சிறப்புப்பக்கங்கள்

பிரித்து எழுதுக: அரை நூற்றாண்டு அரசியலின் பிரிவினை வரலாறு

வாலாசா வல்லவன்

1949,69,72,87,93 ஆகிய ஆண்டுகளில் கட்சிகளுக்குள் ஏற்பட்ட கலகங்கள் தமிழக அரசியலின் நிலையைத் தீர்மானித்தவை. இவை தனி மனித மற்றும் சித்தாந்த சிக்கல்களால் ஏற்பட்டவை. அந்தந்த கட்சிகளீன் போக்கை மாற்றி அமைத்தவை. இந்த நிகழ்வுகள் பற்றிய விரிவான குறுக்கு வெட்டுப் பார்வை

திமுக தொடக்கம்: வாலாசா வல்லவன் – கண்ணீர்த்துளிகள்

திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணாத்துரையும் அவரது சகாக்களும் 1949ல் பிரிந்து சென்று திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியது தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனை. பிரிந்து சென்ற அண்ணாவையும் மற்றவர்களையும் ‘கண்ணீர்த்துளிகள்’ என்று விடுதலையில் குத்தூசி குருசாமி எழுதிக்கொண்டிருந்தார். அநேகமாக அவர்களைப் பெரியாரோ திகவினரோ பிற்காலத்தில் பெரும் சக்தியாக உருவெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் காங்கிரஸ் அவ்வளவு வலுவான சக்தியாக தமிழ்நாட்டில் இருந்தது.

அண்ணாவுக்கும் பெரியாருக்கும் முதல் முதலில் ஏற்பட்ட உறவு திருப்பூரில் 1935-ல் நடந்த செங்குந்தர் வாலிபர் சங்க மாநாட்டில்தான். அதில் அண்ணாவின் பேச்சை ரசித்த பெரியார், அவரை ஈரோட்டுக்கு அழைத்து தன்னுடைய குடிஅரசு பத்திரிகையில் வேலைக்கு வைத்துக்கொண்டார்.

அதிலிருந்து பெரியாருடன் இணைந்து பணியாற்றிய அண்ணா 1942-ல் காஞ்சிபுரத்துக்கு வந்து தனக்கென்று திராவிடநாடு பத்திரிகையைத் தொடங்கினார். இதற்கான அச்சுப்பொருட்களை பெரியார் கொடுத்து உதவினார் என்றாலும்கூட இந்த பத்திரிகை என்பது அண்ணாவின் வளர்ந்துவரும் செல்வாக்கின் விரிவைக் கூட்ட உதவிசெய்தது. பின்னாளில் முக்கியமான தன் சொந்தக் கருத்துகளை இந்த பத்திரிகையில்தான் அண்ணா வெளியிட்டார்.

தன் பேச்சாற்றலாலும் எழுத்தாற்றாலும் சுயமரியாதை இயக்கத்தில் அண்ணா வளர்வதை பெரியாரும் பல்லாண்டுகள் ஆதரித்துவந்தார். 1938-ல் இந்தி எதிர்ப்புப்போராட்டத்தின்போது பெரியார் பெல்லாரி சிறையில் இருந்தார். அப்போது போராட்டத்துக்கு அறிவிக்கப்பட்ட சர்வாதிகாரிகளில்(எட்டாவது) ஒருவராக அண்ணா அறிவிக்கப்பட்டு சிறை சென்றார். அந்த காலகட்டம்வரை அவர் சாதாரணமான தலைவராகத்தான் இருந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அரங்கசாமி நாயக்கர், ஏ.கே. தங்கவேலு முதலியார் போன்றவர்களின் ஆதரவும் அண்ணாவின் வளர்ச்சிக்கு உதவி செய்தது.

சுயமரியாதை இயக்கத்தில் பெரியார் தலைவராக இருந்தபோது அவருக்கு பொதுச் செயலாளராக இருந்தவர் கி.ஆ.பெ.விசுவநாதன். பின்னர் நீதிக்கட்சிக்கு பெரியார் தலைவர் ஆனதும் கி.ஆ.பெ.விசுவநாதன்தான் பொதுச்செயலாளர் ஆகிறார். பின்னர் பெரியாரின் தலைமையை எதிர்த்து அவர் பதவி விலகியபோது அண்ணா அந்த இடத்துக்கு வந்தார்.

1944-ல் சேலத்தில் நடந்த மாநாடு முக்கியமானது. அதில் நீதிக்கட்சியில் இருந்த பெருந்தனக்காரர்களை ஓரங்கட்ட முடிவு செய்யபட்டது. தென்னிந்திய நல உரிமைச்சங்கம் என்ற பெயரை திராவிடர் கழகம் என்று மாற்றும் தீர்மானத்தை அண்ணாதான் முன்மொழிந்தார்.

அதற்குப் பின்வந்த ஆண்டுகளில் பெரும் இளைஞர் கூட்டம் திராவிடர் கழகத்தில் இணைந்தது. பல இளம் தலைவர்கள் தலையெடுத்தார்கள். நெடுஞ்செழியன் எம்.ஏ. படித்திருந்தார். அவர் மாத சம்பளத்துக்கு இயக்கத்தின் முழுநேர ஊழியராக வேலை பார்த்தார். என்.வி.நடராசன், ஆசைத் தம்பி போன்ற பல இளம் தலைவர்களெல்லாம் இருந்தார்கள். பொதுவாகவே அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் இளைஞர்களிடம் வர ஆரம்பித்திருந்தது. அப்போது தி.கவில் சுமார் 40,000 பேர் உறுப்பினர்களாக இருந்தனர்.

 பெரியார் தேர்தலில் போட்டியிடும் முனைப்பே சுத்தமாக  இல்லாமல் இருந்தவர். தேர்தலில் ஈடுபட்ட கட்சியான நீதிக்கட்சியையும் கைப்பற்றி அதை சமூக இயக்கமாக மாற்றிவிட்டவர். அவருடன் முரண் ஏற்பட அரசியல் அதிகார ஈடுபாடே முழுமுதல் காரணம்.

இந்நிலையில்தான் 1947-ல் இந்தியா விடுதலை அடைகிறது. அதற்கு பத்துநாட்கள் முன்பாக பெரியார் தரப்பில் இருந்து“சுதந்திர தினத்தை துன்பநாளாகக் கொண்டாடவேண்டும். வெள்ளையர்கள் இரும்புச் சங்கிலி போட்டு நம்மை அடிமையாக வைத்திருந்தார்கள். இந்த சுதந்தரம் என்பது நம்மை பொன்னால் ஆன சங்கிலியால் அடிமைப் படுத்துவது. இரும்பு சங்கிலி அடித்தால் உடையும். பொற்சங்கிலியை உடைக்க முடியாது. திராவிடர்கள் அனைவரும் சுதந்தர தினவிழா கொண்டாட்டங்களைப் புறக்கணிக்கவேண்டும்” என்று அறிவிப்பு வருகிறது.இதற்கு மாறுபட்ட கருத்தாக அண்ணா ‘இன்பநாள்’ என்ற தலைப்பில் பத்து பக்கத்துக்கு திராவிடநாடு இதழில் (10.08.1947) விடுதலை நாளை ஆதரித்து ஒரு கட்டுரை எழுதினார். நமக்கு வெள்ளையர்கள், பார்ப்பனர்கள், வடவர்கள் என மூன்று எதிரிகள். ஒரு எதிரி ஒழிந்தால் மீதம் இருக்கும் இரண்டு எதிரிகளை சமாளிப்பது எளிது என்று அவர் அக்கட்டுரையில் கூறினார்.

நியாயமாகப்பார்த்தால் அப்போதே  இயக்கப் பொதுச்செயலாளர் அண்ணாவை தி.கவை விட்டு நீக்கி இருக்கவேண்டும். ஆனால் அவர் செய்யவில்லை. 1948-ல் தூத்துக்குடியில் திராவிடர் கழக மாநாடு நடந்தது. பொதுச்செயலாளர் என்ற முறையில் அண்ணா பங்கேற்றுப் பேசுவார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் கலந்துகொள்ளவில்லை. ஈரோட்டில் இதற்கு அடுத்து ஒரு தி.க. மாநாடு நடத்தினார்கள். அதில் அண்ணா கலந்துகொண்டார். அவரை வண்டியில் அமரவைத்து பெரியார் நடந்து ஊர்வலத்தில் வந்தார். பெட்டிசாவியை அவரிடம் ஒப்படைப்பதாகவும் கூறினார். பெரியாருடன் இணக்கமாகப் போவதாகத் தோன்றியது.

 இந்நிலையில் கருஞ்சட்டைப் படைக்கு எதிராக அன்றைய தமிழக முதல்வர் ஓமந்தூர் ரெட்டியார் சட்டம் கொண்டுவந்தார். அதை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணா கருப்புச்சட்டையுடன் கலந்துகொண்டார்.

திகவிலிருந்து விலகிச்செல்லும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து அண்ணாவும் அவரது ஆதரவாளர்களும் காத்திருந்தபோது அதற்கான சம்பவத்தை பெரியாரே மணியம்மையாரைத் திருமணம் செய்துகொண்டதன் மூலம் அவர்களுக்கு வழங்கினார். இன்ப நுகர்ச்சிக்காக அல்ல. சொத்துக்களைப் பாதுகாக்கவே இந்த திருமணம் என்று பெரியார் விளக்கத்தைக் கேட்க அவர்கள் தயாராக இல்லை.

1949 செப்டம்பரில் அண்ணா திமுகவைத் தொடங்கினார். அவர் பொதுச்செயலாளர். தலைவர் நாற்காலி பெரியாருக்காக காலியாக இருப்பதாகக் கூறினார். தேர்தலில் போட்டியிட்டு அரசியல்

சக்தியாக ஆகும் எண்ணம் இருந்தாலும் அதை அவர்கள் ஆரம்பத்தில் வெளிப்படையாக செயல்படுத்த முயலவில்லை. 1952-ல் தங்கள் கொள்கைகளை ஆதரிக்கும் கட்சிக்கு ஆதரவளிப்போம் என்று ஆரம்பித்தது அவர்களின் முதல் தேர்தல் அனுபவம்.  சுமார் ஏழு ஆண்டுகள் 1956 வரை தேர்தல் அரசியலில் நேரடியாக ஈடுபடாமல் திமுக தாக்குப் பிடித்தது. அதன் பின்னர் திருச்சியில் மாநாடு நடத்தி கட்சிக்காரர்களை தேர்தலில் ஈடுபடலாமா என்று கேட்டார்கள், அதில் பெரும்பாலானோர் தேர்தலில் போட்டியிடலாம் என்று வாக்களித்து ஆதரவு தெரிவித்தனர். 1957-ல் திமுக தேர்தலில் முதல்முதலாகப் போட்டியிட்டது. 15 சட்டமன்றத் தொகுதிகளையும் இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளையும் கைப்பற்றி ஜனநாயக வாக்குவங்கி அரசியலில் குதித்தது. காங்கிரஸ் எதிர்ப்பும் வடவர் எதிர்ப்பும் நீர்த்துப் போனது.

 (திராவிட இயக்க ஆய்வாளர் வாலாசா வல்லவனிடம் பேசியதிலிருந்து)

செப்டெம்பர், 2014.