சிறப்புப்பக்கங்கள்

பிரசுர வேதனை

முதல் புத்தகம்

வண்ணநிலவன்

நாலுவரிக் கவிதையாக இருந்தாலும் சரி , நானூறு பக்க நாவலாக இருந்தாலும் சரி , படைப்பு என்பது ஒரு பிரசவ வேதனைதான். சிறுகதையோ , நாவலோ வெறுமனே எழுதிவிட்டால் போதாது , அது பிரசுரமாக வேண்டும். வாசகர்களின் கவனத்திற்குச் செல்ல, பிரசுரத்தை விட்டால்  வேறு வழியில்லை. பெரும்பாலான எழுத்தாளர்களைப் போல, ஆரம்ப காலத்தில் எனது எழுத்துக்களைப் பிரசுரிப்பதற்குப் பெரும்பாடு பட்டேன். பிரசுரகர்த்தர்களைத் தேடி நடையாய் நடந்தேன்.

1973 ஜுன் 18ம் தேதி வரை நான் பாளையங்கோட்டையில் தான் இருந்தேன். 1970 செப்டம்பர் முதல் எனது சிறுகதைகள் தாமரை, காந்தி, சௌராஷ்டிரமணி, மாலை முரசு போன்ற பத்திரிகைகளில் அவ்வப்போது வெளிவந்திருந்தன. 1972ல் ’கடல்புரத்தில்’ என்ற நாவலை எழுதி முடித்திருந்தேன். பாளையங்கோட்டையில் 30 ரூபாய் சம்பளத்தில் வக்கீல் குமாஸ்தா வேலைதான் பார்த்துவந்தேன். வேறு அரசு வேலையோ , சொந்தத் தொழில் செய்யவோ வழியில்லை. இந்த ஊரிலிருந்தால் முன்னேற முடியாது என்று முடிவு செய்து சென்னைக்குப் புறப்பட்டேன். 1973 ஜுன் இறுதியில் சென்னைக்கு வந்து, தி.க.சி, விக்கிரமாதித்யன்  போன்ற நண்பர்களின் உதவியால் கண்ணதாசனில் வேலை கிடைத்தது.

கண்ணதாசன் பத்திரிகையில் பிரதான வேலை ப்ரூப் ரீடிங் தான். தவிர பத்திரிகைக்கு வருகிற படைப்புகளைத் தேர்வு செய்து பொறுப்பாசிரியர் ராம கண்ணப்பனிடம் தரவேண்டும். கண்ணதாசனில் வேலை செய்து கொண்டிருந்த போதுதான் ‘கடல்புரத்தில் ‘ நாவலை வெளியிட முயற்சி செய்தேன்.

அப்போது ‘வாசகர் வட்டம் ‘ என்ற பதிப்பகம் பிரபலமாக இருந்தது. தி.ஜானகிராமன்,  லா.ச.ரா போன்றோரின் நாவல்களையெல்லாம் அது வெளியிட்டிருந்தது. அது தி.நகர் தணிகாசலம் தெருவில் ஹிந்திப் பிரசார சபாவுக்கு எதிரே இயங்கி வந்தது. காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியின் மகளான லட்சுமி கிருஷ்ணமூர்த்திதான் அதை நடத்தி வந்தார், அவரது வீடுதான் பதிப்பகம். அந்த காலத்தில், வாசகர் வட்டத்தில் ஒரு நூல் வெளிவந்தால் அது பெருமைக்குரியதாகக் கருதப்பட்டது. நான் பாளையங்கோட்டையிலிருந்த போதே வண்ணதாசன் வீட்டில் வாசகர் வட்டத்தின் பல நூல்களைப்  பார்த்து மயங்கியிருந்தேன்.

ஞாயிற்றுக் கிழமை கண்ணதாசன் அலுவலகத்திற்கு விடுமுறை. வாசகர் வட்டத்திற்கும் விடுமுறையாகத்தான் இருந்திருக்கும். அது லட்சுமி கிருஷ்ணமூர்த்தியின் வீடு என்பதால் வீட்டில் யாராவது இருக்க மாட்டார்களா என்று நினைத்துக்கொண்டு, ‘கடல்புரத்தில்’ நாவலை எடுத்துக்கொண்டு வாசகர் வட்டத்துக்கு புறப்பட்டேன். வெங்கட் நாராயணா ரோடும், தணிகாசலம் தெருவும் சந்திக்கும் முனையில் இருந்த ஒரு பிரிட்டீஷ் கால வீட்டின் முகப்பில் ‘ வாசகர் வட்டம்’ என்ற சிறிய போர்டு தொங்கியது. முன்கேட்டை திறந்து கொண்டு காம்பவுண்டினுள் நுழைந்தேன். வீட்டின் முன்னே சிறு வராந்தா, வராந்தாவுக்கு அப்பால் ஒரு சதுரமான அறை. அந்த அறையில் வயதான ஒருவர் சோபாவில் உட்கார்ந்திருந்தார், அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். கையிலிருந்த ‘கடல்புரத்தில் ‘ நாவலை அவரிடம் கொடுத்தேன் . அதை கையில் வாங்கிப் புரட்டிக்கொண்டே , “லட்சுமி” என்று அழைத்தார்.

அவர் அழைத்தவிதத்திலிருந்த உரிமையிலிருந்தே அவர் தான் கிருஷ்ணமூர்த்தி என்று தெரிந்து கொண்டேன் . உள் பக்கமிருந்து லட்சுமி வந்தார் . அவரிடம் நாவலின் கையெழுத்து பிரதியை கொடுத்த கிருஷ்ணமூர்த்தி என்னை காண்பித்து “ ஹி ஈஸ் த மதர் ஆப் த ஸ்கிரிப்ட்” என்று அறிமுகம் செய்து வைத்தார் . நாவலை கையில் வாங்கிய லட்சுமி,“ரொம்ப சந்தோஷம் !.... நாங்க படிச்சு பாத்துட்டு சொல்றோம்” என்றார்.

வாசகர் வட்டத்தில் நாவலை கொடுத்து விட்டு வந்த பிறகு, பல நாட்கள் கழித்து , உங்களுடைய நாவலைப் பிரசுரத்திற்கு தேர்ந்தெடுக்க இயலவில்லை . என்று கடிதம் வந்தது , அடுத்த நாளே வாசகர் வட்டம் சென்று கடல்புரத்தில் நாவல் பிரதியை திரும்ப பெற்றுவிட்டேன். பிறகு அதை சினிமா பாடலாசிரியரான குயிலனின் மருமகனும் எனது நண்பருமான நச்சினார்கினியனிடம் கொடுத்து இதைப் பிரசுரிக்க முடியுமா என்று கேட்டேன். நச்சினார்க்கினியன் மிகப்பிரியமான மனிதர். அவர் கவிதா பதிப்பகம் என்ற பேரில் புதிதாக ஒரு பதிப்பகத்தை தொடங்கியிருந்தார் ‘அவசியம் வெளியிடுகிறேன் ‘ என்று கடல்புரத்தின் கையெழுத்துப் பிரதியை சந்தோஷத்துடன் வாங்கிக் கொண்டார். நச்சினார்க்கினியன் தான் பா.ஜெயப்பிரகாசத்தின் முதலாவது சிறுகதைத் தொகுப்பான ஒரு ஜெருசலத்தை வெளியிட்டார்.

 டி.செல்வராஜின் தேநீரும் அவர் வெளியிட்டதுதான்.

கண்ணாதாசன் பத்திரிகை 1973 டிசம்பர் இதழுடன் நின்றுவிட்டது.

திரும்பவும் வேலை தேடும் படலம், சென்னை மாலை முரசில் பணிபுரிந்த நண்பர் ஜேம்ஸ் ஏதாவது தொடர்கதை எழுதித் தாருங்கள், மாலை முரசு ஞாயிறு மலரில் வெளிவர ஏற்பாடு செய்கிறேன்” என்றார் . உடனே உட்கார்ந்து ஒரு முக்கோணக் காதல் கதையை எழுதி ‘நேசம் மறப்பதில்லை நெஞ்சம்’ என்று தலைப்பு வைத்து ஜேம்ஸிடம் கொடுத்தேன். அந்த நாவலை தொடராக வெளியிட முடியாமல் போயிற்று. ஒரு நாள் ரொம்ப மனச் சங்கடத்துடன் ஜேம்ஸ் அந்த நாவல் பிரதியை என்னிடமே திருப்பி தந்து விட்டார்.

சென்னையில் வேலையில்லாமல் எப்படிக் காலத்தை ஓட்டுவது ? ‘ நேசம் மறப்பதில்லை நெஞ்சம்’ நாவல் பிரதியையும் நச்சினார்கினியனிடமே கொடுத்தேன். “ இதையும் எப்படியாவது வெளியிடுங்கள் , ஊருக்கு போகப் பணமில்லை, இதை வைத்துக்கொண்டு ஏதாவது பணம் கொடுங்கள்” என்று கேட்டேன்.

நச்சினார்கினியன் பெரிய பதிப்பாளரல்ல, பெரிய பணக்காரருமல்ல, ஏதோ சில புஸ்தகங்களைப் பதிப்பித்திருந்தார். அவருடைய மாமனார் குயிலன் தான் அவருக்கு உதவி செய்து வந்தார். ஆனால் அருமையான மனிதர். அவர் சட்டைப்பையிலிருந்த சில்லறை, ரூபாய் நோட்டுகளை எல்லாம் மேஜை மீது எடுத்துப் போட்டார். 25 ரூபாய் தேறிற்று. அதை அப்படியே என்னிடம் கொடுத்துவிட்டார். இதை வைத்துக்கொள்ளுங்கள் , ஊருக்கு போக இது போதுமா என்று கேட்டார்.

“ போதும். தாராளமாகப்போதும் உங்களுக்கு .. கையிலிருந்ததை எல்லாம் கொடுத்துவிட்டீர்களே..”என்றேன்.

“ நான் எப்படியாவது பார்த்துக்கொள்கிறேன் ..

நீங்கள் புறப்படுங்கள் “ என்று விடைகொடுத்தார்.

சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு அப்போது ரயில் சார்ஜ் பதினாறு ரூபாய்தான். ரயில் சார்ஜ் போக ஒன்பது ரூபாய் மீதமிருக்கிறதே , அடேயப்பா எவ்வளவு பணம்..!

திருநெல்வேலியில் என்ன வேலை ரெடியாகவா இருக்கும் ? அதெல்லாம் ஒன்றுமில்லை, ஒரு வாரம் கழித்து நாகர்கோவில் சென்று சுந்தரராமசாமியைப் பார்த்தேன். அங்கிருந்து திருவனந்தபுரம் சென்று நீல. பத்மநாபன் , நகுலனையெல்லாம் பார்த்துவிட்டு மீண்டும் திருநெல்வேலிக்கே வந்தேன். இதற்குள் இரண்டு மாதம் ஆகிவிட்டது. திடீரென்று ஒரு நாள் என் முகவரிக்கு ஒரு புத்தகப் பார்சல் வந்தது. பிரித்தால், ‘ நேசம் மறப்பதில்லை நெஞ்சம்’ நாவலின் இரண்டு பிரதிகளை நச்சினார்கினியன் தான் அனுப்பி வைத்திருந்தார்.

அச்சில் வெளிவந்த என் முதல் புத்தகம், முதல் நாவல் அது சாதாரணமான முக்கோணக் காதல் கதைதான். அந்த நாவலை இலக்கியம் என்று கூற முடியாது. ஏதோ பிழைப்புக்காக எழுதிய ஒரு காதல் கதை. அவ்வளவுதான்.

சென்னையில் காங்கிரஸ் பிரமுகர்களான டி.என்.அனந்த நாயகி, ப.சிதம்பரம், ஏ.கே.சண்முகசுந்தரம். மூன்று பேரும் சேர்ந்து அன்னை நாடு என்ற காங்கிரஸ் தினசரியை ஆரம்பித்திருக்கிறார்கள், இதில் வேலை காலியிருக்கிறது உடனே வாருங்கள் என்று தி.க.சி கடிதம் எழுதியிருந்தார்கள். வண்ணதாசன் தான் 150 ரூபாய் கொடுத்து என்னைச் சென்னைக்கு அனுப்பி வைத்தார்.‘அன்னை நாடு’ வேலையில் ஏழெட்டு மாதங்கள் ஓடிற்று, பிறகு அதுவும் நின்றுவிட்டது. மீண்டும் வேலை தேடும்  படலம்.

திடிரென்று திருநெல்வேலியிலிருந்து நண்பர் விக்கிரமாதித்யன் சென்னைக்கு வந்தார். என்னிடமிருந்த சிறுகதைகளை எல்லாம் கேட்டார். திருநெல்வேலி நண்பர்கள் என் சிறுகதைகளை புத்தகமாகப் போட விரும்புவதாக கூறினார். 1975 ஜுன் வாக்கில் என்னிடமிருந்த சிறுகதைகளை எல்லாம் வாங்கி கொண்டு விக்கிரமாதித்யன் திருநெல்வேலிக்கு போனார்.

நண்பர்கள் அம்பை பாலன், தா.மணி, லயனல் , ஐயப்பன் போன்றவர்களெல்லாம் ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு சுமார் 900 ரூபாயில் எனது ‘எஸ்தர்’ சிறுகதைத் தொகுப்பை இரண்டே மாதங்களில் கொண்டு வந்து விட்டார்கள்.

எஸ்தர் சிறுகதை தொகுப்பு வந்த பிறகுதான் என்னை இலக்கியவாதியாக சமூகம் அங்கீகரித்தது . இதற்காக அந்த நண்பர்களுக்கு நான் பெரிதும் கடன் பட்டிருக்கிறேன். நச்சினார்கினியன் வாங்கி வைத்திருந்த ‘கடல்புரத்தில்’ நாவலை நண்பர் ராமலிங்கம் படித்துப்பார்த்துவிட்டு, தானே அதை வெளியிடுவதாகச் சொல்லி நச்சினார்கினியனிடமிருந்து வாங்கிச் சென்றார். ராமலிங்கம் கலைஞன் பதிப்பகம் மாசிலாமணியின் மருமகன். அவர் சொந்தமாக நர்மதா பதிப்பகம் என்ற பேரில் புதிய பதிப்பகம் ஒன்றை ஆரம்பித்த போது, 1977ல் அந்தக் கடல்புரத்தில் நாவலையும் வெளியிட்டார்.

அதன் பிறகு தமிழ் எழுத்துலகில் எனது பெயர் ஓரளவு அறிமுகமாகியிருந்ததால் எனது படைப்புகளைப் பிரசுரிப்பது எளிதாக இருந்தது. ஆனால் ஆரம்ப காலத்தில் எனது படைப்புகளை வெளியிடச் சிரமப்பட வேண்டியிருந்தது. அதிர்ஷ்டவசமாக நச்சினார்கினியன், நர்மதா ராமலிங்கம், திருநெல்வேலி நண்பர்கள் என்று பலர் உதவியதால் எனது எழுத்துக்கள் அச்சுவாகனம் ஏறின.

எழுபதுகளில் சுமாராக ஆயிரம் ரூபாய் இருந்தால் ஒரு சிறுகதைத் தொகுப்பை வெளியிடலாம். அகிலன், நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன், தி.ஜானகி ராமன் , போன்று பிரபலமான எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடுவது அன்று கடினமல்ல. ஆனால், சிறு இலக்கியப் பத்திரிகைகளில் எழுதிய படைப்பாளிகளின் படைப்புகளை வெளியிடுவது அந்த நாட்களில் சிரமமே. இன்று காலச்சுவடு, உயிர்மை, தமிழினி, க்ரியா, அடையாளம் என்று எண்ணற்ற பதிப்பகங்கள் உள்ளன. இவை தரமாகவும் நூல்களை வெளியிடுகின்றன. சில எழுத்தாளர்கள், கவிஞர்கள் தாங்களே செலவு செய்தும் தங்கள் படைப்புகளை புத்தகமாக்குகின்றனர். அன்று தீவிரமான இலக்கிய வாசகர்கள் இருநூறு பேர் இருந்தாலே ஆச்சரியம். இன்று இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்திருக்கலாம். ஆனாலும் வெகுஜன எழுத்து வாசிப்பு வாசகர்களுடன் ஒப்பிடும் போது இன்றும் இலக்கியம் என்பது ஒரு குறுகிய வட்டத்திற்குள் தான் உள்ளது. இது தான் யதார்த்தம்.

ஜூன், 2016.