சிறப்புப்பக்கங்கள்

பார்முலாவுக்கு வெளியே

இரா. கௌதமன்

விதிகளை  மீறியவை :

காக்கா முட்டை படம் வெற்றி பெற்ற பிறகு அதன் இயக்குநர் மணிகண்டன் “சினிமாவில் வழக்கமான சக்கரம் ஒன்று சுழன்று கொண்டே இருக்கிறது. அதில் வழக்கத்தை மீறி புதிதாக எதாவது ஒன்றை வைத்தால் சக்கரம் சுழல மறுக்கிறது. லைட் மேனிலிருந்து படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வருபவர்கள் வரை இது சரியா வராது, படம் ஓடாது, இதை மக்கள் ஒத்துக்க மாட்டாங்க என்று கருத்து சொல்கிறார்கள்” என்று ஒரு மேடையில் சொன்னார். சினிமாவை ஓரளவிற்கு கவனிப்பவர்களுக்கு இந்த பிரச்சனையின் ஆழம் புரியும்.

வணிக படம், கலைப் படம் என்பதையெல்லாம் தாண்டி பெருவாரியான மக்களுக்கு பிடித்தமான படமாக இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் எண்ணமும். ஆனால் என்ன செய்தால் மக்களுக்கு பிடிக்கும் என்பது தான் சினிமா தொடங்கி இன்று வரை விடை கிடைக்காத கேள்வி. போட்ட முதலீட்டை பாதுகாப்பாக எடுப்பதற்காக கதாநாயகன், கதாநாயகி , கொஞ்சம் நகைச்சுவை, நான்கு பாடல் ,இரண்டு சண்டைக் காட்சி என்று வணிக சினிமாவுக்கான சூத்திரமாக இவர்களாகவே வகுத்துக் கொண்டார்கள். ஆனால் இவர்களின் வரையறைகளுக்குள் அடங்காத பெரிய வெற்றிப் படங்கள் வந்து கொண்டேதான் இருக்கின்றன.

தாசி வீட்டுக்கு செல்லும் கணவனை கூடையில் வைத்து சுமந்து சென்ற நளாயினி கதை மரபில் ஊறி வந்த நமக்கு தாசி வீடே கதி என்று கிடக்கும் கணவனை வேண்டாம் என்று உதறி தள்ளும் கதை இன்றைக்கு வேண்டுமானால் மக்கள் ஏற்கக்கூடிய கதையாக தெரியலாம். ஆனால் 1954 ல் ரத்தக்கண்ணீர் படம் வந்த போது பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது. வெளி நாட்டு மோகம், பெண் பித்தன் என்று எம்.ஆர்,ராதா பாத்திரத்தை எவ்வளவு எதிர்மறையான பாத்திரமாக உருவாக்கி இருந்தாலும் ராதாவின் மனைவி சந்திரா மண உறவிலிருந்து வெளியேறி எஸ்.எஸ்.ஆரை நோக்கி நகரும் காட்சிகள் ஐம்பதுகளில் சொல்லப்படாத கதை ; ஆச்சர்யமான முயற்சி.

இந்த படத்தில் கதையை எதிர்பார்க்காதீர்கள் என்று இயக்குநர் ஸ்ரீதரே முன்னறிவிப்பு செய்து வெளியிட்ட ‘காதலிக்க நேரமில்லை’ புது முகங்களை வைத்து எடுக்கப்பட்ட புதுமையான முயற்சி. முத்துராமன், நாகேஷ், பாலையா என்று மிகக் குறைவானவர்களே மக்களுக்கு தெரிந்தவர்கள். வழக்கமான காதல் கதை என்றாலும் அதை சொன்ன விதத்தில் ஸ்ரீதர் தனித்து தெரிந்ததால் மிகப் பெரிய வெற்றியையும் பெற்றது.

ஸ்ரீதேவி, கமல் என்ற எதிர்பார்ப்புடன் வந்த ரசிகர்களுக்கு பாரதிராஜா சொன்ன ‘16 வயதினிலே’ கதை மட்டுமல்ல களனும் புதுசு. முதல் படத்தில் அன்றைய வசீகர கதாநாயகனை கோவணத்தில் நடமாட விட்டதும், படமெடுக்கப்பட்ட கிராமிய பின்னணியும் தயாரிப்பாளரை நம்பிக்கை இழக்கவே செய்யும். மயில், சப்பாணி பாத்திரங்கள் மூலமாக பாரதிராஜா சொன்ன உடலழகிற்கும் காதலுக்கும் தொடர்பில்லை என்ற கருத்தை தமிழ் ரசிகர்கள் முழுமனதாக ஏற்றுக் கொண்டு தந்த ஆதரவு பின்னாட்களில் இது போன்ற கதாநாயக, கதைகளின் வருகைக்கு முதல் புள்ளியாக அமைந்தது.

 பெருவாரியான கிராம படங்கள் வெளிவரத் துவங்க அதில் தனித்து தெரிந்தது தேவராஜ் மோகனின் ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’. நாகரிக வளர்ச்சி கிராமங்களுக்குள் எட்டிப்பார்க்க துவங்கிய காலத்தில் அதன் மாற்றத்தை துல்லியத்தோடு பதிவு செய்த படம். சிவகுமாரின் மனைவி தீபா திருமணத்திற்குப் பிறகு இன்னொருவர் மீது ஆசைப்பட அதனால் விளையும் பிரச்னைகளை மண் மனத்தோடு சொன்னதால் வெற்றி பெற்ற படம்.

வண்ண நிலவன், சோமசுந்தரேஷ்வர் கதையமைப்பில் ருத்ரைய்யா இயக்கிய ‘அவள் அப்படித்தான்’ தமிழ் சினிமா வரலாற்றில் நீங்காத இடம் பெற்ற படம். கமல், ரஜினி என்ற இரண்டு பெரும் துருவங்களைத் தாண்டி இன்றும் பேசப்படும் படமாக இருப்பதற்கு முக்கிய காரணம் ஸ்ரீப்பிரியாவின் மஞ்சு கதாபாத்திரம். மஞ்சு தன்னுடைய கடந்த கால துன்பங்களை, காதல் என்ற பெயரில் ஏமாற்றப்பட்டதை எந்த வித கழிவிரக்கமும் தோன்றாதபடி அருணிடம் பகிர்ந்து கொள்கிறார். வழக்கமான தமிழ் சினிமா லூசு கதாநாயகி இல்லை. தீர்க்கமாக முடிவெடுக்ககூடியவள். அதை யாரிடமும் நேரடியாக சொல்லக் கூடியவளும். தன்னை எங்கேயும் நிரூபிக்க தேவையில்லை என நினைக்கும் வலிமையான மஞ்சு கதாபாத்திரத்தை 1978 லேயே ருத்ரைய்யாவால் உருவாக்க முடிந்திருக்கிறது. மக்களும் அதை புரிந்து கொண்டு வெற்றிப் படமாக ஆக்கியுள்ளார்கள்.

கல்லூரிக் காதல் கதை. ஆனால் வழக்கமான கல்லூரி கிடையாது. காதல் கதை தான். ஆனால் வழக்கமான மரத்தை சுற்றி டூயட் பாடும் காதல் கதை இல்லை. 80 களில் இளைஞர்களுக்கு காதலை சொல்ல இன்றைக்கு போல் நவீன வழிகள் எதுவும் இல்லை. அதையே தன்னுடைய படத்தின் கதையாக்கி ‘ஒரு தலை ராகம்’ மூலமாக வெற்றிகரமான இயக்குநராக தமிழ் சினிமாவில் கால் பதித்தார் டி.ராஜேந்தர். புது முகங்களை வைத்துக் கொண்டு இப்படி ஒரு முதல் படத்தை மக்கள் மீதான நம்பிக்கையாலேயே டி.ஆர் எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்.

இதே சமயத்தில் மகேந்திரனின் ‘ நெஞ்சத்தை கிள்ளாதே’ படமும்  பார்முலாவை உடைத்து வெளி வந்தது. சுட்டித்தனமான சுஹாசினி பாத்திரம் அழுத்தமானதும் கூட. சந்தேக குணம் கொண்ட மோகனை தூக்கி எறிந்துவிட்டு பிரதாப் போத்தனை கைபிடிப்பார். இதில் சுஹாசினியின் அண்ணனான சரத் பாபுவுக்கும் வனிதாவுக்கும் இடையேயான உறவு  அழகான கவிதை. ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலை தாண்டி, குடும்ப பந்தத்தை தாண்டி நட்பு அமைய முடியும் என்பதே தமிழ் சினிமாவில் குறிஞ்சிப்பூ தான். அதை சுஹாசினியும் புரிந்து கொள்வது மேலும் அழகு. 1981 ல் ராபர்ட் ராஜசேகரின் பாலைவனச்சோலை  ஐந்து நண்பர்கள் குழுவில் தோழியாக இன்னொரு பெண் நுழைவதை அழுத்தமாகச் சொல்லி வெற்றி பெற்றது. அன்றைய பார்முலாப்படி இவை எதுவுமே தேறாத கதைகள்.

சிறுவர்களுமில்லாமல் பெரியவர்களுமில்லாமல் டீன் ஏஜ் வயதிலுள்ள மூன்று மாணவர்கள். அவர்களின் வாழ்க்கையில் நுழையும் இந்து டீச்சராக ஷோபா. பதின்ம வயதின் தடுமாற்றங்கள், பெரியவர்களாக காட்டிக்கொள்ள அவர்கள் செய்யும் சேஷ்டைகள், டீச்சரின் காதலன் மீது கொள்ளும் பொறாமை என்று அந்த வயதின் அத்தனை விஷயங்களையும் நம் கண் முன்னே கொண்டு வந்தது பாலுமகேந்திராவின் அழியாத கோலங்கள். படம் பார்த்த அனைவருமே ஏதோ ஒரு வகையில் திரை பாத்திரங்களோடு தங்களை கண்டு கொண்டார்கள்.

சினிமா தாத்தா, பாட்டிகளுக்கென்று ஒரு டெம்பிளேட் வடிவம் உண்டு. பாசமானவர்கள். பேரன், பேத்திகள் மீது பாச மழை பொழிந்து கண்ணீரை வரவழைப்பவர்கள். இதை மாற்றி பேத்தி மீது கோபம் கொண்ட பாட்டி. பாட்டியின் வெளிப்புற கோபங்களை உடைத்து அவரின் உலகத்தில் நுழையும் பேத்தி என்று ‘ பூவே பூச்சூடவா’ மூலம் நாயகன், நாயகி பார்முலா இல்லாமல் மிகப் பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்தார் பாசில். உண்மையில் 60 வயது பானுமதி பாட்டிதான் படத்தின் உயிர் நாடி. நதியா, பானுமதி பாசப்போராட்டத்தில் மற்ற அனைவருமே படத்தில் துணை நடிகர்கள் தாம்.

அறுபதுக்கும் இருபதுக்குமான காதல் என்பது நம்முடைய சமூகம் எளிதில் ஏற்றுக் கொள்ளும் விஷயமல்ல. ஆனால் பாரதிராஜாவின் முதல் மரியாதை அதை ஏற்றுக் கொள்ளும்படி மிக அழகாக சொல்லியது. சிவாஜி அதுவரை ஏற்றிராத கதாபாத்திரம். வடிவுக்கரசியின் வார்த்தை குத்தூசிகளுக்கு மருந்திடும் அன்பான ராதா கதாபாத்திரம். ஊரே கூடி நின்று சிவாஜி, ராதா உறவை கொச்சைப்படுத்தி பேசும் போது ‘ ஆமா, அவள நான் வச்சிருக்கேன்’ என்பார் சிவாஜி. சாதாரண கதாநாயகன் இதைச் சொன்னாலே ஆட்டம் காணும் கதாநாயக பிம்பம் மலைச்சாமி என்ற பாத்திரத்தை சுமந்து சிவாஜி பேசும்போது இன்னும் ஆட்டம் கண்டிருக்க வேண்டும். ஆனால் பார்வையாளர்களும் அதை அப்படியே ஏற்றுக் கொண்டதால் தான் முதல் மரியாதை பெரிய வெற்றிப் படமானது.

அன்பை வெளிக்காட்டத் தெரியாத கரடு முரடான ஆசாமி கதாநாயகன். அதைப் புரிந்து கொள்ளும் போது நாயகி இறந்து விடுகிறாள். கஸ்தூரி ராஜாவின் ‘ என் ராசாவின் மனசிலே’ ராஜ்கிரணை கதாநாயகனாக நம்மை ஏற்றுக் கொள்ள வைத்தது. மனைவி இறந்து அவர் அழும் காட்சிகளில் ‘இவ்வளவு பாசத்த வச்சுகிட்டா உர்ருன்னு இருந்தாரு, இந்தாளு’ என்று பெண்கள் மூக்கை சிந்தினார்கள். நிஜத்தில் பெரும்பாலானவர்கள் அன்பை வெளிக்காட்டத் தெரியாதவர்கள்.

சினிமாவில் வருவது போல கண்ணே, மணியே என்று கொஞ்சிக் கொண்டு இருப்பதில்லை என்ற தன்னுடைய கதைக்கு பொருத்தமாக ராஜ்கிரணை அமரவைத்து வெற்றிப்படமாக்கினார் கஸ்தூரி ராஜா.

இந்த காலகட்டத்தில் ராமராஜன் இளையராஜா, செந்தில்,கவுண்டமணி என்ற சரியான கலவையுடன் நிறைய கிராம கதைகளில் நடித்து வெற்றி பெற்றார். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு அவருடைய பார்முலா சலித்துப் போக ராமராஜன் காணாமல் போனார்.

தமிழில் குறைவாகவே சைக்கோபாத் சினிமாக்கள் வந்திருக்கின்றன. பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்கள் அதில் முன் மாதிரி. கதாநாயகனுக்கான எந்த வித லட்சணங்களும் இல்லாத தனுஷை வைத்து செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் அடுத்த வரவு. இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸ் ஹிட்.

 1984 ல் வெளியான விதி திரைப்படம் தமிழ் சினிமாவின் கோர்ட் காட்சிகளின் அதிகப்படியான எல்லையைத் தொட்டது. காதலுக்காக எப்போதும் உருகும் மோகனை வில்லனாக்கி வசனங்களினாலேயே தமிழகத்தை அதிர வைத்த வெற்றிப் படம்.

குழந்தைகளுக்கான படங்கள் தமிழில் குறைவு தான். மை டியர் குட்டிச் சாத்தானின் வெற்றி கூட தொடர்ந்து குழந்தைகளுக்கான படங்களை ஏன் அதிகம் கொண்டுவரவில்லை என்பதும் விடை தெரியாத கேள்வி.

நாற்பது வயது, காதோரம் நரை முடி உள்ள திருட்டுத்தனத்தை கூட ஒழுங்காக செய்ய முடியாமல் அடிக்கடி சொதப்பும் விஜய் சேதுபதி என்று சமீபத்தில் பார்முலா மீறி வெற்றிபெற்ற படம் சூது கவ்வும். கதா நாயகியும் அவனுடைய கற்பனையே. திருட்டுக்கென்று சில விதிமுறைகள், அதனின் தவறுகள் என்று நலன் குமாரசாமியின் விதியை மீறிய ஆட்டம் எதிர்பாராத அளவிற்கு வெற்றியை தந்தது.

சினிமா உலகத்தில் எழுதப்படாத விதிகள் நிறைய உள்ளன. சினிமாவைப் பற்றி படமெடுத்தால் ஓடாது என்பது அதில் ஒன்று. ஆனால் சினிமாவைப் பற்றிய படம்; கதையே இல்லை என்று பார்த்திபன் சொல்லி வெளியிட்ட ‘ கதை திரைக்கதை வசனம்’ அதனின் மீறல்களுக்காகவே மக்களால் ரசித்து ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அடுத்து எதிர்மறையான படத் தலைப்பு படத்தை ஓடவிடாது என்பது. சமீபத்தில் பிச்சைக்காரன் தலைப்பில் வெற்றிகண்ட விஜய் ஆண்டனி அடுத்து சைத்தான், எமன் என்று எதிர் திசையிலேயே பயணம் செய்ய துவங்கி விட்டார்.

மறுபடியும் படத்தில் நிழல்கள் ரவி இயக்குநர். பாடல் காட்சியை தயாரிப்பாளருக்கு காண்பித்துக் கொண்டிருப்பார். அதைப் பற்றிய விமர்சனத்தில் ‘ மக்களுக்கு எது புடிக்கும்னு நீங்க எப்படி சார் முடிவு பண்றீங்க’ என்பார். இது பாலுமகேந்திராவின் குரல். வணிக படம் இப்படி இருந்தால்தான் ஓடும் என்பது மாயை. வணிகப் படத்திற்கான அத்தனை அம்சங்களையும் கொண்டு தயாரிக்கப்பட்ட படங்கள் மண்ணை கவ்வி இருக்கின்றன. வணிகப் படத்திற்கான எந்த விதிகளையும் பின்பற்றாமல் விதிகளை மீறிய மேலே சொன்ன அத்தனை படங்களும் வெற்றி பெற்றிருக்கின்றன. கவனிங்க சார்!

நவம்பர், 2016.