கேளிக்கைக்கு பெயர்போன மியாமி கடற்கரையில் அன்று ஒருவரது உடைகள் கேட்பாரற்று கிடக்கின்றன.
சந்தேகத்தில் சோதித்த போலீஸிற்கு உடையிலிருந்து பாஸ்போர்ட் கிடைக்கிறது. உடைக்கு சொந்தக்காரர் பிரித்தானிய முன்னாள் அமைச்சரும் எம்.பியுமான ஜான் ஸ்டோன் ஹவுஸ் என்று தெரிகையில் விசாரணை தீவிரமாகிறது.
கடலில் நீந்த போன ஜான் மூழ்கியோ, சுறா தாக்குதலிலோ இறந்திருக்கலாம் என்று விசாரணை முடிகிறது. லண்டனில் அவரது மனைவியும் மூன்று குழந்தைகளும் மரணம் பற்றி செய்தி கேள்விப்பட்டு துடித்துப்போகிறார்கள். ஜானுக்கு பிரித்தானிய நாடாளுமன்றம் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்த, நாளிதழ்களில் பல்வேறு தலைவர்கள் ஜானுக்கு எழுதிய அஞ்சலிகள் வெளியாயின.
புன்னகையோடு தனக்கு எழுதப்பட்ட அஞ்சலிகளை படித்தவாறே போலி பாஸ்போர்ட் மூலம் ஆஸ்திரேலியா செல்ல ஆயத்தமாகிறார் ஜான்ஸ்டோன்.
தான் செய்த ஏமாற்று வேலைகள், மற்றொரு நாட்டிற்கு உளவு பார்த்தது முதலான பல குற்றங்கள் வெளியே தெரிந்தால் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். கூடவே தண்டனை அனுபவிக்க வேண்டுமென்கிற பயத்தில் ஜான் இந்த நாடகமாடினார்.
ஆஸ்திரேலியாவில் தன் காதலியுடன் ஜான் மறைந்துவாழ்வது கண்டுபிடிக்கப்படுகிறது. அவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு லண்டனுக்கு அழைத்து வரப்படுகிறார். வழக்கு தொடர்கிறது. ஜான் எம்.பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென எதிர் குரல்கள் வலுக்கிறது. பிணையில் வெளியே வரும் ஜான் எம்.பி பதவியிலேயே வலம் வருகிறார்.
ஏமாற்றுதல், திருடுதல், ஆள்மாறாட்டம் என்று ஜான் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகள் நிருபணமாகி 6, ஆகஸ்ட் 1976 அன்று ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதுவரை பதவியில் ஒட்டிக்கொண்டிருந்த அவர் அதற்கு பின் 21 நாட்கள் கழித்துதான் எம்.பி பதவியை ராஜினாமா செய்தார்.
உலகம் முழுவதும் நிகழும் அதிகாரத்திலுள்ள அரசியல்வாதிகளின் ராஜினாமாக்கள் சுவாரசியமானவை; சிலசமயம் அருவருப்பானவையும்கூட.
‘‘முடிந்தவரை ஆராய்ந்துபார்த்தேன்... என்னை பதவி நீக்கம் செய்யக்கூடிய அளவுக்கு குற்றம் எதுவும் இல்லை. எனவே நான் பதவியிலிருந்து விலக வேண்டியது தேவையில்லை'' என்ற அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் எம். நிக்சனின் வரிகள் முக்கியமானவை. ஆனால் பின்னர் நிக்சன் ராஜினாமா செய்தது தனிக்கதை.
ராஜினாமா நல்லதா கெட்டதா? இரண்டும்தான். சென்னை ஏ.ஜி.எஸ் அலுவலகத்தின் வேலையைவிட்ட கே. பாலசந்தர், பட்னி கம்யூட்டர்ஸ் ஜி.எம் பதவியை உதறிவிட்டு பெங்களூர் வந்த நாராயணமூர்த்தி, அப்பா சொல்வதைக் கேட்காமல் கண்டக்டர் வேலையை தூக்கி எறிந்த சிவாஜி ராவ், ரயில்வே வேலையை கனவின் மீதான ஆசையில் விட்டுவிட்டு நடு இரவில் ஓடிவந்த மகேந்திரசிங் தோனி, சுந்தரம் க்ளேடானின் இஞ்சினியர் வேலையை கிரேஸியாக விட்ட மோகன் என்று எத்தனையோ ராஜினாமாக்கள் சிறப்பான கதைகளின் தோற்றுவாயாக மாறி உள்ளன.
1997 - இல் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் நேர்முகத் தேர்விற்கு சென்றிருந்தேன். பல்வேறு கட்டங்களாக நிகழ்ந்த தேர்வின் இறுதியில் நிறுவனத்தின் இந்திய தலைவரான பிரெஞ்சுக்காரரோடு சந்திப்பு. அப்போது அவர்கேட்ட கேள்விகளில் இரண்டு முக்கியமானது.
ஒருவர் எந்தெந்த காரணங்களுக்காக வேலையை ராஜினாமா செய்வார்?
நிறுவனத்திற்கு தேவையற்ற ஒருவரை எப்படி ராஜினாமா செய்ய வைப்பீர்கள்?
அன்றிலிருந்து இன்றுவரை இந்த இரண்டு கேள்விகளும் என்னை துரத்திக்கொண்டே உள்ளன.
நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் எச்.ஆர் கொள்கைகள் சிறப்பானதென்று பலரும் பாராட்டுகிறார்கள். நெட்ஃபிளிக்ஸ் சீஃப் டேலண்ட் ஆபிஸர் பெட்டி மெக்கார்ட்டும், சி.இ,ஓ. ரீட் ஹேஸ்டிங்ஸும் சேர்ந்து சில ஆய்வுகளை தொடர்ந்து சில வழிமுறைகளையும் கையாண்டனர்.
ஒரு நிறுவனத்தின் சிறிய எண்ணிக்கையிலான ‘ஏ' ப்ளேயர்ஸ் இருப்பார்கள். அதாவது இவர்கள்தான் நன்றாக வேலை பார்த்து, புதுமைகளையும் லாபத்தையும் உருவாக்குவார்கள். அடுத்து பெரிய எண்ணிக்கையிலான சராசரி பணியாளர்கள் இருப்பார்கள். கடைசியில் சிறிய எண்ணிக்கையிலான திறமையற்ற ஆட்கள் இருப்பார்கள். இவர்களை நிறுவனத்தைவிட்டு வெளியேற்ற வேண்டும் அல்லது அவர்களாக நிறுவனங்களை மாற்றிக் கொண்டிருப்பார்கள்.
முடிந்தவரை ஏ ப்ளேயர்ஸை மட்டும் தேர்வு செய்ய முயற்சிப்பது என்ற கொள்கை முடிவை பெட்டி மெக்கார்ட்டும், ரீட் ஹேஸ்டிங்ஸும் எடுத்தார்கள். இந்த முடிவு நெட்ஃபிளிக்ஸை வேகமாக வளரவைத்தது.
நல்ல ஊழியர்களை எப்படி தக்க வைத்துக்கொள்வது? ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? திறமையானவர்களை தொடர்ச்சியாக ஊக்குவிக்க என்ன செய்ய வேண்டுமென்பதான திசையில் தற்போது பல நிறுவனங்கள் பயணிக்கின்றன.
நிறுவனத்துக்கு அவசியமாக தேவைப்படுகிறார் என்று நினைக்கிற ஊழியர் எதிர்பாராத தருணத்தில் ராஜினாமா செய்வதும், வேண்டாத பட்டியலில் உள்ளவர்கள் பசையாய் ஒட்டிக்கொள்வதும் தான் நிறுவனங்களின் பெரிய பிரச்சினையாக எச்.ஆர் அதிகாரிகள் கூறுகிறார்கள். நிறுவனங்களுக்கு மட்டுமல்ல அரசியல் கட்சிகளுக்கும் இந்த பிரச்சினை உள்ளது.
எங்களுக்கு ஆலோசனை கூறிய எச்.ஆர் பயிற்சியாளர் 5 ஆர் (5R) என்ற கொள்கையைப் பின்பற்றி டீமை பலப்படுத்தச் சொன்னார். ‘ஒரு நிறுவனம் அதற்கு பொருத்தமான நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு Responsibility, Respect, Revenue sharing, Reward and Relaxation என்ற விஷயங்களைக் கொடுத்து அதன் குறிக்கோளை உணர்த்தும் போது வெற்றி வசமாகும்,' என்றார்.
எப்போதும் வித்தியாசமான களங்களை சிறப்பிதழ் மூலம் விரிவாக அலசும் அந்திமழை இந்த கொரானா காலத்தில் அதிகமாக பேசப்படும் ‘ராஜினாமாக்கள்' பற்றிய பல்வேறு கோணங்களைப் பேசுகிறது.
உங்களிடம் ஒரு சுவாரஸ்யமான ராஜினாமா அனுபவம் இருந்தால் எங்களுக்கு அனுப்புங்கள். தேர்வாகும் படைப்புகளுக்கு சன்மானம் உண்டு.
என்றும் உங்கள்
அந்திமழை இளங்கோவன்
செப்டெம்பர், 2020 அந்திமழை இதழ்