சிறப்புப்பக்கங்கள்

பெத்த மனம் பித்து!

கருந்தேள் ராஜேஷ்

தத்துக் கொடுக்கப்படும் குழந்தை ஒன்றுக்கு, அதன் உண்மையான பெற்றோர்கள் இவர்கள் இல்லை என்று தெரியவந்தால் என்ன ஆகும்? குழந்தையைத் தத்துக் கொடுக்கும் பெற்றோரின் மனதில் என்னென்ன எண்ணங்கள் வந்திருக்கும்? தத்தெடுப்பது என்பதன் நோக்கம் என்ன? பெரும்பாலும் குழந்தை இல்லாமையே அந்த நோக்கம்.

அப்படியென்றால், தத்தெடுப்பது என்ற எண்ணத்துக்கு வரும் முன்னர் அந்தக் கணவன் மனைவி என்னென்ன பிரச்னைகளை சந்தித்திருப்பார்கள்? சமூகம் அவர்களை எப்படிப் பார்த்திருக்கும்? இப்போது செயற்கை முறையில் கருத்தரித்தல் என்பது வந்திருந்தாலும், அந்த ப்ரொசீஜர் தரும் மன அழுத்தம் மிக அதிகமானது. சமூகத்தின் பார்வையில், ‘இவர்களுக்குக் குழந்தை இல்லை' என்ற விஷயமே ஒரு கணவன் மனைவிக்கு அதிகபட்ச மன அழுத்தத்தைத் தரப் போதுமானது. சமூகமாகிய நாமுமே, ஒருவருக்குக் குழந்தைகள் இல்லை என்றால் அதைக் கடந்துவிடுவதில்லை. என்ன ஆச்சு? ஏன்? கல்யாணம் ஆகியே ரெண்டு வருஷம் ஆயிடுச்சே? இன்னுமா எதுவும் ப்ளான் பண்ணல? என்ற கொடூரமான கேள்விகளைக் கேட்டு, கணவன் மனைவியின் மன அழுத்தத்தை நம்மால் முடிந்தவரை கூட்டவே செய்கிறோம்.

உலகம் முழுக்க எடுக்கப்படும் திரைப்படங்கள் இதுபோன்ற சிக்கல்களைத் தவறவே விட்டதில்லை. எல்லா நாடுகளிலும் இந்தப் பிரச்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பல படங்கள் உண்டு. சமுதாயத்தில் நடக்கும் பிரச்னைகளை உலகம் முழுக்க இருக்கும் திரைப்படங்கள் பிரதிபலிக்கவே செய்யும். அப்படியே கட் செய்து இந்தியாவுக்கு வந்து, இதுபோன்ற பிரச்னைகளைத் தமிழ்ப்படங்கள் எப்படிக் கையாண்டுள்ளன என்று பார்க்கலாம்.

பீம்சிங் எடுத்த ‘படிக்காத மேதை', வளர்ப்பு மகன் ஒருவன் ஒரு குடும்பத்தையே எப்படிக் காப்பாற்றுகிறான் என்பதற்கு மிகச்சிறப்பான உதாரணம். திரைப்படத்தில் ரங்காராவும் கண்ணாம்பாவும் வயதான, வசதியான தம்பதிகள். அவர்களுக்கு மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள். அவர்கள் குடும்பத்திலேயே, ரங்கன் (சிவாஜி கணேசன்) ரங்காராவால் தத்தெடுக்கப்பட்டு வளர்வான். அவனுக்கு ரங்காராவ் மேலும் கண்ணாம்பா மேலும் பாசம் அதிகம்.  ஒரு ஏழைப்பெண்ணான சௌகார் ஜானகியை ரங்கனுக்கு மணமுடித்து வைக்கின்றனர் இருவரும். ஒரு கட்டத்தில், தனது மகளின் நிச்சயதார்த்தத்தின்போது ரங்காராவ் தனது பணத்தையெல்லாம் பங்குச்சந்தையில் இழந்துவிட, நிச்சயதார்த்தம் நின்றுவிடுகிறது. மொத்தப் பணத்தையும் இழந்த ரங்காராவுக்குக் கடன் தொல்லை. உடனடியாக அவரது மகன்கள் மாறிவிடுகின்றனர். சிவாஜியையும் சௌகார் ஜானகியையும் வெறுக்க ஆரம்பிக்கின்றனர். பின்னர் சிவாஜியையும் சௌகார் ஜானகியையும் அவர்களுக்குப் பிரச்னை வரும் என்று வேண்டுமென்றே வீட்டை விட்டுத் துரத்துகிறார் ரங்காராவ். இறந்தும் போகிறார். இதன்பின் ஒரு பேக்டரியில் வேலை செய்யும் ரங்கன் எப்படிக் குடும்பத்தின் பிரச்னைகளைத் தீர்த்து, ஏலத்துக்கு வரும் வீட்டைக் காப்பாற்றுகிறான் என்பதே கதை.

மிக உணர்ச்சிபூர்வமாக எடுக்கப்பட்ட படம் இது. கே.வி மகாதேவன் இசையில் மறக்க முடியாத பாடல்களைக் கொண்ட படம் (ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா, எங்கிருந்தோ வந்தான், உள்ளதைச் சொல்வேன் சொன்னதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது). படத்துக்கு உணர்ச்சிகரமான வசனங்கள் எழுதியவர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன். பிரம்மாதமாக ஓடிய படம்.படத்தில், தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட சிவாஜியின் கதாபாத்திரம், ரங்காராவின் மேலும் கண்ணாம்பா மேலும் காட்டும் பாசம் அலாதியானது. ரங்காராவுக்கு வெளிநாட்டு சிகரெட்கள் பிடிக்கும் என்பதால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட

 சிவாஜி, கஷ்டப்பட்டுப் பணம் சேர்த்து சிகரெட் டின் வாங்கிக்கொண்டு வருவார். ஆனால் குடும்பத்தினர் அவரை அவமானப்படுத்திவிடுவார்கள். இதுபோன்ற பல காட்சிகள் படத்தில் உண்டு.

இதுபோன்ற படங்களைக் கையாள்வதில் மணிரத்னம் சிறப்பானவர் என்று சொல்லலாம். அவரது அக்னி நட்சத்திரம், இரண்டாவது மனைவிக்குப் பிறந்த மகனுக்கும் முதல் மனைவியின் மகனுக்கும் உருவாகும் பிரச்னைகளைப் பற்றிப் பேசிய படம். நாயகன் படத்திலேயே தூத்துக்குடியில் தந்தையைக் கொன்ற போலீஸ் அதிகாரியைக் கொன்றுவிட்டு பம்பாய் வரும் வேலுவின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களே கதை. அஞ்சலி படத்தில், இறந்து பிறந்தது என்று நினைக்கப்பட்ட அஞ்சலி என்ற குழந்தை, மூளை வளர்ச்சி குறைவாகப் பிறந்திருப்பதால், அம்மா ரேவதிக்குத் தெரியாமல் மனநலக் காப்பகத்தில் கணவன் ரகுவரனால் வளர்க்கப்படும். உண்மை தெரிந்த ரேவதி, அஞ்சலியை வீட்டுக்கு அழைத்து வருவார். சில நாட்களில் தூக்கத்திலேயே அஞ்சலி இறந்துவிடுவாள். மணி ரத்னம் திரைக்கதை எழுதி, சுபாஷ் இயக்கிய சத்ரியன் படத்திலும், மிக இளம் வயதிலேயே குற்றங்கள் செய்யும் பன்னீர்செல்வம் என்ற சிறுவனை, போலீஸ்காரர் விஜயகுமார் வளர்ப்பார். அவனது கோபத்தையெல்லாம் குற்றவாளிகள் மீது காட்டச் சொல்வார். தளபதி படத்தில்கூட, மிகச்

சிறுவயதிலேயே தாயாகிவிட்ட ஸ்ரீவித்யா கதாபாத்திரம், குழந்தையை ரயிலில் வைத்து அனுப்பிவிடும். அந்தக் குழந்தை பின்னர் ஒரு பெண்மணியால் எடுக்கப்பட்டு ஒரு குப்பத்தில் வளர்க்கப்படும். அதுதான் ரஜினி.  இந்தப் படத்தில் ரஜினிக்கும், ஸ்ரீவித்யாவின் கணவராக வரும் ஜெய்சங்கருக்கும் நடக்கும் உணர்ச்சிகரமான காட்சிகளை எப்போதும் மறக்க முடியாது. அம்மா யார் என்று தெரியாமல் வளர்ந்த ஒருவன், திடீரென்று அம்மாவைத் தெரிந்துகொள்ளும்போது எத்தனை வருந்துவான் & உணர்ச்சிவசப்படுவான் என்பதற்கு தளபதி ஒரு உதாரணம். கன்னத்தில் முத்தமிட்டால் படத்திலும் இதேபோல் இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்குக் கொண்டுவரப்படும் இலங்கைத் தமிழ்ப்பெண் ஒருத்திக்குப் பிறந்த குழந்தையை சென்னையில் இருக்கும் ஒரு தம்பதி தத்தெடுத்து வளர்க்க, அந்தக் குழந்தைக்கு உண்மை தெரிந்து, தனது தாயைப் பார்க்கவேண்டும் என்று சொல்கிறாள். ஒரு கட்டத்தில் வீட்டை விட்டே ராமேஸ்வரம் ஓடிவிடுகிறாள். இதன்பின் அவளது பெற்றோர்கள் அவளுடன் இலங்கைக்குச் சென்று, தாயைச் சந்திப்பதே கதை. இந்தப் படத்திலும் குழந்தைக்கும் வளர்ப்புத் தாய்க்கும் இருக்கும் உறவு, உண்மையான தாயைச் சந்திப்பதில் அவளுக்கு இருக்கும் துடிப்பு ஆகிய எல்லாமே நன்றாகவே எழுதப்பட்டிருக்கும்.

இந்தக் குறிப்பிட்ட வகையில் மலையாள இயக்குநர்களின் பங்களிப்பையும் நாம் குறிப்பிட்டே ஆகவேண்டும். ஃபாசில் இயக்கிய ‘பூவினு புதிய பூந்தென்னல்' படம் 1986ல் மலையாளத்தில் மம்மூட்டி நடித்து மிகப் பெரிய ஹிட்டானது. அந்தப் படத்தைத் தமிழுக்கு ஏற்றபடி இன்னும் நன்றாக எழுதி, காட்சிகளை மாற்றி, அதே ஃபாசில் 1987 ஜனவரியில் சத்யராஜ், ரகுவரன், பாபு ஆண்டனி ஆகியோர்களை வைத்து இயக்கி வெளியிட்ட படமே 'பூவிழிவாசலிலே'.  தமிழில் மிகப் பிரம்மாண்டமான ஹிட்டானது, காதுகேளாத, வாய்பேச முடியாத பையன் ஒருவன் பாபு ஆண்டனி கொலை செய்வதைப் பார்த்துவிடுகிறான். அருகில் நிற்கும் ரகுவரனையும்கவனித்துவிடுகிறான். பாபுஆண்டனி அவனது அம்மாவையும் கொலை செய்து, இவனைப் பிடிப்பதற்குள் தப்பிவிடுகிறான். அந்தச் சிறுவனை சத்யராஜ் ரோட்டில் கண்டெடுத்துத் தன்னுடனேயே வைத்துக் கொள்கிறார். இதன்பின் அந்தக் குழந்தையைத் திரும்பத் திரும்ப பாபு ஆண்டனி கொலை செய்ய முயல, இதையெல்லாம் சத்யராஜ் எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பதே கதை. ஒரே ஒரு காட்சிகூட அலுக்காமல், நெருப்பு போல விறுவிறுப்பாகச் செல்லும்படம்இது. இப்போதுபார்த்தாலும் இதில் இருக்கும் உணர்வுகள் மனதை உருக்கிவிடும்.

அதே ஃபாசில், அதே சத்யராஜை வைத்து அடுத்த வருடமான  1988ல் இயக்கி வெளியிட்ட படம்தான்  ‘என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு'. இதுவும் ஃபாசிலின்  1983 படமான 'எண்டே மாமாட்டுக் குட்டியம்மாவுக்கு' படத்தின் ரீமேக்தான். ஒரு படகு விபத்தில் குழந்தை இறந்துவிட, வருத்தத்தில் ஆழ்ந்துவிடும் மனைவிக்காக, சில வருடங்கள் கழித்துக் கணவன் ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுக்கிறான். ஆரம்பத்தில் மனைவிக்கு அது பிடிப்பதில்லை. ஆனால் மெதுவே அந்தக் குழந்தையை விரும்ப ஆரம்பித்து விடுகிறாள். அப்போதுதான் அந்தக் குழந்தையின் உண்மையான அப்பாவின் மூலமாக சிக்கல் வருகிறது. இது எப்படித் தீர்ந்தது என்பதே படம். பூ விழி வாசலிலே படத்தில் குழந்தையைக் கொல்லத் துடிக்கும் கொடூரமான வில்லனாக நடித்த ரகுவரன், இதில் குழந்தையின் உண்மையான, பாசமான தந்தையாகஅருமையாக நடித்திருப்பார். அதே ரகுவரன்தான் பின்னர் வந்த அஞ்சலியிலும் அன்பான தந்தை.

இதே ஃபாசில் இதே தத்தெடுக்கும் கதையை வைத்துக் கொண்டே 1991ல்  தமிழில் எடுத்த படமே ‘கற்பூரமுல்லை'. இது ‘எண்டே சூர்யபுத்ரிக்கு' என்று ஒரே நேரத்தில் இரு மொழிகளிலும் எடுக்கப்பட்டது. இதிலும் கதாநாயகி அமலா ஒரு தத்தெடுக்கப்பட்ட குழந்தை.ஆனால் உண்மை தெரியாமல் ஜாலியாக வாழ்ந்துகொண்டிருப்பார். ஒரு சிறிய பிரச்னைக்குப் பின்னர் தற்கொலை முயற்சி செய்வார். அப்போது காப்பாற்றப் படுவார். இதன் பின்னரே, பிரபலபாடகி ஸ்ரீவித்யாதான் அவருடைய உண்மையான அம்மா என்பது தெரியும். அவரைச் சென்று பார்ப்பார். ஆனால் ஸ்ரீவித்யாஅமலாவை சேர்த்துக் கொள்ள மறுப்பார். பல சிக்கல்களுக்குப் பின் இருவரும் ஒன்று சேர்வார்கள். ஆனால்அப்போது ஸ்ரீவித்யா கொல்லப்பட்டுவிடுவார். இதன்பின் அமலா என்னசெய்தார் என்பதே படம். இதுவும் உணர்ச்சிகரமான காட்சிகள் மற்றும் பாடல்கள்நிறைந்தபடமே.

இப்படி ஃபாசில் தனது இயல்பான கதைகளால் எண்பதுகளில் நம்மை மகிழ்வித்தார்.

ரஜினிகாந்த் நடித்த எஜமான் படத்தை எடுத்துக் கொண்டால், அதில்குழந்தையின்மை என்ற கருத்து கையாளப்பட்டது. வில்லன் நெப்போலியன், விஷத்தைத் தீர்த்தம் கலந்த குவளையில் வைத்துவிட, அதைக் குடிக்கும் மீனாவுக்குக் குழந்தைபெறும் தன்மை போய் விடுகிறது. ஆனால் கணவனின் மரியாதை கெடக்கூடாது என்று குழந்தை உருவாகியிருப்பது போல நடிப்பார். விஷம் குடித்து இறந்தும் போய்விடுவார். அதே போல, பிரபு நடித்த தர்மசீலன் படமும், அனாதையாக இருக்கும் பிரபு, தன் தந்தையார் என்று கண்டுபிடிக்கும் படமே. அனாதையாக இருந்து, பின்னர் உண்மையான தந்தை தாய்பற்றித் தெரிந்து கொள்ளும் பல படங்களில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். மிஸ்டர்பாரத், பணக்காரன், உழைப்பாளி, கொடிபறக்குது, மாவீரன், முத்து, அருணாச்சலம், நாம் ஏற்கெனவே பார்த்த தளபதி என்று ஏராளமான படங்கள்.

பாலசந்தரும் இதே சப்ஜெக்டை டீல் செய்திருக்கிறார். அவரது பிற்காலப் படங்களில் ஒன்றான கல்கி, குழந்தைப் பேறு இல்லாத ஒரு பெண்ணுக்கும், அந்தப் பெண்ணின் கொடூரமான கணவனுக்கும் நிகழும் பிரச்னைகள் பற்றியதே. சாடிஸ்ட் கணவனான பிரகாஷ்ராஜ், தனது மனைவியும் பாடகியுமான கீதாவால் குழந்தை பெற முடியவில்லை என்று டார்ச்சர் செய்வார். எல்லாவற்றையும் சமாளிக்கும் கீதாவால், இனி பாடக்கூடாது என்று பிரகாஷ்ராஜ் தடுக்கும்போது இனிமேல் முடியாது என்று விவாகரத்து செய்துவிடுவார். ஆனால் படத்தின் ட்விஸ்ட்,  கல்கியாக வரும் ஸ்ருதியுடன் பிரகாஷ்ராஜுக்குத் தொடர்பு ஏற்பட்டு, அதனால் ஸ்ருதி கர்ப்பமாகிவிடுவார். இதில் கீதாவும் ஸ்ருதியும் இதற்குமுன்னரே சந்தித்திருப்பார்கள். அடுத்த ட்விஸ்ட், பிரகாஷ்ராஜின் தற்போதைய மனைவி ரேணுகாவுக்கு இது தெரிந்து, பிரகாஷ்ராஜை விவாகரத்து செய்யப்போவதாக மிரட்டுவார். பிரகாஷ்ராஜ் எப்படியெல்லாம் கீதாவைக் கொடுமை செய்தாரோ அதேபோல் ஸ்ருதி, பிரகாஷ்ராஜை கொடுமை செய்வார். இறுதியில் குழந்தையை கீதாவிடம் கொடுத்துவிட்டு, எல்லாமே பிரகாஷ்ராஜுக்குப் பாடம் புகட்டவே என்று சொல்லிவிட்டு, தன் பின்னால் சுற்றிவந்த ரகுமானிடம் சென்றுவிடுவார்.

கல்கி படத்தில் பாலசந்தர்த்தனமான ட்ரீட்மெண்ட் இருந்தாலும், குழந்தை பெறமுடியாத ஒரு பெண்ணின் பிரச்னைகளைக் கல்கி பேசியது என்பதை மறுக்கமுடியாது.

இந்தப் படங்கள் பெரும்பாலும் பெண்களின் பார்வையில் இந்தப் பிரச்னையைப் பேசியவை. இவைகளுக்கு எதிராக, தனது விந்தைத் தானமாகக் கொடுக்கும் ஒருவனின் பிரச்னையை தாராளப்பிரபு பேசியது. அதேபோல், erectile dysfunction என்ற ஆண்களின் பிரச்சனையை எந்த விரசமும் இல்லாமல் கல்யாண சமையல் சாதம் பேசியது.

இவைகளைத் தவிர, தந்தை யாரென்று தெரியாமல் அனாதை விடுதியில் வளரும் மகன், தந்தையைத் தேடிவரும் தெய்வமகன், மகளைப் பிரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட தந்தையைப் பற்றிய தெய்வத்திருமகள் (I Am Sam) என்பதுபோன்ற படங்களும் உண்டு.

இருந்தாலும், தமிழ்ப்படங்கள், குழந்தையின்மை, தத்தெடுத்தல் போன்ற முக்கியமான பிரச்னைகளை இன்னும் சென்டிமென்ட் காட்சிகளுக்கு மட்டும்தான் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறது. முழுக்க முழுக்க இந்தப் பிரச்னைகளைப் பற்றி மட்டுமே பேசக்கூடிய படங்கள் இன்னும் வரவில்லை என்பதே நாம் கவனிக்கக் கூடிய விஷயமாக இருக்கும்.

மார்ச், 2022