சிறப்புப்பக்கங்கள்

பிரியங்கா: புகுந்த வீட்டுக்கு எதிரான புயல்

வெற்றி

அப்போதெல்லாம் என் அம்மாதான் அடிக்கடி என்னை சினிமாவுக்கு அழைத்துச் செல்வார். அநேகமாக என் அம்மாவுடன் நான் தியேட்டரில் பார்த்த கடைசிப் படம் ‘பிரியங்கா'வாக இருக்கலாம். இந்தப் படம் 1994 இல் வெளியாகி இருக்கிறது. இந்திப் படத்தின் ரிமேக் என்பதை பின்னாட்களில் தெரிந்து கொண்டேன். ரேவதி ஜெய்ராம் பிரபு ஆகியோர் நடித்திருப்பார்கள்.

அந்த வயதில் இப் படத்தின் கதை எனக்கு அவ்வளவு தெளிவாகப் புரிந்துவிடவில்லை. நான் டிவி சீரியலுக்கு எழுதத் தொடங்கிய கால கட்டத்தில் சக எழுத்தாளர்கள் இந்தப் படத்தைப் பற்றி சொல்லி பார்க்கச்  சொன்னார்கள். ஏன் என்ற கேள்விக்கு பதிலை இந்தக் கட்டுரையின் இறுதியில் சொல்கிறேன்

படத்தில் டைட்டில் ரோல் ரேவதிக்கு. நேர்மையும் மனித நேயமும் கொண்ட ஒரு ஏழைப் பெண். இவள் செல்வாக்கு மிகுந்த ஒரு பணக்கார வீட்டுக்கு மருமகளாகிறாள். அந்த வீட்டில் வேலை பார்க்கும் பதின் வயது பெண்ணுக்கு இழைக்கப்படும் ஒரு கொடூரத்துக்கு நேரடி சாட்சியாகிறாள்  பிரியங்கா. அக் கொடூரத்தை பிரியங்காவுடைய கணவனின் தம்பி தன் நண்பர்களுடன் சேர்ந்து செய்திருப்பான்.

பிரியங்கா, தவறு செய்தவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க சட்டப் போராட்டம் நடத்த தள்ளப்படுகிறாள். இதனால் புகுந்த வீட்டில் இருந்து விரட்டியடிக்கப்படுகிறாள். புகுந்த வீட்டு ஆட்களோ, இவள் வாயை அடைக்க பைத்தியம் என்றெல்லாம் பட்டம் கட்டுகிறார்கள். இவள் கணவனோ, காதல் மனைவியா? தாய் வீடா? என்று இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவிக்கிறான்.

குற்றவாளித் தரப்பில் இருந்து லஞ்சம் வாங்கிய ஒரு போலீஸ் அதிகாரி பிரியங்காவின் போராட்டத்துக்கு முட்டுக் கட்டைப் போடுகிறான். சொந்த வாழ்க்கையில் மிகப்பெரிய இழப்பைச் சந்தித்த வழக்கறிஞர் பிரியங்காவுக்கு உதவ முன்வருகிறார். இறுதியில் பிரியங்கா கணவனின் உதவியுடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியைப் பெற்றுத் தருகிறாள்.

படத்தின் பலம் பிரியங்கா கதா பாத்திரம் என்றால் இன்னொரு பலம் அதை ஏற்று நடித்த ரேவதி.

இன்றைக்கு வன்புணர்வை கதைக் களமாக வைத்து நிறையப் படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் பிரியங்காவில் 25 ஆண்டுகளுக்கு முன்பே வன்புணர்வால் பாதிக்கப்படும் விளிம்புநிலை மக்களின் நிலையைத் தத்ரூபமாக சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு பெண் நியாயத்தின் பக்கம் நிற்பதற்கு; அதுவும் கணவர் வீட்டின் விருப்பத்துக்கு எதிராகவோ அல்லது கணவர் வீட்டுக்கு நேர் எதிராகவோ நிற்பதற்கு எவ்வளவு துணிச்சல் தேவைப்படுகிறது? இப்படிப்பட்ட பெண்களின் தைரியத்தைக் குலைக்க என்னவெல்லாம் அஸ்திரங்கள் ஏவப்படும் என்பதெல்லாம் இப்படத்தில் எதார்த்தத்தின் மிக அருகில் இருந்து சொல்லியிருப்பார்கள். அது சரி சீரியல் எழுத்தாளர்கள் ஏன் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள்?

நேர்மையும் நன்னடத்தையும் கொண்ட ஒரு பெண் விதி வசத்தால் தீயவர்கள் அதிகமுள்ள குடும்பத்தில் வாக்கப்பட்டு, அங்கே இருந்து கொண்டே அவர்களுக்கு எதிராகப் போராடுவதுதான் நம் சீரியல்களின் டெம்ப்லேட் கதைக்களம்.

அந்தப் பெண் படித்தவள்- படிக்காதவள்-, ஐஏஎஸ் அதிகாரி- ஐபிஎஸ் அதிகாரி, -கருப்பானவள், -குண்டானவள் என இதில் ஏதாவது ஒரு விசயத்தில் மாறுபட்டிருக்கலாம் மற்றபடி இந்த டெம்ப்லேட்டை நிச்சயம் மீறி இருக்க மாட்டாள். நம் சீரியல்களின் தோற்றுவாய் பிரியங்கா (படம்) தான்!  சீரியல்கள் அனைத்தும் Women centric என்றால், அதற்கு விதை போட்டது பிரியங்கா தான். இந்த பிரியங்காவின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள இதைவிட வேறென்ன வேண்டும்?

மார்ச், 2023