பழைய பேய் படங்கள் 
சிறப்புப்பக்கங்கள்

பழைய பேய்களின் ஆட்டம்!

ஓய்வுபெற்ற பேய்கள்

திருநின்றவூர் தி. சந்தான கிருஷ்ணன்

தமிழ் சினிமாவுக்கு ‘பேய் ‘ என்ற கரு புதிதல்ல. அன்றைய தமிழ் சினிமாவில் கதையை ஒட்டிய காட்சிகளில் பேய்களைப் புகுத்தியிருந்தார்கள். அத்தகைய ஒரு சில படங்களின் சாராம்சங்களை இங்கே பார்க்கலாம்.

பழைய பேய் படங்கள்

1. ரத்தின குமார் (1949)

ரத்தினக்குமார் ஒரு பிச்சைக்காரன். ஒரு நாள், பேய்கள் அட்டகாசம் உள்ள  சத்திரத்தில் படுத்துத் தூங்குகின்றான். நடுநிசியில் சூறைக்காற்று வீச,
 சத்திரமே நடுநடுங்க தரையிலிருந்து எழுகிறது எலும்புக் கூடு வடிவத்தில் ஒரு பேய். அதன் இரண்டு கைகளிலும் பெரியதொரு பாராங்கல்லைத் தூக்கிக் கொண்டு ரத்தினகுமாரைப் பார்த்து கனத்த குரலில் "போடட்டுமா" என்கிறது. ரத்தினகுமார் இருப்பதைவிட இறப்பதே மேல் என்று எண்ணி
"போட்டுத்தொலை'' என்று கம்பீரமாகக் குரல் கொடுக்க பேய் அவனை ஆசிர்வதிக்கிறது. ரத்தினகுமாராக 'தவநடிகபூபதி' பியூ சின்னப்பா
 சிறப்புற நடித்திருந்தார். படத்தில் இவருக்கு ஜோடி பானுமதி, இயக்கம் கிருஷ்ணன் & பஞ்சு.

2. மாயக்குதிரை (1949)

 

மீர்ஜாபூர் ராஜா அவர்களின் தயாரிப்பு & இயக்கத்தில் வெளிவந்த ‘மாயக்குதிரை' முற்றிலும் பேய்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும். விதர்ப்பதேசத்து அரசன் பிரசேனன் வேட்டையாடித் திரும்புகையில் 'புவன சுந்தரி' என்ற அழகிய  பெண் தோற்றத்திலிருந்த  ராட்சச பிசாசை காதலித்து கந்தர்வமணம் புரிகிறான். நாடு திரும்பிய அரசனுடன் புவனசுந்தரி அவள் தோழி கேசினி என்ற மற்றொரு பிசாசையும் தன் துணைக்குக் கூட்டி வருகிறாள். படத்தில் வரும் ராட்சசிகளின் தோற்றத்தை பயங்கரமாக காட்டுகிறார்கள். யானையைக் கொன்று குடலை உருவி ரத்தம் சொட்ட சொட்ட
இரு ராட்சசிகளும் உண்ணும் காட்சி பதைபதைக்க வைக்கிறது. ஏவி.சுப்பாராவ், ஏ.நாகேஸ்வரராவ், அஞ்சலிதேவி,கனகம்,பாலமணி நடித்திருந்தார்கள்.

பழைய பேய் படங்கள்

3. மர்மயோகி. (1951)

புதுமைக்கும் அசாத்யத்துணிச்சலுடன் படம் எடுப்பதற்கும் ஜுபிடர் சோமசுந்தரமும் கே.ராம்நாத்தும் பேர்போனவர்கள். இவர்கள் உருவாக்கிய சிறந்த படைப்பே "மர்மயோகி" என்ற திரைப்படமாகும். இப்படத்தில் நடு இரவில் வெண்மையான தோற்றத்திலே பேய் ஒன்று தோன்றி பயமுறுத்தி மறைகிறது. இக் காட்சிகள் திறம்படக் கையாளப்பட்டன. சுழல்காற்று  வீச, திரைச்சீலைகள் மூர்க்கமாக முன்னும் பின்னும் ஆட, கனத்த ஒலியோடு அந்தரத்தில் தொங்கியவாறு வெள்ளை உருவில் பேய், வருகின்ற காட்சி பார்ப்போரை பயமுறுத்தியது, தமிழ் சினிமாவில் முதல் முதலாக horror என்ற திகில் காட்சிக்காக படத்திற்கு 'வயது வந்தவர்களுக்கு மட்டும்' என்ற 'ஏ' சர்டிபிகேட் வழங்கப்பட்டது. சிறுகளத்தூர் சாமா மையப்பாத்திரத்தில் நடிக்க, எம்.ஜி.ஆர் இன்னொரு முக்கியப் பாத்திரம் ஏற்றிருந்தார்.

4.மேதாவிகள் (1955)

ரேவதி புரடெக்‌ஷன்ஸ் தயாரிப்பில் கே.வேம்புவின் இயக்கத்தில் வெளிவந்த நகைச்சுவை &திகில் படம், 'மேதாவிகள் '. அப்போதே சிரிப்புப் பேய் வந்துவிட்டதாக்கும். அதிஷ்டத்தால் மேதாவிகளான துப்பறியும் சகோதரர்களை பற்றி சொல்கிறது, ஜூனியர் நாதன் (டி.ஆர். ராமசந்திரன்), சீனியர் நாதன்  (கே.ஏ.தங்கவேலு) தங்களை பிரசித்திபெற்ற துப்பறிபவர்களாகக் கருதிக் கொண்டு துப்பறியும் காரியாலயம் ஒன்றைத் தொடங்குகிறார்கள் ஒரு வீட்டில் திருட்டைக் கண்டுபிடிக்கப் போகையில் அந்த வீட்டில் பேய் உலாவுவதாக கேள்விபட்ட நாதன் சகோதரர்களுக்கு உதறல் எடுக்கின்றது. பேயின் ஆர்ப்பாட்டம் தொடருகிறது. ரசிகர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்த பேய்ப்படம் இது.

5.ரம்பையின் காதல் (1956)

மண்ணுலக மைந்தன் அழகு என்பவனை விண்ணுலக ரம்பா ஒரு விநோதமான சந்தர்ப்ப சூழ்நிலையால் திருமணம் செய்ய நேர்ந்துவிடுகிறது. இதனால் இந்திரன் சாபத்திற்குள்ளான ரம்பா மோகினிப் பேயாக பூவுலகில் அருவமாக சுற்றி அலைகிறாள். அவள்
 சாபவிமோசனம் பெறுவதே கதை. இப்படத்தில் 'அழகு' பாத்திரத்தில் கே.ஏ.தங்கவேலுவும் ரம்பா பாத்திரத்தில் பானுமதியும் இளவரசி சுகுணா பாத்திரத்தில் எம்.என் ராஜமும் நடித்திருந்தனர் இது ஒரு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதே கதையை இதே பெயரில்1939ம் ஆண்டில் முருகன் டாக்கி பிலிம் கம்பெனி பி.என். ராவ் இயக்கத்தில் தயாரித்து வெளியிட்டிருந்தது.

7.நான் வணங்கும் தெய்வம்(1963)

விஞ்ஞானத்தால் மனித குணத்தை மாற்ற முடியுமா என ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் மருத்துவர் ஒருவர் சுந்தரத்துக்கு(சிவாஜி) மருந்து செலுத்துகிறார். அது குணத்தை மாற்றுவது மட்டுமல்லாது எதிர்பாராத விதமாக அவனுக்கு கோர உருவத்தைக்கொடுத்தது. பேய் போலானான் சுந்தரம். பல்வேறு திருப்பங்களுடன் கதை தொடர்ந்து முடிவில் அதே டாக்டரிடம் சேர்க்கப்பட்டு பழைய நிலைக்குத் திருப்புகிறான். சிவாஜி கணேசனின் கதாபாத்திரத்தை ரசிகர்கள் ஏற்காததால் படம் தோல்வியுற்றது. படத்தயாரிப்பு ஸ்ரீ சத்திய நாராயணா பிக்சர்ஸ், இயக்கம் ஓ.சோமு.

பழைய பேய் படங்கள்

8.ஒருவிரல் (1965)

முதல் காட்சியே மண்டையோடுதான். இயக்குநர்
சிஎம்வி ராமன். கிரிமலை எஸ்டேட்டின் ஜமீன்தார் கொலையுண்டு கிடக்கிறார், இந்த கொலையை யார் செய்தது? அல்லது எது செய்தது? ஏன் செய்தது என்ற கேள்விகளை திரைப்படம் முன் வைக்கிறது.  திடுக்கிடும் மர்ம நிகழ்ச்சிகள், எலும்புக்கூட்டு பேயின் மிரட்டல்கள் என்று படம் முழுக்க காட்சிகள் நிரப்பப்பட்டன. மிரட்டும் எலும்புக்கூட்டின் ஒரு விரல் பின்னமாகியிருந்ததை வைத்து கொலையாளியைக் கண்டுபிடிக்கிறார்கள். படத்தில் தோற்றத்தில் அப்பாவியாக இருந்த எஸ்டேட் கூலி முத்துஎன்கின்ற பாத்திரத்தில் டி.என். கிருஷ்ணாராவ் நடித்திருந்தார். படத்தில் இவரது நடிப்பில் பிரதிபலித்த கொடூரக் கூர்மை அவருக்கு ஒரு விரல் கிருஷ்ணாராவ் என்ற பெயரை வாங்கித்தந்தது.

பழைய பேய் படங்கள்

9.கன்னிவேட்டை(1979)

ஸ்ரீராம் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த படம் "கன்னி வேட்டை'' இயக்குநர் அ.வின்சென்ட் தன் கற்பனைத்திறனையெல்லாம் கொட்டி , கேமிரா திறமையைக் கூட்டி எடுத்த முற்றிலுமான ஒரு புதுமைச் சித்திரம். ஒரு கிழவன்  ஏழு கன்னிப்பெண்களை பலி கொடுத்து இளமையைத் தக்கவைக்கும்கதை.  இது மலையாள  திகில் படமான 'வயநாடான் தம்பன்' என்ற மலையாளப்படத்தின் தமிழ்ப்பதிப்பாகும். இப்படத்தில் பேராசைக்கிழவனாக கமலஹாசனும் அவன் மனைவிகளில் ஒருவராக லதாவும் நடித்திருந்தனர்.

'இரத்தப்பேய்(1969), "கதவை தட்டிய மோகினிப்பேய்''(1975),  என பல படங்கள் உண்டு. இன்று பழைய பேய்கள் ஓய்வெடுக்க புதிய பேய்கள் கிராபிக்ஸ் உதவியுடன் ஆட்டம்போடுகின்றன.

பிப்ரவரி, 2019.