தண்டிக்கவும் தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும். அத்தகைய சட்டம் இயற்றப்படும் என்ற உறுதியை கட்சிகள் தரவேண்டும்.

மக்களாட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களுக்கான சட்டங்களை இயற்றும் அதிகாரம் கொண்ட அமைப்புகளான மாநில சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்கேற்பும் பங்களிப்பும் மிக மிகக் குறைவே. இதன் காரணமாக பெண்களின் தேவைகளும் கருத்துகளும் உரிய அரசியல் அங்கீகாரம் பெறுவதில்லை. எனவே, இந்த அவைகளில் பெண்களுடைய பங்கேற்பையும் பங்களிப்பையும் அதிகப்படுத்த வேண்டும்; எந்தவிதமான தடங்கலுமின்றி சட்டமாக்கப்பட்டிருக்க வேண்டிய பெண்களுக்கான 33.3 சதவீத இடஒதுக்கீடு மசோதா  கிடப்பில் போடப்பட்டு, நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது. நடுவண் அரசின் மேல் அனைத்து வகையான அழுத்தங்களையும் தந்து, மசோதா சட்டமாக்கப்பட சரியான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்பதை தேர்தல் அறிக்கையில் உறுதிபடுத்த வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள், அவைகளில் திறம்பட செயல்படுவதில்லை என்று குற்றம் கூறுபவர்கள் ஒன்றை உணர வேண்டும். (இருக்கைகளை தேய்த்துக் கொண்டு, வாய்மூடி மௌனம் காக்கும் ஆண் உறுப்பினர்கள், இவர்கள் கவனத்திற்கு வருவதே இல்லை) தாங்கள் வெறும் வாக்கு வங்கிகளாக வைத்திருக்கும் பெண்களுக்கு தங்கள் கட்சி அமைப்புகளின் பொதுவான, பொறுப்பான பதவிகளைத் தந்து பொது வாழ்வில் உரிய பயிற்சி பெற வாய்ப்பளிக்க வேண்டும். இதற்கான வாக்குறுதியை தங்கள் தேர்தல் அறிக்கையில் தரவேண்டும்.

 பெண்களின் பாதுகாப்புக்கும் உரிமைக்கும் இயற்றப்பட்ட சட்டங்கள் கறாராக அமல்படுத்தப்பட வேண்டும்.

சமூகநீதி, பாலியல் நீதியைஉள்ளடக்கியதே. உயர் கல்விக்கான இடங்களிலும் வேலை வாய்ப்புகளிலும் தங்கள் சாதிகளுக்குரிய விகிதாச்சாரத்தைப் பெற போர்க்கொடி தூக்கும், சமூகநீதி காவலர்களும் மற்றவர்களும் பெண்கள், திருநங்கைகள், திருநம்பிகளுக்கான சமூக நீதியையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பேராசிரியை சரஸ்வதி - சமூக செயற்பாட்டாளர், எழுத்தாளர்.

கல்வி : உலகவர்த்தக அமைப்பின் கீழ் கல்வியைக் கொண்டுவர அனுமதிக்கக்கூடாது

உலக வர்த்தக அமைப்பின் கீழ் கல்வியைக் கொண்டுவருவதற்கான  விருப்பங்களைத் தெரிவித்திருக்கிறது இந்தியா. இந்த விருப்பங்கள் இன்னும் ஒப்பந்தமாக மாறவில்லை.  ஒப்பந்தமாக மாறுவதற்கு முன்பாக இவற்றைத் திரும்பப் பெற முடியும். உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தப்படி சந்தை திறந்துவிடும்போது சம ஆடுகளம் வழங்கப்படவேண்டும். அரசு கல்வி நிறுவனங்களை சேவையாக மட்டும் அல்லாமல் சில பாடப்பிரிவுகளை கட்டணங்களையும் பெற்று நடத்துகிறது என்றால் அதை அரசு நிறுவனமாக ஏற்றுக்கொள்ள முடியாது. அதையும் சேவை நிறுவனமாகக் கருதவேண்டும்.  இந்த நிறுவனங்களுக்கு  சலுகை வழங்கக்கூடாது. வழங்கினால் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் வழங்கவேண்டும் என்று கேட்கிறார்கள்.  எல்லா நிறுவனங்களுக்கும் அரசால் கொடுக்கமுடியாது. அப்போது அது தான் நடத்தும் நிறுவனங்களுக்கு அளிக்கும் உதவிகளை நிறுத்தும். இதனால் என்ன ஆகும்? விளிம்புநிலை மக்கள், பெண்கள், போன்றவர்களுக்கு கிடைக்கும் கல்வி ஆபத்துக்குள்ளாகும். இதனால்தான் உலகவர்த்தக அமைப்பின் கீழ் கல்வி என்ற பேச்சுவார்த்தையே நிறுத்தப்படவேண்டும். இதற்காக இந்தியா முழுக்க போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாடு சமூக

 நீதியின் களம்.  200 ஆண்டு போராட்ட வரலாறு உண்டு. எனவே கட்சிகள் 2016 தேர்தலில் இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு நாங்கள் ஆதரவாக இருக்கமாட்டோம் என்ற வாக்குறுதியை வழங்கவேண்டும். இது பிராதானமானது.

அரசு விடுதிகள் குறிப்பாக ஆதிதிராவிடர் நலத்துறை நடத்தும் விடுதிகள் ஒரு கண்ணியமிக்க மாணவன் தங்கிப் பயிலக்கூடிய நிலையில் இல்லை. அங்கே தரப்படும்  வசதிகள் அவ்வளவு மோசம். இன்றைய தேவை என்ன என்பதற்குத் தேவையான அளவுக்கு நிதி ஒதுக்கவேண்டும். தொடக்க கல்வி முதல் உயர்கல்வி வரை அரசு தன் பொறுப்பில் தாய்மொழிக் கல்வி வழங்க முன்வரவேண்டும். தொடக்க பள்ளிகளில் மழலையர் பிரிவு தொடங்கவேண்டும். கற்றல் செயல்பாட்டில் மட்டும்தான் ஆசிரியர்கள் ஈடுபடும் அளவுக்கு அலுவலக உதவியாளர்கள் நியமிக்கப்படவேண்டும்.  தாய்மொழிக்கல்வி என்கிறபோது பல்மொழிகள் கற்கும் வாய்ப்பும் சேர்த்துத்தரப்பட வேண்டும் என்றே கூறுகிறோம். பள்ளிக்கல்வியிலும் உயர்கல்வியிலும் ஆசிரியர் பணியிடங்கள் ஒரு நாள் கூடக் காலியாக இல்லாமல் இருக்கும் அளவுக்கு பணி நியமனங்கள் செய்யப்படவேண்டும். காலியாக இருந்தால் கற்றல் செயல்பாடு பாதிக்கப்படுகிறது என்று பொருள்.

பணி நியமனங்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும். எதற்காக ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்துகிறார்கள்? அவர் படித்த படிப்புக்கு பிறகு என்ன பொருள்? இது தேவையா என்ற கேள்வி நம்முன் நிற்கிறது. இந்தத் தேர்வு நடத்தித்தான் ஆகவேண்டும் என்று வருகிறபோது சமூக நீதிப்படி மதிப்பெண் தளர்வு வழங்கப்படவேண்டும். அத்துடன் இத்தேர்வு எழுதி தேர்வானவர்களின் பணி நியமனத்தின் போது தற்போது கடைப்பிடிக்கப்படும் வெயிட்டேஜ் முறையும் சர்ச்சைக்கு உரியது. இதன் காரணமாக தொடரப்பட்ட வழக்குகளால் கடந்த மூன்றாண்டுகளாக இந்த தேர்வும் நடத்தப்படவில்லை; பணி நியமனங்களும் நடைபெறவில்லை. கட்சிகள் இதை கருத்தில் கொண்டு தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சரியானதொரு கொள்கை முடிவெடுத்து இப்பிரச்னைகளை களைவதாக வாக்களிக்கவேண்டும்.

 இப்போதிருக்கும்பலகல்விவாரியங்கள்மூடப்பட்டுஒரேகல்விவாரியம்அமைக்கப்படவேண்டும். அனைத்துபிள்ளைகளும்சமமாகவும்சீராகவும்அனைத்துக்குழந்தைகளும்கல்விகற்கக்கூடியசூழல்அமையவேண்டும்என்பதுதான்சமச்சீர்கல்வி. இந்த  சூழல்இன்னும்அமையவில்லை. இது  அரசின்முழுப்பொறுப்பிலும்செலவிலும்பொதுப்பள்ளிமுறையில்தான்சாத்தியம். அரசுப்பள்ளிகள்மேலும்தரம்உயர்த்தி, பள்ளிமாணவர்கள்மத்தியில்சாதிவேறுபாடுகளைக்களைதல், ஆண்பெண்பாலினசமத்துவம், மூன்றாம்பாலினபுரிதல்ஆகியவைமுன்னெடுக்கப்படவேண்டும்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு, அமைப்பாளர் - பொதுக் கல்விக்கான மக்கள் மேடை.

இளைஞர் நலன் – இளைஞர் சக்தியை பொறுப்புடன் வழி நடத்தவேண்டும்

கட்சிகள் கவனிக்கவேண்டிய அடிப்படை விஷயம் வேலை இல்லா திண்டாட்டம். ஏராளமான இளைஞர்கள் பொறியியல் படித்துவிட்டு திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். மிகக்குறைவான சம்பளத்துக்கு வேலை செய்ய தயாராக இருக்கிறார்கள். சிலர் வாட்ச்மேன் வேலைக்கும் காவலர் வேலைக்கும் கூட சென்று கிடைத்ததை வாங்கி காலம் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். 5000 ரூபாய் சம்பளத்துக்கு தயாராக இருக்கிறார்கள் பலர்.

தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை சாதிய பிரச்னை முக்கியமானதாக இருப்பதை கட்சிகள் கவனத்தில் கொள்ளவேண்டும். இதில் முக்கியமான ஓர் அம்சம், வெளியே சாதிப்பிரச்னையாக சொல்லப் படும் விஷயங்களினுள்ளே தனிநபர் மோதல் பிரச்னை முக்கியமானதாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சாதியில் ரவுடியாக தலையெடுத்து தலைவராக ஆகிறவரிடம் அந்த குறிப்பிட்ட சாதி ஆட்கள் மட்டும் இருப்பதில்லை. எல்லா சாதி ஆட்களும் அடியாளாக கூலிக்கு வேலைபார்ப்பார்கள். இதுவொரு நுட்பபமான இயங்கியல். பெரும்பாலான மோதல்கள் அரசியல், குடும்ப, தனிநபர், மோதல்களாக இருக்கின்றன. இதை சாதியமோதல்களாகக் கருதி இளைஞர்கள் வழிதவறிப்போவதன் விளைவுதான் கல்லூரிகளில் கையில் சாதிக்கயிறு கட்டி அலைவது.  ஒரு  கொலை என்பது கோழைத்தனம் என்கிற கருத்தியலைப் பரப்பக்கூடிய ஊடகங்களும்  மக்கள் தலைவர்களும் இங்கே இல்லை. கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் இதில் பெரும் பொறுப்பு இருக்கிறது. அதைப் புரிந்து அவர்கள் இதைக்கையாளவேண்டும்.

மயன் ரமேஷ் ராஜா, துணைத்தலைவர், திருநெல்வேலி தமிழ்ப்பண்பாட்டு மையம்

நிர்வாகம் : பயனாளிகளை திட்ட நிறைவேற்றத்தில் இணைக்கவேண்டும்.

முக்கியமான பிரமுகர்கள், உயரதிகாரிகளுக்கு, காவல்துறையில் இருந்து பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்த வீண் நடவடிக்கை முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு, இதில் ஈடுபடும் காவலர்கள் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படவேண்டும். பாதுகாப்பு இல்லாதபோது தலைவர்களும் பொறுப்புடன் பேசுவார்கள்.  தொழில்வளர்ச்சிக்கு மின்சார உற்பத்தி நடவடிக்கைகள் துரிதப்படவேண்டியது முக்கியம். தனியாரிடம் மின்சாரம் வாங்குவதாக இருந்தால்  யூனிட்  4 ரூபாய்க்கு மேல் வாங்கக்கூடாது. இது ஊழலுக்கு வழிவகுத்துவிடும். சூரிய மின்சாரம் வாங்குபோதும்  யூனிட் ரூ 4.75 க்கு மேல் வாங்கக்கூடாது என்பது உறுதிசெய்யப்படவேண்டும். மின் இணைப்புக்கு விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் வீடுகளுக்கு இணைப்பு வழங்கவேண்டும் என்பது முன்பெல்லாம் நடைமுறையில் இருந்தது. இது மீண்டும் நடைமுறைக்கு வரவேண்டும். வர்த்தக இணைப்புகள் ஒரு வாரத்திலும் தொழிற்சாலைகளுக்கான உயர் அழுத்த இணைப்பு ஒரு  மாதத்துக்குள்ளாகவும் வழங்குவது நடைமுறைக்கு வரவேண்டும்.

 இலவசப்பொருட்கள் வழங்குவது முற்றிலுமாக தவிர்க்கப்படவேண்டும். அரசுத்துறைகளில் பணிகள் மேற்கொள்ளும்போது அந்த திட்டங்களால் பயனடைய இருக்கும் மக்களை அதில் இணைக்கவேண்டும். மக்களை ஒருவருக்கொருவர் போட்டியாளர்களாக உருவெடுக்க வைக்கும் இந்த சமூக அமைப்பை மாற்றி ஒருவருக்கொருவர் தோழர்களாக பார்க்க வைக்கும் புரிதலை உருவாக்கும் பார்வையை அரசியல்வாதிகள் மேற்கொள்ளவேண்டும்.

நாகல்சாமி, - மின்சார ஒழுங்குமுறை வாரிய முன்னாள் உறுப்பினர்.

சுற்றுச்சூழல் - வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் திட்டங்களைக் கைவிடவேண்டும்

நீர்நிலைகள் பாதுகாப்பு

சமீபத்தில் சென்னையையும் மேலும் சில மாவட்டங்களையும் உலுக்கியெடுத்த வெள்ளத்திற்கு மிக முக்கியமான காரணம், நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப் பாதைகளின் பாதுகாப்பில் நாம் உரிய கவனம் செலுத்தாததுதான் என்பது தெளிவு.

நீர்நிலைகளுக்கென்று தனியே அமைச்சரவை அமைத்து ஏரிகள் சீரமைப்பு, தூர் வாருதல் போன்ற பணிகளை மேற்கொள்வோம் என்று ஆட்சி அமைக்க விரும்பும் ஒவ்வொரு கட்சியும் உறுதிமொழி ஏற்க வேண்டும்.

 அணுவுலைகள்

மக்களின் உணர்வுகளை மதித்து கூடங்குளத்தில் மேலும் அணுவுலைகள் வராமல் இருக்க முயற்சிகள் மேற்கொள்ளவும் கூடங்குளத்தில் அணுவுலைகளுக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது போடப்பட்டிருக்கும் எல்லா வழக்குகளையும் திரும்ப பெறவும் தமிழக நலனில் உண்மையான அக்கறை கொண்ட ஒவ்வொரு அரசியல் கட்சியும் முன் வர வேண்டும்.  கல்பாக்கத்திலும் மேலும் அணுவுலைகள் வராமல் உரிய நடவடிக்கைகளை எடுக்க அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும். மக்கள் எதிர்க்கும் நியூட்ரினோ திட்டத்தையும் மீத்தேன் திட்டத்தையும் கைவிட அரசியல் கட்சிகள் முன் வர வேண்டும்.

கெயில்

விவசாயிகளுக்கு இன்று மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது கெயில் விவகாரம். விவசாயி களின் நலனில் விவசாயத்தில் நம்பிக்கை கொண்ட எந்தவொரு அரசியல் கட்சியும் கெயில் திட்டத்திற்கு விவசாயத்தை பாதிக்காத மாற்றுபாதையை கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

தனியார் குளிர்பான ஆலைகள்

சமீப காலங்களில் தனியார் குளிர்பான ஆலைகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் பல வெடித்திருக்கின்றன. தனியார் ஆலைகள் நமது நீராதாரங்களை உறிஞ்சும் நிலையே மக்கள் போராட்டங்களுக்கு காரணம். புதிய ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்று ஒவ்வொரு அரசியல் கட்சியும் மக்களுக்கு உறுதிமொழி தர வேண்டும்.

இயற்கை விவசாயம்

மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் எந்த வகையிலும் உள்நுழையாமல் தடுக்க நடவடிக்கைகளையும். இயற்கை விவசாயத்தை பரவலாக்கும் முயற்சிகளையும் எல்லா அரசியல் கட்சிகளும் மேற்கொள்ள வேண்டும்.

மேற்கு தொடர்ச்சி மலைகள் பாதுகாப்பு

கஸ்தூரி ரங்கன் கமிட்டியில் குறிப்பிட்டுள்ள எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டு மேற்கு தொடர்ச்சி மலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என்கிற வாக்குறுதியை மக்களுக்கு தர வேண்டும்.

தோல் தொழிற்சாலை பிரச்சனை

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் பரவலாக அமைந்திருக்கும் தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் முழுமையாக சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுவதை உறுதிசெய்யவும்

 சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளும் சுத்திகரிக்கப்படுவதை உறுதிசெய்யவும் அரசியல் கட்சிகள் முன் வர வேண்டும். புதிதாக இம்மாதிரியான சூழலை மாசுபடுத்தக்கூடிய தொழிற்சாலைகள் அனுமதிக்கப்படாதவகையில் கொள்கைகள் அமைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இயற்கை வளங்கள்:

தமிழ்நாட்டில் உள்ள இயற்கை வளங்களான ஆற்று மணல், தாது மணல், கிரானைட் மற்றும் அனைத்து கனிமங்களும் மக்களுக்கு சொந்தமானவை. சில தனியார் நிறுவனங்கள்/தனி நபர்கள் இதில் கொள்ளை லாபம் சம்பாதிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க மக்களுக்கு அரசியல் கட்சிகள் உறுதிமொழி தர வேண்டும். சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டு அந்த குழு ஒப்புதல் வழங்கும் பகுதிகளில் மட்டுமே இயற்கை வளங்களை எடுக்க அனுமதிக்கப்படும் என்றும் தமது தேர்தல் அறிக்கைகளில் உறுதிமொழி தர அரசியல் கட்சிகள் முன் வர வேண்டும்.

பொறியாளர் சுந்தரராஜன், - பூவுலகின் நண்பர்கள்.

ஏப்ரல், 2016.