எந்த சூழ்நிலையிலும் எந்த விஷயம் பற்றியும் விஷய கனத்துடன் ஏராளமாக எழுதக்கூடியவர் பிரமிள். ஆனால் சம்பாதனைக்காக எழுத முனைந்தவர் அல்ல. எனவே பெரும் பத்திரிகைகளில் எழுத அவர் முயற்சி செய்யவே இல்லை. தினமணிக்கதிரில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதியதும் அதன் ஆசிரியர் கஸ்தூரி ரங்கன் கேட்டுக்கொண்டதற்காகவே. அரும்பு என்ற கிறிஸ்துவ இதழில் அவரது வாசகரும் நண்பருமான அமிர்தராஜ் ஆசிரியராக இருந்ததால் எழுதினார். பசுமையில் அவரது நெருங்கிய நண்பர் விஷ்ணு நாகராஜன் அவரிடமிருந்து நிறைய விஷய தானங்களைப் பெற முடிந்தது. மற்றபடி அவர் எழுத்து, கசடதபற, அஃக், ஞானரதம், சதங்கை, கொல்லிப்பாவை, லயம் போன்ற சிறுபத்திரிகைகளில் மட்டுமே எழுதினார்.
இளமையில் திருகோணமலையில் பிரமிளின் அண்டையிலிருந்த பிராமணர்கள், அவரது வீட்டை நிறைய விலை கொடுத்துப் பெற தயாராக இருந்தும் நண்பர் ஒருவருக்குப் பாதி விலைக்குத் தந்துவிட்டே அப்பணத்துடன் எழுபதுகளில் தமிழ்நாடு வந்தார் பிரமிள். அத்தொகையில் பாதியை பிரான்ஸ் செல்ல, பாலசுப்ரமணியம் என்ற வெளிநாடுவாழ் நண்பர் ஒருவருக்குத் தந்தார். அம்முயற்சி பலிக்கவில்லை. மீதிப்பணத்தையுல் விரைவில் தமிழ்நாட்டில் மதுரை, பூதப்பாண்டி, திருவனந்தபுரம், சிதம்பரம், சென்னை போன்ற இடங்களிலும் டெல்லியிலும் வாழ்ந்து தீர்த்தார். பிறகு நெருங்கிய நண்பர்களிடமும் அவரது படைப்புகளின் அபிமானிகளிடமும் மட்டுமே பண உதவி பெற்று வாழ்ந்தார். எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் ஆரம்பத்திலும் அவர் மிகக்கடுமையான வறுமையை அனுபவித்திருக்கிறார். அன்றாடம் பசிக்கொடுமையால் தற்கொலை மனநிலைக்குக் கூட சென்றிருக்கிறார். நான் அவரை 1979 வாக்கில்தான் சந்தித்தேன். அவரது படைப்புகளை மிகச்சிறிய அளவில் வெளிக்கொணர்ந்தேன். படிமம், மேல்நோக்கிய பயணம், தமிழின் நவீனத்துவம், ஆயி, லங்காபுரி ராஜா, போன்ற சிறுநூல்கள் அப்படித்தான் வெளிவந்தன. அவருடைய படைப்புகளுக்கு களமாக ‘லயம்‘ என்ற சிற்றிதழையும் நடத்தினேன்.(1985 - 95) தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அவருக்கு இலக்கியமல்லாதவழி, சில நண்பர்களின் பழக்கமும் ஏற்பட்டது. அவரை ஒரு சித்தராகவும் ஆன்மபுருஷராகவும் கூட அவர்கள் ஆராதித்தனர். யோகி ராம் சுரத்குமார் போன்ற ஆன்மஞானிகளின் நெருங்கிய தொடர்பும் அவருக்கு இருந்தது.
முன்பே அவருக்கு இருந்து வந்திருக்கக்கூடிய புற்றுநோய், இக்காலத்தில் இருமுறை கடுமையான மஞ்சள்காமாலை போன்ற அறிகுறிகளைக் காட்டி, திடீரென 1996-இல் அவர் நோய்வாய்ப்பட்டார். மருத்துவமனையில் சில மாதங்கள் இருந்தபோதுதான் அது முற்றியது. அவரது நண்பர்களின் உதவியால் மருத்துவ உதவிகள் செய்ய முடிந்தது. அப்போது விளக்கு விருதும் கிடைத்தது.
பிரமிளின் படைப்புகளில் பற்றுகொண்டவரும் என் நண்பருமான மருத்துவர் சிவரமணி, வேலூர் அருகே கரடிக்குடியில் ஒரு சமுதாயமருத்துவமனையின் பொறுப்பிலிருந்தவர், பிரமிளின் கடைசிக்காலத்தைக் கவனித்துக்கொண்டார். அந்த ஊரிலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இன்று அவரது மொத்தப் படைப்புகளின் பெரும் தொகுதி வெளி வந்துள்ளது. இளைய தலைமுறையினரும் இணைய தலைமுறை வாசகரும் இன்று பேரளவு அவரைக் கொண்டாடுகிறார்கள். இயக்குநர் தங்கம் அவரைப் பற்றி ஒரு டாகுமெண்டரி எடுத்துவருகிறார். கரடிகுடியில் அவருக்கு சிறு நினைவுமண்டபமும் எடுக்கப்பட்டு வருகிறது. ஓவியர் சந்ரு அதில் வைப்பதற்கான பிரமிளின் உருவச்சிலையை செய்து முடித்துள்ளார். திருநெல்வேலியில் மயன் என்கிற ரமேஷ்ராஜா ‘பிரமிள் நூலகம்‘ ஒன்றை சிறப்பாக நடத்துகிறார். ஆர்.ஆர்.சீனிவாசன் பிரமிளுக்குப் பிறகு பிரமிள் என்ற முகநூல் குழுவையும் நடத்தி வருகிறார். நானும் அவரது படைப்புகளை தொடர்ந்து சேகரித்து வெளியிட்டு வருகிறேன். நிகழ்வுகளை ஒருங்கிணைக்கிறேன்.
பிப்ரவரி, 2023.