சிறப்புப்பக்கங்கள்

புரிஞ்சா புரிஞ்சுக்க புரியலைன்னா போங்கப்பா!

மணா

பால்யத்தில் நிகழ்ந்து நினைவில் பதிந்திருக்கும் எத்தனையோ நிகழ்வுகளுள் அதுவும் ஒன்று. தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. மதுரையிலிருந்து நாற்பது கி.மீ தூரத்தில் உள்ள எங்கள் பூர்வீகக் கிராமத்துக்குப் போயிருந்த போது காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டம். ஒலிபெருக்கிகள் அலறிக்கொண்டிருந்தன. நானும், என் வயதை ஒட்டிய சிறுவர்களும் மேடைக்கு முன்வரிசையில் மண்ணில் உட்கார்ந்திருந்தோம்.

பிரச்சாரத்துக்கு அன்றைக்கு வந்தவர் அனந்தமான பெயரைக் கொண்ட ஒரு நடுத்தர வயதான பெண்மணி. சற்று அதைத்த உடம்புடன் இருந்த அவர் அமைச்சராகவும் இருந்தவர் என்று சொன்னார்கள். அவருக்கு முன்னால் நிறையப் பேர் முழங்கிக் காதெல்லாம் நிறைந்த நேரத்தில் பேச வந்தார் அந்தப்பெண்மணி. பிரகாசமான வெளிச்சம் சுற்றிலும்.

பேச்சில் சூடு ஏறிக்கொண்டிருந்தது.கனமான வார்த்தைகள் சரமாரியாக வந்துவிழுந்துகொண்டிருந்தன. எதிர்க்கட்சிக்குச் சவால்விட்டவர் அவர்களுடைய மீசையையும், ஆண்மையையும் இணைத்துப்-பேசியபடி தன்னுடைய சேலையின் கீழ்ப்பகுதியை கால்கள் தெரியும்படி முட்டிவரை உயர்த்தி வெப்பமான வார்த்தைகளைக் கொட்டிய போது முன்னால் உட்கார்ந்திருந்த சிறுவர்களான நாங்கள் கூசிப்போக வேண்டியிருந்தது.

மதுரையிலும் தென்மாவட்டங் களிலும் அப்போது தீப்பொறி ஆறுமுகம் மிகவும் பிரபலம். அவருடைய கூட்டம் என்றால் ஆயிரக்கணக்கில் கூட்டம் திரண்டிருக்கும். பருத்திப்பாலையோ, சுண்டலையோ சுவைத்தபடி கூட்டம் அடிக்கடி கைதட்டி ரசித்தபடி இருக்கும். ஆறுமுகத்தில் பேச்சில் அவ்வளவு ‘அசைவம்’. கிராமத்து டூரிங் டாக்கீஸ்களில் துண்டுப்படம் காட்டப்படுவதைப் போல , ஆறுமுகம் பேச்சைத் துவங்கியதும் பத்துநிமிடங்களுக்குள் கொச்சையான வசையோடு பேச ஆரம்பித்து விடுவார். சிலவற்றை ‘ஜாடைமாடையாக’ விவரித்துவிட்டு “நான் சொல்றதை சொல்லிட்டேன்.. புரிஞ்சா புரிஞ்சுக்க..புரியலைன்னா போங்கப்பா.. உங்களுக்கு விளக்கம் சொல்லியே நான் ஓய்ஞ்சிருவேன்.. போலிருக்கு..” என்று குரலில் சில வித்தைகள் காட்டி அவர் சொல்லும்போது கூட்டம் இடுப்பில் கிச்சுகிச்சு காட்டியதைப் போல வாய்கோணிச் சிரிக்கும். ஒரு மணிநேரப்பேச்சு என்றாலும் மசாலா மயமாகத் தான் இருக்கும். மட்டமான காகிதத்தில் புழங்கும் ஆபாசப் பத்திரிகைகளைப் படிக்கிற கிளுகிளுப்பை இந்தப் பேச்சிலும் அனுபவித்தார்கள் கேட்கிறவர்கள். பேச்சு முடிந்து கூட்டம் கலைகிறபோது சொல்வார்கள் “என்னமா.. பேசுறான்யா.. எல்லாரையும் பின்னி எடுக்கிறான்..”

மக்கள் மத்தியில் செல்வாக்கான அரசியல் தலைவர்கள், தலைவிகள் எல்லாம் அவரது பேச்சில் நிக்கர் போட்ட சிறுவயதுக்குப் போய்விடுவார்கள். எல்லாரையும் “அவன்.. அவ.. அவங்கெ” என்று மரியாதையுடன் (!)தான் விளிப்பார்.

தேசிய அளவில் பெரிய பொறுப்பில் இருந்த ஒரு தலைவியைப் பற்றி இவர் சரமாரியாகப் பேசி மேடையை விட்டு இறங்கியதும் அவரைப்பின்னி எடுத்து விட்டார்கள் சம்பந்தப்பட்ட கட்சிக் காரர்கள்.

பிறகு ஒரு பத்திரிகைப்பேட்டிக்காக அவரை வீட்டில் சந்தித்தபோது வீட்டில் சர்வ அடக்கமான குரலில் பேசினார் ஆறுமுகம். உணவில் கூட தான் ஒரு சைவம்தான் என்பதை முக்கியமான தகவலைப்போலச் சொன்னார். தன்னுடைய உடம்பில் தாக்குதலுக்கு இலக்கான இடங்களை அவர் தயக்கத்துடன் காட்டினார். எப்பேர்ப்பட்ட தியாகம்!

சரளமாகப் பேசிக்கொண்டு போனவரிடம் இடையில் “கட்சியிலிருந்து உங்களுக்கு இந்தந்த விஷயங்களைப் பேசச் சொல்வார்களா?” என்று கேட்ட-போது கூச்சத்துடன் “அப்பப்போ வரும்.. சார்.. பெரிய தலைவர்கள் எல்லாம் நான் பேசுற மாதிரி டக்குன்னு பேசிற முடியாது இல்லையா? அதனாலே சில விஷயங்களை என்னை மாதிரியானவங்க கிட்டே பேசச் சொல்லி தகவல் அனுப்புவாங்க.. நான் கூட்டத்தைப் பார்த்து அதுக்கேத்தபடி பேசுவேன்..”

ஆறுமுகம் இங்கு ஒரு உதாரணம் மட்டும் தான். இவரை மாதிரியே கட்சிக்குக் கட்சி குறிப்பிடத்தக்க பேச்சாளர்கள் இருந்தார்கள். வெற்றிகொண்டான், நன்னிலம் நடராசன், வண்னை ஸ்டெல்லா போன்ற பெயர்களை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். பல அரசியல்கட்சிகளிலும் இம்மாதிரி கடுந்தமிழில் பேசக்கூடியவர்கள் இருந்தார்கள். இதில் தேசியக்கட்சி, மாநிலக்கட்சி என்கிற பாகுபாடு எல்லாம் இல்லை. இந்த விதமான பேச்சாளர்களில் ஆண், பெண் என்கிற பேதங்களும் இல்லை. இவ்வாறு பேசியவர்கள் வெவ்வேறு உயரங்களுக்கும் சென்றுள்ளார்கள். வாரியத்தலைமை, அமைச்சுப் பதவி இத்யாதி.

“திராவிடக் கட்சிகள்  ஆட்சிக்கு வந்தபிறகுதான் பேச்சில் ஆபாசம் பெருகிவிட்டது. அதற்கு முன்னால் எல்லாம் புனிதமாக இருந்தது” என்கிற வாதத்தை அடிக் கடி லாவகமாகக் கிளப்புவர்கள், தயவுசெய்து இந்தக்கட்டுரையின் முதலில் சொல்லப்பட்ட நிகழ்வை மறுபடியும் படிக்கலாம்.

அப்போது தேசியக்கட்சியைச்  சேர்ந்த ஒரு பேச்சாளர் அவர் இருந்த கட்சியில் பேச்சாளர்களுக்கு இருந்த மதிப்பைப் பற்றி இப்படிச் சொன்னார். “எங்க கட்சியில் வந்த மாட்டைக் கட்ட மாட்டாங்கெ.. போன மாட்டைத் தேட மாட்டாங்கெ..”

“வெடிகுண்டு” “கனல்”என்று அந்தப் பேச்சாளர்களின் பெயரோடு கனமான அடைமொழிகள் சேர்ந்திருக்கும். இந்த அடைமொழி களைக் கிண்டல் அடிக்கிற விதத்தில் அறுபதுகளில் வந்த திரைப்படம் ஒன்றில் வெளிவந்த வசனம் இது.

“எப்போப்பா இந்த அனல் பேச்சாளர் பேசுவார். பேசினா கொஞ்சம் பீடி பத்த வைச்சுக்கலாம்லே...”

அரசியல் வார இதழ் ஒன்றிற்காக இம்மாதிரியான பேச்சா ளர்கள் பலரைச் சந்தித்தேன்.தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் எல்லாம் பரவலாகச் சென்றடையாத அந்தக்காலகட்டத்தில் மக்களைச் சென்றடைய அன்றைக்கு மேடைகள் தான் உதவியாக இருந்தன. அதற்கு நாகரீகமாகப் பேச ஒரு அணியும்,கீழிறங்கிப்பேச ஒரு அணியும் தேவைப்பட்டார்கள்.கட்சி மாநாடுகள் நடக்கும்போது தங்கள் கட்சித்தலைமைக்கு முன்னால் தங்கள் பராக்கிரமத்தைக் காட்ட இவர்கள் அபாரமாக முயற்சிப்பார்கள்.எதிர்த்தரப்பை மிகவும் கொச்சையாகத் திட்டிக் குவிக்கும்போது அதை தலைவர்கள் சிரிப்பை அடக்கமாட்டாமல் ரசிப்பதையும் பல மாநாடுகளில் பார்க்க முடிந்திருக்கிறது.

தலைவர்களில் காமராஜர் மட்டும் தான் பேசும் மேடைகளில் அநாகரீகமாகப் பேசுகிறவர்களை வெளிப்படையாகக் கண்டித்திருக்கிறார் என்பதைச் சிலர் சொல்லக்கேட்டிருக்கிறேன். சில சமயங்களில் உணர்ச்சி வேகத்தில் மிகக் கொச்சையாக தலைவர்கள் சிலரே பேசுவதையும் கேட்டிருக்கிறேன்.

ஒரு பிரபலமான தலைவர் தலைமை யிலான கட்சி நடத்திய பந்த் உரிய முறையில் நடக்காததைப்பற்றி பத்திரிகைகள் ‘பந்த் பிசுபிசுத்தது” என்றுஎழுதியிருந்தன.

அதைச்சுட்டிக்காட்டி ஒரு மாநாட்டில் பேசிய அந்தத்தலைவர் “நாங்கள் நடத்திய பந்த் பிசுபிசுத்தது என்று எழுதுகிறீர்களே.. நான் வெளிப்படையாகக் கேட்கிறேன்.. எங்களுடைய உடம்பில் எங்கே தொட்டுப்பார்த்து பிசுபிசுப்பை உணர்ந்தீர்கள்.. சொல்லுங்கள் .. பார்க்கலாம்..”

அவதூறாகப் பேசியதற்காக வழக்கு போடப்படுவதன் பின்னணியைச் சற்று அலசிப்பார்த்தால் இதே விதிமுறைப்படி தமிழகத்தில் எந்தகட்சிக்கூட்டமும் நடத்திவிடமுடியாது. எந்தப்  பேச்சாளரும் எதையும் பேசிவிடவும் முடியாது. சில கட்சிகள் அடிக்கடி தங்கள் கட்சிப்

பேச்சாளர்களைக் கூட்டிக் கூட்டம் போடுவதையும் கவனிக்கவேண்டும்.(இம்மாதிரியான ஒரு கூட்டத்தில் ஒரு பெண்மணி உணர்ச்சிவசப்பட்டு ’மனித வெடிகுண்டாக மாறுவேன்” என்று பேசிக் கைதானதெல்லாம் உங்கள் நினைவுக்கு வரலாம்.)

தங்களுடைய கட்சித்தலைமையை வரம்புக்கு மீறிப்புகழ்வது, எதிர்க்கட்சிகளை எல்லைமீறித் திட்டுவது என்பதுதான் இப்போதுள்ள பேச்சாளர்களின் பொதுத்தகுதியாக இருக்கிறபோது அரசியல் மேடைப்பேச்சில் எப்படித் தரத்தையும், நாகரிகத்தையும் எதிர்பார்க்க முடியும்?

ஆகஸ்ட், 2013.