சிறப்புப்பக்கங்கள்

பெண்ணைப் படைத்தல்

இயக்குநர் பிரம்மா

சினிமாவில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு பெண்பாத்திரங்களை தொடர்ச்சியாக உருவாக்கியவர்களாக பாலசந்தர், பாரதிராஜா இருவரையும் குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்.  பாலசந்தர் பல்வேறு வகைப்பட்ட பாத்திரங்களை வடிவமைத்தவர். ஆனால் அவர் உருவாக்கிய பெண் பாத்திரங்கள் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தை சார்ந்தவர்கள். மேல்நடுத்தர வர்க்கம் அல்லது நடுத்தர வர்க்கம். அந்த வகுப்புகளில் உள்ள வகைகளை நிறைய பயன்படுத்தி உள்ளார். அவர் படங்களில் வரும் பாத்திரங்கள் ஆழமானவை. சிந்துபைரவியின் சுகாசினி, பாமாவிஜயம் படத்தில் வரும் பெண்கள், புதுபுதுஅர்த்தங்களில் கீதா, சித்தாரா இப்படி அற்புதமான பாத்திரங்களைக் கூறிக்கொண்டே போகலாம். எல்லாமே ஒரு பாதிப்பின் அடிப்படையில் உருவானவை. பாரதிராஜா கிராமத்தைச் சேர்ந்த பெண் பாத்திரங்களை அச்சுஅசலாக உருவாக்கினார்.  கிழக்குச் சீமையில் வரும் ராதிகா பாத்திரம் கணவனுக்கும் தன் சகோதரனுக்கும் இடையில் உருவாகும் பகையில் சிக்கிக்கொள்ளும் பெண். நம்முரில் பெரும்பாலான பெண்களுக்கு புகுந்தவீடு பிறந்தவீடு பிரச்னை உண்டு. அந்த உணர்வைப் பதிவு செய்வதில் படத்தில் ராதிகாவின் நடிப்பு ஒருபக்கம் இருப்பினும் அந்த பாத்திர வடிவமைப்பும் முக்கியமானது.

ஒன்றிரண்டு படங்களைத் தந்த இயக்குநர்களை எடுத்துக் கொண்டால் ருத்ரய்யாவின் அவள் அப்படித்தான் படத்தில் வரும் மஞ்சு பாத்திரம் மிக முக்கியமான ஒன்று.

ஒரு கதாபாத்திரம் ஒருவருக்கு பிடிக்கிறது பிடிக்கவில்லை என்பது தனிப்பட்ட விஷயம். ஆனால் அந்த பாத்திரங்களின் வடிவமைப்பு மிக முக்கியம். அதைச்சார்ந்துதான் நான் பேசுகிறேன். எப்போது ஒரு பாத்திர வடிவமைப்பு ஒருவருக்குப் பிடிக்கிறது?  நாம் வெவ்வேறுவிதமான மனிதர்களைச் சந்திக்கிறோம். அதே பாத்திரங்களை அதே பின்னணியுடன் திரைக்கு நாம் கொண்டுவர முடியாது.ஆனால் அவற்றை எந்த அளவுக்கு கச்சிதமாக, சொல்கிறோமோ, அதன் பின்னணியைக் காட்டுகிறோமோ அந்த அளவுக்கு அந்த பாத்திரம் மனதில் நிற்கிறது. அவள் அப்படித்தான் மஞ்சு யதார்த்தமான, அத்துடன் சரியான காரணகாரியத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆரண்யகாண்டத்தில் வரும் அந்த பெண் பாத்திரம் சமீப காலத்தில் எனக்குப் பிடித்த ஒன்று. அந்த பெண், சப்பை என்னும் பாத்திரத்துடன் பேசுவது, தன்னை ஆசைநாயகியாக வைத்திருக்கும் பெரியவரிடம் நடந்துகொள்கிற முறை, கடைசியில் எல்லோரையும் போங்கடா என்று சொல்லிவிட்டு  நடந்துபோவதாகட்டும், அந்த பாத்திரத்தின் தன்மை சிறப்பாக இருந்தது.

மணிரத்னம் படங்களில் வரும் பெண்கள் எல்லோருக்குமே சுறுசுறுப்பும் துறுதுறுப்பும் இருக்கும். துணிச்சலான முடிவுகளை, மரபை மீறாத குடும்பங்களில் இருந்துகொண்டு அனாவசியமாக எடுப்பார்கள். மௌனராகம் ரேவதி, அலைபாயுதே ஷாலினி, ஓகே கண்மணி நித்யாமேனன் ஆகட்டும், எல்லோரும் தங்கள் நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு தங்கள் குடும்பத்தையோ சமூகத்தையோ தள்ளுபவர்களாக இருப்பார்கள். மணிரத்னம் தன் பாத்திரங்களில் பாலச்சந்தரின் பாத்திர வடிவமைப்பைத்தான் பின்பற்றி இருப்பார். இதை அவர் தன் பேட்டி ஒன்றில்கூடச் சொல்லி நான் வாசித்த ஞாபகம் இருக்கிறது.  இவர்கள் இருவருமே நடுத்தர, மேல்நடுத்தர வர்க்க பாத்திரங்களைத்தான் படைத்தார்கள். காரணம் அவர்கள் அந்த பின்னணியில் இருந்துவந்ததே. யாரும் தங்கள் அனுபவங்களில் இருந்துதான் சிறந்த பாத்திரங்களை உருவாக்க இயலும். அது அல்லாவிட்டால் புதிய பின்னணி உடைய பாத்திரங்களை உருவாக்க நூல்கள் படித்து, உழைத்து செய்யவேண்டியிருக்கும். எனக்கே அந்த இடைவெளி இருப்பதை உணரமுடிகிறது. காக்காமுட்டை படத்தில்  பின் தங்கிய வர்க்கப் பெண்ணைக் காட்டுகிறார்கள். அந்த பாத்திரத்தையும் இன்னும் ஆழமாக படைத்திருக்கலாமோ என்று தோன்றியது. இந்த இடைவெளிகள் இல்லாமல், அற்புதமான பாத்திரப்படைப்புகளைச் செய்யும் படங்களை நோக்கி நகரவேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.

சமூக மரபுகளை, வழிவழியாக வந்த எல்லைகளை தங்கள் பெண்பாத்திரங்கள் மீறும் படங்களை  முந்தைய இயக்குநர்கள் தரவில்லை. ஒரு எல்லையுடன் அவர்கள் நிறுத்தப்பட்டுவிடுவார்கள். இல்லையெனில் தியாகிகள் ஆக்கப்படுவர்.  இதுவொரு குறையாக விமர்சிக்கப் படுகிறது. ஆனால் அந்த காலகட்டங்களில் இந்த  சிக்கலான பெண்பாத்திரங்களை அவர்கள் சிந்தித்து படம் எடுத்ததே பெரிய விஷயம். அவள் அப்படித்தான், புவனா ஒரு கேள்விக்குறி போன்ற படங்களில் அந்த மைல்கற்களை அவர்கள் தாண்டியதால்தான் இன்று நம்மால் மிக எளிதாக அவற்றைக் கையாளமுடிகிறது. சொல்லப் போனால் எல்லாப் படங்களும் அப்படித்தான். கவர்ச்சியும் ஆபாசமும் தமிழ்சினிமாவில் அதிகரித்து இருந்ததைப் பார்த்து சலித்துப்போய், கோபப்பட்டு, அதை எதிர்த்ததனால்தான், இன்று அவை தமிழ் சினிமாவில் குறைந்துள்ளன என்பதையும் இங்கே சுட்டிக்காட்டலாம். அதுபோல் ஒரு பாத்திரத்தை உருவாக்கி அது மக்களிடம் விவாதத்துக்கு உள்ளாகி இப்போதுதான் கொஞ்சம் புதுமையான பாத்திரங்களை உருவாக்க இயலுகிறது.

தமிழ்சினிமாவில் இரண்டுவிதமான இயக்குநர்கள் உள்ளனர். நாயகியை காதலுக்கும் நடனத்துக்கும் பயன்படுத்தும் ஒரு விதமான இயக்குநர்கள். அதைத் தாண்டி அவர்களும் மனிதர்கள்தான் என்று பார்த்து பாத்திரங்களைப் படைக்கும் இயக்குநர்கள். கௌதம்மேனன் ஒரு உதாரணம். மின்னலே முதல் இப்போதுவரை முக்கியமான பெண்பாத்திரங்கள் இடம்பெறும் படங்களை உருவாக்குகிறார்.

ஒரு விஷயத்தை நான் வலியுறுத்த விரும்புகிறேன். ஆண்களைச் சார்ந்து வாழ்கிறவர்களாகவே பெண்களைக் காட்டுகிற ஒரு சூழலில்தான் நாம் சிக்கிக்கொண்டிருக்கிறோம். படத்தில் ஆரம்பத்தில் பெண்கள் சாகசவிரும்பிகளாக, துணிச்சல்காரர்களாக காண்பித்தாலும் கடைசியில் ஆண்களை சார்ந்தே வாழ்வதாக காட்டும் படங்களே வருகின்றன.இதை உடைப்பதற்காக பாடுபடவேண்டும். நாளைக்கு நான் எடுக்கும் படத்தில்கூட ஆணைச் சார்ந்துதான் பெண் வாழவேண்டும் என்று காண்பிப்பதாகவே வரும் என்று நினைக்கிறேன். ஏனெனில் அதைத்தான் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று சொல்லப்படும். ஆனால் இதையும் தாண்டி இந்த சூழலை உடைக்கும் நோக்கில் நாம் எல்லோருமே பயணம் செய்யவேண்டும் என்று கருதுகிறேன்.

மார்ச், 2016.