அந்த கல்லூரி வளாகத்துக்குள் தன் காதலியும் பின்னாளில் தன் நிஜமனைவியுமாக ஆகப்போகிற அமலா பார்த்திருக்க, நாகார்ஜுனா என்ற இளம் ஹீரோ ஒரு மிதிவண்டியின் செயினை அறுத்தெடுக்கிற காட்சி தெலுங்கு சினிமாவின் மீது விதிக்கப்பட்ட தருணம் மிக முக்கியமானது.
பின்னாட்களில் குற்ற உலகைப் பற்றி நிண நாற்றம் வீசும் சுத்தமான படங்களை எடுத்த ஓர் இயக்குநரை தெலுங்கு தேசத்தில் சத்தமாக அறிமுகம் செய்தது. அவர் ராம்கோபால் வர்மா. அது அவரது முதல் படம் சிவா. இளையராஜாவின் உச்சகட்ட இசை சாத்தியங்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு கேங்ஸ்டர் கோபுரம்!
கட்டடப் பொறியியல் படித்த சினிமா வெறி பிடித்த இளைஞனான ராம்கோபால் வர்மா, தன் வகுப்பில் அடிதடிகளில் நாட்டம் கொண்டிருந்த இளைஞர்களையே உற்றுக்கவனித்ததாகவும் அவர்களிடமே நாட்டம் கொண்டிருந்ததாகவும் பேட்டி ஒன்றில் குறிப்பிடுகிறார். 1989-இல் சிவா வெளிவந்தபோது அது தமிழில் உதயம் என்ற பெயரில் மொழி மாற்றம் ஆனது. மிக அமைதியானவனாக வந்துகொண்டிருந்த சிவா(நாகார்ஜுனா)வின் உள்ளிருந்த மூர்க்கமும் கோபமும் ஜேடி(சக்கரவர்த்தி)யின் மீது ஆத்திரமாகப் பிரதிபலித்து, கல்லூரி வளாகத்திலேயே மோதலாக வெடிக்கிறது. கல்லூரி தேர்தலில் உள்ளூர் கேங்க்ஸ்டர் பவானியின் ஆட்கள் தலையிட, சிவாவும் நண்பர்களும் எதிர்த்துமோதுகிறார்கள். இதில் அரசியல் சேர, சிவா ஒரு கட்டத்தில் முழு நேரமாக குற்ற உலகில் நுழைகிறான். பவானியைக் கொன்று தன் கைகளிலும் ரத்தக்கறையுடன் நிற்பதுடன் படம் முடிகிறது. அரசியலுக்கும் குற்றங்களின் உலகுக்குமான முடிச்சுகளை ராம்கோபால் வர்மா பின்னாளில் வந்த தன் இந்திப்படங்களில் தொடர்ந்து எடுத்துச் சென்றாலும் அச்சு அசலான கேங்க்ஸ்டர் படங்களின் பிள்ளையார் சுழி இதுவே.
நிழல்உலகம் எல்லா சினிமாவைப் போலவும் தெலுங்கு சினிமாவுக்கும் புதியது அல்ல. ‘அண்டர்கவர் காப்‘ என்கிற வெற்றிகரமான திரை உத்தியைக் களமாகக் கொண்டு ஏராளமான படங்களை எடுத்துத் தள்ளி இருக்கிறார்கள். என்.டிராமராவ் நடித்த ‘அடவி ராமுடு(1977)‘, மரக்கடத்தலைப் பேசிய படம். ராமராவ் வனத்துறை அதிகாரி பாதிவரைக்கும் சாதாரண ஆள்போலவே இருந்து கண்காணிப்பார். அதிலிருந்து தொடங்கி சமீபத்திய டீஜே வரைக்கும் குற்ற உலகை பந்தாடும் ‘அண்டர் கவர்' நாயகர்கள் மூலமாக இவ்வுலகைப் பதிவு செய்திருக்கிறது தெலுங்கு சினிமா. என் டிஆரின் கஜதொங்கா நிழல் உலகப் படம்தான். ‘ தேவ்டு சேசுன மனுசலு' என்டிஆரும் கிருஷ்ணாவும் இணைந்து நடித்த படம். என்டிஆரும் கிருஷ்ணவும் சகோதரர்கள். சித்தி கொடுமையால் அண்ணன் என்டிஆர் குற்ற உலகில் பிரவேசிக்க, தம்பி கிருஷ்ணா அண்ணனைத் திருத்தும் கதை.
நடிகர் கிருஷ்ணாவும், பிரபாஸின் பெரியப்பா நடிகர் கிருஷ்ணம் ராஜு நடித்த படம் அடவி சிம்ஹாலு. இதில் கிருஷ்ணா அண்டர்கவர் போலீஸ். கேங்க்ஸ்டர்களைக் களையெடுக்கும் கதைதான்.
ஜெகபதி பாபு நடித்த ‘காயம்' முக்கியமான படம். கேங்க்ஸ்டர்களின் உலகை ராம்கோபால் வர்மா இல்லாமல் சொல்லமுடியாது. ஆம். இதுவும் அவர் இயக்கத்தில் வெளியானது. அவருடன் இணைந்து இந்த படத்துக்கு எழுதியவர் மணிரத்னம். விஜயவாடா நிழல் உலக மனிதர்களின் யுத்தத்தை சொன்ன படம். நாயகனில் வேலுநாயக்கரின் மகள் அவரது நடவடிக்கை பிடிக்காமல் பிரிந்து செல்வதுபோல், இந்த படத்திலும் ஜகபதிபாபு, தாதாயிசத்தை கையிலெடுத்த பின் அவரது காதலி ரேவதி, பிரிந்து சென்று ஒரு காவல் அதிகாரியை மணந்துகொள்கிறார். பின்னர் ஒரு கட்டத்தில் தன் கணவனைக் காப்பாற்ற ஜெகபதிபாபுவிடமே வரவேண்டி இருக்கிறது. இந்த படத்தின் வெற்றிக்குப் பின்னால் காயம் 2வும் வெளியானது.
இந்தியப் படங்களில் கேங்ஸ்டர்களைத் தத்ரூபமாகக் காட்டியது ராம்கோபால் வர்மாவும் அனுராக் காஷ்யப்புமே. கேங்ஸ்டர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல; அவர்களுக்கும் அடித்தால் வலிக்கும்; அழுவார்கள்; சிரிப்பார்கள்; பலவித உணர்ச்சிகளால் பீடிக்கப்படுவார்கள் என்பதை இருவருமே மிக இயல்பாகக் காட்டியிருக்கின்றனர். அப்படித் தெலுங்கில் ராம்கோபால் வர்மா எடுத்த ரக்த சரித்ரா இரண்டு பாகங்களும் மறக்க முடியாதவை. பெரும்பாலானோர் இதை அரசியல் த்ரில்லர் என்று நினைக்கின்றனர். ஆனால் இது பக்கா கேங்ஸ்டர் படம். துரோகம், அதனால் உருவான பழிவெறி என்று உண்மையில் நடந்த கதையையே அப்படியே திரையில் காட்டியிருப்பார் ராம்கோபால் வர்மா. முதல் பாகத்தில் விவேக் ஓபராய், இரண்டாம் பாகத்தில் சூர்யா ஆகிய இருவருமே நடிப்பில் பின்னி எடுத்திருப்பார்கள். தனது வாழ்க்கையில் ஹீரோவான ஒருவனே இன்னொருவனின் வாழ்க்கையில் எப்படி வில்லனாகிறான் என்பதே இரண்டு படங்களின் கருத்தும்.
2012 இல் வெளியான மகேஷ்பாபு படமான பிசினஸ்மேன், ஒரு ஹீரோ, தாதாவாகி மும்பையை ஆட்டிப்படைக்கும் படம். கடைசியில் அதற்கான பிளாஷ்பேக் நியாயங்கள் கற்பிக்கப்பட்டாலும் மும்பையின் நிழலுலகை தெலுங்கு வாடை அடிக்க அடிக்க காண்பித்த படம். இதற்கு முன்னதாக 2006-இல் வெளியான இவரது போக்கிரியும் நிழல் உலகம்தான். இந்த படத்தில் நிழல் உலகை ஊடுருவும் அண்டர்கவர் அதிகாரியாக மகேஷ்பாபு வந்தார்.
2019-இல் பிரபாஸின் சாஹோவும் நிழல் உலகைக் காண்பித்தாலும் சாகசங்களில் கவனம் செலுத்திய அளவு கதையில் கவனம் செலுத்தாததால் காணாமல் போனது.
பஞ்சா, பவன் கல்யாண் நடிப்பில், விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் வெளியான படம். தாதாவின் அடியாளான ஹீரோ, தாதாவின் மகனை ஒரு சந்தர்ப்பத்தில் கொன்றுவிட, உயிருக்குப் பயந்து ஓடும் ஒன்லைன்.
பாலு: ஏபிசிடிஇஎப்ஜி என்கிற இயக்குநர் கருணாகரன் படமும் இந்த வரிசையில் வரும். பவன்கல்யாண்தான் இதிலும் நாயகன். ஒரு சந்தையில் இருக்கும் ரவுடிகளுடன் தொடங்கும் இப்படத்தில் பவன்கல்யாண் ஓர் அப்பாவியாக அறிமுகம் ஆனாலும் ப்ளாஷ்பேக்கில் அவர் ஒரு குற்ற உலக தாதாவின் அடியாள். குற்ற உலகின் கரங்கள் பவன்கல்யானையும் தாக்க, அவர் மாறுவேடத்தில் வாழ்கிறார். கிட்டத்தட்ட பாட்ஷா கதைதான்.
சர்வானந்த் நடித்த ரணரங்கம் (2019) படம் திருந்தி வாழ முயலும் கேங்க்ஸ்டரை விரட்டும் எதிரிகள் என்ற ஒன்லைனைக் கொண்டது. வழக்கம்போல் எதிரிகளை அழித்துவிடும் ஹீரோ என்ற தெலுங்கு மசாலா.
ஜகடம்(2007), ராம் நடிக்க சுகுமார் இயக்கிய படம். சிறுவயதிலிருந்தே தாதா ஆக ஆசைப்படும் ஹீரோ, தனக்குப் பிரியமான தாதாவிடம் வேலைக்குச் சேர்ந்து தாதாகிரி செய்கிறார். வேலைக்குச் சேர்ந்த தாதாவை எதிர்த்து தொழில் செய்து, கடைசியில் மோதல் வெடித்து எதிரிகளை அழித்து தன் தாதாயிசத்தை விட்டொழிக்கும் கதை.
நாம் பார்த்த இந்த படங்களில் எல்லாம் ஏதோ ஒரு விதத்தில் குற்ற உலகம் என்பது தவறானதாக சித்திரிக்கப்பட்டிருக்கும். ஆனால் அதே தெலுங்கு சினிமா, புஷ்பா என்ற சமீபத்திய அல்லு அர்ஜுனின் படத்தின் மூலம் குற்ற உலகை ஆராதிக்கும் இடத்துக்கு வந்திருக்கிறது. சமீபத்தில் மகாராஷ்டிர எல்லையில் மரக்கடத்தல்காரன் ஒருவன் பிடிபட,அவனிடம் போலீஸ் நடத்திய முறையான விசாரணையில் அவன் தனக்கு தூண்டுதலாக இருந்தது புஷ்பா என்று சொன்னான். இதைத் தொடர்ந்து தெலுங்கு ஆன்மிக ப் பேச்சாளர் கரிகபாட்டி நரசிம்மராவ், அல்லுஅர்ஜுனை கடுமையாக விமர்சனம் செய்தார். தீயவழியில் சென்றால் முன்னேறலாம் என்று படம் எடுத்ததற்காக இயக்குநரையும் நாயகனையும் நேரில் பார்த்தால் அடிப்பேன் என அவர் கூறியது பரபரப்பானது. 'புஷ்பா, புஷ்பராஜ் தக்க தெலே..‘ (புஷ்பா எவனுக்கும் அடங்கமாட்டான்) என்று சாலையில் இந்த படத்தால் தூண்டப்பட்டு எவனும் ரவுடித்தனம் செய்தால் அல்லு அர்ஜுனும் இயக்குநர் சுகுமாரும் பொறுப்பேற்பார்களா என்று கேட்டார் அவர்.
ஜூலை, 2022