எங்கள் வீட்டெதிரே பெரிய மாட்டுத் தொழுவம் உண்டு. தூர தூரத்து உறவுக்காரரான மாமாவின் உழு மாடுகள், பசு மாடுகள் எப்போதும் பத்து உருப்படியாவது வாலை ஆட்டிக் கொசுக் களை விரட்டிக் கொண்டே இருக்கும்.
அவற்றின் அவ்வப்போதைய பயன்கருதி தீவனங்கள் போடப்படும். பால் கறக்கும் பசுவென்றால் பச்சைப் புல். பால் வற்றிய மாட்டிற்குக் காய்ந்த புல். வண்டி இழுக்கிற மாட்டுக்கு கடலைப் புண்ணாக்கு. உழுகிற மாட்டுக்கு பருத்திக் கொட்டையை அரைத்து ஊற்றுவதோடு பாசத்தோடு கொட்டைச் சக்கையை அள்ளி ஊட்டுவதும் உண்டு.
இவ்வளவு களேபரத்தோடும், கோமியமும் சாணியும் கலந்த வாசத்துடனும் முற்றம் முழுக்க மாட்டுத் தொழுவமாக அறிப்பட்ட அந்த இடம் திடீரென்று இன்னொரு வடிவம் எடுக்கும். மாசி மாதம் மகாசிவராத்திரிக்கு இரண்டு நாள் கழித்து அத் தொழுவம் குலதெய்வ வழிபாட்டு இடமாகி விடும். மாடு கட்ட துளையிட்டு வைத்திருக்கும் கல்லுக்கு மூன்றடி தள்ளி ஒரு மூலையில் தவிடு, புண்ணாக்கு மூட்டைகள் சாத்தி வைத்த அந்தக் கல் புதுத் துலக்கம் பெறும்.
மாட்டுத் தொழுவத்தை சுத்தமாகக் கழுவி விட்டு மஞ்சள் தெளித்து மேற்சொன்ன கல்லுக்கு மஞ்சள் நீரால் குளிப்பாட்டி, சந்தனம் பூசி குங்குமத்தைத் தீற்றி விடுவார்கள். மாசி சிவராத்திரி அன்று எங்களது குல தெய்வப் பூசை நடக்கும். அப்போது தூரத்தில் பட்டும் படாமல் நிற்கும் சித்தப்பன் & பெரியப்பன் வகையறாவினர் நான்கைந்து பேர் கெண்டைக் காலுக்கு மேல் ஏற்றிக் கட்டிய மொட மொடப்பான வெள்ளை வேட்டிக்கு அணையாக இடுப்பில் ஒரு வெள்ளைத் துண்டை இறுக்கிக் கட்டி பரபரப்பாகவும் முகத்தில் அருள் ஏறியும் குறுக்கும் மறுக்கும் வந்து கொண்டிருப்பர்.
அன்றைக்கு எங்கள் வீடுகளில் சமைக்கக் கூடாது. சமைத்தால் இந்தத் தொழுவத்து சாமியைக் கும்பிடும் எங்கள் உறவினர் களில் ஒரு குரூப், எங்களைக் கோபித்துக் கொள்வார்கள். எங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிற பெரிய குரூப் மகா சிவராத்திரி அன்று இன்னொரு சாமியைக் கும்பிடுவார்கள். பகலில் இன்னொரு க்ரூப்புக்கு உரிய எங்கள் ஊரில் இருந்து தொலைவில் உள்ள கோவிலுக்கு மரியாதை நிமித்தமாகச் சென்று விட்டு அங்கிருந்து பெரிய குரூப் கோவிலுக்கு வருவார்கள்.
மரியாதை நிமித்தமாகப் போன கோவிலுக்கு... என்னது கோவிலா இரண்டு பலகைக் கல்லை குத்து வசமாக நிற்க வைத்து அவற்றின் மீது ஒரு கல்லைப் படுக்க வசமாக போட்டு மூடி வைத்திருப்பார்கள். உள்ளே இரண்டு கற்கள். ஒன்று இரண்டடி திருமலப்பா; இன்னொன்று ஒன்றரை அடி திம்மக்கா. திருமலப்பாவிற்கு வேட்டியைக் கிழித்து சுற்றி முனைப் பகுதியில் விபூதியைத் தேய்த்து விட்டிருப்பார்கள். திம்மக்காவிற்கு பச்சைப் பட்டுத் துணி சுற்றி இருப்பார்கள்.
திருமலப்பா - திம்மக்கா பெயர்களில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் இது தெலுங்கு ஆந்திராவுடன் தொடர்புடையது என்று. நானூறு வருடங்களுக்கு முன்னர் ஆந்திராவில் இருந்து இங்கு வந்து காட்டைத் திருத்தி ஊர்களை உருவாக்கியதாக வரலாறு சொல்வார்கள். பஞ்சம் பிழைக்க வந்தது முதல் மன்னன், எங்கள் குலப் பெண்ணை சிறையெடுக்க முயன்ற போது தப்பித்து வந்தது வரையாகப் பலப்பல கதைகள் உண்டு.
ஆனால் அதே திருமலப்பா - திம்மக்கா கற்களை வேறு பெயரில் சொல்லி வேறு நாட்களில் கும்பிடுவோர் உண்டு. அவர்கள் பூர்விகத் தமிழர்கள் என்று அறியப்படுபவர்கள். மேற்படித் தெலுங்கு இனக் குழுவினருக்கும் இத் தமிழ்க் குழுவினருக்கும் எவ்வித தொடர்பு கொள்வினை கொடுப்பினை ஏதும் கிடையாது. அப்படியே நவீன காலத்தில் காதலித்தோ விரும்பியோ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் குலத் தூய்மை கெட்டு விடும் என்று வெட்டரிவாளைத் தீட்டத் தொடங்கி விடுவார்கள்.
தெலுங்கு குழுவினர் வெளிநாடு வெளி மாநிலம் சென்று தொழில் வியாபாரம் என்று சம்பாதிக்க பலகைக் கல்லுக்குள்ளே குடியிருக்கும் சாமிகளை கோவிலுக்குள் வைத்து கும்பாபிசேகம் நடத்த வேண்டும் என்று முயற்சி எடுத்த போது ‘‘யோவ் இது எங்க சாமிய்யா. இது இங்கன தான் இருக்கும். கோயில் கட்டணும் கும்பாபிசேகம் நடத்தணுன்னு சொல்லி எவனாச்சும் வந்தா தக்காளி ரத்த அபிசேகம் நடத்திப்புருவோம்'' என்று சொல்லி ஆடம்பர முயற்சிகளை ரத்து செய்து விட்டார்கள். ஆனாலும் பொங்கல் வைக்கவும், சேவல் அறுக்கவும் தடையில்லை.
மேற்படி சாமிகளுக்கு கோவில் கட்ட வேண்டும் என்று நினைத்தது அதனை குல தெய்வமாக வழிபடுகிற குழுக்களில் சின்ன க்ரூப். இந்த சின்ன க்ரூப்பைச் சேர்ந்த உறவினர்களில் ஒரு பிரிவினரே இந்த சாமியைப் பேருக்குத் தான் மரியாதை செய்கிறார்கள். எனவே கோவில் கட்டுவதைத் தடுக்கும் பெரிய குரூப்புடன் மோதிப் பார்க்கும் நிலையில் இல்லை.
ஒரு இனக் குழுவிற்குள்ளேயே மூன்று பிரிவு. கட்டுரையின் துவக்கத்தில் சொன்ன மாட்டுத் தொழுவத்து சாமியைக் கும்பிடுகிறவர்கள் தாங்களே தனிச்சிறப்பு மிக்கவர்கள் என்று கருத்து உடையவர்கள். ஏனென்றால் நாட்டாமை, முன்சீப், வாத்தியார் என்று சமூகத்தில் முன்னணி பாத்திரம் வகிக்கும் மேட்டிமைப் பிரிவைச் சேர்ந்தவர்கள். ஆனால் மிகச் சிறிய குழு என்பதால் தங்களது பெருமிதங்களை வெளிப்படையாகக் காட்டிக் கொள்வதில்லை.
இரண்டாவது சொன்ன சிறிய பிரிவினர் பணம், தொழில் வசதி உடையவர்கள். அனேகர் ஊரில் இருப்பதில்லை என்பதால் பெரிய குழுவினரோடு அனுசரணையோடு இருப்பார்கள். இந்த முதல் கடைசி பிரிவினருக்கு சொல்லிக் கொள்ளும்படியான குலதெய்வம் இல்லை.
வெளியூரினர் உங்கள் குலதெய்வம் எதுவென்று கேட்டால் மூன்றாவதாகச் சொல்லப் போகிற பெரிய பிரிவினருடையதைத் தான் சொல்லிக் கொள்வார்கள். அதுதான் பளிச்சென்ற அடையாளம் பெற்ற கோவிலாகும்.
அதுவும் சிவன், பார்வதி, பரசுராமன் பாத்திரங்களுக்கு மாற்றுப் பெயர்களையே கொண்டுள்ளன. ஆற்றில் இறங்கி வெறுங்கையை நீட்டினால் நீரின் சுழற்சியில் குடம் மேலெழுந்து வரும். அத்தகையை பதிவிரதை ஒருநாள் வானத்தில் பறந்து செல்லும் அசுரனின் நிழலை நீரில் பார்த்து விட்டதால் குடம் வரவில்லை, தந்தை மகனை அழைத்தான். தாயை வெட்டப் பணித்தான் கதை பரவலாக அறியப்பட்ட ஒன்றுதான்.
எங்கள் குலதெய்வ தனித்துவத்திற்காக சிவனுக்குப் பதிலாக வையாளி. பார்வதிக்குப் பதிலாக எல்லம்மா. மூல தெய்வ வழிபாட்டில் எல்லம்மாவின் தலை மட்டுமே உண்டு. இதுவரை தனித்துச் சொல்ல ஒன்றுமில்லை. வெட்டுப்பட்ட எல்லம்மா உடலோடு வண்ணார் பெண்மணியின் தலையைப் பொருத்தி விட்டதால் மாற்று தலையைக் கொண்ட சலவைத் தொழிலாளிக்கும் அங்கே பூசனைகள் உண்டு. அவர் மாற்று உடலைக் கொண்டிருப்பதால் மாத்தம்மா என்று அழைக்கப்படுகிறார்.
எல்லம்மாவிற்கு காவல் தெய்வம் ஒன்று உண்டு. அது போத்திராஜ். இவர் கேரளாவைச் சேர்ந்த பிராமணர் என்றொரு கதையும் உண்டு. சிதம்பரத்து ஜீயர்கள் போல திருநெல்வேலி, கன்யாகுமரி மாவட்டங்கள் தென் கேரள மாவட்ட கோவில்கள் பலவற்றில் வழிபாட்டுச் சடங்குகள் செய்யும் உரிமை போற்றிகளுக்கு மட்டுமே உண்டு. பல கோவில்களில் அந்தப் பாரம்பரியத்தைத் தொடர போற்றிகள் பற்றாக்குறை இருப்பதால் சடங்குகளை பிராமணர்களுக்கு அவுட் சோர்சிங் கொடுத்து விட்டு ராயல்டி மட்டும் பெற்றுக் கொள்வதாக சமீபத்தில் செவி வழிச் செய்தி.
போற்றிகள் தான் போத்தி என்று வரலாற்றில் தீவிர ஆர்வம் உடைய எனது அண்ணன் ஒருவர் சொல்லக் கேள்வி. எங்களது குலதெய்வம் எல்லம்மா தான். ஆனால் குலதெய்வம் என்றால் பரவலாக போத்திராஜ் பெயர்தான் முன்னிருத்தப்படுகிறது. எல்லம்மாவுக்கும் மாத்தம்மாவிற்கும் ஆடு, கோழி பலி பூசைகள் உண்டு.
பிராமணர் என்று நம்பப்படும் போத்திராஜ் எழுந்தருளும் அறைக்கு கனமான கருப்புத் திரை போட்டு மறைத்து விட்டு எல்லம்மாளுக்கு கிடாய் வெட்டுவார்கள். எல்லாம் தெரிந்த சாமிக்கு திரைக்கு அந்தாண்டையில் கிடா வெட்டு நடப்பது தெரியாதா? தெரியும், சும்மாக்காச்சும் மரியாதைக்கு அந்தத் திரை.
போத்திராஜை எங்காட்கள் சும்மா விட்டுவிடுவதில்லை. அவருக்கு வேட்டைக் கறி விரும்பியுண்ணும் குலத்தொழிலினர் எந்த லட்சணத்தில் பொங்குவார்களோ அந்த லட்சணத்தில் காமா சோமாவென்று ஒரு பொங்கலை வைத்து போத்திராஜுக்குப் படைப்பார்கள்.
அதிகாலையில் கிடாவெட்டி இஞ்சி, பூண்டு, சீரகம், பட்டை மிளகாய் போன்ற மசாலா திரவியங்களை கிணற்று மேட்டில் போடப்பட்டிருக்கும் சால் இறைப்புக் கல்லில் இன்னொரு கல் வைத்து இடித்துப் போட்டு திபு திபுவென்று அடுப்பெரியவிட்டு ஒரு குழம்பு வைப்பார்கள் பாருங்கள் அடாடடா. கோவிலுக்கும் சமைக்கிற கிணற்று மேட்டிற்கும் அப்பால் வெகு தொலைவில் குளத்தங்கரை ஆலமர விழுதுகளில் விளையாடிக் கொண்டிருக்கும் பொடிசுகளையும், துண்டை விரித்து ரம்மி ஆடிக் கொண்டிருக்கும் பெருசுகளையும் குரல் கொடுக்காமலே அழைப்பு விடுக்கும் அந்த பலியாட்டுக் கறிக் கொழம்பு.
ரசத்தை விடத் தண்ணியாக இருக்கும் வெறும் உப்பேறிய கறிக்குழம்பு. வீட்டில் ஆறு பேர் பத்து பேருக்கு மட்டுமே சோறு வடித்துப் பழக்கப்பட்ட இல்லத்தரசிகளுக்கு எட்டுப்படி பத்துபடி அரிசியெல்லாம் வடிக்க ஏலாது.
வடிசோற்றையும் வெள்ளைப் பொங்கலாகத் தான் இறக்கி இருப்பார்கள். சுடுசோற்றை கொட்டிய மறு நொடியே வாழைஇலை கருகிச் சுருண்டு மேலெழும். களி போன்ற சோற்றில் பள்ளம் பறித்து வைக்க அத்தையோ பெரியம்மாவோ கொட்டாங்கச்சி அகப்பையில் குழம்பு மொண்டு ஊற்றுவார்கள்.
சோற்றின் சூடு, குழம்பின் கொதி, எலும்பின் சாறு, தட்டிப்போட்ட மிளகாயின் காரம் அத்தனையும் சேர்ந்து அப்படியே உச்சந்தலைக்கு ஏறும் ருசி. அவ்வளவு பெருமனக் கறியை வாழ்நாளில் வேறெங்கும் சாப்பிட வாய்க்காது.
மேற்படி பலியாட்டுக் கறிக்குழம்பின் ருசிக்காவும், புழுதி பறக்கும் வண்டிச் சாலையில் சைக்கிள் விடும் சாகசக் கிளர்ச்சிக்காவும் பதின்ம வயதில் குலதெய்வக் கோவிலுக்குப் போனதோடு சரி. எனது பதினான்காம் வயதிலேயே கடவுள் மறுப்பாளனாகி விட்டேன். இயக்கம் எதிலும் சாராதிருந்த போதும் சக மாணவர்கள் என்னை கருஞ்சட்டைக்காரன் என அழைக்கத் தொடங்கி விட்டனர். எனவே கருஞ்சட்டைத் தமிழய்யாவுக்குச் செல்லப் பிள்ளையாகி விட்டேன். இந்த செல்லப்பிள்ளைப் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவே சில ஆண்டுகள் குலதெய்வக் கோவிலுக்குச் செல்வதைத் தவிர்த்து வந்தேன்.
குலதெய்வ வழிபாடென்பது இனக்குழுத் தலைவனைப் போற்றுவதாகும். அது வீர மரணம் எய்திய குழுத் தலைவனுக்கு நடுகல் வைத்து நினைவு கூர்வதன் தொடர்ச்சி என்ற புரிதல் ஏற்பட்ட போது வழிபாட்டிற்கு என்றில்லா விட்டாலும் வழிபாட்டில் பன்மைத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் நோக்குடன் குல தெய்வக் கோவிலுக்குத் தொடர்ச்சியாக இல்லா விட்டாலும் அவ்வப்போது சென்று கொண்டிருந்தேன்.
தமிழகத்தில் எண்பதுகளின் பிற்பகுதியில் தோன்றிய சாதிய இறுக்கத்திற்கு எதிரான மனநிலை உருவானது. சாதிக்குள்ளேயே மணமுடித்தல் எந்தளவுக்கு சாதிகள் நிலைபெறத் துணைசெய்கிறதோ அதேபோல குலதெய்வ வழிபாடும் சாதியத்தைத் தக்க வைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இந்தக் கருத்து என்னுள் வேர்விடத் தொடங்கியதில் இருந்து குலதெய்வக் கோயிலுக்குப் போவதைத் தவிர்க்கத் தொடங்கினேன்.
அவ்வளவு பணப்புழக்கம் பெற்றிராமல் விவசாயத்தை மட்டுமே சார்ந்திருந்த காலத்தில் மற்ற கடவுளர்களைக் காட்டிலும் மக்களுக்குக் குலதெய்வத்தின் மீது தீவிரப் பற்றும் அசைக்க முடியாத பக்தியும் இருந்தது. ஆனால் உற்பத்தி உறவுகளில் ஏற்பட்ட மாற்றத்தால், வாழ்க்கையின் ஆதாரங்கள் மாறியதால் மனித விழுமியங்களில் நிறைய மாற்றம் ஏற்பட்டு விட்டது. தன் நிலத்தோடு பிணைக்கப்பட்டிருந்த வரை காசு பணமும் நுகர்வு வசதிகளும் குறைவாக இருந்தாலும் மனநிறைவும் தனக்குத் தானே எஜமான், தனக்குத் தானே வேலையாள் என்ற பெருமித உணர்வும் இருந்தது.
இன்று கணிசமான மக்கள் நிலத்தை விட்டு விலக்கப்பட்டும், விவசாயம் நஷ்டம் தரும் தொழிலாகவும் மாறிப் போனதால் மனித மனங்களில் பெரும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. சமூக அந்தஸ்த்திற்காக வாழிடங்களில், வேலைச் சூழலில் பெருந்தெய்வக் கோவிலுக்கு அடிக்கடி சென்று வருவது அதிகரிக்கத் தொடங்கி விட்டது. குறிப்பிட்ட அளவு வருமானப் பெருக்கம் அடைந்தவுடன் ஆண்டுக்கு இத்தனை முறை என்று திருப்பதி சென்று வரும் பழக்கம் அதிகரித்து வருகிறது. நடுத்தர வருமானம் ஈட்டுகிற பலரும் வடக்கே கேதர்நாத், பத்ரிநாத் பத்துநாள் பேக்கேஜ் டூருக்கு லட்சங்களில் செலவு செய்கிறார்கள். இத்தகையோர் குலதெய்வக் கோவிலை மறக்கத் தொடங்கி விட்டனர்.
மறுபுறம் பணியிட நெருக்கடியில் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறவர்களுக்கு குலதெய்வ வழிபாடு பாரம்பரிய பெருமித உணர்வு மீட்சி அளிக்கிறது. குலதெய்வக் கோவில்களுக்கு தாராள நிதியுதவி செய்வதன் மூலம் பெருந்தனக்காரர் என்ற மரியாதையை உறவு வட்டத்தில் பெற்று சில காலத்திற்கு பேட்டரி ரீசார்ஜ் பெற்றதைப் போல இருக்கிறது. வெறும் கல்லாகவும், மரமாகவும் இருந்த குலதெய்வ வழிபாட்டிடங்கள் இன்று புணருத்தானம் பெற்று சிலைகளாகவும், கோவில்களாகவும் மாறியுள்ளன. தம் இனத்தினுள் ஒருவரைப் பூசாரியாகக் கொண்டு பூசைகள் செய்த நிலைமை திரிந்து பிராமணர்களைக் கொண்டு கும்பாபிசேகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
முன்னர் சொன்ன எங்களது குலதெய்வக் கோவிலை வணங்குவோர் அக்கோவிலைச் சுற்றியுள்ள ஐந்தாறு கிராமத்தில் குறிப்பிட்ட சாதியில் குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே. இதுபோக இவர்களுக்குச் சற்றும் தொடர்பில்லாத சாயல்குடி, திருச்செந்தூர் மீன்பிடிப் பரதவர்களுக்கும் அதே கோவில் குலதெய்வக் கோவிலாக இருந்தது. நாற்பது வருடங்களுக்கு முன்னர் அய்ந்தாறு மாட்டு வண்டிகள் கட்டி அக்கோவிலுக்கு வந்து கொண்டிருந்தவர்கள் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வேன்களில் வந்தார்கள். பின்னர் அது காராகச் சுருங்கியது. சமீப ஆண்டுகளில் அவர்கள் வருவதாகவே தெரியவில்லை. தென் மாவட்ட இடைச்சாதி விவசாயக் குடியினருக்கும் நெய்தல் நிலத்து மீன்பிடி மக்களுக்கும் கலாச்சாரம், மொழி, வாழ்க்கை முறை என எந்த வகையிலும் ஒற்றுமை இல்லை. ஆனால் அவர்களை குலத் தெய்வக் கோவில் ஒரு இணக்கத்தை உருவாக்கி இருந்தது. ஆனால் அத்தகைய இணக்கம் இன்று அறுந்து வருவதான சூழல் மேலெழுகிறது.
ஏப்ரல், 2020.