நாஞ்சில் சம்பத் ஆம்ரே கார்த்திக்
சிறப்புப்பக்கங்கள்

பெரியாரையும் பேசுவேன் பெரியாழ்வாரையும் பேசுவேன்!

நாஞ்சில் சம்பத்

குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவில் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் கலந்துகொண்டு அம்பாளின் பெருமை என்ற தலைப்பில் நான் பேசினேன்.

எனக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு கிடைத்தது. அந்தப் பேச்சை ஒரு பக்தி சொற்பொழிவு மாதிரியோ புராணச் சொற்பொழிவு மாதிரியோ சொல்லாமல் தமிழ் இலக்கியங்களில் யாரெல்லாம் எப்படியெல்லாம் அம்பாளை ஆராதிக்கிறார்கள் என்று நான் வரிசைப்படுத்தினேன்.  பாரதியின் பராசக்தி பாடல், அபிராமி அந்தாதி, திருநெல்வேலி காந்திமதி அம்மை பிள்ளைத்தமிழ், குமரகுருபரரரின் மீனாட்சி பிள்ளைத் தமிழ் போன்ற இலக்கியங்களில் இருந்து நான் சொன்னது  இலக்கியச் சொற்பொழிவாகப் பார்க்கப்பட்டது.

அதற்குப்பிறகு தொடர்ந்து ஐந்தாண்டு காலம் அதே கோயில் திருவிழாவில் ஒவ்வொரு தலைப்புகளில் நான் உரையாற்றி இருக்கிறேன். அடுத்து  தென்காசி திருவள்ளுவர் கழகம். இது தென்தமிழகத்தில் இருக்கிற சங்கப்பலகை என்று சொல்லலாம். இங்கே வராத தமிழ் அறிஞர்கள் இருக்கமுடியாது. இன்று நான் தமிழ் இலக்கியம்பேசுகிறேன் என்றால் அதற்குக் காரணம் அந்த கழகம் போட்டுத்தந்த ராஜபாட்டைதான்!

அங்கேதான் தவத்திரு குன்றக்குடி அடிகளார், பேராசிரியர் ஆ.சீனிவாசராகவன், எட்டையபுரம் துரைராஜ்,  திருக்குறளார் முனுசாமி,  பேரா.ப.நமசிவாயம், பேராசிரியர் நடேச முதலியார், வாகீச கலாநிதி கிவா ஜகந்நாதன்,  திருமுருக கிருபானந்த வாரியார், பேராசிரியை சரஸ்வதி ராமநாதன் பேராசிரியர் சொல்விளங்கும் பெருமாள்,  என்னுடைய குருநாதராக நான் மதிக்கின்ற தமிழ்நாட்டின் தன்னிகரற்ற சொற்பொழிவாளர்களில் முதலிடத்தில் இருக்கும் பேராசிரியர் இளம்பிறை மணிமாறன்... இவர்களுடைய பேச்சை அங்கே தான் கேட்டேன். அதற்குப் பிறகுதான் என்னுடைய வாழ்க்கை மேடைதான் என தீர்மானித்தேன். அதே கழகத்தின் பவளவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றி இருக்கிறேன்.

திருநெல்வேலி காந்திமதி அம்மை திருக்கோவிலில் நின்றசீர் நெடுமாறன் அரங்கில் ஆனிப்பெருந்திருவிழாவில் இளம்பிறை மணிமாறன் தலைமையில் நடைபெற்ற சுழலும் சொல்லரங்கில் சிந்தைக்கும் செவிக்கும் இனிய பாசுரங்களை அள்ளித்தந்ததில் முந்தி நிற்பவர் அப்பரா? சம்பந்தரா?  சுந்தரரா? மாணிக்கவாசகரா என்ற அரங்கில் மாணிக்கவாசகரைப் பற்றிப் பேசினேன். ஆனிப்பெருவிழாவில் ஆடிவெள்ளம்போல் ஓடிவரும் மக்களைக் கவர்ந்தேன்.

மதுரை அரசமரப் பிள்ளையார் தமிழ்ச்சங்கத்தில் பொன்விழாக் கண்ட சுதந்தரம் புன்னகைக்கிறதா புன்னகைக்கவில்லையா என்ற தலைப்பில் வழக்காடு மன்றம். அதில் பேரா.இளம்பிறை மணிமாறன் நடுவர். அம்மேடையில் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவி மணியன் அவர்களை சந்தித்த தருணம் மறக்க முடியாது. வழக்கை நான் தொடுக்க, அவர் வழக்கை மறுக்க பட்ட பாடு... ‘இனிமேல் நான் வழக்காடு மன்றங்களிலும் பட்டி மன்றங்களிலும் கலந்துகொள்ள மாட்டேன்' என்று தமிழருவி மணியன் ஒரு முடிவெடுப்பதற்கே அந்த தமிழ்ச்சங்க நிகழ்வுதான் காரணம்.

காரைக்குடியில் அண்ணாவின் பெயரால் இருக்கும் தமிழ்ப்பேரவை. தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமை. அண்ணா ஒரு பாசப்பறவை என்று எஸ்.எஸ் தென்னரசு அவர்களும் அண்ணா ஒரு சொல்லருவி என்று நானும் உரையாற்றி இருக்கிறோம்.

திருப்பரங்குன்றம் முற்போக்கு கவிஞர்கள் பேரவையில் பேரா. சாலமன் பாப்பையாவுடன்  கலந்துகொண்டு மானிட சமுத்திரம் நானென்று கூவு என்ற தலைப்பில் பேசியிருக்கிறேன். வில்லிவாக்கம் தமிழ்ச்சங்கத்தில் தமிழ் தேசிய சிந்தனையுள்ள

பேச்சாளர் பேராசிரியர் அரு. கோபாலன் தலைமையில் சேரன் தம்பி இசைத்த சிலம்பில் நாட்டு மக்களை அதிகம் பாதித்தது, மதுரைக் காண்டமா, புகார் காண்டமா, வஞ்சிக்காண்டமா என்பதில் வஞ்சிக்காண்டம் என்கிற அணிக்குத் தலைமை தாங்கிப் பேசியதை நினைவுகூர்கிறேன்.

தமிழ்ச் சான்றோர் பேரவையின் நிறுவனர், தந்தை பெரியாரின் தமிழிசை மன்றத்தின் தலைவர் - அருணாச்சலம் அவர்கள் ஏற்பாட்டில்  சென்னையில் பேராசிரியர் பெரியார்தாசன்  அவர்களின் தலைமையில் நானும் பழ.கருப்பையா அவர்களும் கலந்துகொண்ட  கூட்டத்தில் ‘கொதிக்கின்றாள் தமிழன்னை' என்று பேசினேன். கல்லறைக்குப் போகும் கடைசி நிமிடம் வரை எனக்கு நினைவிலிருக்கும் உரை அது!

கவிக்கோ அவர்கள் ஆயிரம் கனவுகளுடன் தொடங்கிய வாணியம்பாடி முத்தமிழ் மன்றத்தில் இன்பத்தமிழ் இலக்கியங்கள் பழமரமா போதிமரமா என்ற தலைப்பில் நெல்லைக் கண்ணன் நடுவராக அமைய, போதிமரம் என்ற தலைப்பில் பேசினேன். திமிரி தமிழ் இலக்கியப் பேரவையில் நெல்லைக்கண்ணன் நடுவராக இருக்க பாரதி ஒரு வன்முறையாளன் என்று நான் வழக்குத்தொடுத்தேன். பேராசிரியர் கவிமாமணி அப்துல்காதர் அவர்கள் வழக்கை எதிர்கொண்டார்.

கம்பனுக்கு அள்ளித்தந்த சடையப்பவள்ளலின் ஊரான திருவெண்ணெய்நல்லூர் கம்பன் கழகம், ராமேஸ்வரம் கம்பன் கழகம், புதுக்கோட்டை கம்பன் கழகம், கோவை கம்பன் கழகம் போன்ற கழகங்களில் கம்பசாகரத்தில் முழ்கி முத்தெடுத்ததும் சமய அறிவும் பக்தியும் கொண்ட பெருமக்களுக்கு மத்தியில் கம்பனை நான் பார்த்த பார்வையில் இருந்த வித்தியாசம் ஆர்வலர்களைக் கவர்ந்தது. 30 ஆண்டுகளைக் கடந்திருக்கின்ற சேலம் மார்கழிப் பெருவிழா என்ற பெயரால் ஏகே பழநியப்ப முதலியார் இயக்கிய விழாக்களில் 10 ஆண்டுகள் பேசி இருக்கிறேன். ‘நான் போனால் போகலாம்', ‘எட்டில் ஒன்று', ‘பத்தில் ஒன்று', ‘எந்நாளும் இன்பமே துன்பமில்லை'.. போன்றவை அங்கே நான் பேசிய தலைப்புகளில் சில.  மனிதனும் தெய்வமாகலாம்  என்ற தலைப்பில் நான் பேசிய பேச்சைக் கேட்டு, ‘அரசியல் இவரை இழுத்துகொண்டு போனதால் தமிழன்னைக்கு அல்லவா நஷ்டம்' என்று கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள் பாராட்டியது மறக்கமுடியாத ஒன்று.

ஈரோடு புத்தகத் திருவிழாவில் நெஞ்சம்  மறப்பதில்லை என்ற தலைப்பில் பேசி என் பேச்சைக் கேட்டு பல பேர் கண்ணீர் விட்ட காட்சி என் கண்ணில் இருந்து இன்னும் அகலவில்லை.

 சென்னை, திருப்பூர், நாகர்கோவில், ஓசூர், செங்கம், போன்ற புத்தக திருவிழாக்களில் இலக்கிய சொற்பொழிவுகள் தமிழ் மக்கள் நல்ல பேச்சை கேட்கத் தயாராக உள்ளனர் எனப் புரியவைத்தது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் செனட் ஹாலில் பண்டிதமணி கதிரேசன் செட்டியார் அவர்களின் பேரனும் தமிழ்த்துறை தலைவருமான பேராசிரியர் தியாகராஜன் அவர்கள் தலைமையில் நெல்லைப் பல்கலை துணைவேந்தராக இருந்த சபாபதி மோகன் முன்னிலையில் ‘களத்தில் வீசிய கவிதைப் புயல்'  என்ற தலைப்பின் பேசினேன். வால்ட் விட்மன், மார்கோ சனா, கலீல் ஜிப்ரான் போன்ற களமாடிய கவிஞர்களைப் பற்றிப் பேசி மாணவர்கள் நெஞ்சில் நெருப்பை விதைத்த அந்த நாளை என்னால் மறக்க இயலாது.

வானம் தொட்டுவிடும் தூரம்தான், மலரட்டும் மறுமலர்ச்சிப் பூக்கள், விரியட்டும் வெற்றிச் சிறகுகள் என மாணவர்களை வழிகாட்டும் வகையில் பல இடங்களில் பேசி இருக்கிறேன்.

ஓர் இலக்கிய மேடையில் உரை ஆறுகிறேன் என்றால் கட்சி அரசியலில் இருக்கிற வாடை கூட எதிரொலிக்காத வகையில் உரையாற்றுவது வழக்கம். இது அண்ணன் வைகோவிடம் கற்றுகொண்ட பாடம்.

அரிமா, சுழற்சங்கங்கள் தந்த மேடைகளில் பேசி இருக்கிறேன். விழுப்புரத்தில் பாவேந்தர் பேரில் உலகுதுரை என்ற பெருமகன் இயக்கிய விழாவில் ‘இன்னும் இருக்கிறான் பாரதிதாசன்' எனப் பேசிய பேச்சும் என் நெஞ்சில் கல்வெட்டாக உள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தில் பேரா.தி.ராசகோபாலன் அவர்களுடன் அண்ணாவின் தமிழ்க் கொடை என்ற தலைப்பிலும், தேவக்கோட்டை கந்த சஷ்டிக் கழகத்தில் சமயம் வளர்த்த தமிழ் என்ற தலைப்பில் பேசிய பேச்சுக் களும் எனக்குள் புதிய வாசலைத் திறந்தன. அது மட்டுமல்ல கட்சி மேடைகளில் கம்பனை பாரதியை பாரதிதாசனை சங்க இலக்கிய புலவர்களை சிலம்பை எல்லாம் மேற்கோள் காட்டிப் பேசுகிற காரணத்தால்தான் எனக்கு அரசியலில் அங்கீகாரம் கிடைத்தது.  குடியேற்றம் முததமிழ் சுவை சுற்றத்தில் அப்துல்ரகுமான் தலைமையில் அல்லவை தேயவும் அறம் பெருகவும் அவசியத்தேவை அறிவியலா? ஆன்மிகமா? என்ற தலைப்பில் அறிவியலை நான் எடுத்துப் பேசி, ஆன்மிகத்தைப் பேசிய பேராசிரியர் செல்வகணபதியுடன் விவாதம் புரிந்துள்ளேன். கோவை கண்ணதாசன் கழகத்தில் மரபின் மைந்தன் முத்தையா அழைப்பின்பேரில் திருவோடுகளில் தங்கக்காசு வீசியவன் என்ற தலைப்பில் பேசினேன். இதைத்தாண்டி கேரள பொழிஞ்ஞாம் பாறை, கொச்சி, திருவனந்தபுரம், புனலூர், கர்நாடக மாநிலம் பெங்களூர், மும்பை தமிழ்ச் சங்கங்களில் சங்க இலக்கிய உரைகள் எல்லை தாண்டிய தமிழர் மத்தியில் வரவேற்பை வாங்கித்தந்தன.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று சிங்கப்பூர் தமிழ்ச்சான்றோர் பேரவையிலும்  ‘எத்தனைகோடி இன்பம் வைத்தாய் இறைவா' என சீஷல்ஸ் நாட்டு தமிழ்சங்கத்திலும், பஹ்ரைன் பாரதி தமிழ்ச் சங்கத்தில் ‘அறமும் மறமும் பாடியவன் பாரதி' எனவும், துபாய் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டைத் தொடங்கிவைத்து இன்பத் தமிழ் வளர்த்த இஸ்லாமியத்தமிழர்களின் மாட்சியைப் பேசி இருக்கிறேன்.

பாரிஸில் என்றுமுள தென்றமிழ் என்ற தலைப்பிலும் ஆஸ்திரேலியா சிட்னியில் தமிழ் நேற்று இன்று நாளை, அந்தமான் தமிழ்ச்சங்கத்தில் பொங்கல் விழாவில் தமிழர்  திருநாள் தைத் திருநாள்தான் என்று உரையாற்றியதும் குவைத்தில் சிலம்போசைத் தமிழ்மன்றத்தில் பூ ஒன்று புயலானது என்ற தலைப்பில் பேசியதும் சிறப்பானவை. நியூயார்க்கில் ஹட்சன் விடுதியில் நாடு கடந்த தமிழீழ அரசவையில் ஈழத்து இலக்கியம் குறித்துப் பேசியதும் மறக்க முடியாதவை.

சேலத்தில் மார்கழிப் பெருவிழாவை இயக்கிய பழனியப்ப முதலியார் நெற்றி நிறைய நீறு அணிந்திருப்பார். மார்கழி முப்பது நாட்கள் நிகழ்ச்சி நடத்த ஒற்றை ஆளாக பதினோரு மாதங்கள் உழைப்பார். தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் நிகழ்ச்சியை முன்னெடுக்க வீதிவீதியாக  அலைந்து நிதிசேகரித்து நிகழ்வு நடத்த உழைத்த காலம் சென்ற கணபதியப்பனையும், இன்றைய செயலாளர் சிவராம கிருஷ்ணனையும் எப்படிப் பாராட்டுவது என்று தெரியவில்லை. கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் ஆராட்டு விழா கலை இலக்கியப் பேரவை என்ற பெயரில் வெள்ளிவிழா அமைப்பை நவம்பர் மாதம் முன்னெடுக்க அந்த அமைப்பில் இருக்கும் தமிழ் அன்பர்கள் படுகிற பாடும் கண்ணுறக்கம் இன்றி ஆற்றும் கடமையும் தமிழுக்குக் கிடைத்த வரம். சென்னையில் ஆண்டுதோறும் சேக்கிழார் விழாவை மூன்றுநாட்கள்  சொந்த செலவில் நடத்தும் சிவாலயம் மோகன் அவர்களை தனியாக கௌரவிக்க தமிழ் உலகம் கடமைப் பட்டுள்ளது.

நான் பொதுவாக என் தமிழை விலை பேசுவது இல்லை. காரணம் மலையாளம் பேசுகிற ஒரு கிராமத்தில் இருந்து வந்த எனக்கு, தமிழ் வசமாகி இருக்கிறது. அதைப் பேசும் பக்கியம் பெரிது. அதில் கிடைக்கும் காணிக்கையை நான் கணக்குப் பார்த்தது இல்லை. பார்த்திருந்தால் வாழ்க்கையை நடத்தவே இன்று சிரமப்படும் நிலை  எனக்கு வந்திருக்காது. வசதியான வாழ்க்கை இல்லாவிட்டாலும் யார் வாசலிலும் நின்றுவிடகூடாது என்கிற கவலை இன்று என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது. யாரிடத்திலும் எதையும் கேட்பதில் கூச்சம் உள்ளது. காரணம் இலக்கியவாதி சொற்பொழிவாளன்

என்பதயும் தாண்டி நான் ஒரு சுயமரியாதைக் காரன். அதை இழக்கமாட்டேன்.  அத்துடன் நான் எங்கு சென்றாலும் என்னைக் கொண்டாட நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள்.

பல இடங்களில் இரவு நேரத்தில் நடைபெறும் நிகழ்வுக்கு வழி தெரியாத முட்புதர் பாதைகளைக் கடந்து போயிருக்கிறேன். சில ஊர்களில் தங்க விடுதி இருக்காது. வீடுகளில் தங்கச் சொல்வார்கள் அப்படித் தங்குவதில் எனக்கு உடன்பாடு இருக்காது. என் உணவுப் பழக்கம், வாசிப்புப்பழக்கம் இதற்கெல்லாம் அந்த வீடுகளில் வசதி இருக்குமா எனத்தெரியாது. சமீபத்தில் வாரியார்  நினைவுநாளுக்கு அவர் வளர்ந்த ஊரான வளர்புரத்தில் இருந்து அழைத்தார்கள், அரக்கோணத்தில் இருந்து 25 கிமீ போகவேண்டும். அரக்கோணத்துக்கு ரயிலில் வருகிறேன். அங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள். தங்குவதற்கு விடுதி ஏற்பாடு வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். நிகழ்ச்சி நடத்துகிறவர்களுக்கு நாஞ்சில் சம்பத் சுமையாக இருக்கக்கூடாது என்பதில் எனக்கு உறுதி உண்டு.

திருவாரூர் மாவட்டம் வடக்கு ஆலத்தூர் என்ற இடம். நாவலர் நெடுஞ்செழியன் ஊர். அங்கே வள்ளலார் சன்மார்க்க  சபையில் என்னைப் பேச அழைத்தார்கள். எனக்கு வள்ளலார் விழாவில் பேசும் தகுதி இல்லை. நான் அசைவம் சாப்பிடுகிறவன். அதில் பேசினால் சரியாக இருக்காது என்று கூறினேன். பரவாயில்லை. நிகழ்ச்சி அன்று மட்டும் நீங்கள் அசைவம் சாப்பிடாமல் இருந்தால் போதும் என வலியுறுத்தினார்கள். அந்த விழாவில் பேச வள்ளலாரை தேட ஆரம்பித்து திருவருட்பாவில் என்னை இழந்தததாலோ என்னவோ ஒரு திங்கள் அசைவம் உண்ணாமல் இருந்து பத்தியம் இருந்து பேசினேன். நான் பெரியாரைப் பற்றியும் பேசுகிறேன். பெரியாழ்வாரைப் பற்றியும் பேசுகிறேன்.

காரைக்கால் அருகே நெடுங்காடு என்ற இடம். உரையாற்ற ஏற்பாடு. போய் இறங்கினோம். எதிரில் யாருமே இல்லை. யாருமே இல்லாமல் எப்படிங்க பேசுறது என்றேன். நீங்க பேச ஆரம்பித்தால் கூட்டம் வந்துவிடும் என்றார்கள்.

எனக்கு தர்மசங்கடம். கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களையும் அழைத்துப் போயிருக்கிறேன். நாற்காலிகள் கூடப் போடப்படவில்லையே.. எப்படி அமர்ந்து கேட்பார்கள் என்று கேட்டபிறகு நாற்காலிகள் போடப்பட்டன.

உச்சஸ்தாயியில் தமிழ்வாழ்த்து சொன்னேன். அந்த நிகழ்ச்சி அமைப்பாளர் சொன்னமாதிரி கூட்டம் எங்கிருந்து  வந்தது என்று தெரியவில்லை.  உடனே நாற்காலிகள் அனைத்தும் நிறைந்துவிட்டன. பெருங்கூட்டம்!

சமீபகாலத்தில் இலக்கியகூட்டங்களுக்கு மதிப்பு குறைந்துவருகிறது. மேடைத்தமிழுக்கு ஒரு பின்னடைவு. ஊடகங்களின் தாக்கம் சமூக வலை தளங்களின் ஆதிக்கம் இதற்குக் காரணம்.

வேடசந்தூர் வர்த்தக சங்கம் ஆண்டுதோறும் இலக்கிய விழா நடத்துகிறார்கள். இந்த ஆண்டு எளியவன் என்னை அழைத்திருந்தார்கள்.

விவேகம் விளைந்து கிடப்பது ராமாயணத்திலா மகாபாரதத்திலா என்ற தலைப்பு. நான் நடுவர். நான்கு பேராசிரியர்கள் அதில் பேச வருகிறார்கள். ஆனால் இந்த தலைப்பில் நான் பேசக்கூடாது என்று சங்கப்பரிவார அமைப்பினர் மாவட்ட காவல்துறை அதிகாரியிடம் புகார் அளித்துவிட்டனர். வைக்கப்பட்ட தட்டிகள் எடுக்கப்பட்டுவிட்டன. காவல்துறையிடத்தில் நிகழ்ச்சி நிர்வாகிகள் பேச, அவர்கள் இந்த தலைப்பை சம்பத்தை மாற்றச் சொல்லுங்கள். இந்த தலைப்பைத்தான் அவர்கள் எதிர்க்கிறார்கள் என்று கூறினர். என்னிடம் பேசப்பட்டது. என் தலைப்பை மாற்ற இவர்களுக்கு என்ன அதிகாரம்? கருத்து சுதந்தரத்துக்கு தமிழ்நாட்டில் கல்லறை கட்டமுடியாது என்று சொல்லி, மதுரை  உயர்நீதிமன்றத்தை அணுகினோம். அதே தலைப்பில் வேடசந்தூரில் பேசி முடித்தேன்.

(நமது செய்தியாளரிடம் பேசியதில் இருந்து)

ஜனவரி, 2020.