ஜீவா
சிறப்புப்பக்கங்கள்

பல்கலைக்கழக பஞ்சாயத்துகள்!

பேரா. பொ. பாலசுப்ரமணியன்

நான் கோவை வேளாண் கல்லூரியில் வார்டனான புதிதில், இளங்கலை மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருந்தது. புதிய துணைவேந்தர் என்னை அழைத்து, ‘பாலு, இந்த வருடம் மாணவிகள் நிறைய அட்மிட் பண்ணிட்டோம். அவங்களுக்கு இருக்குற ஹாஸ்டல்கள் போதுமான்னு பாருங்க!' என்றார்.

என்னுடன் பணியாற்றிய துணை வார்டன்கள், மற்ற ஊழியர்களைக் கலந்தாலோசித்து, பயன்படுத்தப்படாமல் இருந்த ஒரு விடுதியை பெண்கள் விடுதியாக மாற்றினோம்.

ஒரே ஒரு பிரச்னை, சுற்றுச் சுவர் பாதுகாப்பில்லாமல் இருந்தது. அதுவும் ஒருசில நாட்களிலேயே சரி செய்யப்பட்டது. ஆண்கள் ஹாஸ்டல்களுக்கு நடுவே ஒரே ஒரு பெண்கள் ஹாஸ்டல். மாணவிகள் குடியேறினர்.

ஆனால், எங்கள் கல்லூரிப் பேராசிரியர்கள் பலருக்கு அது பிடிக்கவில்லை, அன்று, கையில் ஒரு கேக் பார்சலோடு விடுதிக்குச் சென்று கொண்டிருந்த, முதலாமாண்டு மாணவி ஒருத்தியிடம்  அருகில் இருந்த ஆண்கள் விடுதி சீனியர் மாணவன் கேட்டான்,

‘அது என்ன கேக்கா?'

 ‘ஆமாம் அண்ணா, எனக்குப் பிறந்தநாள், என் தோழியருக்குக் கொடுக்க வாங்கி வருகிறேன்!'

வாழ்த்துகள் சொல்லிவிட்டு சீனியர் மாணவன்

கேட்டான், ‘அப்போ எனக்கு கேக் கெடையாதா? உன் தோழிகளுக்கு மட்டும்தானா?'

‘அப்படி இல்லை அண்ணா, நீங்களும் ஒரு துண்டு எடுத்துக்கோங்க' என்று எடுத்துக் கொடுத்தாள்.

இந்தச் செய்தி மற்ற மாணவிகளால் ஊதிப் பெரிதாக்கப்பட்டு, உடனுறை பேராசிரியை வழியாக என் காதுக்கு வந்தது. அப்போது அந்த அறியாப் பெண் என்னைப் பார்த்து,

‘நான், அந்த அண்ணாவுக்கு என் பிறந்த நாள் கேக் குடுத்திருக்கக்கூடாதா, சார்?'  என்று கேட்டாள்.

உண்மையிலேயே அந்த வெள்ளந்திக் கேள்வி என்னைச் சில நாட்களுக்கு உலுக்கி எடுத்தது.

‘இல்லையம்மா, நீ செய்ததுதான் சரி!' என்றேன்.

என் 35 ஆண்டு கால நண்பரும் பேராசிரியருமான ஒருவரின் தம்பி மகள்கள் இருவர்  அங்குதான் படித்தனர். இருவரும் படிப்பு முடிந்து விடுதியில் இருந்து ஊருக்குப் புறப்பட்டு செல்லும் போது, குவாட்ரஸிலிருந்த என் துணைவியிடம்

சொல்லிவிட்டுப்போக வந்தார்கள். ஏனோ, சாதாரணமாக என்னிடம் அவர்கள் சரளமாகப் பேசுவதில்லை, வணக்கத்தோடு சரி, மற்ற உரையாடல் எல்லாம் ஆன்ட்டியிடம்தான். அப்போது அந்த கேக் பற்றிய பேச்சு வந்தது. அவர்கள் மனத்தில் தேங்கி இருந்ததை அப்படியே வெளியே கொட்டிவிட்டார்கள்.

‘நாங்கள்ல்லாம், எங்க குடும்பத்தை விட்டு, ஊரு ஜனத்தை விட்டு இவ்வளவு தூரம் படிக்க வந்து, இங்கே கொஞ்சம் கூட நிம்மதி கிடையாது.'

‘நாங்க வகுப்புல என்ன செய்யறோம், ஹாஸ்டல்ல என்ன செய்யறோம், யார் யாருகூட பழகறோம்,

பசங்களா, புள்ளைகளா, அவங்க நம்ம ஜாதியா, வேற ஜாதியா? அவுங்க டீடெய்ல் எல்லாம் எங்க அப்பா அம்மாவுக்குத் தவறாமல் தெரிவித்து விடுவார், அந்தப் பேராசிரியர்.'

‘அதனால நாங்க யார் கூடப் பேசறதா இருந்தாலும் நாலு அடி தூரத்துல இருந்தே பட்டும் படாமலும் இருந்தே ஆகணும்.'

‘பஸ்ல நம்ம ஆண் மாணவர்கள் பக்கத்தில

சாதாரணமா  உக்காந்துகூட டவுனுக்குப் போக முடியாது.'

‘எங்கிருந்தோ கழுகுப்பார்வை ஒன்று எங்கள் மேல் எப்போதுமே படிந்திருப்பது போன்றதோர் உணர்வு எங்கள் மனதில் இருக்கும்!'

மாணவிகளிடமிருந்து நேரடியாகவே கேட்டாயிற்று. கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் வதந்திகளும் புரளிகளும் சதா சுற்றிக்கொண்டே இருக்கும். இதில் பேராசிரியப் பெருந்தகைகளின் கண்காணிப்பு வேறு.

முதலாம் ஆண்டு மாணவிகளுக்காக இப்படி விடுதியை மாற்றிய புதிதில், நான் காலையில் நடைப்பயிற்சி போகும்போது இடைமறித்த  ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவர், என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார்:

‘ஏங்க பாலு, இப்படிப் பண்ணிட்டீங்களே, ஆண்கள் விடுதிக்குப் பக்கத்தாலேயே பெண்கள் விடுதி. இதெல்லாம் அடுக்குமா?‘

எனக்குள் பொங்கிக் கொண்டுவந்த கோபத்தை வெளிக்காட்டாமல் அமைதியாக அவரிடம் சொன்னேன்,

‘சார், அந்த முதல் ஆண்டு பெண்களுக்குச் சரியான பாதுகாவலே நம் விடுதிப் பசங்கதான். வார்டன், அந்த அறியாப் பெண்களை அந்தப் பசங்ககிட்ட இருந்து காப்பாத்த வேண்டிய அவசியம் இதுவரை ஏற்பட்டதில்லை.''

‘முதல் முதலாகப் பெற்றோரைப் பிரிந்து ஹாஸ்டலுக்கு வந்திருக்கும் அந்தச் சிறு பெண்களை உண்மையில் காப்பாற்ற வேண்டியது, நம்ம மாதிரி பெருசுகளிடமிருந்துதான்.'' என்றேன்

மறு வார்த்தை பேசாமலேயே நகர்ந்து சென்றுவிட்டார், தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் அடிவாங்கி ஓய்வு பெற்றுவிட்ட அந்தப் பேராசிரியர்.

உன்னிக்கிருஷ்ணன் நாயர் என்பவர், பத்து ஆண்டுக்கும் மேலாக நான் பணிபுரிந்த தாவர மூலக்கூறு உயிரியல் மையத்துக்கு வடபுறத்தில் உள்ள மரத்தடி நிழலில்  சைக்கிளில் ‘தம் டீ' கொண்டு வந்து விற்றுப் பிழைத்துக் கொண்டிருந்தார். தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தெரியும், தாராளமாகக் கடனுக்கு டீ தருவார். ஆனால், கடன் அக்கவுண்ட் என்பது, டீ குடிப்பவர்தான் வைத்துக்கொள்ள வேண்டும், கணக்கு எழுதி, வாங்கிய கடனைக் கேட்கும் அளவுக்கு, உன்னிக்குத் தமிழும் தெரியாது; திறமையும் கிடையாது.

தினசரி காலை 9 மணிக்கு அட்டண்டென்ஸில் கையெழுத்துப்போட்டவுடன் உன்னி கடையில் ‘ஜேஜே‘ என்று கூட்டம் இருக்கும். பெரும்பாலும் ஆய்வு உதவியாளர்கள்தான். பேராசிரியர்கள் அதிகம் வர மாட்டார்கள். ஸ்டூடெண்ட்ஸ் இருப்பார்கள்.

ஆனாலும், இன்னொரு பகுதியில் அமைந்துள்ள குறிப்பிட்ட துறையில் இருந்து ஒரு துறைத் தலைவரும் வேறு ஒரு பேராசிரியரும் தினசரி பொடிநடையாக நடந்து வந்து உன்னி கடையில் டீ குடிப்பார்கள்.

உன்னி டீ குடிப்பதற்கு நல்லா இருக்கும் என்பதால் மட்டும் அல்ல; அவர்களின் ‘டீ கடை விஜயத்தின்‘ நோக்கமே வேறு.

‘இந்த உன்னி கடையில டீ குடிச்சவன்ல ஒருத்தன்தான் துணைவேந்தர் ஆக முடியும் என்பது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தலைவிதி.'(விதிகள் புத்தகத்தில அப்படிப் போட்டு இருக்குதாம்!)

உன்னி டீ குடித்த அந்தத் துறைத் தலைவர் பின்னாளில் தப்பாமல் துணைவேந்தர் ஆனார். ஒரு தடவை அல்ல; இரண்டு தடவை.

என்னே, உன்னிக்கடை டீயின் மகிமை!

காலங்காலமாக என் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு மாறுதல் உத்தரவு போடுவதென்பது கை வந்த கலை! ஆனாலும், அந்த உத்தரவுகள் ஆசிரியர்/ஊழியர்கள் மத்தியில் முக்கியமாக அந்தந்த மனையாள்களின் மத்தியில் பெருங்கலக்கத்தை ஏற்படுத்தின என்றே சொல்ல வேண்டும். குழந்தைகளை அந்த ஆண்டு எப்படிக் கல்விக் கரையேற்றுவது, பக்கத்து வீட்டு அம்மணியின் கேலிச்சிரிப்பை எப்படி எதிர்கொள்வது, கோவையின் குளிர்க்காற்று இனி கிடைக்காதே என்பதில் இருந்து,  பல்கலைக்கழக பாலகத்தின் கள்ளிப்பாலை ஒத்த கெட்டியான பால் கிடைக்காதே என்பது வரை  பல கேள்விகள் அவர்கள் மனதில் மின்னல் கீற்றுகளாக அடிக்கடி வந்து போகும்.

இது பேராசிரியர்கள் இருவரைப் பற்றிய கதை.

பொதுவாக அலுவலகங்களில் சைக்ளோஸ்டைல் உருட்ட, அலுவலக உதவியாளர் ஒருவர்தான் இருப்பார். அவரை நம் பேராசிரியர்கள் இருவரும் கையில் போட்டு வைத்துக் கொண்டிருப்பர்.

ட்ரான்ஸ்ஃபர் உத்தரவு நாள் அன்று காலையிலேயே சைக்ளோஸ்டைல்காப்பி முதல் பிரதி எடுத்த உடனே அங்கே தயாராக இருக்கும் நம் பேராசிரியர்களில் ஒருவருக்குச் சென்றுவிடும். அதற்குப் பேராசிரியர் தரும் சிறு அன்பளிப்பு ரூ.5/=. அந்தக் காலத்தில் அந்த ஐந்து ரூபாய் வெகுமதி நம் உதவி யாளருக்கு எவ்வளவு பெரிய மகிழ்ச்சியைத் தந்திருக்கும் என்பதை விவரிக்க உண்மையிலேயே இயலாது.

ட்ரான்ஸ்ஃபர் ஆர்டரை நம் பேராசிரியர்கள் இருவரும் உடனே நெட்டுருப் போட்டு விடுவார்கள். யார் யாருக்கு எந்தெந்த ஊர் என்பது அத்துப்படியாக இருவருக்கும் சில நிமிடங்களிலேயே தெரிந்துவிடும்.

அவ்வளவுதான், உடனே நம் இரட்டைப் பேராசிரியர்களின் வளாக உலா ஆரம்பித்து விடும். எதிரில் சைக்கிளை உருட்டிக்கொண்டுவரும் ஏமாந்த சோணகிரிப் பேராசிரியர்களைத் தடுத்து நிறுத்தி ‘‘ஏய் உனக்கு தடியன் குடிசை, ஏம்பா, ஒனக்கு பேச்சிப்பாறை, ஸ்வாமி, உமக்கு தஞ்சாவூர், ஐயா, உங்களுக்கு மதுரை, கிள்ளிகுளம்'' என்று வாய்மொழி உத்தரவு பல்கலைக்கழக அனுமதி பெற்று அவர்கள் போடுவதாகவே மற்ற எல்லா பேராசிரியர்களும் நினைத்துக்கொள்வர்.

ஆகவே நம் இரட்டைப் பேராசிரியர்கள் இரண்டுபேரும் சர்வ வல்லமை படைத்தவர்களாக வளாகத்திற்குள் வளைய வந்தார்கள். அதற்கும் மேலாக எனக்கு ஆளுநரின் செயலாளரைத் தெரியும், முதல்வர் பி.ஏ. ராமசாமி தெரியும், குப்புசாமி தெரியும் என்று இளம் பேராசிரியர்களிடம் ‘உதார்' விடுவது அவர்களுக்கு வாடிக்கையும் கூட.

மேலும் மற்ற ஊழியர்கள், பேராசிரியர்கள் குறித்த, இவர்களுடைய கருத்துகள் வதந்திகளை ஒன்றுமறியாத இளம் பேராசிரியர்களுக்கு மத்தியில் பரப்புரை செய்வதில் இந்த இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவரல்லர்.

தாம் பரப்பும் செய்திகள் எவ்வாறு, எந்த மாதிரி உருமாற்றம் அடைந்து பின் அதன் வாடிக்கையாளர்களான மற்ற ஊழியர், பேராசிரியர் ஆகியோரைச் சென்றடைகிறது என்று சோதித்துப் பார்ப்பதும் இந்த இருவரால் அடிக்கடி நிகழ்த்தப் பெறும்.

ஆனால், இந்த இருவரில் ஒருவர் துணைவேந்தராகிப் பிறகு ஓய்வுபெறும்வரை, யாருக்குமே தெரியாத உண்மை  ஒன்று உண்டு.

அது இதுதான்: அந்த சைக்ளோஸ்டைல் உருட்டும் ஊழியருக்கு, அவர் ஏழ்மையைப் பயன்படுத்தி முதல் பிரதியை எதற்கு வாங்கி கையகப்படுத்தினார்கள் இந்த இருவரும்?

‘வின்னர் வடிவேலு' மாதிரி இவர்களுக்கு தாம் டிரான்ஸ்ஃபர் ஆகி விடுவோமோ என்று உள்ளூர ஓர் உதைப்பு எப்போதுமே உண்டு. அந்த மரண பயம் ஒவ்வொரு கணமும் அவர்களின் ‘பிஞ்சு' மனதில் எப்போதுமே இருந்து வந்தது. அதை வெளிக்காட்டாமல் கைப்பிள்ளையாக வலம் வந்ததுதான் அவர்களின் ஈகோக்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி!

அப்போதுதான் செல்போன் பிரபலமாகி வந்தது. அன்று, பெண்கள் ஹாஸ்டல் பொறுப்புப் பேராசிரியையிடம் இருந்து எனக்குப் புகார் வருகிறது. அந்த முதல் ஆண்டு மாணவிக்கு நிறைய ஆபாச செய்திகள் போனில் வந்து கொண்டே இருக்கிறது என்று.

அந்த செல் நம்பரை ட்ரேஸ் செய்ததில், எல்லா எஸ். எம். எஸ்.களும் பக்கத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் உள்ள யாரோ ஒருவரின் செல்லில் இருந்து வந்தது தெரியவந்தது. அதை மேலும் விசாரித்து, அங்கு படிக்கும் பையனுக்கு நம் கல்லூரி முதலாண்டு மாணவன் சொல்லச் சொல்ல, அவன் செய்திகளை அனுப்பியதாகக் கண்டறிந்தோம். பையனைப் பிடித்து விசாரித்து ஒப்புதல் வாக்குமூலம் வாங்கி, விடுதியை விட்டு மட்டும் மூன்றுமாதம் வெளியேற்றினோம்.

அம்மாவை அழைத்து வந்திருந்தான். பார்த்தால் பாவமாக இருந்தது, இவன் செய்த வேலையால், கூனிக்குறுகிப் போய் இருந்தார்கள் அவன் தாய். அவர்களிடம் சொன்னேன்,

‘அம்மா, ஹாஸ்டல் ரூல்ஸ்படி இவனை தண்டித்தாயிற்று. இவனுக்கு பக்கத்தில் புதூரில் ஒரு வீட்டில் தங்க நானே ஏற்பாடு செய்திருக்கிறேன். ஆனால் ஒன்று, இவன் செய்த வேலைக்கு இவன் மேட்டரை துணைவேந்தர் வரையில் கொண்டு போய் வேறு கல்லூரிக்கு நான் அனுப்பியிருக்கலாம். நியாயப்படி ஆபாச எஸ்.எம்.எஸ். போலீஸ் கேஸ் ஆக வேண்டிய மேட்டர். அப்படி ஏதாவது ஆனால் அவன் மனநிலை கெட்டுப்போக வாய்ப்புள்ளது. ஆகையால், எனக்கு அப்படிச் செய்ய இஷ்டமில்லை. வளரும் பையன், நாம்தான் திருத்த வேண்டும்,' என்று சொல்லி, அவர்களை அனுப்பி வைத்தேன்.

மூன்று மாதம் கழித்து புதூரில் சாப்பாட்டுக்கு மிகவும் கஷ்டப்பட்டு மெலிந்து பையன் மீண்டும் வார்டனிடம் வந்தான். அவனைச் சேர்த்துக்கொண்டோம்.

‘அது சரி,  முதல் ஆண்டு மாணவர்கள் மெஸ் பிரதிநிதி வேலை தருகிறேன் செய்கிறாயா' என்றேன். உடனே, சம்மதித்தான். கொடுத்த வேலையை உற்சாகத்துடன் செய்தான். அன்றில் இருந்து அவன் ஆண்கள் ஹாஸ்டல் பொறுப்பாளரின் செல்லப்பிள்ளை.

உடற்பயிற்சியைப் பொழுதுபோக்காக எடுத்துக் கொண்டான், அவன். ஹாக்கி ப்ளேயர் வேறு. வருடங்கள் சென்றன. நான்காவது ஆண்டு கல்லூரி விழாவில் மிஸ்டர் அக்ரி பட்டம் பெற்றான் என்று செய்தி வந்தது. மகிழ்ந்தேன். இன்று எங்கோ வேறு மாநிலத்தில் அரசுப் பணியில் உள்ளான் என நினைக்கிறேன்.

என்  பி.ஹெச்டி மாணவர் ஒருவர், என் துறையிலேயே பேராசிரியராகச் சேர்ந்தார். அவருக்கு ஜீன் துப்பாக்கி தொழில்நுட்பத்தில் பயிற்சி கூடுதலாகத் தேவைப்பட்டது. ஜீன் துப்பாக்கிக் கருவியைக் கண்டுபிடித்தது கார்னல் பல்கலைக்கழகம். இந்தப் பயிற்சி அங்கு கிடைக்குமா என்று கேட்டதில், நம் பேராசிரியருக்கு ஒரு மாதம் போய்வர நிதியுதவி அனைத்தும் அவர்களிடம் இருந்தே கிடைத்தது

அவர் இதற்கான விண்ணப்பத்தை எழுதிக் கொண்டு துறைத் தலைவரான என்னிடம் கொடுத்தார். நான் அதை உடனே ஒப்புதல் அளித்து, ‘‘  துறை இயக்குநரிடம் கையெழுத்து வாங்கி விட்டு, நேராக துணைவேந்தர் ஆபீஸில் ட்ரேயில போட்டுவிட்டு வந்து விடுங்கள். நாளை ஒப்புதல் வந்துவிடும், போய் விமான டிக்கெட் தயார் செய்யுங்கள்' என்றேன்.

அவரும் கோப்பை எடுத்துக் கொண்டு அடுத்த அறையில் இருந்த இயக்குநரிடம் சென்றார். இயக்குநர் பைலைப் பிரித்துப் பார்த்து, இளம் பேராசிரியரான அவரிடம் விளக்குகிறார்: ‘இதெல்லாம் பெரிய மேட்டரு, துணைவேந்தர் ஒப்புதல்லாம் வேணும். அவரு குடுத்துட்டார்னா, நான் கையெழுத்து போட்டு விடுகிறேன்‘ என்று ஃபைலை அவரிடமே திருப்பிக்கொடுத்து விட்டார்.

இது நடந்தது மாலை 3 மணி.

பேராசிரியர் என்னிடம் திரும்பி வந்து ‘சார், முடியாது போலிருக்கிறது! நான் கார்னல் செல்லவில்லை.. போதும் சார்!' என்று ஃபைலை என்னிடம் கொடுத்து விட்டார்.

‘சரி' என்று அவரிடம் கூறிவிட்டு, என் ஆபீஸில் இருந்து 100 மீ தூரமே உள்ள துணைவேந்தர் அலுவலகத்துக்குச் சென்று அவரிடம் நடந்ததைக் கூறி துணைவேந்தர் ஒப்புதலுடன் திரும்ப ஃபைலைப் பெற்றுக்கொண்டு என் ஆபீஸுக்கு வந்தேன். இதற்கு ஆன நேரம், பத்து நிமிடம் மட்டுமே.

பேராசிரியரைக் கூப்பிட்டு ‘இந்தாங்க துணைவேந்தர் ஒப்புதல், போய் டைரக்டர் கிட்ட அதைக் காண்பிச்சு அவர் கையெழுத்தையும் வாங்கி பதிவாளர் ஆபீஸில் ட்ரேயில் போட்டுவிட்டு வந்து விடுங்கள்' என்று கூறினேன். ஃபைலை எடுத்துக்கொண்டு பேராசிரியர், இயக்குநரிடம் போனார்.

இது நடந்தது, மணி மாலை 3:15

இயக்குநர் நம் பேராசிரியரை ஃபைலுடன்

பார்த்ததும் கடுப்பாகிவிட்டார். ‘நான் ஒரு தடவைதான் சொல்லுவேன், திரும்பத் திரும்ப வந்து என் வேலையைக் கெடுக்காதீர்கள்' என்று இரைந்தார். நம் பேராசிரியர் எதுவும் பேசாமல் மௌனமாக நின்றுகொண்டு இருந்தார். அதைப் பார்த்து ‘போங்க, வீ.சீ. கிட்ட கையெழுத்து வாங்கிகிட்டு வாங்க, போங்க போங்க' என்று விரட்டுவதிலேயே குறியாக இருந்தார்

மெதுவாக நம் பேராசிரியர், ஃபைலைத் திறந்து இயக்குநரிடம் காண்பித்து, ‘சார், வீ.சீ. கையெழுத்து போட்டுவிட்டார், நீங்கள் கையெழுத்துப் போடுவீர்கள் என்று அவர் உங்களிடம்  ஃபைலை அனுப்பி வைத்தார்,' என்றார்.

இது நடந்தது மாலைமணி 3:20.

முகம் வெளிறிப்போன இயக்குநர் அந்த ஃபைலில் கையெழுத்துப் போட்டுவிட்டு பேராசிரியரை ஒரு முறைமுறைத்தார் பாருங்கள். நம் பேராசிரியருக்கு அடுத்த நாள் குளிர் ஜுரம் கண்டுவிட்டது.

கார்னல் பல்கலைக்கழக

பயிற்சிக்குப் போய் விட்டுத்திரும்பி வந்து  மூன்று சர்வதேச நிலையிலான ஆய்வுக்கட்டுரைகளை அப்பேராசிரியர் வெளியிட்டது வேறு கதை!.

என் வார்டன் பணிக்காலத்தில் மாணவியர் ஹாஸ்டல் தினத்திற்குத் தங்களுக்கு மட்டும் தனி ஷோ வேண்டும் என்றார்கள்.

‘அது ஒண்ணும் பிரச்னை இல்லையேம்மா' என்று நான்

சொன்னதும், உடனே அடுத்த கோரிக்கை..

‘நாங்க தான் படம் செலக்ட் பண்ணுவோம்!'

‘ஓகே, பண்ணிக்கோங்க.'

‘நாங்க ஆடிட்டோரியத்தின் எல்லாக் கதவையும் மூடி விடுவோம்'

‘அது எதுக்கு? Fire exit Concept ஒண்ணு இருக்கேம்மா!'

‘உள்ளே நாங்க டேன்ஸ் போடுவோம், பசங்க

பாக்கக்கூடாது அதை, அதுக்காக'

‘ஓ, இதுல இவ்ளோ மேட்டர் இருக்குதா? சரி ஓகே, ஆனா ஆபரேட்டர் பாலு இருப்பாரே பரவாயில்லையா?'

‘அவரு எங்க எல்லோருக்கும் ஃபிரண்டுதான்.'

‘அப்புறம் என்ன, பிரச்னை வராம பாத்துக்கோங்க; என்ஜாய் பண்ணுங்க, Go ahead.'

இவ்வாறு, கோவை வேளாண்கல்லூரியின் வரலாற்றிலேயே ‘முதன்முதலில் மாணவியர்க்கு மட்டும்' திரைப்படம் திரையிடப்பட்டது.

பக்கத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் எப்போதாவது பேராசிரியர் நேர்முகத் தேர்வுக்கு உறுப்பினராக அழைப்பது உண்டு. இயலாது என்று கூறாமல், நானும் செல்வது வழக்கம்.

அப்படி ஒரு  நேர்முகத் தேர்வு, அன்று. இன்டர்வியூ ஆரம்பித்தது. நேர்முகக் கமிட்டித் தலைவர் அன்றைய பல்கலைக்கழகத் துணைவேந்தர். வேளாண் பல்கலையில் தோட்டக்கலைத்துறையில் பிஹெச்டி செய்த ஒரு பெண்மணி உயிரியதொழில்நுட்பத்துறை  இணைப்பேராசிரியர்  பதவிக்கு விண்ணப்பித்து விட்டு, அன்றைய நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தார்.

‘தோட்டக்கலை பிஹெச்டியில் என்ன ஆராய்ச்சி செய்தீர்கள், இந்த உயிரிய தொழில்நுட்பம் இணைப்பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்து இருக்கிறீர்களே?', இது நான். அதற்கு அவர் சொன்னது: ‘காய்கறியில் இனக்கலப்பு ஆராய்ச்சி செய்திருக்கிறேன்'

‘சரி, என்னென்ன Molecular tools அந்த இனக்கலப்பில் பயன்படுத்தியிருக்கிறீர்கள் அதைக் குறித்து எடுத்துக் கூறுங்கள்' என்றேன்.

'Hybridization என்பதே,molecular methodதானே, சார் பிறகு என்ன molecular tools தேவைப்படும்?'  என்றார். நான்  இன்னொரு உறுப்பினரைப் பார்த்து ‘நீங்கள் இவரை deal செய்து கொள்ளுங்கள்' என்று சொல்லி என் நேர்முகக் கேள்விகளை முடித்துக் கொண்டேன் அருகில் அமர்ந்திருந்த கமிட்டித் தலைவர் துணைவேந்தர் என் கைகளைப் பிடித்துக் கொண்டார். ‘நீங்கள்தான் மற்ற இரு உறுப்பினர்களிடமும் சொல்லி இந்தப் பெண்மணியை இணைப்பேராசிரியர் பதவிக்குத் தேர்வு செய்ய வேண்டும். இது உங்கள் கைகள் அல்ல, கால்கள்' என்றார்.

அப்படி ஒரு துணைவேந்தர் கெஞ்ச வேண்டிய காரணம் என்ன என்று ஆராய முற்பட்ட போது, அவரிடமே அதற்கான பதிலும் வந்தது. ‘ஓர் அரசியல் தலைவர் மகனின் பரிந்துரை, இந்த அம்மணி. அதனால் நான் மறுக்க முடியாது', என்றார்.

அப்போதுதான் என் நினைவுக்கு வந்தது, துணைவேந்தர் அவர்களே தலைவர் மகனின் பரிந்துரைதான் என்பது. ‘அப்போ, நல்லதாப்போச்சே, சார், தலைவர் மகன் இந்த அம்மணிக்குக் கொடுத்த பரிந்துரைக் கடிதத்தைக் கொண்டாங்க, இந்த இன்ட்டர்வியூ கமிட்டி ரிப்போர்ட்ல அதையும் வச்சிடுவோம். தலைவர் மகன் பரிந்துரைப்படி இணைப்பேராசிரியர் பதவி குடுத்தோம்ன்னு சொல்லிடுவோம்' என்றேன்.

துணைவேந்தர் என்னை பார்த்து முறைத்தார்.

 ‘நீங்கள் உதவி செய்வீர்கள் என்றுதான் அருகில் உள்ள பல்கலைக்கழகத்தில் இருந்து உங்களை அழைக்கிறோம், நீங்கள் இப்படிச் செய்தால், அடுத்த முறை உறுப்பினராக அழைக்க மாட்டோம்' என்றார்.

‘ரொம்ப சந்தோஷம்' என்றேன். இங்கே என்ன நடந்தது என்பது சற்று தூரத்தில் அமர்ந்திருந்த நண்பர்களான இன்டர்வியூ குழு உறுப்பினர்களுக்குப் புரிந்து விட்டது.

அம்மணி அந்தப் பதவிக்குத் தேர்வாகவில்லை என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

பேரா. பொ.பாலசுப்ரமணியன், முன்னாள் இயக்குநர், தாவர மூலக்கூறு உயிரியல் மையம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்.

ஜூன், 2021