புது டெல்லியில் உள்ள சிஎஸ்டிஎஸ் ( வளரும் சமூகங்களின் ஆய்வு மையம்) நிறுவனத்தின் இயக்குநர், பேராசிரியர் சஞ்சய்குமார். இந்த நிறுவனம் தேர்தல் கருத்துக் கணிப்புகளைத் தொடர்ந்து செய்துவருகிறது. சஞ்சய்குமார், தேர்தல் கருத்துக் கணிப்புகளில் அனுபவம் பெற்றவர். அவரை அந்திமழைக்காக சந்தித்தோம். ஆரம்பத்திலேயே ''நம் நாடு பல வேறுபாடுகளைக் கொண்டது. சாதி, மதம், பிராந்தியம் என பல வேறுபாடுகள். கிராமிய நகர வேறுபாடுகள் வேறு உள்ளன. ஒரே சாதியினர் ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு மாதிரி வாக்களிப்பர். இது தேர்தல் கணிப்புகளை சவால் மிகுந்தது ஆக்குகிறது. இருமுனைப்போட்டி என்றால் கணிப்பது கொஞ்சம் எளிது. பலமுனைப்போட்டி இருக்கும்போது அது மிகுந்த சவாலாக இருக்கும்,'' என்று தொடங்கினார் அவர்.
எக்ஸிட் போல் (Exit Poll), ஒபினியன் போல் (Opinion Poll) என்பவை என்ன என்பதில் இருந்து தொடங்குவோமா?
ஒபினியன் போல் என்பது தேர்தல் காலகட்டத்தில் வாக்காளரிடம் எடுக்கப்படும் கருத்து. ஆனால் எக்ஸிட் போல் எனப்படுவது வாக்காளர்கள் தமது வாக்கைப் பதிவு செய்துவிட்டு வரும்போது வாக்குச் சாவடிக்கு வெளியே எடுக்கப்படுவது.
இதில் மிகவும் நம்பகமானது எது?
கருத்துக்கணிப்பு அது எதுவாக இருந்தாலும் கருத்து கேட்கப்படும்போது அதில் பங்கேற்பவரின் எண்ணம் என்ன என்பதை பிரதிபலிப்பது. அதாவது இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரம் ஒரு கணிப்பு எடுக்கப்படுமானால் அந்த சமயம் வாக்காளரின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை அது சொல்கிறது. ஆனால் அந்த கணிப்பு மே 23 ஆம் தேதி என்ன நடக்கும் என்று அறுதியிட்டுச் சொல்லும் தகுதி இல்லாதது. இடைப்பட்ட காலத்தில் மக்கள் மனம் மாறி இருக்கலாம். பல காரணங்கள் அதற்கு உள்ளன. ஆனால் எக்ஸிட் போல் என்பது அந்த நேரத்தில் எடுக்கப்படுவது என்பதால் மிகவும் சரியாக இருக்கும் வாய்ப்பு கொண்டது.
நீங்கள் எக்ஸிட் போல் எடுப்பது உண்டா?
நாங்கள் ஒபினியன் போல் எடுக்கிறோம். எக்ஸிட் போல் எடுப்பது இல்லை. ஆனால் தேர்தல் நடந்தபின்னர் ஒரு கருத்துக்கணிப்பு ( Post poll) எடுக்கிறோம். தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பாக இந்த சர்வேயை எடுத்து முடித்துவிடுவோம். எக்ஸிட் போலுக்கும் இதற்கும் சிறிய வித்தியாசம் உண்டு. எக்ஸிட் போல் நடத்துகிறவர்கள் வாக்குச்சாவடியில் நின்று வாக்காளர்களிடம் பேசி கருத்து அறிவார்கள். தேர்தலுக்குப் பிறகு எடுக்கும் கணிப்பு என்பது வாக்களித்து இரண்டு மூன்று நாட்கள் கழித்துச் செய்யப்படும் கணிப்பாகும். வாக்காளர் பட்டியலை எடுத்து அதில் ரேண்டமாக ஆட்களைத் தேர்வு செய்து அவர்களிடம் கருத்துக் கேட்போம். இப்போது அதிகமான கேள்விகளைக் கேட்கமுடியும். எங்கள் நோக்கம் எந்த கட்சி எவ்வளவு சீட்களைப் பெறும் என்று கணிப்பது மட்டுமல்ல. மக்கள் எப்படி வாக்களித்துள்ளனர் என்பதைப் புரிந்துகொள்வது ஆகும். எனவே நிறைய கேள்விகளைக் கேட்போம். தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் ஏன் ஒரு கட்சி வென்றது? ஏன் தோற்றது என்பதை அலசுவோம். உதாரணத்துக்கு தேசியவாதம் வாக்காளர்களைக் கவர்ந்ததா?அதனால்தான் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்ததா? வேலை வாய்ப்புகள் குறைந்ததால் காங்கிரஸ்
கட்சிக்கு வாக்கு சதவீதம் அதிகரித்ததா? கூட்டணியால் பலன்கள் உண்டா? போன்றவற்றை அலசுவோம்.
சிஎஸ்டிஎஸ் நிறுவனம் சார்பாக எவ்வளவு காலமாக இந்த கருத்துக்கணிப்புகளை எடுத்துவருகிறீர்கள்?
சிஎஸ்டிஎஸ் நிறுவனம் 1963 - ல் உருவாக்கப்பட்டது. 1967 - ல் இந்நிறுவனம் சார்பில் முதல் தேர்தல் கணிப்பு நடத்தப்பட்டது. ஆனால் எல்லா தேர்தல்களிலும் கணிப்புகள் தொடர்ந்து செய்ய ஆரம்பித்தது 1996 - ல் இருந்துதான். பெரும்பாலும் எல்லாத் தேர்தல்களிலும் தேர்தலுக்கு முந்தைய கணிப்பு, பிந்தைய கணிப்பு இரண்டையுமே எடுத்துவருகிறோம். அதேபோல் கடந்த இருபது ஆண்டுகளாக முக்கியமான மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களின்போதும் கருத்துக்கணிப்பு எடுத்துவருகிறோம்.
எங்களிடம் மிகப்பெரிய டேட்டா உள்ளது. ஊடக நிறுவனங்கள் இதைப் பயன்படுத்துகின்றன. பத்துக்கும் மேற்பட்ட பி.எச்.டி பட்ட ஆய்வுகள் இதைப் பயன்படுத்திச் செய்யப்பட்டுள்ளன. ஒரு பி.எச்.டி கல்வி பற்றி நாங்கள் கேட்ட கேள்வி முடிவுகளை மட்டும் வைத்தே செய்யப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு நடந்த பின்னர் எடுக்கும் எங்கள் கருத்துக்கணிப்பில் ஒரு ஆளைக் கேள்வி கேட்டு முடிக்க 45 நிமிடம் ஆகும். இது வீடுகளுக்குச் சென்று செய்யப்படுகிறது. தொலைபேசியில் அல்ல. நேருக்கு நேர். ஒரு நாளைக்கு ஐந்து ஆறு பேரைத்தான் சந்திப்பார்கள். கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை இதற்குப் பயன்படுத்துகிறோம்(பல்வேறு மாநிலங்களில் கருத்துக்கணிப்பின்போது எடுக்கப்பட்ட படங்களைக் காட்டுகிறார்)
நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களின் முடிவைக் கணிக்க எத்தனை பேரைச் சந்தித்தால் முறையாக இருக்கும்?
தேசியஅளவிலானகணிப்புஎன்றால் 20,000 - 25,000 பேரைசந்திக்கவேண்டிஇருக்கும். இதைவைத்துக்கொண்டுபெரிய மாநிலங்களானஉத்தரபிரதேசம்போன்றவற்றின்நிலவரங்களை
யும்கூறிவிடலாம்ஆனால்இதையேவைத்துக்கொண்டு
சிறுமாநிலங்களானமணிப்பூர், கோவா, சிக்கிம்போன்றவற்றின்நிலவரத்தைக்கூறமுடியாது. ஏன்என்றால்இம்மாநிலங்களில்இருந்துகுறைந்தஅளவேகருத்துகள்பெறப்பட்டிருக்கும். ஆனால்குறிப்பாகஅந்தமாநிலங்களைப்பற்றிசொல்லவேண்டுமானால், குறைந்ததுஆயிரம்பேரிடமாவதுகேட்டிருக்கவேண்டும்.
எப்படி இந்த சதவீதத்தை இடங்களாக மாற்றுவீர்கள்?
இது ஸ்விங்கை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுகிறது. கடந்த தேர்தல் முடிவுகளை நாம் அறிவோம். அந்த தேர்தல்களில் எததனை சதவீத வாக்குகள் ஒரு கட்சிக்குக் கூடுதலாக விழுந்தன என்பதை வைத்து எத்தனை இடங்களை அதிகமாக அக்கட்சி பெற்றது என்பதைக் கணிக்க முடியும். 2014 தேர்தலில் காங்கிரஸ் 19.3
சதவீத வாக்குகளைப் பெற்றது. அது 44 இடங்களையே வெல்ல வழிவகுத்தது. பாஜக 33 சதவீத வாக்குகளைப் பெற்றது. அதற்கு 283 இடங்கள் கிடைத்தன. இப்போது குறிப்பிட்ட அளவில் ஒரு கட்சி வாக்குகளைப் பெறும் என்று தீர்மானித்தால் முடிவுகள் எத்தனை சீட்களாக இருக்கும் என்று நிர்ணயிக்கிறோம். இதற்காக தொழில் நுட்ப அடிப்படையிலான ப்ரோகிராம்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதை வைத்துக் கணிக்கிறோம்.
இது பெரிய சிக்கலான நடவடிக்கையாகத் தெரிகிறது. இதில் தோல்வி கண்டது உண்டா?
கருத்துக்கணிப்பு முடிவுகள் தவறு என்று எப்படித் தீர்மானிப்பது? கருத்துக் கணிப்பையும் தேர்தல் முடிவையும் வைத்து ஒப்பிட்டுத் தீர்மானிப்பது சரியான அணுகுமுறை என்று சொல்ல முடியாது. ஏனெனில் நான் ஏற்கெனவே சுட்டிக்காட்டியபடி, கருத்துக்கணிப்பு அது நடந்தபோது இருந்த மக்கள் மனநிலையையே காண்பிக்கும். அதன்பிறகு மக்கள் மனநிலை மாறுவதைக் காட்டாது. ஆனால் எக்ஸிட் போல்கள் சரியான முடிவுகளைக் காட்டவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு கட்சி எவ்வளவு வாக்குகளைப் (voteshare) பெறும்? என்ற கணிப்பை வைத்துத்தான் கருத்துக்கணிப்பு சரியா தவறா என்று தீர்மானிக்கவேண்டும் என்று நான் கருதுகிறேன். சில சமயங்களில் எவ்வளவு வாக்குகள் விழும் என்பதை சரியாகக் கணித்துவிட்டு, பெறக்கூடிய சீட்களின் எண்ணிக்கையில் தவறு செய்யலாம். வாக்குகள் பரவலாகி இருக்கும். அல்லது ஒரே இடத்தில் குவிந்திருக்கும். ஒரு கட்சிக்கு 200 இடங்கள் என்று கணித்து, அக்கட்சி 200 இடங்களை வென்றுவிட்டால் எல்லாரும் சரி என்று பாராட்டுவார்கள். ஆனால் நாம் கணித்த வாக்கு சதவீதம் தவறிப்போனாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். கருத்துக்கணிப்பில் சீட்களின் எண்ணிக்கை, வாக்கு சதவீதம் ஆகியவற்றில் ஒன்று சரியாக வந்தாலே திருப்திப் பட்டுக்கொள்ளவேண்டியதுதான்.
சுவாரசியமான சம்பவங்கள்?
நிறைய. நமது கேள்வியாளர்கள் அனுமதி வாங்கி இருக்கிறார்களா என்றெல்லாம் பிரச்னைகள் வரும். சமீபத்தில் சிக்கிமில் எங்கள் கேள்வியாளர்கள் கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் வைக்கப்பட்டார்கள். அவர்கள் மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டது. அவையெல்லாம் திடுக்திடுக் நிமிடங்கள். சீரற்ற சமவாய்ப்பு முறையில் கருத்துக் கணிப்பு கேட்கவேண்டிய இடங்களை தேர்வு செய்கிறோம். கேள்வியாளர்கள் கேள்விகளைக் கேட்க தூரமான இடங்களுக்கு ஆய்வு மேற்கொள்ளப் போகும்போது நம் நாடு எவ்வளவு வேற்றுமைகள் கொண்டது என்று ஆச்சர்யம் கொள்வார்கள். பல இடங்களில் படகில் ஏறி ஆற்றைக் கடந்துசென்று ஆட்களை சந்திக்கவேண்டி இருக்கும். ஒரு வீட்டுக்குச் செல்ல மூன்று கிமீ நடக்கவேண்டி இருக்கும். அசாமில் யானைகளை வாடகைக்கு எடுத்துச் செல்லவேண்டி இருந்தது.
முதல் முறையாக வாக்களிப்பவர்கள் பற்றி?
1996&ல் இருந்து பார்த்தால் முதல்முறை வாக்களிப்பவர்களின் வாக்குப்பதிவு சதவீதம்
சராசரி வாக்குப்பதிவில் இருந்து 5&6% குறைவாகவே இருந்து வந்துள்ளது. 2014&ல்தான் இது
சராசரி வாக்குப்பதிவை விட அதிகமாகப் பதிவானது. முதல் முறை வாக்களிப்பவர்கள் திரண்டு வந்து வாக்களித்த தேர்தல் அது. பாஜக சார்பாக அவர்கள் தீர்மானகரமாக வாக்களித்தனர். இதற்கு முன்பு இப்படி அவர்கள் ஒரு கட்சிக்கு அதிகபட்சமாக வாக்களித்துப் பார்த்தது இல்லை.
2019 - லும் இதுவே நடக்குமா?
உறுதியாகச் சொல்லமுடியாது. தேர்தல் முடிவுகள் வந்தபின் ஆய்வு செய்துதான் சொல்ல முடியும். அதேசமயம் 2014&ல் நடந்ததற்கு நேர் எதிர் திசையிலும் இது நடக்காது என்று சொல்லமுடியாது. இளம் வாக்காளர்கள் பாஜகவுக்கு மற்ற பிரிவு வாக்காளர்களை விட சற்று அதிக அளவில் வாக்களிக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.
சரி, கடைசியாக ஒரு கேள்வி. இந்த தேர்தல் கருத்துக்கணிப்புகளால் தேர்தல் முடிவுகளை எந்த அளவுக்கு சரியாகக் கணிக்கமுடியும்? இது அறிவியல் பூர்வமானதா?
களத்துக்குச் சென்று,மக்களைச் சந்தித்து கருத்துக்கணிப்பு எடுத்தால் நிச்சயமாக கட்சிகள் பெறக்கூடிய வாக்கு
சதவீதத்தைக் கணித்துவிடமுடியும். அதில் சுமார் இரண்டு சதவீதம் பிழை ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆனால் இந்த வாக்கு சதவீதத்தை சீட்டுகளாக மாற்றுவது இன்றைய நிலையில் சவாலாகவே தொடர்கிறது. பழைய தேர்தல்களில் பெற்ற வாக்குப்பதிவு, இடங்களை வைத்து இந்த தேர்தலைக் கணிக்கிறோம். உதாரணத்துக்கு உபி, பீகாரை எடுத்துக்கொள்ளுங்கள். 2014&ல் அங்கு நிலவிய போட்டிக்கும் 2019&ல் நிலவும் போட்டிக்கும் பெரும் வித்தியாசம் உண்டு. இப்போது உபியில் பிஎஸ்பியும் சமாஜ்வாதியும் கூட்டணி வைத்துள்ளன. கடந்த தேர்தலில் மாநிலம் முழுக்க போட்டியிட்டு இவை முறையே 20, 22 சதவீதம் வாக்குகளைப் பெற்றன. ஆனால் இந்த முறை அவை பாதிப்பாதி இடங்களில் தான் போட்டியிடுகின்றன. அவை பெறும் வாக்குகளின் சதவீதம் குறையும். ஆகவே கடந்த தேர்தலில் அவை பெற்ற வாக்குகளை வைத்து கணிப்பது நிச்சயம் சவாலானது.
மே, 2019.