பன்னிரண்டாம் வகுப்பு முடிந்து வீட்டில் சும்மா இருப்பதற்குப் பதிலாக ஐடிஐ படி என வீட்டில் சேர்த்துவிட்டார்கள். கம்ப்யூட்டர் கோர்ஸ். பள்ளியில் படிக்கும்போதும் சரி, கல்லூரியிலும் சரி, பெண்கள் ஒன்லி தான். இருபாலர் பயிலும் நிறுவனத்தில் படிக்கும் வாய்ப்பு எனக்கு வாய்க்கவேயில்லை.
பையன்களோடு சேர்ந்து படித்தால் காதலித்து ஓடிப் போய்விடுவேன் என்கிற பயம் வீட்டில். பையன்கள் யாரேனும் வந்து லவ் சொன்னால் எனக்கென்ன அப்படி வயதாகிவிட்டது காதலிக்கிறேன் என்று சொல்கிறார்கள் என்று உள்ளுக்குள் குமுறிக் குமுறி அழுதது அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. இப்போது வரைக்குமே பள்ளிச் சிறுமியின் மனசோடுதான் உலாவருகிறேன். என்ன, வாழ்க்கை கொடுத்த அனுபவங்களால் கொஞ்சம் பக்குவப்பட்ட சிறுமியாக இருக்கிறேன் அவ்வளவுதான்.
மூன்று பெட்ரூம், பெரிய ஹால், பெரிய கிச்சன், வெளியே ஒரு வராண்டா... இதுதான் எங்கள் ஹாஸ்டல். சீனியர் அக்காக்கள், என்னைப் போல ஜூனியர்கள் என மொத்தமே ஐம்பது பேர் தான் ஹாஸ்டலில். அதில் பெட்ரூம்களில் சீனியர் அக்காக்கள் தூங்குவார்கள். ஜூனியர் நாங்களெல்லாம் ஹாலில் ஒருவர் பக்கத்தில் ஒருவர் படுத்துறங்க வேண்டும். கட்டில், பெட் எல்லாம் கிடையாது. கோரைப் பாய் தான். தலையணை, பெட்ஷீட் எல்லாம் அவரவரே வாங்கிக் கொள்ள வேண்டும்.
ஹாஸ்டலுக்குப் போன இரண்டு வாரங்களிலேயே சீனியர் அக்காக்களுக்குப் பிடித்தமான ஜூனியராக நான் ஆகிவிட்டேன். இரண்டு காரணம். ஒன்று நான் சொல்கிற கதைகள். இரண்டு நான் பாடுகிற பாட்டு.
மாலை நேரங்களில் அவர்களின் விருப்பப் பாடல்களைப் பாடிக் காட்டுவேன். இப்போது போல ஆண்ட்ராய்டு மொபைலோ, லேப்டாப்போ, கூகுளோ இல்லை. இப்படியான சொற்கள் புழக்கத்தில் இருக்கின்றன என்பது கூட அறியாத பருவம். செந்தமிழ்த் தேன்மொழியாள் பாடல் முதல் அப்போதைக்குப் பிரபலமாக இருந்த தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன் பாடல் வரை பாடல்வரிகள் எல்லாம் மனப்பாடம்.
ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு, காத்திருந்து காத்திருந்து, வைகைக்கரை காற்றே நில்லு, இதயமே இதயமே.. வானுயர்ந்த சோலையிலே, இதயம் ஒரு கோயில், கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா, நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும், ரோஜா மலரே ராஜகுமாரி.... பழைய பாடல்களும் நடுத்தரப்பாடல்கள் என நேயர் விருப்பப் பாடல்கள் நீண்டு கொண்டே போகும். அவ்வளவையும் கேட்டமாத்திரத்தில் வரிகள் மறக்காமல் பாடுவேன். கல்யாண வீடுகளிலும், வானொலியிலும் கேட்டுக் கேட்டு மனதில் பதிந்து போனவை.
அதில் லட்சுமி அக்காவுக்கு மட்டும் பாரதியார் பாடல்களைப் பாட வேண்டும் நான். நிற்பதுவே நடப்பதுவே பாடலையும் ஆசை முகம் மறந்து போச்சே பாடலையும் பாடச் சொல்லிக் கேட்டுக் கொண்டே இருப்பார். ஒருமுறை அவரிடம் கேட்டேன். ஏன்க்கா இந்தப் பாட்டு மட்டும் அடிக்கடி கேட்கறிங்க.. நான் பாடுறது போரடிக்கலையா என்று. இன்னும் கொஞ்சம் நீ வளர்ந்த பிறகு இந்தப் பாட்டு ஏன் பிடிக்குதுனு உனக்கே புரியும். எல்லா விஷயத்துக்கும் விளக்கம் சொல்லிட முடியாது. எல்லா விஷயத்துக்கும் ரீசன் இருக்கணும்னும் இல்லை.. என் கன்னத்தை இரு கைகளால் பற்றிக் கொண்டு அவர் சொன்ன அந்தக் கணமும் அவரது அழகான புன்னகையும் மறக்கவே முடியாது.
லட்சுமி அக்கா, பெயருக்கு ஏற்றார்போல லட்சணமான அழகு. இடுப்பைத் தொடும் அளவுக்கு நீண்டு கருத்த பின்னல். அவங்க முடி மேல எனக்கு அவ்ளோ பொறாமை.. எனக்கு அடர்த்தியா சுருள் சுருளா நீளமான முடி என்றால் அவருக்கு அயர்ன் பண்ண போல இருக்கும். மைதா மாவு முகம் சிரிக்கும்போது அழகு இன்னும் கூடும். சிரித்தால் இரண்டு கன்னத்திலும் விழுகிற கன்னக்குழி. பேரழகு. கொஞ்சம் ஒல்லியா இருந்தாலும் எங்கள் விடுதியிலேயே அழகு என்றால் அது லட்சுமி அக்கா தான். தனக்குக் கால் ஊனம் என்பது அவருக்குப் பெரிய குறை. ஏய் நான் அழகா இருக்கேனாடி என்று ஒரு நாளைக்கு நூறுமுறை கேட்பார். உன் அழகுக்கு என்ன குறைச்சல் என்று சொன்னால் வெட்கத்தால் கன்னக்குழி சிவக்கும்.
தினமும் மாலையில் ஐடிஐயில் இருந்து வந்ததும் முகம் கழுவி, உடை மாற்றிக் கொண்டு வந்ததும் வாசலில் விளக்கேற்றிவிட்டு, பிரேயரில் அனைவரும் ஆஜராக வேண்டும். நான் ஹாஸ்டல் வருவதற்கு முன்பு பிரேயர் பாடல்களை யார் பாடினார்கள் என்று தெரியாது. நான் வந்து சேர்ந்த நாள் முதல் ஏதாவது ஒரு பக்திப் பாடலை மாலை நேரப் பிரேயரில் பாட வேண்டும். திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா... சொல்லச் சொல்ல இனிக்குதடா.. அறுபடை கொண்ட வீடு கொண்ட திருமுருகா... என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடல். வாரத்திற்கு ஒருமுறை மட்டும் எனக்குத் தெரிந்த ஒரே ஒரு இயேசு பாடல் சந்தோஷம் பொங்குதே.. சந்தோஷம் பொங்குதே சந்தோஷம் என்னில் பொங்குதே... என்ற பாடலைப் பாடுவேன். வழி தப்பி நான் திரிந்தேன் & பாவ பழியதைச் சுமந்தலைந்தேன். அவர் அன்புக் குரலே அழைத்தது எனையே என்று பாடும்போது ஒவ்வொரு முறையும் பிரேயேரில் இருப்போரின் கண்கள்
லேசாக நீர் நிரம்பியிருக்கும்.
பாடல் முடிந்து ஐந்து நிமிடம் நீண்ட மௌனம். பிறகு, டீ என்கிற பெயரில் கொடுக்கப்படுகிற ஒரு டம்ளர் சுடுநீரை எடுத்துக் கொண்டு மாடிக்குச் செல்வோம் நானும் லட்சுமி அக்காவும்.
ஐந்து மாதத்திற்குப் பிறகு ஒரு நாள் மெதுவாக ஒரு மாலைப் பொழுதில் உன்கிட்ட ஒண்ணு சொல்வேன், யார்கிட்டயும் சொல்லக் கூடாது என்ற சத்தியக் கட்டளையோடு ஒரு விஷயத்தைச் சொன்னார்.
ஹாஸ்டலுக்கு எதிர் வீட்டில் இருக்கும் தட்சிணாமூர்த்தி அண்ணாவை அப்போது தான் பார்த்தேன். மாடியில் இருந்தபடி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். லட்சுமி அக்கா எதிர்வீட்டு மாடியை விரல் நீட்டிக் காட்டும் வரை அங்கே கொஞ்சம் சுமாரான ஒரு வாலிபப் பையன் இருக்கிறான் என்பது எனக்குத் தெரியாது. ஐடிஐ, ஐடிஐ விட்டால் ஹாஸ்டல்.. இப்படி குனிந்த தலை நிமிராமல் வழியில் எங்கும் நின்று அரட்டை அடிக்காமல் கொஞ்சம் சமத்துப் பெண்ணாகவே இருந்துவிட்டதை நினைத்து இப்போது வருத்தப்படுகிறேன்.
தட்சிணாமூர்த்தி அண்ணா மாநிறம். சின்ன முகம். சுருட்டை முடி. ரொம்ப உயரம் என்று சொல்ல முடியாது. ஆனால் கொஞ்சம் உயரம். பார்த்தவுடன் கவர்கின்ற தோற்றமெல்லாம் இல்லை. ஆனால் கொஞ்சமாய் பல் தெரிய சிரிக்கும்போது கண்களும் முகமும் கொஞ்சம் அழகாய் இருப்பதாய்த் தோன்றும். தட்சிணா அண்ணா மீது லட்சுமி அக்காவுக்கு ஒரு ஈர்ப்பு. அது காதல் தானா என்று கணிக்க முடியாமல் பார்வையாலேயே பேசிக் கொண்டிருந்தனர். உண்மையைச் சொல்லப்போனால் லட்சுமி அக்காதான் பார்வையால் பேசிக் கொண்டிருந்தார். தட்சிணா அண்ணாவிடமிருந்தும் பார்வையால் பதில் வந்ததா என்பதை லட்சுமி அக்காவின் மனசிடம் தான் கேட்க வேண்டும். ஆனால், அவர் தனக்காகவே மாடிக்கு வருவதாக லட்சுமி அக்கா நம்பினார். உனக்குப் பிடிச்சிருந்தால் போய் பேசுக்கா... என்ன சொல்லிட போறாங்க. உங்களையெல்லாம் பிடிக்கலனு ஒருத்தன் சொல்லிடுவானா... என்ன சொன்னாலும் இல்லடி பயமாருக்கு.. கொஞ்சம் நாள் போகட்டும் என்று சொல்லும்போதே முகத்தில் வெட்கமும் விரல்களில் நடுக்கமும் பற்றிப் படரும். கால் இப்படி இருக்கே எப்படி அவருக்கு என்னைப் பிடிக்கும்... இதுதான் அவரது பயம். லவ்ல அதெல்லாம் ஒரு விஷயமே இல்லக்கா... நான் லட்சுமி அக்காவை விட வயதில் சிறியவள் என்பதாலா இல்லை இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்கா ஏதேனும் சொல்லவில்லை என்பதா எனத் தெரியவில்லை. கடைசி வரை காதலைச் சொல்லவேயில்லை. ஆனால், தினம் தினம் தட்சிணா அண்ணாவைப் பற்றித்தான் பேசிக் கொண்டே இருப்பார் மூச்சு விடுவதைப் போல.
கொஞ்சம் நாட்கள் செல்லச் செல்ல தட்சிணா அண்ணா என்னைப் பார்த்தும் லேசாகப் புன்னகைக்க ஆரம்பித்தார். நானும் பதிலுக்கு யாரும் பார்க்காமல் புன்னகைப்பேன்.
ஐடிஐ கடைசிப் பரிட்சைக்கு இரண்டு நாட்களே மிச்சமிருந்தன. லட்சுமி அக்கா அழுதுகொண்டே இருந்தார். என்னக்கா என்றேன் கைகளைப் பிடித்து... மாடிக்கு வா என்றார் கண்களைத் துடைத்துக் கொண்டு. மெதுவாக மாடிப் படியேறி வழக்கமாக அமரும் இடத்தில் உட்கார்ந்தோம். தட்சிணா அண்ணா அவர் வீட்டு மாடியில் சாய்ந்தபடி உடம்பில் ஒரு துண்டை மட்டும் போர்த்திக் கொண்டு தம் அடித்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்துக் கொண்டே லட்சுமி அக்கா சொன்னார். என் வீட்டுல எனக்கு மாப்ள பார்த்துட்டாங்க. எக்சாம் முடிச்சிட்டு வீட்டுக்குப் போன கையோட நிச்சயதார்த்தம்.. வீட்டுல எதாவது சொல்லிக் கல்யாணத்தை நிறுத்தணும்.. நான் என்ன பண்ணுவேன்.. கண்ணீர் தாரைதாரையாக வழிந்தது. பார்வை எதிர்வீட்டு மாடியை விட்டு அகலவேயில்லை.
அந்த அண்ணா பற்றி வீட்டுல சொல்லிடேன்க்கா..
அதோட என்னை வெட்டி மரத்துக்கு உரமா போட்ருவாங்க...
லவ்வ சொல்லவும் மாட்றிங்க. வீட்டுக்கும் பயம்.. என்ன தான்க்கா பண்றது? ஒருவேளை அந்த அண்ணாவுக்கு உங்களைப் பிடிச்சிருந்தால் எங்காவது போய் கல்யாணம் பண்ணிக்கிறிங்களா? நான் போய் பேசுறேன்.
என் வாயைப் பொத்தி, ‘ அப்படிலாம் பண்ணிடாதடி.. என் விதி எப்படி இருக்குதோ அப்படியே நடக்கட்டும்' என்று
சொல்லிவிட்டு என் மடியில் படுத்துக் கொண்டார்.
அடுத்த நாள் காலை எக்சாமுக்குக் கிளம்பும்போது தட்சிணா அண்ணா அவர் வீட்டு வாசல் இரும்புக் கதவின் அருகில் ஹாஸ்டலைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார். நான் ஒரு பேப்பரில் சில வரிகள் எழுதி மடித்து, யாரும் பார்க்கிறார்களா எனப் பார்த்துவிட்டு தட்சிணா அண்ணா பார்க்கும்படி வாசலில் அந்த மடித்த பேப்பரைப் போட்டுவிட்டு வேகவேகமாகச் சைக்கிளில் சென்றுவிட்டேன். நிச்சயமாக அவர் பேப்பரைப் படித்திருப்பார் என்ற நம்பிக்கையோடு எக்சாமை எழுதிவிட்டு வந்தேன்.
இரவு சாப்பாடு ரெடியாகியிருந்தது. சாப்பிடச் செல்வதற்கு முன்னாடி நாப்கின் வாங்கி வரச் சொல்லிக் கடைக்கு அனுப்பினார் லட்சுமி அக்கா. பக்கத்தில் இருக்கிற கடைக்குத்தானே என நடந்து போய்க் கொண்டிருந்தேன். என் பின்னால் ஒரு பைக் மெதுவாக வருவதை உணர்ந்து திரும்பினேன். ...தட்சிணா அண்ணா. ஒரு புன்னகையுடன் என் கையில் சிறு காகிதத்தை வைத்துவிட்டு வேகமாகச் சென்றுவிட்டார். காலையில் கொடுத்த அந்தப் பேப்பரை அவர் படித்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டேன். அவர் கொடுத்த பேப்பரை உடனே படிப்பதா அல்லது லட்சுமி அக்காவிடம் கொடுப்பதா என்கிற குழப்பம். என்ன எழுதியிருக்கிறது என்பதை உடனே தெரிந்து கொள்ளும் ஆர்வம். குழப்பத்தை ஆர்வம் விஞ்சிவிட பிரித்துப் பார்த்தேன்.
உன்னை இந்த ஹாஸ்டலில் பார்த்த நாளில் இருந்து உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். உன்கிட்ட தனியா பேசணும்னு ரொம்ப நாளாக் காத்துக் கொண்டிருக்கேன். லட்சுமியைப் பற்றி நீ சொல்லி இருந்த. ஆனால் அவ எனக்கு ஒரு ஃப்ரெண்டு போலதான். அவ நல்ல மனசுக்கு நல்ல வாழ்க்கை அமையும். நீ யோசிச்சு சொல்லு. நீ சொல்றதை வச்சு தான் நான் என் வாழ்க்கையை முடிவு செய்யணும். இன்னும் ஒரு நாள் தான் நீ இங்க இருப்பனு தெரியும். இங்க இருந்து போறதுக்குள்ள எனக்கொரு பதிலைச்
சொல்லிட்டுப் போ. லட்சுமி கிட்ட இதைப் பற்றிச் சொல்லாத. வருத்தப்படுவா. எனக்கு நீ வேணும். உன் கூட நான் வாழணும்.
இப்படிக்கு என்று அவர் பெயர் எழுதி இருந்தார்.
பேப்பரை அங்கேயே கிழித்துப் போட்டுவிட்டு ஹாஸ்டலுக்குப் போனேன். லட்சுமி அக்காவின் முகத்தைப் பார்க்கவே தயக்கமாக இருந்தது. எதுவும் பேசாமல் சாப்பிட்டு விட்டு, சாரிக்கா என்று மட்டும் சொன்னேன். அடுத்த நாள் லட்சுமி அக்கா வீட்டில் இருந்து அவரை அழைத்துச் செல்ல குடும்பமே காரில் வந்திருந்தது.
காரில் ஏறுவதற்கு முன்பு என்னைக் கட்டிப்பிடித்து காதோரம் கண்ணீரோடு சொன்னார். ‘நான் எப்படி மறக்கப் போறேன்னு தெரியல. உனக்கு மட்டுமே தெரிஞ்ச ரகசியம் உன்னோடு முடிஞ்சு போகட்டும். யார்கிட்டயும் சொல்லிடாத. மறக்காமல் என் கல்யாணத்துக்கு வா...' சொல்லிவிட்டுக் காருக்குள் ஏறினார்.
செப்டம்பர், 2021