அலைகள் ஓய்வதில்லை 
சிறப்புப்பக்கங்கள்

புத்தம்புதுக் காதல்!

அலைகள் ஓய்வதில்லை

ராஜா சந்திரசேகர்

பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து, மணிவண்ணன் மந்திரக்கூட்டணியில் மலர்ந்த படைப்பு. இந்தப் படத்தை அசைபோட மனதில் ஆர்ப்பரிக்கின்றன அலைகள். காதல் காதலுக்கேயானது. ஜாதி மதங்களுக்கானதல்ல என்பதை இழையோடும் உணர்வுகளோடு இறுதியில் வெடிக்கும் செய்தியோடு சொல்லப்பட்டிருந்தது பெரும் வரவேற்ப்பை பெற்றது.

‘விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே.'இந்த ஒற்றை வரி காதலின் முழு பரிமாணத்தைச் சொல்லிவிடுகிறது.'உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்.' இந்த வரி காவிய காதலின் சோகத்தைச் சொல்லிவிடுகிறது.வாசத்தை ராகமாக உணரும் ரசவாதம் காதலில் மட்டும்தான் நிகழும்.'பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ.'என்ற வரியில் அதைக்கேட்கலாம். அனுபவிக்கலாம்.

அன்பில் கசிந்துருகும் உள்ளம் இயக்குநருடையது. ஒரு சிஷ்யனாக அதை அருகிலிருந்து ரசித்திருக்கிறேன். காட்சியில் கரைந்து காட்சியாக மாறிவிடும் மகோன்னத மனம் அது. படத்தொகுப்பிலும் இயக்கும் வல்லமை கொண்டது அவர் கலைப்பாய்ச்சல். நிம்மதியற்ற அந்த இரவுகள் அழகான காதலை உருவாக்கிக்கொண்டிருக்கும். ஒரு படத்தொகுப்பு நள்ளிரவில் இயக்குநரிடம் சொன்னேன். ‘நீங்கள் காதல் காட்சிகளை வெட்டும்போது அதன் ரத்த அணுக்களில் சுவை கூடிவிடுகிறது.' சிரித்தார். அந்த கனத்த குரலிலும் காதலில் துள்ளல் இருந்தது.

பாடல் போல் எல்லாம் ரீங்கரிக்க திரும்பிக் கொண்டிருந்தேன். அருகிலிருந்த பூங்கா ஓரம் அருகருகே இரண்டு சைக்கிள்கள்.வண்ணத்துப்பூச்சிகள் போல் படபடப்பு. சிணுங்கல்.

சிரிப்பு. இளையராஜா காற்றில் ஆசிர்வதித்துக்கொண்டிருந்தார். அலைகள் ஓய்வதில்லை!

நவம்பர், 2019.