சிறப்புப்பக்கங்கள்

பலி கொடுக்கப்பட்ட பரிதாபம்!

முத்துமாறன்

நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது, பஞ்சாபில் பாக். எல்லையோர கிராமம் ஒன்றில் இருந்து, தல்பிர் கவுர் என்ற ஒரு பெண்மணி நூறுமுறைக்கும் அதிகமாக, அவரைச் சந்திக்க நேரம் கேட்டு அழைத்திருந்தார். எப்படியும் அவர் விடமாட்டார் என்ற நிலையில், தல்பீரை அழைத்திருந்தது ராவ் அலுவலகம்.

பள்ளிக்கூட ஆசிரியையான தல்பீரின் தம்பி சரப்ஜித் ஒரு விவசாயி. ஒருமுறை பாக். எல்லை அருகே இருந்த தன் வயலைப் பார்க்கப் போனபோது, எல்லை தாண்டிச் சென்றுவிட்டார். அப்போது போதையில் அவர் இருந்ததாகச் சொல்கிறார்கள். அவரை பாக். எல்லைப் பாதுகாப்புப் படையினர் பிடித்துவிட்டனர். அவர் கைதான நாள் ஆகஸ்ட் 1990. அவர் கைதானதே குடும்பத்துக்குத் தெரியாது.

ஆரம்பத்தில் சட்டவிரோதமாக பாக். உள்ளே வந்ததற்காக குற்றம் சாட்டப்பட்ட அவர் மீது பைசலாபாத்,லாகூரில் நடந்த குண்டு வெடிப்புகளுக்குக் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. நான் இல்லை. வேறு யாருக்கோ பதிலாக என்னைக் கைது செய்துவிட்டீர்கள் என்று அவர் சொல்லியும் பிரயோசனம் இல்லை. இரண்டே மாதத்தில் அவரிடம் விசாரணை முடித்து, பயங்கரவாதச் செயல்களுக்காக மரணதண்டனை விதித்தது பாக். ராணுவ நீதிமன்றம். தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக சிறையில் இருந்து தன் கிராமத்துக்குக் கடிதம் எழுத சரப்ஜித் அனுமதிக்கப்பட்டார். அப்போதுதான் அவர் கைதான சங்கதியே தெரிய வந்திருக்கிறது. அதிலிருந்து, தன் தம்பிக்காக தல்பீர் ஏறாத படிகள் இல்லை. சந்திக்காத பிரபலம் இல்லை.

அன்றைக்கு நரசிம்மராவ்,  ''கவலைப்படாதீர்கள்; எப்படியும் உங்கள் தம்பியை மீட்டுவிடுவோம்'' என்று,  சீரியசான தன் முகத்தை மேலும் சீரியசாக வைத்துக்கொண்டு சொல்லி அனுப்பினார். ஆனாலும் எதுவும் நடக்கவில்லை.

இடையில் பாகிஸ்தானில் மேல் நீதிமன்றத்திலும் அவரது மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. மரணத்தை எதிர்பார்த்து சரப்ஜித் லாகூர் ஜெயிலில் வாடிக்கொண்டிருக்க, இங்கே அவரது அக்கா, தம்பியின் விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருந்தார்.

பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் 2006&ல் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் சரப்ஜித் சார்பாக கருணை மனு சமர்ப்பிக்கப்பட்டது. அது நிராகரிக்கப்பட்டது. 2008&ல் முஷாரப் மீண்டும் அவரது கருணை மனுவை நிராகரித்தார். அந்த ஆண்டு ஏப்ரல் 1 அன்று அவரது தண்டனைக்கு நாள் குறிக்கப்பட்டது.

மன்மோகன்சிங் தலைமையிலான இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று அந்த தண்டனை தள்ளி வைக்கப்பட்டது. பெருமளவுக்கு பொதுமக்கள் ஆதரவை   சரப்ஜித் துக்காகத் திரட்டி இருந்தார், தல்பீர்.

பிரிட்டனில் வாழ்ந்த ஜாஸ் உப்பல் என்ற வழக்கறிஞரும் சரப்ஜித் தின் விடுதலைக்காக முயற்சிகளில் ஈடுபட்டார். பாகிஸ்தானில் சிலரும் அவருக்கு ஆதரவாக வாதிட்டனர்.  ஆசிப் அலி ஜர்தாரி அதிபராக இருந்தபொது 2012&ல் மீண்டும் சரப்ஜித் சார்பாக கருணை மனு அளிக்கப்பட்டது. அவர் அதை ஏற்று தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தார்.ஆயுள் தண்டனை என்பது 14 ஆண்டுகளில் முடிந்துவிடும். அவர் 22 ஆண்டுகள் சிறையில் கழிந்துவிட்டதால்  விடுதலை செய்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஒரு நாள் அவர் விடுதலை செய்யப்படுவதாக அறிவிப்பும் வந்தது. ஆனால் சுஜீத் சிங் என்ற 73 வயது முதியவர் விடுதலையானார். இந்த மனிதரும் உளவாளி எனக் கைது செய்யப்பட்டு 31 ஆண்டுகள் அங்கே சிறையில் கழித்தபின் விடுதலை செய்யப்பட்டிருந்தார். சரப்ஜித் இருந்த லாகூர் சிறையில்தான் அவரும் அடைக்கப்பட்டிருந்தார். அவர் இறந்துவிட்டதாக குடும்பம் கைவிட்டு விட்டது. அவரது உறவினர்கள் எல்லாம் இறந்துபோயிருந்தார்கள். இந்திய அரசு தன் விடுதலைக்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்ற அதிருப்தியோ என்னவோ, இந்திய எல்லையில் நுழைந்ததும், ‘நான் இந்தியாவுக்காக உளவு பார்க்க பாகிஸ்தான் போயிருந்தவன் !‘என்று சொல்லிவிட்டார்.  பொதுவாக எல்லை தாண்டி உளவு பார்க்க ஆட்களை அனுப்புவதை, எந்த நாடும் ஒப்புக்கொள்ளாது.  இதையும் இல்லவே இல்லை என்று இந்தியா மறுத்துவிட்டது.

இந்த சம்பவம் சரப்ஜித் விடுதலையைப் பாதித்ததாக சொல்கிறார்கள். இருப்பினும் எப்படியும் அவர் வெளியே வந்துவிடுவார் என்று நம்பப்பட்டபோது தொடர்பே இல்லாத இன்னொரு சம்பவம் நடந்தது. அது 26/11 மும்பை தாக்குதலின் போது பிடிபட்ட கசாப்பின் மரணதண்டனை. நவம்பர் 21, 2012 அன்று கசாப் கொல்லப்பட்டான். அவனை பயிற்சி அளித்து இந்தியாவுக்குள் அனுப்பிவைத்த சக்திகள் பழிவாங்கத் துடித்தன. அவர்களின் கவனத்தைக் கவர்ந்தது சரப்ஜித்தின் வழக்கு. சிலமாதங்கள் கழித்து ஏப்ரல் 2013&ல் இரு சக கைதிகள் சரப்ஜித்தை சிறையில் தாக்கினர். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஐந்து நாட்கள் கழித்து தன் 49வது வயதில் இறந்துபோனார்.

சரப்ஜித்துக்கு விடுதலை நெருங்கிவந்தது. ஆனாலும் கைக்கெட்டும் தூரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது. இறந்துபோன சரப்ஜித்தின் உடல் இந்தியா கொண்டுவரப்பட்டு பஞ்சாப் மாநில அரசு மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்பட்டது. அவரது குடும்பத்துக்கு மாநில அரசு 1 கோடி கொடுத்தது. அவரது இரு மகள்களில் ஒருவருக்கு அரசு வேலையும் கொடுத்தது.

சர்ப்ஜித் உண்மையிலேயே இந்திய உளவு நிறுவனங்களால் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டு பிடிபட்டாரா? இல்லை ஒன்றும் அறியாத அப்பாவி விவசாயியா? நாம் எதுவும் முடிவெடுப்பதற்கில்லை. ஆனால் இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாகளின் பகடை ஆட்டத்தில் வெட்டப்பட்ட காய் அவர். இதுபோல் இன்னும் எத்தனையோ பகடைக்காய்கள் பாகிஸ்தான் சிறைகளின் காய்ந்துகொண்டிருக்கின்றன. அவர்களுக்காக வாதாடப்போவது யார்? சரப்ஜித்துக்கு ஒரு அக்கா கிடைத்தார். அவர்களுக்கு?

ஏப்ரல், 2019.