மெல்லிசை குழுக்களும்,பாடகர்களும் தமிழ் சினிமாவில் காணாமல் போன வஸ்துகளில் ஒன்றாகி விட்டனர். எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் சினிமா மேடைகளில் ஒளி வீசிய இந்த கதாபாத்திரங்கள் கால ஓட்டத்தில் மெல்ல கரைந்து விட்டன.
மெல்லிசைப் படங்கள் இசையமைப்பாளர் களுக்கு சவாலானவை. உற்சாகம் தரக்கூடியவை. ரசிகர்களுக்கும்தான். படத்தின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை இசை ரசிகர்களுக்கு தலை வாழை விருந்து உத்திரவாதம். மற்ற படங்களில் பாடல்கள் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் மெல்லிசை படங்களில் இசையமைப்பாளர்கள் நிமிர்ந்துஉட்கார்ந்து விடுகிறார்கள். எம்.எஸ்.வி, இளையராஜா, டி.ஆர்., எஸ்.ஏ.ராஜ்குமார் யாருமே இதில் சோடை போகவில்லை. சந்தேகமிருந்தால் ‘நினைத்தாலே இனிக்கும், ரயில் பயணங்களில், பயணங்கள் முடிவதில்லை,உதய கீதம், பாடும் வானம்பாடி, புது வசந்தம்’ பட பாடல்களை நினைவில் சுழலவிட்டுப் பாருங்கள்.
டி.ஆர் காலங்களில் ரவீந்தர், ராஜீவ் மேடைகளில் பெல் பாட்டம் பேண்டுடன் ஆடிப் பாடி பிறகு மோகனை மைக்குக்காகவே தாரை வார்த்துக் கொடுத்துவிட்டார்கள். மோகனுக்குப் பிறகு ஆனந்தபாபு சில காலமும் பிறகு முரளியும் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டார்கள். பிடித்துக் கொண்டார்கள் என்பதைவிட அவர்களின் தலையில் சுமத்தப்பட்டது என்பதே பொருத்தமானதாக இருக்கும். நாளை நமதேவில் எம்ஜிஆர் குடும்பப் பாட்டுப்பாடி சகோதரனைக் கண்டுபிடிக்கும் உத்திகள் சில விதிவிலக்குகள்.பெரிய கதாநாயகர்களான பிறகு இம்மாதியான பாத்திரங்களில் நடிக்கும் போது அவர்களின் மீது முத்திரை குத்தப்படுவதில்லை. வீரா படத்தில் பாடகனாக வரும் ரஜினியும் இந்த வகையிலேயே வருகிறார். ஆனால் அறிமுக காலங்களில் மென்மையான பாத்திரங்களை ஏற்கும் கதாநாயகர்கள் இதிலிருந்து தப்புவது கடினம். மேடைப் பாடகன் என்ற மென்மையான முத்திரையை எந்த நாயகனும் விரும்பி ஏற்பதில்லை.
டி.ஆர் படங்களில் பாடகனாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் கதாநாயகனின் மேடைப் பாட்டு கண்டிப்பாக உண்டு.‘யாரோ பின்பாட்டுப் பாட’ ஒரு வகை என்றால் ‘வாசமில்லா மலரிது’ இன்னொரு வகை. டி.ஆரின் இசையில் மேடை களைகட்டுவது இன்றைக்கும் உற்சாகம் அளிக்கும் காட்சிகள்.
தமிழில் முதன் முதலாக இசைக்குழுவைப் பற்றிய படம் நமக்கு தெரிந்த வரை கே.பாலசந்தரின் நினைத்தாலே இனிக்கும் தான். படத்தின் முதல் காட்சியே தன்னுடைய குழுவைப் பற்றி கமல் அறிமுகப்படுத்துவது. ரஜினி கிடார் இசைக் கலைஞர்.அறிமுகம் முடிந்தவுடன் எம்.எஸ்.வியின் அதிரடியாக ‘எங்கேயும் எப்போதும்’ பாடல். அங்கிருந்து படத்தின் இறுதி காட்சி பாடலான நினைத்தாலே இனிக்கும் பாடல் வரை இசை மழைதான். படத்தில் இசை மற்றும் கமலஹாசனைத் தாண்டி அனைவரையும் வசீகரித்தவர் ரஜினி. சம்போ சிவ சம்போ பாடல் ரஜினிக்காகவே வைக்கப்பட்டதாகத்தான் தோன்றுகிறது. பூர்ணம் விஸ்வ நாத்திடம் சிகரட்டை ஸ்டைலாக பத்து முறை தூக்கிப் போட்டு பிடிப்பதற்கு சுண்டு விரலை பந்தயம் கட்டி பத்தாவது முறையில் பந்தயத்தை வாபஸ் வாங்குவது கே.பி+ரஜினி டச்.
எண்பதுகளில் பாடக கதா நாயகர்கள் மேடையில் மிகப் பிரபலமானவர்கள். ஆட்டோகிராப்புக்காக மொய்க்கும் ரசிகர்களில் அலையில் நீந்தித் தப்பிக்க கஷ்டப்படுபவர்கள். நீங்கள் கேட்டவை படத்தில் தியாகராஜன், உதய கீதம் படத்தில் மோகன் என்று பல உதாரணங்கள் உண்டு. ஆனால் இவர்கள் எல்லோரையும் விட நம்முடைய மனதில் தங்கிவிட்ட கதாபாத்திரம் ஜானி படத்தில் ஸ்ரீதேவியின் அர்ச்சனா. கதாபாத்திரங்களை வடிவமைப்பதில் கைதேர்ந்தவர் மகேந்திரன். கொஞ்சம் அதிர்ந்து கூட பேசாத மென்மையான உள்ளம் கொண்ட பாடகி அர்ச்சனா கண் முன்னே உயிர்பெற்று நிற்பார். இரண்டு ஆள்மாறாட்ட ரஜினியிடம் மாட்டிக்கொண்டு துன்பப்படும் போதுகூட மெல்லிய விசும்பலுடன் கண்ணீர் மட்டுமே எட்டிப்பார்க்கும்.‘ஒரு இனிய மனதின்’,‘காற்றில் எந்தன் கீதம்’ என்று காலத்தால் அழியாத ராஜாங்க பாடல்கள் படத்தின் தூண்கள்.
இந்தியில் மிதுன் சக்கரவர்த்தி ஹிட்டடித்த டிஸ்கோ டான்ஸர் படம் பாடும் வானம்பாடியாக தமிழில் உருமாறியது. ஆனந்த்பாபுவிற்கு மிகப் பெரிய பெயரை பெற்றுத் தந்த படம். நாகேஷின் நடன அசைவுகளை கலந்து ஆனந்த் பாபு ஆடிய ஆட்டம் அன்றைய இளைஞர்களை வசீகரித்தது ஆச்சரியமில்லை. பப்பி லஹரி இசையில் இந்தியில் ஹிட்டடித்த அத்தனை பாடல்களும் தமிழிலும் பட்டி தொட்டியெங்கும் பரவசப்படுத்தியது. வாழும் வரை போராடு பாடலும், நானொரு டிஸ்கோ டான்ஸர் பாடலும் இன்றும் நினைவில் நிற்பவை.இந்த படத்திலிருந்துதான் ஆனந்தபாபுவின் மேல் மேடை பாடகன் முத்திரை விழுந்தது. அதன் பிறகு அதிலிருந்து அவர் தப்பவே முடியவில்லை. மோகன் கதா நாயகனாக நடித்த உதய கீதம் படத்தில் கூட அவருடன் மேடையில் நடனமாடும் பாத்திரம் தான் ஆனந்தபாபுவிற்கு. கடைசியாக புது வசந்தம் படத்தில் தனக்கு பழக்கமான ஏரியாவில் விளையாடி வெற்றி பெற்றார் ஆனந்த்பாபு.
இன்றைக்கும் கல்லூரி விழாக்களில் கட்டாயம் பரிசு வாங்க வேண்டும் என்று முடிவெடுப்பவர்கள் தேர்ந்தெடுக்கும் பாடல்கள் பயணங்கள் முடிவதில்லை படத்தின் இளைய நிலா பாடலும், உதய கீதம் படத்தில் வரும் சங்கீத மேகம் பாடலும்தான். இரண்டுமே மோகன் படப் பாடல்கள். மோகனின் உடல் மொழி அவரே பாடுவது போன்று தத்ரூபமானது. நான் பாடும் பாடல் படத்தில் அம்பிகா பாடகி. மோகன் அவரின் ‘பாடவா உன் பாடலை’ பாட்டை கேட்க காரில் ஓடோடி(?) வரும்போது விபத்தில் உயிரிழப்பார். இது அப்படியே உல்டாவாக மணிரத்னத்தின் இதயகோவில் படத்தில் வரும். மோகன் பாடகர். கிராமத்திலிருந்து சென்னை வந்து அவர் பாடகனாகி முதல் பாடல் பாடுவதை பார்க்க அம்பிகா ஓடோடி வருவார். யார் வீட்டு ரோஜா பாடலை மோகன் பாடிக்கொண்டிருக்க,சென்னைக்கு வந்த அம்பிகா ரௌடிகளால் சூறையாடப்பட்டு கோவிலில் பிணமாகக் கிடப்பார். இரண்டு கதைகளுமே ஏறக்குறைய ஒன்றுதான். மறுமணத்தைப் பற்றி பேசும் காதல் கதைகள்.
இடையில் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட இசைக்குழு கதைகள் விக்ரமனின் புது வசந்தம் வெளி வந்த பிறகு மீண்டும் தூசுதட்டி எடுக்கப்பட்டது. புது வசந்தத்தின் வெற்றி அப்படி. நான்கு நண்பர்கள் வாய்ப்பு கிடைக்காமல் ஏங்கும் இசைகலைஞர்கள்.அவர்களின் வாழ்வில் நுழையும் பெண்ணாக
சித்தாரா. ஆண் பெண் சினேகம் என்பது காதல் மட்டுமில்லை, நட்பாகவும் இருக்கலாம் என்பது கதை. முரளி, ஆனந்த் பாபு, சார்லி, ராஜா கோஷ்டியில் சித்தாரா நுழைந்து அவர்களுக்கு உற்சாகம் அளிப்பார். அவர்களின் இசைக் குழுவில் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு ஆதார சுருதி. படம் ஹிட்டடித்தாலும் அடித்தது,மொட்டை மாடி கூரை நான்கு நண்பர்கள் இசைக்குழு என்று அன்றைய கதா நாயகர்கள் எல்லோருமே இந்த கதையை ஒரு கை பார்த்துவிட்டுத்தான் ஓய்ந்தார்கள், மாதவன், தருண் வரை.
இரண்டாயிரத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியுடன் மெல்லிசை கதைக்கு துள்ளலிசை வர்ணம் கொடுத்தவர் இயக்குனர் ஷங்கர். பாய்ஸ் படம் அதே நான்கு நண்பர்கள், இசைக்குழு ஒரு பெண் கதைதான். ஆனால் அவர்கள் இன்றைய தலைமுறை இளைஞர்கள்.
சாப்பாட்டுக்கு அல்லாடும் பழைய வகை நாயகர்கள் அல்ல. காதலுக்காக குடும்பத்தை துறந்து இசைக் குழு ஆரம்பிப்பவர்கள். மாரோ மாரோ.. என்று ராப் பாடல் பாடி கவனத்தை ஈர்ப்பவர்கள். தமிழ் சமூகம் உள்ளூர படத்தை ரசித்துவிட்டு வெளியே சீ...ச்சீய்.. என்றது. இன்றைக்கு தமிழ் படங்களில் இசை அமைக்கும் பல இசை அமைப்பாளர்கள் பள்ளி, கல்லூரிகளில் தனியாக பேண்ட் வைத்திருந்தவர்கள், அனிருத் உட்பட. பாய்ஸ் படம் வந்து பத்தாண்டுகளை தாண்டிவிட்டது. இன்றைய பள்ளி,கல்லூரி இசைக்குழுக்களைப் பற்றிய இசைப் படங்கள் ரசிகர்களுக்கு உற்சாகமான விஷயமாகத்தான் இருக்கும்.இசை விருந்தை அனுபவிக்க நாங்க ரெடி...
டிசம்பர், 2014.