சிறப்புப்பக்கங்கள்

பாரினில் பெண்கள் உழைக்க வந்தோம்

Staff Writer

ஒரு சம்பவத்தைப் பாருங்கள். வேலைக்குச்  செல்லும் தம்பதி அவர்கள். காலையில் வீட்டு வேலை பார்த்து சமைத்துக்கொடுத்துவிட்டு வேலைக்குச்  செல்கிறாள் மனைவி. கணவன் மாலையில் வேலையை முடிந்ததும் மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வருகிறான். இருவரும் களைப்புடன்  சோபாவில் அமர்கின்றனர். கணவனின் அம்மா வருகிறார். மகனைப் பார்த்ததும் முகம் மலர்கிறது. மருமகளைப் பார்த்து, பாரு, எவ்வளவு களைச்சுப் போயிருக்கான். போய் காபி போட்டு எடுத்துவா என்கிறார். மனைவி எழுந்து உள்ளே போகிறாள். சமையலறையில் அவள் கொந்தளிக்கிறாள். காலையில் வீட்டு வேலைகளைச் செய்துவிட்டு அலுவலகம் செல்கிறேன். கணவனோ ஒரு வேலையும் செய்வதில்லை. இருவரும் ஒரே நேரத்தில்தான் வீட்டுக்கு வருகிறோம். ஆனால் நான் தான் காபிபோடவேண்டுமா?

உழைக்கும் மகளிர் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் இது ஒன்று. வேலைக்குச் செல்லும் பெண்ணுக்கான ஆதரவு சூழல் வீடுகளில் இதுவரை உருவாகாததற்குக் காரணம், இவர்களுக்கு முன்னுதாரணங்கள் இல்லை என்பதே. போன தலைமுறையில் பெரும்பாலும் பெண்கள் வீட்டில் இருந்தவர்கள். வேலைக்குப் போகாதவர்கள். அவர்களால் வேலைக்குச் செல்லும் மருமகள்/ மகளின் உணர்வுகளை அறியமுடியாது.

பொதுவாக குடும்பங்களில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் அப்பாக்களை விட அம்மாக்களையே சார்ந்திருக்கிறார்கள். அலுவலகத்தில் இருந்தாலும் பெண்ணின் மனம் வீட்டில் குழந்தைகள் திரும்பி வந்திருக்கிறார்களா என்பதையே சுற்றிவரும். குழந்தை வளர்ப்பு என்பது 24 மணி நேர வேலை. அலுவலகம் என்பது ஒரு நாளைக்கு 8 மணி நேர வேலை. பெண்கள் இரண்டையும் சேர்த்துக் கவனிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அவர்களுக்கு ஒரு நாளில் இருப்பதோ 24 மணி நேரம்தான்.

குடும்பத்தில் மாமியாருக்கு உடல்நிலை சரியில்லை; குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும் பெரும்பாலும்  மனைவிகளே விடுமுறை எடுத்து அவர்களைப் பார்த்துக்கொள்ளும் நிலை உள்ளது. இப்படி விடுமுறை எடுப்பது அவர்கள் அலுவலகத்தில் அவர்களின் பணியைப் பாதிப்பதுடன் அவர்களின் வளர்ச்சியையும் பாதிக்கிறது.

அலுவலகங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் வேறுவிதம். அங்கு ஆண்பெண் பாகுபாடு பெரிய பிரச்னை. பதவி உயர்வு, சம்பளம் போன்ற விஷயங்களில் நிச்சயம் பாகுபாடுகள் உள்ளன. எழுத்தாளர் ஜெயமோகனின் ‘என் பெயர்’ என்ற  சிறுகதை ஒன்று உண்டு. ஒரு பெண் விஞ்ஞானியை ரஷ்யாவில் சென்று பார்க்கவேண்டிய மிகக் கடினமான வேலைக்கு குழுத்தலைவராக அனுப்பிவைப்பார்கள் ஆண் அதிகாரிகள். காரணம் அலுவலகச் சந்திப்பு ஒன்றில் காபி ஊற்றி எடுத்துத்தர மறுப்பார் அந்த பெண். இதுபோன்ற நுண்மையான விஷயங்களைப் பெண் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

பாலியல் தொல்லைகள் என்பது பெண்ணுக்கு நிழலைப்போல பின் தொடர்வது. இதைப்பற்றிச் சொல்லவேண்டியதே இல்லை.எப்போது பெண் ஒரு கவசத்தை அணிந்துகொண்டே இருக்கவேண்டி உள்ளது. குழந்தைப் பேறு காலங்களில் பெண்கள் உள்ளாகும் உடல் மன மாறுதல்களுக்கு இடையில் அலுவலகப் பணிகளையும் செய்வது பெரும் சோதனையாகும். குழந்தைப் பேறுக்குப் பிறகு அலுவலகம் திரும்பும் பெண்கள் அங்கு பலநேரம் முற்றிலும் புதிய சூழலை எதிர்கொள்ளவும் மீண்டும் புதிதாகத் தொடங்கவும் நேரிடும். அலுவலகத்தில் அதிகாரப்போட்டி என்பது கடினமானது. காலங்காலமாக ஆதிக்கம் செலுத்திவரும் ஆணை பெண் முந்திச்செல்வது என்பது எளிதானது அல்ல.

இவ்வளவும் செய்து வீட்டுக்கு திரும்பும் பெண்ணுக்கு அங்கே காத்திருப்பது ஆதரவும் அன்பும் அல்ல. வீட்டிலும் வேலைகள் காத்திருக்கின்றன என்பதே சோகம். வேலைக்குச் செல்லும் பெண்ணை நம் சமூகம் இன்னும் முற்றிலும் புரிந்துகொள்ளவில்லை. அது மிகவும் அவசியமாகும்.

இந்தஇதழில்பல்வேறுதுறைகளில்பணிபுரியும்பெண்கள் தங்கள் பணிசார்ந்த உணர்வுகளை, அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். அவர்களின் பிரச்னைகளும் அலசப்பட்டுள்ளன. உழைக்கும் பெண்களை மையப்படுத்தியே சமூகம் சுழல்கிறது.  அவர்களை ஆதரிப்போம்!

மார்ச், 2017.