ஓர் அரசியல் கட்சி உருவாவதற்கு ஆயிரத்தெட்டு காரணங்கள் தேவைப்படலாம். ஆனால் அது உடைவதற்கு இரண்டே காரணங்கள் போதும். ஒன்று, சித்தாந்தச் சிக்கல். மற்றொன்று, தன்முனைப்பு.
சித்தாந்தச் சிக்கலைக்கூட கொஞ்சம் சிரமப்பட்டு, சரிசெய்து கொள்ளும் தலைவர்கள், தன்முனைப்புடன் மட்டும் சமரசம் செய்துகொள்ளத் தயாரில்லை. இரண்டில் ஒன்று பார்த்துவிடலாம் என்று ஆரம்பித்து, இரண்டு கூறுகளாகப் பிரிந்து விடுகிறார்கள். தமிழக அரசியல் களத்தில் நடந்த சில முக்கியமான பிளவுகளை ஆய்வுசெய்தபோது இது மேலும் உறுதியாகிறது.
திராவிட இயக்கத்தில் சில பிளவுகள்
மணியம்மை திருமணத்தை முன்னிட்டு பெரியாரிடம் இருந்து அண்ணா விலகியபோது, சம்பத் மட்டும் பெரியாரோடு தங்கியிருந்தால் அவருடைய அரசியல் வாழ்க்கையின் திசைவழிப்பாதை வேறெங்கோ சென்றிருக்கும். ஆனால் அண்ணாவின் தம்பியாக அவரை நம்பி வந்து, திமுகவை நிர்மாணித்து, அந்தக் கட்சிக்குக் கொள்கை, கோட்பாட்டு முகங்களை உருவாக்கினார் சம்பத்.
அறிவுத்தளத்தில் இயங்கிய அவருக்கு திமுகவின் முன்னணித் தலைவர்கள் சினிமாவையே சுற்றிச்சுற்றி வருவதிலும் வளர்வதிலும் விருப்பமில்லை. சித்தாந்தம் பேச வேண்டிய மேடையில் சினிமா பேசுவதை அவர் வெறுத்தார். அதை முதலில் மென்மையாகச் சொன்னார். பின்னர் உரத்த குரலில் சொன்னார். அவருடைய கருத்துக்கு ஆதரவாக அண்ணாவிடமிருந்து பெரிய சலனங்களில்லை. இன்னொரு பக்கம், கருணாநிதி போன்ற இளம் தலைவர்களின் அணுகுமுறைகளும் செயல்பாடுகளும் சம்பத்துக்குப் பிடித்தமானதாக இல்லை. அவர்களுடைய வளர்ச்சியையும் சம்பத்தால் செரித்துக்கொள்ள முடியவில்லை.
மாயவரம் பொதுக்குழுவில் ஆரம்பித்த சம்பத் - கருணாநிதி மோதல் வேலூர் பொதுக்குழுவில் அப்பட்டமாக அம்பலத்துக்கு வந்தது. அவைத்தலைவர் பதவிக்கு அதிக அதிகாரம், பொருளாளர் பதவிக்கு பொறுப்புகள் குறைப்பு என்பதுதான் பிரச்னைக்குக் காரணமானது. பொதுக்குழுவில் தள்ளுமுள்ளுகளும் கைகலப்புகளும் நடந்தன. பின்னர் அவைத்தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார் சம்பத்.
அத்தோடு பிரச்னை முடிந்தது என்றுதான் நினைத்தார்கள். ஆனால் பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் சம்பத் ஆதரவாளரான கவிஞர் கண்ணதாசன் தாக்கப்பட்டது மீண்டும் பிரச்னையைக் கிளப்பியது. நீதிகேட்டு உண்ணாவிரதம் தொடங்கினார் சம்பத். திமுக உடைவதற்கான எல்லா காரியங்களும் நடந்துவருவதாக பத்திரிகைகள் பரபரப்பு காட்டின. சம்பத்தைச் சமாதானம் செய்யும் நடவடிக்கைகளை எடுத்தார்கள். ஆனால் அது பலனைத் தரவில்லை. உச்சகட்டமாக, திமுகவில் இருந்து வெளியேறிய சம்பத், 1961 மத்தியில் தமிழ்த்தேசியக் கட்சியைத் தொடங்கினார்.
ஆம், நேற்றுவரை திராவிடத் தேசியம் பேசிய சம்பத், இப்போது தமிழ்த்தேசியம் பேசத் தொடங்கினார். திராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்தாமல், இந்தியக் கூட்டரசுக்குள் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தமிழ்த்தேசியம்தான் சரியான பாதை என்றார் சம்பத்.
திமுகவுக்கு எதிராகக் களம் கண்ட தமிழ்த் தேசியக் கட்சியால் தேர்தல் அரசியலில் சோபிக்கமுடியவில்லை. நேருவின் மறைவுக்குப் பிறகு சோஷலிச சக்திகளுக்கு காமராஜர் விடுத்த அழைப்பை ஏற்று காங்கிரஸில் கரைந்துவிட்டார் சம்பத்.
திமுகவில் ஈ.வெ.கி. சம்பத் ஏற்படுத்தியதுதான் முதல் பிளவு. அதன்பிறகு பெரிய பிளவுகள் எம்.ஜி.ஆர், வைகோ இருவரும் இருபதாண்டு இடைவெளியில் ஏற்படுத்தியவைதான். அதைப் பற்றி இதே இதழில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இடைப்பட்ட காலத்தில் வேறு சில பிளவுகளும் நடந்தேறின. முக்கியமாக, அதிமுகவில் ஏற்பட்ட ஜெ - ஜா பிரிவுகள். இந்த பிளவு தாற்காலிகமானது. இதுபற்றியும் இந்த இதழில் தனிக்கட்டுரை உள்ளது.
திராவிட இயக்கத்தில் மேற்கண்ட பிளவுகளைத்தான் பெரிய பிளவுகளாகச் சொல்லமுடியும். அதேசமயம்,
சின்னச்சின்ன பிளவுகள் ஏராளம் நடந்துள்ளன. அதிமுக உருவாவதற்கு முன்பே கருணாநிதிக்கும் நெடுஞ்செழியனுக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட மோதல் காரணமாக, மக்கள் திமுகவைத் தொடங்கினார் நெடுஞ்செழியன். ஆனால் 1977 மக்களவைத் தேர்தல் எம்.ஜி.ஆரின் அதிமுக வெற்றிபெற்றதும், தனது கட்சியை அதிமுகவில் இணைத்துவிட்டார் நெடுஞ்செழியன். (இதற்கும் முன்னதாகவே அண்ணா வழி திமுக என்றொரு கட்சி உருவானது. ஆனால் அது எடுபடவில்லை. பின்னர் அதே சாயல் கொண்ட பெயரைத் தன்னுடைய கட்சிக்கு வைத்தார் எம்.ஜி.ஆர்)
எம்.ஜி.ஆர் உயிருடன் இருக்கும்போதே அவருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான அமைச்சர் எஸ்.டி. சோமசுந்தரம் தனிக்கட்சி தொடங்கினார். என்ன பெயரில் தெரியுமா? அதிமுக என்று. காரணம், அப்போது எம்.ஜி.ஆர் தனது கட்சியின் பெயரை அனைத்திந்திய அதிமுக என்று மாற்றியிருந்தார். என்றாலும், சிக்கல்களைத் தவிர்க்க நமது கழகம் என்று கட்சியின் பெயரை மாற்றிக்கொண்டார் எஸ்.டி.எஸ்.
ஆனால் எம்.ஜி.ஆருடனான எதிர்நீச்சல் எடுபடாததால் மீண்டும் அவரிடமே ஐக்கியமாகிவிட்டார் எஸ்.டி.எஸ். இவரே ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, அதிமுகவுக்கு எதிராக நால்வர் அணியை உருவாக்கிச் செயல்பட்டார். மீண்டும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அதிமுகவிலேயே சரணடைந்துவிட்டார்.
அதிமுகவில் இருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கியவர்களுள் மூன்று பேர் முக்கியமானவர்கள். ஒருவர், எம்.ஜி.ஆரின் அணுக்கத் தொண்டர் ஆர்.எம்.வீரப்பன். எம்.ஜி.ஆர் மன்றம், எம்.ஜி.ஆர் முன்னணி, எம்.ஜி.ஆர் கழகம் என்று மெல்ல மெல்ல நகர்ந்தவர், இப்போது திமுகவின் ஆஸ்தான கூட்டணிக் கட்சியாக எம்.ஜி.ஆர் கழகத்தை மாற்றிவிட்டார். திமுக தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் எம்.ஜி.ஆரின் படத்தைப் பயன்படுத்த ஒரு வாய்ப்பு என்பதால் ஆர்.எம்.வீயை எப்போதும் தம்வசம் வைத்திருக்கிறார் கருணாநிதி.
அடுத்து, எஸ். திருநாவுக்கரசு. அண்ணா புரட்சித் தலைவர் தமிழக முன்னேற்றக் கழகம், எம்.ஜி.ஆர் அதிமுக என்று கட்சிகளின் பெயரை மாற்றியவர், பின்னர் தனது பெயரையும் சு. திருநாவுக்கரசர் என்று மாற்றி, பகுத்தறிவுப் பாசறையில் இருந்து இந்துத்துவ முகாமுக்கு இடம்பெயர்ந்தார். அதற்குப் பரிசாக வாஜ்பாய் அமைச்சரவையில் இடம்பிடித்தார். தற்போது அவர் இருப்பது காங்கிரஸில்.
மூன்றாமவர், பண்ருட்டி ராமச்சந்திரன். ஜெயலலிதாவின் தீவிர எதிர்ப்பாளராக அறியப்பட்டவர். நால்வர் அணியின் ஓர் அங்கமாக இருந்தவர். அதிமுகவில் இருந்து விலகி, சிலகாலம் தனியாக இயங்கினார். பின்னர் பாமகவில் இணைந்து எம்.எல்.ஏவாக ஆனார். டாக்டர் ராமதாஸுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அங்கிருந்து விலகி, மக்கள் நலவுரிமைக் கழகத்தைத் தொடங்கினார். திமுக ஆதரவு நிலைப்பாட்டையும் எடுத்தார். பின்னர் அரசியலில் இருந்து தாற்காலிகமாக விலகினார்.
ஆனால் உங்கள் சேவை இன்னும் தேவை என்று சொல்லி, அவரைத் தன்னுடைய கட்சிக்கு அழைத்துவந்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். 2005 தொடங்கி கடந்த ஆண்டுவரைக்கும் தேமுதிகவின் அவைத்தலைவராக, விஜயகாந்தின் அரசியல் ஆலோசகராக இருந்தார். அதிமுக - தேமுதிக கூட்டணிக்கான பாலமாக விளங்கினார். ஆனால் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கும் இவருக்குமான அதிகாரப்போட்டியைத் தாங்கமுடியாமல் தேமுதிகவில் இருந்து விலகினார். ஆனாலும் அரசியல் ஆசை அத்தனை சுலபத்தில் அகன்றுவிடுமா என்ன? பண்ருட்டியார் இப்போது அதிமுகவில். காலச்
சக்கரம் முன்னோக்கிச் சுழலும். ஆனால் அரசியல் சக்கரம் தேவைப்பட்டால் பின்னோக்கியும் சுழலும்.
திமுகவில் இருந்து பிரிந்து வைகோ மதிமுகவை உருவாக்கியதை அறிவோம். அந்தக்கட்சி தொடங்கிய நாள் முதல் பெரிய பிளவுகள் எதையும் சந்திக்கவில்லை. மாறாக, அந்தக் கட்சியின் முக்கியத் தலைவர்கள், தளபதிகள் பலரும் மொத்தமாக விலகாமல், சில்லறை சில்லறையாக விலகிச் சென்றுள்ளனர். பொன். முத்துராமலிங்கம், டி.ஏ.கே. லக்குமணன், தங்கவேலு, மைதீன்கான், மா. மீனாட்சிசுந்தரம், கே.பி. ராமலிங்கம் என்று ஒவ்வொருவராக வெளியேறினார்.
ஆனால் சற்றே கலகம் செய்து, போட்டி மதிமுக என்றெல்லாம் படாடோபமாக வெளியேறியவர்கள் எல்.கணேசனும் செஞ்சி ராமச்சந்திரனும்தான். ஆனால் இன்று எல்.கணேசன் அரவமின்றி இருக்கிறார்.
செஞ்சிக்கோட்டை போயஸ் தோட்டத்தில் முடங்கிவிட்டது.
தேசிய இயக்கங்களில் சில பிளவுகள்
தேசிய இயக்கம் என்றால் தமிழகத்தில் காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என்ற நான்கு கட்சிகள்தான். இவற்றில், பாஜக தொடங்கியதில் இருந்து இன்றுவரை வளர்ந்துவரும் கட்சிதான். ஆகவே, அந்தக் கட்சியில் குறிப்பிடத்தக்க பிளவுகள் ஏதுமில்லை. மைத்ரேயன் போன்ற ஓரிரு பிரமுகர்கள் மாற்றுக்கட்சிக்குச் சென்றிருக்கலாம். அவ்வளவே.
அறுபதுகளின் மத்தியில் கம்யூனிஸ்ட் கட்சியில் பெரும்பிளவு ஏற்பட்டது. அதுதான் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரிவுக்கு வித்திட்டது. அதைத் தொடர்ந்து நக்சல்பாரி கலகத்தில் ஆயுதம் தாங்கி பிரிந்துபோன மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி பின்னர் அதுவும் பல்வேறுக் குழுக்களாக சிதறியது.
1974ல் திமுக - இந்திய கம்யூனிஸ்ட் உறவில் ஏற்பட்ட சிக்கலைத் தொடர்ந்து மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் மணலி கந்தசாமி தமிழ்நாடு கம்யூனிஸ்ட் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி, திமுகவுடன் அணி அமைத்துக்கொண்டார். ஆனால் அந்தக் கட்சி தமிழக அரசியலில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
அதுபோலவே, கருத்துவேறுபாடு காரணமாக இந்திய கம்யூனிஸ்டில் இருந்து விலகிய மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் எம். கல்யாணசுந்தரம் ஐக்கிய பொதுவுடைமைக் கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். அவருடன் இருந்தவர்களுள் முக்கியமானவர் தா.பாண்டியன். பின்னர் கல்யாணசுந்தரத்தின் மறைவுக்குப் பிறகு கட்சியைக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்து விட்டார்.
ஆனால் பெரிய தேசியக் கட்சியான காங்கிரஸ் கட்சி பல்வேறு பிளவுகளைச் சந்தித்திருக்கிறது. முக்கியமாக, ராஜாஜியின் சுதந்தரா கட்சியைச் சொல்லவேண்டும். நேருவின் பொருளாதாரக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஏற்பட்ட சித்தாந்த மோதல் காரணமாகவே 1959ல் சுதந்தரா கட்சியைத் தொடங்கினார் ராஜாஜி. தேசிய அளவிலான அந்தக் கட்சி தமிழகத்தில் வீரியத்துடன் செயல்பட்டது. முதல் தேர்தலில் முத்துராமலிங்கத் தேவர், அடுத்த தேர்தலில் அண்ணாதுரை என்று விதவிதமான கூட்டணிகளை அமைத்து தமிழ்நாட்டு அரசியல் களத்தில் திருப்பங்களை நிகழ்த்தக் காரணமாக இருந்தார் ராஜாஜி.
காமராஜர் காலத்திலும் காங்கிரஸில் பிளவுகள் ஏற்பட்டன. ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் உருவாகின. அவற்றுக்குப் பிறகு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை ஐந்து தலைவர்கள் நிகழ்த்திய பிளவுகள். நடிகர் சிவாஜி கணேசன், குமரி அனந்தன், பழ. நெடுமாறன், வாழப்பாடி ராமமூர்த்தி. முக்கியமாக, மூப்பனார். இந்த ஐந்து பிளவுகளில் முதல் நான்குமே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாதவை. ஆனால் ஐந்தாவது பிளவு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு ஆகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
காங்கிரஸ் தலைவர்களுக்கே உரித்தான கோஷ்டிப் பிரச்னை காரணமாக எண்பதுகளில் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார் குமரி அனந்தன். அதே சமயத்தில்தான் தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கியிருந்தார் பழ. நெடுமாறன். இருவருமே எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுகவுடன் அணி அமைத்துப் போட்டியிட்டனர்.
கால ஓட்டத்தில் குமரி அனந்தன் தனது தாய்க்கட்சியான காங்கிரஸுக்கே சென்றுவிட்டார். ஆனால் பழ.நெடுமாறனோ, தேசிய அரசியல், தேர்தல் அரசியல் என்ற இரண்டில் இருந்தும் விலகி, தமிழ்த்தேசியப் பாதைக்குச் சென்றுவிட்டார். இப்போது மீண்டும் தேர்தல் அரசியலுக்குத் திரும்புவதற்கான சமிக்ஞை தெரிகிறது.
எண்பதுகளின் இறுதியில் நடிகர் சிவாஜி கணேசன் காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு பிளவை ஏற்படுத்தினார். காங்கிரஸ் கட்சித் தலைமையால் குறிப்பாக, ராஜீவ் காந்தியால் அதிகம் கவனிக்கப்படாத கோபம் சிவாஜிக்கு. முக்கியமாக, ஜானகி எம்.ஜி.ஆரின் அரசு கவிழாமல் தடுப்பதற்கு காங்கிரஸ் கைகொடுக்கவேண்டும் என்ற சிவாஜியின் கோரிக்கையை ராஜீவ் நிராகரித்துவிட்டார். மேலும், ஜானகி அரசைக் கலைத்ததும் சிவாஜியைக் கவலைப்பட வைத்தது.
விளைவு, ஜானகி எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக காங்கிரஸில் இருந்து விலகினார் சிவாஜி. தமிழக முன்னேற்ற முன்னணி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி, அடுத்துவந்த தேர்தலில் ஜானகி பிரிவு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து படுதோல்வியைச் சந்தித்தார். அப்போது
சிவாஜியுடன் சென்ற எம்.எல்.ஏக்களுள் ஒருவர்தான் இன்றைய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
தொண்ணூறுகளின் மத்தியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து என்.டி. திவாரி விலகியபோது, அவர் பக்கம் நின்றவர் வாழப்பாடி ராமமூர்த்தி. திவாரி தலைமையிலான இந்திரா காங்கிரஸின் தமிழகப் பிரிவுக்குத் தலைமையேற்று நடத்திய அவர், பின்னர் தமிழக ராஜீவ் காங்கிரஸ் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றார். ஆனாலும் காங்கிரஸில் இருந்தபோது அனல் பறக்கும் அறிக்கை அரசியலை நடத்தியவர், தனிக்கட்சி கண்டபிறகு எதிர்பார்த்த வெற்றியைப் பெறமுடியவில்லை.
ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய சேதாரத்தை ஏற்படுத்திய பிளவு என்று 1996ல் மூப்பனார் ஏற்படுத்திய பிளவைத்தான் சொல்லவேண்டும். 1991-96 ஆட்சிக் காலத்தில் அதிமுக அரசின் மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தியும் எதிர்ப்பும் காங்கிரஸைத் தாக்காமல் இருக்க, அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவேண்டாம் என்றார் மூப்பனார். ஆனால் நரசிம்மராவோ அதிமுகவுடன் அணி அமைக்கும் முடிவில் அசாத்திய உறுதி காட்டினார். விளைவு, காங்கிரஸில் இருந்து வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார் மூப்பனார்.
பத்திரிகையாளர் சோ ராமசாமியின் உதவியால் திமுக - தமாகா அணி உருவானது. அந்த அணிக்கு நடிகர் ரஜினிகாந்தும் ஆதரவளித்தார்.
ப.சிதம்பரத்தின் பகீரத முயற்சிகளால் அந்தக் கட்சிக்கு சைக்கிள் சின்னம் கிடைத்தது. 40 சட்டமன்றம், 20 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட தமாகா அபார வெற்றியைப் பிடித்தது. மத்திய அமைச்சரவையில் தவிர்க்கமுடியாத சக்தியாக உருப்பெற்றது.
தமிழ்நாட்டு அரசியல் களத்தில் ஒரு தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து உருவான ஒரு கட்சி பெருவெற்றியைப் பெற்றது என்றால் அது தமாகா மட்டுமே. மூப்பனாரின் மறைவுக்குப் பிறகு தமாகாவை காங்கிரஸில் சேர்த்துவிட்டார் ஜி.கே. வாசன்.
இன்னும் சில பிளவுகள்
தேசிய, திராவிட இயக்கங்களைத் தாண்டி வேறு இயக்கங்களும் பிளவுபட்டுள்ளன. குறிப்பாக, பாமக. அவ்வப்போது பிரிவுகளும் விலகல்களும் நடந்தன. என்றாலும், அதன் காரணமாக அந்தக் கட்சிக்கு பெரிய சேதாரம் ஏற்படவில்லை. சேதாரத்துக்கு வேறு காரணங்கள் இருந்தன என்பது தனிக்கதை. பேராசிரியர் தீரன், வன்னிய அடிகளார், பாமகவின் இஸ்லாமிய முகமாகப் பார்க்கப்பட்ட பழனிபாபா, தலித் முகமாகப் பார்க்கப்பட்ட ஜான் பாண்டியன், தலித் எழில்மலை, பு.தா.இளங்கோவன் என்று பலரும் வெவ்வேறு காலகட்டங்களில் பாமகவில் இருந்து விலகியுள்ளனர். பாமகவில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கி, ஈழம், தமிழ்த்தேசியம் என்று ஓரளவுக்குப் பரபரப்புடன் இன்று இயங்கிவருபவர் பண்ருட்டி வேல்முருகன்.
பிளவுகளும் பிரிவுகளும் தேர்தல் அரசியலின் தவிர்க்கமுடியாத அங்கமாக மாறிப்போய்விட்டன. அதுபோலவே, பிரிந்து போனவர்கள் கண்கள் பனிக்க, இதயம் இனிக்க மீண்டும் இணைவதும் இயல்பான ஒன்றாகிவிட்டன. அரசியலில் இது எப்படி
சாத்தியமாகிறது? அதுதான் அரசியல்!
செப்டெம்பர், 2014.