சிறப்புப்பக்கங்கள்

பாதியில் உதிர்ந்த நட்சத்திரங்கள்

ஆத்மார்த்தி

நடிகை சௌந்தர்யாவின் முகத்தில் ஏதோ ஒரு பிழை இருப்பதாகத் தோன்றும். அந்தப் பிழையே அவரது பேரழகு என்றும் தோன்றியிருக்கிறது. அவர் கதையில் பிழையிருப்பதை அறியாமல் அவரைப் பெரிதும் விரும்பினேன். பிரச்சாரத்துக்காகச் சென்ற வழியில் ஹெலிகாப்டர் வெடித்து இறந்து விட்டார் என்று தொலைக்காட்சி செய்திகளில் கண்ணுற்ற போது முதலில் அந்த நிஜம் உள்ளேறவே இல்லை. பிற்பொழுதுகளில் எங்கெல்லாம்  சௌந்தர்யாவின் நடனம் அல்லது நடிப்பைப் பார்க்க வாய்த்ததோ அப்போதெல்லாம் மனசு வலித்தது. நட்சத்திரங்களுக்குத் தான் எத்தனை மரணம் என்று ஒரு தடவை முத்தண்ணன் சொன்னது நினைவில் இடறியது.

பாதியில் மரணித்த நட்சத்திரங்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள். படாபட் ஜெயலட்சுமி மற்றும் ஷோபா ஆகிய இருவருடைய மரணங்களும் பெரிதும் பேசப்பட்டன. தற்கொலை முடிவை நோக்கி விரைந்தோடிய தாரகைகள் தங்கள் நிஜக் கதைக்கு அமானுஷ்யமான ஒரு முடிவை எழுதினார்கள். தற்கொலை என்ற முடிவை ஒரு தினத்தில் அவர்கள் எடுத்து விடுவதில்லை. ஒரு கதாபாத்திரத்தின் முடிவைப் போல அதனை உள்வாங்குகிறார்கள். பலமுறை அந்த முடிவைப் பற்றிய நிகழ்த்துதலை தங்கள் மனங்களில் ஒரு பாத்திரத்தை வலிமையாக்குவதைப் போலவே ஒத்திகை பார்க்கிறார்கள். இதற்கிடையே எதாவதொரு திசையைப் பெயர்த்துக் கொண்டு ஒரு தேவகுமாரன் வந்து கைப்பற்றித் தங்களை மீட்டெடுத்து விட மாட்டானா என்று ஏங்குகிறார்கள். அப்படி யாரும் வராத பொழுதொன்றில் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்கிறார்கள். அவர்களது தாரகைத் தனம் எல்லாமும் முடிவுற்று இன்னும் ஒரே ஒரு செய்தியாக அவர்களது முடிவை அறிந்து கொள்கிறது ரசிகர்வாழ் வெளியுலகம்.

நடிகை விஜி அப்படித் தான் ஒரு தினம் மரணமெய்தினார். பிரத்யுஷா என்றொரு நடிகை விஷமருந்தி மரணமருந்தினார். ராணிசந்திராவின் விபத்து பரிதாபமானது. திவ்யபாரதி என் பதின்ம வயதில் வேகமாய் புகழ் ஏந்தி வந்து கொண்டிருந்த போது ஐந்தாம் மாடியிலிருந்து கீழே விழுந்து தன் கதையை முடித்துக் கொண்டார் என்றார்கள். விரும்புவதற்கும் நம்புவதற்கும் வாய்ப்பே இல்லாத ஒரு முடிவாக அது நேர்ந்தது. யாருக்காக அழுகிறோமென்று தெரியாத பல விழிகளை மடை திறந்துவிட்டுச் சென்ற இன்னொருவர் சில்க் ஸ்மிதா.

சில்க் ஸ்மிதாவின் மரணத்தை என்னால் இந்த நிமிடம் வரைக்கும் உள்வாங்கிக் கொள்ளவே முடியவில்லை. செரிமானம் ஆகாத ஒரு கல்லைப் போல எனக்குள் இறுக்கமாய் உறைந்திருக்கிற மரணம் கவிஞர் ஆத்மாநாமுடையது. என் பதின்ம வயதுகளில் ஆத்மாநாமை அறிந்து கொண்ட பிற்பாடு இன்றைக்கு இருந்திருந்தால் இத்தனை வயது தானே ஆகியிருக்கும் என்ன அவசரம் இருந்திருந்தால் என்னென்ன எழுதி இருப்பார் என்றெல்லாம் தோன்றும். மரணம் மீது இருக்கக் கூடிய பயமும் வெறுப்பும் அற்றுப் போய் ஆத்மாநாம் மீதான கோபமாக அது மாறும். காலத்தைத் தன் மரணம் மூலமாய் எள்ளிச் சென்ற மகா கவிஞன் அவன் என்றால் அதற்குச் சற்றும் குறைவே இல்லாத ஞாபகராணி தான் சில்க் ஸ்மிதா.

என் அத்தனை சிறிய வயதுகளில் எவ்வளவு தூரம் முகம் சுளிக்கப்பட்டுக் கொண்டே விரும்பப் பட்ட பெண்மணி சில்க் ஸ்மிதா என்பது இங்கே கூறத் தக்கது. சில்க் ஸ்மிதாவின் அழகும் குரலும் கண்களும் நிறமும் முக வசீகரமும் அவருடன் ஆட வந்த எந்தச் சம கால நாயகிகளை விடவும் அதீதமானவை. வேண்டுமென்றே ஒரு கவர்ச்சிப் பண்டமாக அவர் மாற்றப் பட்டார், மீண்டும் மீண்டும் வேறோரு வண்ணத்தை அவர் மீது பூசிப்பூசியே அவரது நிஜவண்ணம் அழிக்கப்பட்டது.

சுபாஷ் என்றொரு படத்தில், அனேகமாக அவரது கடைசித் திரைத்தோன்றல் அதுவாக இருக்கக் கூடும். ஒரு யாக அக்னிக்குள் சென்றடங்கும் புகை போல அமானுஷ்யமாக உருவழிந்து மறைந்து போவார் சில்க்ஸ்மிதா. எத்தனை காவியங்களாலும் ஈடு செய்ய முடியாத அந்தக் கண்கள் அதன் பின் இமைக்கவில்லை. முன்னும் பின்னும் சமமாய்ப் பாவிக்கப் போட்டியே இல்லாத அந்தக் கண்காந்த அரசியின் வாழ்க்கைக் கதை பின் நாட்களில் வித்யாபாலன் என்ற நடிகை நடித்து உருவாக்கப் பட்டது. ஆலை இல்லாத ஊராக இந்த உலகத்தை மாற்றியிருந்தார் சில்க். சத்தியமாக வித்யாபாலன் இலுப்பைப் பூ தான். சில்க்கின் பரிமளிப்பில் கோடியில் ஒரு பங்கைக் கூட நேர்த்த முடியாதவரானார் வித்யாபாலன்.

சில்க் ஸ்மிதாவின் மரணத்துக்கான காரணங்கள் பலவாறாகச் செய்திகளாகின. கடைசிக் காலத்தில் அவர் யாரையோ காதலித்தார் என்றும் அந்த நபர் சில்க்கை ஏமாற்றி விட்டார் என்றும் அதனால் மனம் உடைந்த சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்திகள் அறிவித்தன. தாடிக்காரர் என்று அந்த நபர் குறிப்பிடப்பட்டார். அதிலிருந்து பன்னெடுங்காலம் தாடி வைத்த பர்ஸனாலிடிகளைப் பல இடங்களில் வெறுத்துக்கொண்டே இருந்தேன்.

நூறாண்டுக்கு ஒருமுறை பூக்கின்ற பூவல்லவா என்றொரு பாடல் வரும் அர்ஜூன் நடித்த தாயின் மணிக்கொடி படத்தில். அந்தப் பாடலின் நாயகியின் பேர் நிவேதிதா. அத்தனை அழகாக இருப்பார்.கன்னட தேசத்து நங்கை. அவர் தற்கொலை செய்து கொண்டார். அதே போலவே சிம்ரனின் தங்கை என்றறியப்பட்ட மோனல் தற்கொலைக்கு இரையானார். இவரது புகழ்பெற்ற படமான பார்வை ஒன்றே போதுமே படத்தில் இவருடன் இணைந்து நடித்த குணால் பிற்பாடு தற்கொலை செய்து கொண்டது வேறோரு கதையின் முடிவு.

சில்க் ஸ்மிதா அளவுக்கு என்னைப் பாதித்த இன்னொரு மரணம் மலையாளத்தில் நகஷதங்கள் படத்துக்காக தேசிய விருது பெற்ற நடிகை மோனிஷாவின் மரணம். கார்த்திக்குடன் உன்ன நெனச்சேன் பாட்டுப் படிச்சேன் படத்தில் நடித்த அவரது புன்னகை இன்னமும் அந்தரத்தில் ஈர்ப்பு விசைக்கெதிரான மாயப்பண்டமாகத் தன்னை ஆக்கிக் கொண்டு உலவுகிறது. யாராலும் போலி செய்ய முடியாத மகா பெரிய வித்தகம் போல அது. மறக்க முடியாத சிருங்காரப் புன்னகை.

ஒருதடவை புகழ்பெற்ற இந்தி நடிகை ஒருவர் ஒரு நாள் கால்ஷீட்டுக்கு லட்ச ரூபாய் சம்பளம் வாங்குவதாகப் பத்திரிகைகளில் எழுதினார்களாம்.அதைப் பற்றி அடுத்த முறை அவருக்குத் தெரிந்த பத்திரிகையாளர் ஒருவர் கேட்டபோது விரக்தியான குரலில் தான் மதியம் ஒரு மணி நேரம் தூங்கி ரெஸ்ட் எடுத்தால் பத்தாயிரம் ரூபாய்க்கா தூங்குவே என்று தன் அம்மா திட்டுவதாகக் கூறினாராம். பிரகாசமென்பதும் இருளென்பதும் இரட்டைச் சுமைகள் தான் அல்லவா..?

சின்ன வயதிலேயே நடிகையாகிற வாய்ப்புக் கிடைத்ததில் இருந்தே பெட்ரோல் பங்கில் நம்பர்கள் விரையுமே அப்படி எத்தனை தினங்கள் எத்தனை படங்கள் எத்தனை மொழிகள் எத்தனை வாய்ப்புகள் என்று எல்லாமே கவுண்ட் டவுன் தான். எல்லாமே சுதாரித்தாக வேண்டிய பொற்காலத்தின் பொழுதுகள் தான். விரைந்து ஓடிக்கொண்டே பறக்கவும் வேண்டுமென்பதான இயலாக் காரியம் ஒன்றை நிகழ்த்துவதான முயலுதல் தான் நட்சத்திர நங்கைகளின் ஆரம்ப காலம். நடிகைகளில் பெரும்பாலானவர்களுக்கு பெருமழைக்காலம் வாய்ப்பதில்லை என்பது ஒரு முக்கியமான காரணம். நின்று நிதானித்து ஆடக் கூடிய டெஸ்ட் மேட்சுகளைப் போல நாயகர்கள் கொடியேற்றிக் கொண்டிருக்கிற அதே இடத்தில் தான் பட்டாம்பூச்சிகளுக்கு ஒப்பான குறுநிலமும் சிறுமழையும் வாய்த்தாற் போலவே பறிபோய்விடுகிற தாற்காலிகத்தின் மீதான ஒவ்வாமையும் நிச்சயமின்மையின் நிரந்தர அச்சமும் இன்னபிறவும் சதா வீழ்த்தியபடியே தவணை முறையில் கொன்றழிக்கிறது.

குறுகிய கால நட்சத்திர அந்தஸ்து அடுத்து சமரசம் செய்து கொண்டு அக்கா வேஷம் அம்மா வேஷங்களில் பங்கேற்றல். அதற்கும் வாய்ப்புக் கிடைக்காத சந்தைப்போட்டி சொந்தப் படம் எடுத்துத் தன் அந்தஸ்தை நிலைநிறுத்திக் கொண்டு விடலாம் என்கிற ஒரு முடிவின் மூலமாக இழத்தலின் இருளைப் பற்றியவாறு தற்கொலை முடிவை நாடுவது என நெருக்கமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சைக்கிள்களில் எப்படி ஒன்றைத் தள்ளி விட்டால் அது மாத்திரம் தனியாக விழாமல் பல சைக்கிள்களை விழச்செய்யுமோ அப்படித் தான் நடிகைகளின் ஒரு முடிவு, முடிவான முடிவடைதலை நோக்கி அவர்களை அழைத்துச் செல்கிறது.

தன் மீது பாய்ந்து கொண்டிருந்த ஒளி தான் தன்னை நட்சத்திரமாக்குகிறது என்கிற சின்னஞ்சிறிய உண்மையை ஒரு நட்சத்திரம் உணரும் போது அந்த உண்மைக்கு வெகுதூரத்தில் சென்று நின்றாக வேண்டியிருக்கிறது. தன் மீது பாய்ந்த ஒளி இனி இல்லை என்ற உண்மையை செரித்துக் கொள்ள இயலாமல் போதைப் பழக்கங்களை நாடி அதிலேயே உணர்ந்து உண்மையின் குரல்வளையை மாத்திரம் நெறிப்பதான முயற்சியில் தன் வாழ்காலத்தின் அளவை வெகுவாகக் குறைத்து முடிந்து போன நாயகிகளும் பலர் இருந்தது கண்கூடு.

இன்றைக்கு இல்லை. நூறாண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் வரலாற்றில் பிரமாதமாக வாழ்ந்து பிரமாதமாகவே மரணமும் எய்திய பலரது கதைகளும் உண்டென்றாலும் அதில் நடிகைகள் என்று பிரித்துப் பார்க்க வேண்டிய காரணம் அவர்களுக்கு வழங்கப்படுகிற ஆட்டகாலம் சின்னஞ்சிறியது என்பதே. சௌகார் ஜானகி, மனோரமா, கே.ஆர்.விஜயா, பானுமதி ராமகிருஷ்ணா, சரோஜாதேவி என வாழும் மற்றும் வாழ்ந்த உதாரணங்கள் பல உண்டென்றாலும் கூட நிலைகுலைந்து உளம் நொந்து அழிவென்றே அறியாத அழிதலின் பகுதியாய் அல்லலுறுபவர்களும் அனேகம் பேர். சமீபத்தில் பழைய நடிகை காஞ்சனாவின் வாழ்க்கை பற்றிய பத்திரிகை செய்திகள் அவர் பற்றிய பலரது ஞாபகங்களை நிரடிப் புதுப்பித்தது. கொஞ்ச நாட்களுக்கு முன்னால் தான் இறந்து விடவில்லை என்று தானே வந்து சத்தியம் செய்ய வேண்டிய நிலை கனகாவுக்கு ஏற்பட்டது.கனகா அந்தக் காலத்தில் புகழ்பெற்ற தேவிகாவின் மகள் என்பது கூடுதல் செய்தி.

சினிமாவில் வாய்ப்பு மறுக்கப்படுகிற நடிகை அதே சினிமாவில் பின்னணிக் குரல் தருபவராகிறார். குணச்சித்திரக் கதாபாத்திரங்களை ஏற்கிறார். அவையும் வாய்க்காதவர்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிற பல மெகாத் தொடர் எனும் உலகத்துக்குள் நுழைகிறார்கள். அங்கே அவர்களுக்கான வேறோரு வானம் காத்திருக்கிறது. அதையும் தாண்டிச் சிலபலர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றில் நடுவர்களாகின்றனர். ஒரு சில நடிகைகள் நிகழ்ச்சித் தொகையாளினிகளாகி நெடுங்காலத்துக்கு தொடர்ந்து வரக்கூடிய நிகழ்வுகளின் செலுத்துனராக மிளிர்கின்றனர். நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களாக முன்வருபவர்களும் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனங்களை நடத்திவருபவர்களும் என நடிகைகளுக்கான நட்சத்திர ஓய்தல் காலத்திற்கான உபவானங்கள் அதிகரித்துத் தான் இருக்கின்றன.

பெருவெற்றிக் காலத்தில் அதிகம் காதலிக்கப் படுகிறவர்களாகவும், பிறகான பின் தூறல் காலத்தில் நிராகரிக்கப் படுகிறவர்களாகவும், மழை நின்ற பிற்பாடு மறக்கப்படுகிறவர்களாகவும், தள்ளி இருக்கிற முகமறியா ரசிகர்கள் சிலபலரால்

சதா பூஜிக்கப் படுகிறவர்களாகவும், மொத்தத்தில் பிஸ்கட் பொம்மைகளுக்குள் துடித்தடங்குகிற  நிஜ இதயங்களுக்குச் சொந்தக்காரர்களாகவும்,  கொலை செய்யப்படுகிறவர்களாகவும், சுய நோய்மையில் தன்னையே மறுதலித்துத் தற்கொலை செய்து கொள்பவர்களாகவும், இன்னபிறர்களாகவும் இருந்து இல்லாமற் போகிற அத்தனை நடிகைகளுக்கும் நமஸ்காரங்கள். வாழ்தல் இனிது.

ஜூன், 2017.