சிறப்புப்பக்கங்கள்

பிள்ளை நிலா!

அசோகன்

திருமணப் பத்திரிகையை நீட்டியவுடன் நண்பர் அட்வைஸ் ஆரம்பித்தார்: கல்யாணம் எல்லாம் உனக்கு எதுக்கு? வாழ்க்கை பூரா கஷ்டப்படப்போறே.. என்னப்பா இது வாழ்த்து சொல்றதுக்குப் பதிலா இப்படி வசவு சொல்கிறாரே என்று நினைத்தேன்.

திருமணம் ஆகி முதல் குழந்தை பிறந்து சில ஆண்டுகள் கழித்து இரண்டாவது குழந்தை. இன்னொரு நண்பர் முகம் சிவந்தார்: உனக்கெல்லாம் எதுக்கு ரெண்டு குழந்தை? ஒன்றை வளர்த்துப் படிக்க வைப்பதே இந்த காலத்தில் ரொம்ப சிரமம்?

பெத்தாச்சுய்யா... இனி பேசி என்ன பயன் என்றவாறே நகர்ந்தேன். இது இரு தனிப்பட்ட நபர்கள் சொன்ன விஷயம்தான். மற்றபடி இந்த இரு தருணங்களிலும் பொதுசமூகம் வாழ்த்துகளைத்தான் பகிர்ந்துகொண்டது.

ஆனால் திருமணமே ஆகியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? போன இடமெல்லாம், பார்த்த மனிதர்கள் எல்லாம் ஏன் கல்யாணம் பண்ணலை என்று ஆரம்பித்திருப்பார்கள். கல்யாணம் ஆகியும் குழந்தையே பெறாமல் போயிருந்தால்...?  ஏன் இன்னும் பெறவில்லை? ஏன் ஒன்றோடு நிறுத்திவிட்டாய் என்று கச்சேரிகள் தொடர்ந்திருக்கும். அதுவும் இந்த குழந்தை பெறாதுபோனால் குடும்பம், நண்பர்கள், ஊர் எல்லோரும் நம்மை குற்றவாளிகளாய்ப் பார்ப்பது சகஜமாகி இருக்கும்.

என் நண்பர் ஒருவர் திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகிவிட்டது. குழந்தைப் பேறு இல்லை. அப்படி ஒன்றும் அவசரமில்லை. இன்னும் சில ஆண்டுகள் கூடப் பிடிக்கலாம்தான். ஆனால் அவர் சொந்த ஊருக்குக் குடும்பத்துடன் போவதை நிறுத்திவிட்டார். எப்போது போனாலும் குழந்தைப் பிரச்னையை எடுக்கிறார்களாம்.

பிள்ளை பிறந்தாலும் பிரச்னை விட்டதா? ஆண்பிள்ளையாக வேண்டுமே? நமக்குத் தெரிந்தே ஆண்பிள்ளை வேண்டும் என்று ஏழெட்டுப் பெண்பிள்ளைகளை வரிசையாகப் பெற்றுக்கொண்டிருக்கும் குடும்பங்கள் நிச்சயம் பல இருக்கும். பெண் பிள்ளை வேண்டும் என இந்த அளவுக்கு முயற்சி செய்து ஆண்பிள்ளைகளாக வரிசையாகப் பெற்றவர்கள் யாரும் உண்டா? என்பது ஒரு கேள்வி.

முதலாவது குழந்தை பெண்ணாகப் பிறந்துவிட்டால் பல தகப்பன்கள் அடுத்த பிள்ளை பெறுவதற்குள் களையிழந்துவிடுவார்கள். அடுத்ததும் பெண்ணாகி விட்டால் என்ன செய்வது என கலங்கி நிற்கும் நண்பர்களையும் பார்த்திருக்கிறேன். ஆசைக்கு ஒன்று; ஆஸ்திக்கு ஒன்று என ஆணும் பெண்ணுமாய் பெற்ற தம்பதிகளை ஆசிர்வதிப்பது வழக்கம். ஆனால் எத்தனை பேருக்கு இது சாத்தியமாகும்?

இது குழந்தை பெறுகிறவர்களுக்கு இருக்கும் சிக்கல். ஆனால் குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகள், அதற்கான ஏக்கத்தில் இருக்கும் குடும்பங்கள் நிலை உணர்ச்சிகரமானது. இன்றைக்கு தெருவுக்குத் தெரு பெருநகரங்களில் குழந்தைப்பேறு சிகிச்சைக்கான தனியார் மையங்கள்.

‘அரசு மருத்துவமனைகளில் குழந்தைப் பேறுக்கான சிகிச்சை செயற்கை முறைக் கருவூட்டலுடன் நின்றுவிடுகிறது. இந்த முறையிலும் குழந்தை பெறமுடியாதவர்கள் ஐவிஎப் எனப்படும் சோதனைக்குழாய் முறையில்தான் குழந்தை பெற முடியும். அது தனியாரிடமே உள்ளது. அதற்கு லட்சக் கணக்கில் செலவாகும். வறுமையான நிலையில் இருப்பவர்களாலும் நடுத்தர மக்களாலும் அது முடியாது. இவர்களுக்காகவாவது அரசு மருத்துவமனைகளிலும் அல்லது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் சோதனைக் குழாய் கருத்தரிப்பு சிகிச்சையை குறைந்த செலவிலோ இலவசமாகவோ அரசு தொடங்கவேண்டும். அரசு நினைத்தால் இதை உடனே தொடங்கலாம். ஆனால் ஏனோ செய்யாமல் இருக்கிறார்கள். குழந்தைப் பேறு இல்லாத பல நடுத்தர பொருளாதார தம்பதிகளுக்கு இது ஒரு வசதியாக இருக்கும்,' என்பதைப் பகிர்ந்துகொண்டார் அரசுத்துறை மருத்துவர் ஒருவர்.

குழந்தைப் பேறின்மை தொடர்பான மன அழுத்தங்களுடன் வரும் நோயாளிகள் அதிகமாகிக்கொண்டே இருப்பதாகச் சொல்கிறார் மனநல மருத்துவர் சிவபாலன்.

‘கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் குழந்தைப்பேறின்மை பிரச்னை அதிகரித்து வருவதை பொதுவாகப் பார்க்கிறோம். இதற்கு பல காரணங்கள்  சொல்லப்படுகிறது. நான் பார்க்கிற தம்பதிகளிடம் பாலியல்ரீதியாக செயல்பாடு குறைவதற்குக் காரணமாக அவர்களுக்கு இடையில் அன்பும் பாசமும் நிறைந்த அந்நியோன்யமே இல்லாமல் இருக்கிறது. மேலோட்டமாகவும் சுயநலமாகவும் உள்ளனர். எந்திரத்தனமாக இருப்பதால் மனதார நெருக்கம் இல்லை. இரண்டு பேரும் வேலைக்குப் போகிறார்கள். அவர்கள் சேர்ந்திருக்கும் நேரம் குறைவு. திருமணமான தம்பதிகளுக்கு  மேற்சொன்ன காரணங்களால் குழந்தை பெறுவது ஓராண்டு தள்ளிப்போகிறது என்று வைத்துக்கொள்வோம். இந்நிலையில் தற்போது வணிகமயமாகிவிட்ட குழந்தைப்பேறு மருத்துவம் அந்த தம்பதிகள் மீது ஒரு அழுத்தத்தை அளிக்கிறது. இவர்கள் உடனடியாக மருத்துவ மனைகளை நாடுகிறார்கள். அவர்களும் கருவுறுதலைத் தூண்டும் மருத்துவ முறைகளை உடனடியாகத் தொடங்கிவிடுகிறார்கள். இந்த தம்பதியினர் இடையே அன்பு பாசம் புரிதல் எல்லாம் எப்படி இருக்கிறது என்பதையெல்லாம் பார்ப்பது கிடையாது. நான் பார்த்த நோயாளிகளில் ஒருமுறைகூட முழுமையான பாலுறவே வைத்துக்கொள்ளாமல் கருவுறுதல் சிகிச்சைக்குப் போனவர்களும் இருக்கிறார்கள். நம்பவே முடியாத அளவுக்கு சூழல் இருக்கிறது. இதையெல்லாம் கவனிக்காமலே சிகிச்சை ஆரம்பிப்பது எல்லாம் நடக்கிறது. இந்த சிகிச்சைகூட கருவுறுதலுக்கு தடையாக அமையும்  வாய்ப்புள்ளது.

இந்நிலையில் நம் குடும்பங்களில் குழந்தை பெறுவதற்கான அனைத்து பொறுப்பும் பெண்ணின் மீது மட்டுமே சுமத்தப்படுகிறது. மருத்துவமனைகளில் சிகிச்சையின் வலி, சிரமம் எல்லாவற்றையும் பெண்தான் தாங்கவேண்டும். எனவே பெண்கள் மனரீதியாக துன்பமடைகிறார்கள். இந்த துன்பத்தை யாரும் புரிந்துகொள்வது இல்லை. சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். கருவுறுதலுக்கான சிகிச்சை என்பது நான்கைந்துமுறை நடக்கும் இதில் தோல்விகளும் ஏற்படும். ஆனாலும் பெண் தான் குற்றம் சாட்டப்படுவாள். உடல்நீதியாகவும் மனரீதியாகவும் பெண்ணுக்கு ஏற்படும் வலிகளை புரிந்துகொள்ளும் குடும்பமோ மருத்துவமனையோ இல்லை. வெளியே கருமுட்டையை தானம் வாங்கி செய்யப்படும் ஐவிஎப் முறைகளில் அந்த குழந்தை உடல்ரீதியாக முழுமையாக தன்னுடையது இல்லை என்கிற அழுத்தத்தையும் பெண் தான் தாங்குகிறாள்,' என விளக்குகிறார் சிவபாலன்.

‘பாலுறவு என்பது குழந்தைப் பேறுக்காக மட்டும் கட்டாயமாகச் செய்யப்படுகிறது என்னும்போது கருவுறுதலுக்கான வாய்ப்புகள் குறைவே. அப்படியே கருவுறுதல் நிகழ்ந்தாலும் மனஅழுத்தத்தின் காரணமாக கருச்சிதைவு ஏற்படுவதாகச் சொல்கிறார்கள். பொதுவாக நாங்கள் எங்களிடம் வருகிறவர்களிடம் முதலில் உங்கள்  மனநிலை அழுத்தமின்றி இருந்தால்தான் கருவுறுதல் சிகிச்சையிலும் அல்லது சாதாரணமாக கருவுருதலிலும் வெற்றி கிடைக்கும் என்பதை வலியுறுத்திச் சொல்கிறோம். கணவன் மனைவி இடையே அன்பான புரிதல் இருந்தால் பாதிப்பிரச்னை தீர்ந்துவிடும்,' என்றும் பகிர்ந்துகொள்கிறார் அவர்.

அந்த தம்பதிக்கு திருமணமாகி ஆறுமாதம் ஆகி குழந்தை இல்லாமல் இருந்ததால் சிகிச்சை எடுத்துக்கொண்டனர். இந்த சிகிச்சையால் மனைவியின் சினைப்பையில் கட்டி உருவாகி மேலும் சிக்கலாகிறது. குடும்பத்தினர் வற்புறுத்தலால் அப்பெண் தொடர்ந்து சிகிச்சை எடுக்கிறாள். மூன்றாண்டுகள் வரை கருவுறுதலுக்கான  சிகிச்சைக்குப் பின் அவள், வெறுத்துப்போய்  இனி சிகிச்சை எடுக்க முடியாது என்று மறுக்கிறாள். இதை அடுத்து கணவன், உன்னுடன் வாழமாட்டேன் என்று சொல்லிவிடுகிறான். இது போன்ற நிகழ்வுகள் அன்றாடம் சமூகத்தில் நடந்துகொண்டே இருக்கின்றன. மருத்துவர் சிவபாலன் இந்த விஷயங்களை அடிப்படையாகக் கொண்டே உயிர்நதி என்ற நாவலையும் எழுதி இருக்கிறார்.

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் அரசு மகப்பேறு மருத்துவராக இருக்கும் தமிழ்த்தென்றல் அரவிந்த் சுவாரசியமான ஒரு தகவலைச் சொல்கிறார். ‘இந்த கொரொனா லாக்டவுன் பலருக்கு சிரமத்தைக் கொடுத்தாலும் குழந்தைப்பேற்றுக்காக சிகிச்சை பெற்றுவந்த பல தம்பதிகளுக்கு வரமாக அமைந்தது என்னவோ நிஜம். கணவனும் மனைவியும் வேலை தொடர்பான மன அழுத்தங்கள் இன்றி வீட்டில் இருந்ததால், வீட்டில் இருந்தே பணிபுரிந்ததால், பல தம்பதிகள் சிகிச்சை தேவைப்படாமலே கருவுற்று குழந்தை பெற்றதைப் பார்க்கமுடிந்தது. அதுவும் இரண்டு முறை ஐவிஎப் செய்துகொண்ட ஒரு தம்பதிக்கு இரண்டு முறையும் தோல்வியில் முடிந்திருந்தது. அவர்களுக்கு கோவிட் சமயத்தில்  சிகிச்சை இன்றியே சாதாரணமாக கருவுற்று குழந்தை பிறந்ததையும் நான் கண்டேன்,' என்கிறார்.

‘பொதுவாக பெண்ணுக்கு எப்போது கருமுட்டை வெளியாகிறது என்பதைக் கண்டறிய இப்போது கிட்கள் வந்துவிட்டன. இவற்றைப் பயன்படுத்தி வீட்டிலேயே கண்டறிந்து அந்த சமயத்தில் சேர்ந்தால் பிரச்னை இன்றி கருவுறலாம் என்பதைத்தான் எங்களிடம் சிகிச்சைக் காக வருபவர்களிடம் முதல் ஆலோசனையாகச் சொல்வதுண்டு. வெளிவரும் கருமுட்டைக்கு ஒரு நாள்தான் ஆயுள். அந்த நாட்கள் முக்கியமானவை. சீக்கிரமாகக் கல்யாணம் பண்ணிக்கொண்டு சீக்கிரமாக ஐவிஎப் சிகிச்சை எடுத்து அதாவது 21, 22 வயதுக்குள்ளேயே உடல் முதிர்ச்சி அடைவதற்குள்ளாகவே அவசரப்பட்டிருக்கும் பெண்களையும் பார்த்து வருகிறோம். உடல் குறிப்பிட்ட வயதையும் வளர்ச்சியையும் அடைந்தால்தான் கருமுட்டை சுழற்சியும் முறையாக நடக்கும்,' என்று சொல்கிறார் அவர்.

குழந்தைப் பேற்றுக்காக ஒருபுறம் குடும்பங்கள் போராடிக் கொண்டிருக்கையில் இரண்டுபேரும் வேலைக்குப் போகும் தம்பதிகள் பலருக்கு குழந்தை பெற்றுக்கொள்ள நேரமே இல்லாத்தால் தள்ளிப்போட்டுக்கொண்டே போகிறார்கள். தன்னுடைய வேலைதான் முக்கியம் என்பதால் பிள்ளை வேண்டாம் என்று நினைக்கும் பெண்களும் ஒருபுறம் கணிசமாக இருக்கிறார்கள்.

பிரபலங்களில் நமது இந்தி சினிமா நடிகை சுஷ்மிதா சென் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். இரண்டு பெண்குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார் அவர். புதிதாகப் பெற்று வளர்ப்பதைத் தவிர்த்து பெற்றோரே இல்லாத குழந்தைகளை ஏற்று வளர்ப்பது என்பது உயர்வான மனம் அல்லவா?

பிப்ரவரி, 2022