சிறப்புப்பக்கங்கள்

பெரியாருக்குப் பின் திராவிட இயக்கம்

Staff Writer

1973ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் நாள், சென்னை ராஜாஜிமண்டபம் மக்கள் கூட்டத்தால் நிரம்பிவழிகிறது. அன்று காலை ஏழரை மணியளவில் தொண்டு செய்து பழுத்த பழமான தந்தை பெரியார் தன் இறுதிமூச்சை வெளியேற்றினார். அவருடைய உடல் வேலூர் மருத்துவமனையிலிருந்து சென்னைக்குக் கொண்டுவரப்படுகிறது. ராஜாஜி மண்டபத்தில் மக்கள் பார்வைக்காக அவர் வைக்கப்படுகிறார் என்கிற செய்தியறிந்துதான் மக்கள்திரள்.

மாலை நான்கு மணியளவில் அவருடைய உடல் வந்துசேருகிறது. அப்போதைய தமிழகமுதல்வர் கலைஞர் மற்றும் அவருடைய அமைச்சரவை சகாக்கள் அங்கு அதற்கு முன்பே வந்து காத்திருக்கிறார்கள். பெரியாரின் உடல்வந்த வண்டியில் மணியம்மை இருக்கிறார். அப்போதைய அமைச்சர்கள் ப.உ.சண்முகம், மன்னை நாராயணசாமி, ஈவெகி.சம்பத் மற்றும் கி.வீரமணி ஆகியோர் வேறொரு வண்டியில் உடன் வந்து சேருகின்றனர். ராஜாஜி மண்டபம் தலைவர்களாலும் தொண்டர்களாலும் பொதுமக்களாலும் நிரம்பி வழிகிறது.

அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி, மாறுபட்ட கருத்துகளைக் கூறிவந்தாலும், ஒரு சிறந்த தலைவராக விளங்கினார் பெரியார், ஏற்றுக்கொள்ளப்பட்ட சம்பிரதாயங்களுக்குச் சவால் விட்டவர் அவர் என்று தன்னுடைய இரங்கலுரையிலும் கூறுகிறார்.

தமிழகமுதல்வர் கலைஞர், பெரியார் தன்னுடைய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டார், தமிழ்நாடு தன்மான உணர்வோடு தலைதூக்கிநிற்கக் காரணமாக இருந்த தலைவர் அவர். எங்களை எல்லாம் ஆளாக்கிய எங்கள் வழிகாட்டியின் இந்தப்பிரிவு பற்றி என்ன சொல்வது என்று புரியாமல் தவிக்கிறேன். அவர் தன்னுடைய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டார் நாம் தொடருவோம் என்று சொன்னார்.

அதோடு நிற்கவில்லை, பெரியார் உடலை அரசுமரியாதையோடு அடக்கம் செய்யவேண்டும் என்று உத்தரவிடுகிறார். அரசுப்பதவியில் இல்லாத ஒருவருக்கு அரசுமரியாதை தர சட்டத்தில் இடமில்லை என்று எதிர்ப்பு வருகிறது. சற்றும் தாமதியாமல், காந்தி எந்த அரசுப்பதவியில் இருந்தார். அவருக்கு அரசு மரியாதை தரப்பட்டதே? என்று கேட்டதோடு அரசு மரியாதை கொடுத்தாக வேண்டும் என்று உத்தரவிடுகிறார்.

தமிழகஅரசு மட்டுமின்றி காங்கிரசு உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் அவருக்கு உரிய மரியாதையைச் செலுத்தின.

அந்த கட்டத்தில் திராவிடர் கழகத்தில் இருவேறு கருத்துடையவர்கள் மத்தியில் மறைமுக மோதல்கள் நிகழ்கின்றன. ஒரு சாராருக்கு திமுகவும் ஒரு சாராருக்கு அதிமுகவும் ஆதரவு என்று சொல்லப்படுகிறது. அவருடைய மறைவுக்குப் பின்பு திராவிடர்கழகத்தின் தலைமைப் பொறுப்பை மணியம்மை ஏற்கிறார்.

அவர் பொறுப்பேற்று ஓராண்டுக்குள் கட்சிக்குள் இருக்கும் மூத்த தலைவர்களான வே.ஆனைமுத்து மற்றும் திருவாரூர் தங்கராசு ஆகியோர் தனித்தனியாக நீக்கப்படுகின்றனர். இவர்களில் ஆனைமுத்து, கழகத்தலைவர் மணியம்மைக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்துகிறார், அவருக்கு ஒரு கடிதத்தை எழுதி அதை கழக முன்னோடிகளுக்கும் அனுப்புகிறார். அதையே காரணம் காட்டி திராவிடர்கழகப் பொதுக்குழு அவரை கட்சியிலிருந்து நீக்குகிறது.

மணியம்மை பொறுப்பேற்றதிலிருந்தே அவருக்கு எதிராகப் பேசிக்கொண்டிருந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டாலும், ஆனைமுத்து, பெரியார் தொடர்பான நூல்களை கழகத்தின் பொறுப்பில் இல்லாமல் தன்னுடைய சொந்தப்பொறுப்பில் அவர் வெளியிடமுன்வந்ததும்கூட அடிப்படையான கருத்துவேறுபாட்டுக்கு ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. திராவிடர் கழகத்திலிருந்து நீக்கப்பட்ட பிறகு, மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக்கட்சி என்கிற தனி அமைப்பு கண்டார் வே.ஆனைமுத்து.

 திராவிடர் கழகத்திலிருந்து திமுக பிரிந்த பின்பும் பேச்சாற்றலால் திராவிடர் கழகத்தினர் மத்தியில் செல்வாக்காகத் திகழ்ந்த திருவாரூர் தங்கராசுவும் கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார்.  1978 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி மணியம்மை மறைகிறார். அதன்பின்னர், திராவிடர்கழகப் பொதுக்குழு கூடி, கட்சியின் தலைமைப்பொறுப்பு என்பது அய்யா மற்றும் அம்மாவுக்கே உரியது என்பதால் அந்தப்பொறுப்பில் எப்போதும் அவர்களே இருந்து நம்மை வழிநடத்துவார்கள் என்றும் பொதுச்செயலாளரான கி.வீரமணி தொடர்ந்து கழகப்பணிகளைச் செய்வார் என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

அதன்பின்னர் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது திராவிடர்கழகம்.

1987 ஆம் ஆண்டு இது மீண்டும் ஒரு பிரிவைச் சந்திக்கிறது. கோவை மாவட்டத்தில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்த கோவைராமகிருஷ்ணன், ஆறுச்சாமி ஆகியோர் திராவிடர்கழகத்திலிருந்து விலக்கப்படுகிறார்கள். அவர்கள் நாங்கள்தாம் உண்மையான திராவிடர்கழகம் என்று சொல்கிறார்கள். திராவிடர்கழகத்தின் கொடியையே பயன்படுத்துகிறார்கள். திராவிடர்கழகம் இராமகிருஷ்ணன்அணி என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். அதன்பின்னர் அவர்கள் தமிழ்நாடு திராவிடர்கழகம் என்கிற பெயரில் இயங்குகிறார்கள். இந்தப்பிரிவுக்கு திமுக ஆதரவு -எதிர்ப்பு என்கிற விவாதம் முதன்மைக் காரணமாக இருந்ததென்று சொல்லப்படுகிறது.

அதன்பின்னர், 1996 ஆம் ஆண்டு, ஆனூர் செகதீசன், விடுதலை ராசேந்திரன், வழக்குரைஞர் துரைசாமி ஆகியோர் திராவிடர்கழகத்திலிருந்து விலகி, பெரியார் திராவிடர் கழகம் என்கிற அமைப்பைத் தொடங்குகின்றனர். வீரமணி மீது ஏராளமான குற்றச்சாட்டுகளைக் கூறியதோடு, பெரியார் இயக்கம் பிற்படுத்தப்பட்டோருக்கானது என்கிற கருத்தை உருவாக்கிவிட்டார் என்றும் அதை முறியடிக்க தீண்டாமை ஒழிப்பை இலக்காகக் கொண்டு பல்வேறு தாழ்த்தப்பட்டோர் அமைப்புகளோடு இணைந்து செயல்படவேண்டும் என்கிறார்கள்.

 2000 ஆம் ஆண்டு ஜூலை முப்பதாம் நாள் கன்னடநடிகர் ராஜ்குமார் சந்தனவீரப்பனால் கடத்தப்படுகிறார். அப்போது தமிழகஅரசு சார்பில் வீரப்பனோடு பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற குழுவில் இடம்பெற்றார் என்கிற காரணத்துக்காக கொளத்தூர்மணி திராவிடர்கழகத்திலிருந்து நீக்கப்படுகிறார்.

அதன்பின்னர், வே.ஆனைமுத்து தவிர திராவிடர் கழகத்திலிருந்து நீக்கப்பட்ட அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே அமைப்பாகின்றனர். ஐந்துஅமைப்புகள் ஒருங்கிணைந்து பெரியார் திராவிடர் கழகம் உருவாகிறது.

  2012 ஆம் ஆண்டு இதில் பிரிவு ஏற்படுகிறது. அதன்விளைவு கொளத்தூர் மணி தலைமையில் திராவிடர் விடுதலைக்கழகம் என்கிற அமைப்பும் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் தந்தைபெரியார் திராவிடர் கழகமாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

  அண்மையில் திராவிடர்கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் அவர் முன்னிலையில் பேசிய பாவலர் அறிவுமதி, பிரிந்துகிடக்கும் திராவிடஇயக்கங்களை ஒருங்கிணைக்க வேண்டும் வீரமணிக்கு வேண்டுகோள் வைத்தார். அவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் சத்யராஜும் அதை வலியுறுத்திப் பேசினார். அவற்றைத் தொடர்ந்து பேசிய கி.வீரமணி, பெரியார்திடல் அனைவருக்கும் பொதுவானது, எப்போதும் திறந்தே இருக்கிறது, நம்மைப் பிரிக்கும் காரணிகளைப் புறந்தள்ளி, இணைக்கும் காரணிகளுக்கு முக்கியத்துவம் தருவோம் என்று பேசியதையும் கவனிக்க வேண்டும்.

 இப்போதே நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளில் தேர்தல் கட்சிகளைத் தவிர மற்ற திராவிடர் அமைப்புகள் ஒரே குரலில் பேசிவருவதை அறியலாம். ஒரே விசயத்தை வலியுறுத்தி தனித்தனியாகப் போராட்டங்களும் நடத்திவருகிறார்கள்.

“திராவிடர்கழகத்திலிருந்து பிரிவதற்கான காரணிகள் பின்னால் போய் இன்றைய செயல்பாடுகள் முன்னுக்கு வந்திருக்கின்றன. பெரியாரிய அமைப்புகளில் செயல்படுகிறவர்கள் தங்களுடைய தனிப்பட்ட நலன்களுக்காகச் செயல்படுவது மிகவும் குறைவு அப்படிப்பட்டவர்கள் ஓரணியாகத் திரண்டுநின்றால், தமிழகத்தில் திமுக அதிமுக ஆகிய இரண்டில் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதை இயக்கும்

சக்திகொண்டதாக மாறலாம். பாரதிய சனதாக்கட்சி ஆட்சி புரிந்தாலும் அதைப் பின்னாலிருந்து ஆர்எஸ்எஸ் இயக்குவது கண்கூடாக இருக்கிறது. இந்தியைத் திணிப்பதைத்தாண்டி சமஸ்கிருதத்தையும் திணிக்கத் தொடங்கிவிட்டார்கள். மாநிலங்களின் அதிகாரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மத்தியில் குவிக்கும் முயற்சியும் இடையறாது நடந்துகொண்டேயிருக்கிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் முப்பத்தியேழு தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. மீதி இரண்டில் ஒரு தொகுதியில் பாஜக கூட்டணி வெற்றிபெற்றது. இப்போது முப்பத்தியொன்பது தமிழகநாடாளுமன்ற உறுப்பினர்களும் பாரதிய

ஜனதா ஆதரவாளர்களாக செயல்படுவது வெளிப்படை. இதுபோன்றதொரு  சூழல் தமிழகத்தில் இதுவரை வந்ததில்லை எனவே இதுவே தக்கசமயம் என்பதை உணர்ந்து திராவிடர்அமைப்புகள் ஒருங்கிணையவேண்டும்” என்ற குரல் திராவிடர் அமைப்புகளுக்குள் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் வளரும்  வலதுசாரி இயக்கங்களுக்கு அணைபோட இவர்களால் முடியுமா?

அக்டோபர், 2015.