கடந்த 2017 ஆம் ஆண்டு, சென்னை ராஜீவ்காந்தி சாலையில் உள்ள மென்பொருள் நிறுவனமொன்றில் எனக்கு வேலை கிடைத்தது. துரைப்பாக்கத்தில் உள்ள லேடீஸ் ஹாஸ்டலில் தங்கினேன்.
மாதம் ஆறாயிரம் ரூபாய் வாடகை உள்ள ஹாஸ்டலில், ஆறடி அளவுக்கு ஒரு படுக்கையும், ஒரு லாக்கர் மட்டும் தான் இருந்தது. படுக்கையை விட்டு கீழே இறங்கி நிற்பதற்கு இடம் கூட இருக்காது. கொஞ்சம் உயரமான ஆளாக இருந்தால் கட்டிலில் தூங்குவது மிகவும் கஷ்டம். இப்படி பலகுறைபாடுகள் இருப்பினும் அந்த சின்ன அறைதான் நிறைய அனுபவங்களையும் மனிதர்களையும் கொடுத்தது.
ஒன்பது மணி ஆபீஸுக்கு எட்டு மணிக்கு எழுந்து கிளம்ப வேண்டும். ஆனால், ஹாஸ்டலில் இருக்கும் எல்லோருக்கும் ஒன்பது மணிக்கு ஆபீஸ் என்றால், சுழற்சி முறையில் அலாரம் வைத்து எழுந்து குளிப்போம். ஒரு புறம் காவேரி மறுபுறம் கொள்ளிடம் ஓடும் ஊரில் இருந்து வந்த எனக்கு, காலை ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்து உப்பு தண்ணீரில் குளித்துவிட்டு, மீண்டும் படுத்துக் கொள்வது ஒரு மாதிரியாக இருக்கும். உப்பு தண்ணீரில் குளித்தால் உடம்பெல்லாம் ஒரு மாதிரி வழவழவென இருக்கும். குளித்த மாதிரியே இருக்காது. இதனால், முகப்பரு, முடி உதிர்வு பிரச்சனைகள் வேறு.
ஹாஸ்டலில் ஒரே நல்ல விஷயம் என்னவென்றால், சமைக்கும் பொறுப்பு இல்லை. வந்தோமா...
சாப்பிட்டோமா... போனோமா... என்று இருக்கலாம். வீட்டிலிருந்தால் இது சாத்தியமே இல்லை.
வாரத்தில் ஒரு முறை தான் துணி துவைப்பது. வாஷிங் மெஷின் இருக்கும். கையில் துவைப்பது என்றால் கூட துவைக்கலாம். சனி, ஞாயிறுகளில் வாஷிங் மெஷினுக்கு பெரிய போட்டி இருக்கும். விடுமுறை நாட்களில் துணி துவைக்க மட்டும் தான் சீக்கிரம் எழுவது. இல்லையென்றால் நேராக மதிய சாப்பாட்டுக்குத் தான் எழுந்திருப்போம்!
ஒரு வழியாக மெஷினை பிடித்துத் துணியைத் துவைத்துவிட்டாலும், காயப்போடக் கொடி கிடைப்பது கஷ்டம். கொடியில் காயும் துணியை யாருடையது என்று கண்டுபிடித்து, அவங்கள கூப்பிட்டு எடுக்கச் சொல்லி, துணியைக் காயப் போட்டுவிட்டு, அப்பாடாவென்று வந்து படுத்து தூங்கிட்டு இருந்தால், அப்போது தான் கதவு தட்டுகிற சத்தம் கேட்கும். என்னவென்று பார்த்தால் துணியை எடுக்கச் சொல்லி ஆள் வந்து நிற்கும். காயப்போட்ட துணியை எடுத்தால் அதிலொரு லெக்கின்ஸ் காணாமல் போயிருக்கும். இது வழக்கமாக நடக்கின்ற ஒன்று தான்.
ஒரு முறை ட்ரெயின் டிக்கெட் கிடைக்காததால், தீபாவளிக்கு ஊருக்கு போக முடியவில்லை. தீபாவளி அன்னைக்கு எழுந்து குளித்துவிட்டு வெளியில் வந்து பார்த்தால் ஹாஸ்டலே வெறிச்சோடி கிடந்தது. எல்லாம் ஊருக்கு போய்ட்டிருந்தார்கள். என்னோடு சேர்த்து மூணு நாலு பேரு தான் அன்னைக்கு ஹாஸ்டலில் இருந்தோம். ஊருக்கே அன்னைக்கு தீபாவளி, வீட்டுக்குப் போகாத எங்களுக்கு; அது இன்னொரு நாள். வீட்டில் நான் வருவேன்னு நிறையப் பலகாரங்கள் எல்லாம் செய்து வைத்திருந்தார்கள். அந்த ஞாபகம் அன்னைக்கு முழுவதும் ஓடிக்கொண்டிருந்தது.
தீபாவளி அன்னைக்கு மாலையில் சமையல் மாஸ்டர் ஊரிலிருந்து ஹாஸ்டல் திரும்பினார். பை நிறைய வடை, முறுக்கு, அதிரசம் என பலகாரங்களைக் கொண்டு வந்து தந்தார். அதைப் பார்த்ததும் சோகம் எல்லாம் பறந்துவிட்டது.
‘எதுக்கு மாஸ்டர் இவ்வளவு பலகாரங்களை கொண்டு வந்தீங்கனு' கேட்டதற்கு, ‘தீபாவளி அதுவுமா பலகாரம் இல்லாம ஏமாந்து போய்டுவீங்க, அதுக்குத்தான். நல்ல நாள் அதுவுமா, இங்கேயே இருக்கீங்க நல்லா சாப்பிடுங்கள்' என்றார் மலர்ச்சியுடன். சாப்பிட்டோம். வீட்டுக்குப் போயிருந்தால்கூட பலகாரங்கள் அந்த அளவுக்கு ருசியாக இருந்திருக்குமா என்று தெரியவில்லை!
செப்டம்பர், 2021