சிறுவயதில் ஏற்படும் காதல் உணர்வானது வாழ்வில் மறந்திடமுடியாத தவப்பருவம்.இந்தத் திரைப்படத்தின் கதாநாயகனும் கதாநாயகியும் குழந்தைப்பருவம் தொட்டே ஒன்றாக வளர்ந்து பள்ளிக்கூடம் சென்றுவந்தவர்கள். கதாநாயகியான பூர்ணா ஊட்டியிலிருக்கும் கோடீஸ்வரனொருவரின் மகளாகவும் கதாநாயகன் பாக்யராஜ் கோடீஸ்வர பங்களாவின் காவலாளி மகனாகவும் இருப்பதும் பாத்திரங்களின் முரண்நிலையை திரைப்படமெங்கும் சரியாக தக்கவைத்திருக்கிறது. சிறுவர்களாக இருந்த காலத்திலேயே பிரிய நேரும் இந்த இருகதாபாத்திரங்களும் பத்துவருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொள்கையில் நேரக்கூடிய காதலின் உன்னதமே இந்தத்திரைப்படமெங்கும் நீண்டுகிடப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.கல்வி கற்பதற்காக மேலைநாட்டிற்கு பிரிந்து போன பங்களா வீட்டின் இளவரசிக்காக காத்திருக்கும் காவலாளி மகன் அவளுக்காகவே பத்துவருடங்களும் காத்திருக்கிறான். சிறுவயதில் அவ்வளவு நேசமாகவும் நெருக்கமாகவும் பழகிய கதாநாயகியோ இவனை மறந்துபோய்விட்டதாக சொல்லுவதையே கதாநாயகனால் தாங்கமுடியாது போகும் காட்சியே இந்த திரைப்படத்தின் இயங்குசக்தியாக இருக்கும். காதல் சுயத்தின் நியாயத்தைக் கூட சிலவேளைகளில் ஏற்றுக்கொள்ளாது என்று பங்களா இளவரசியால் புறக்கணிக்கப்படுகிற வேளைகளில் கதாநாயகனான பாக்யராஜ் அச்சு அசலாக சரணாகதி அடைந்தவராக நிற்கும் ஒவ்வொரு காட்சிகளிலும் நடிப்பு திணிக்கப்படாமல் இயல்பாகவே இருக்கிறது.கடந்தகாலத்தின் காதலைப் பேசுவது என்பதில் சுகம் தங்கும். அது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அவன் பற்றிய மதிப்பை இன்னும் அதிகரிக்கச்செய்யும். அவ்வாறான காதலின் இன்னொரு தரிசனமே டார்லிங் டார்லிங் டார்லிங்.
நவம்பர், 2018.