படிக்காத பாமர மக்கள் மட்டுமே கூட்டம் கூட்டமாக திருவிழாக் கோலத்தில் தேர்தல் கூட்டங்களுக்கு சென்ற காலம் அது.அப்போது வானத்திலிருந்து பெரிய சத்தத்துடன் புழுதியை வாரி இரைத்தபடி தரை இறங்கியது அந்த ஹெலிகாப்டர்.அதிலிருந்து இந்திரா காந்தி வெளியே இறங்கினார். மக்களுக்கு வானத்திலிருந்து கடவுளே தரை இறங்கியது போல அதிசயமாக இருந்தது. இந்திய கிராமப் பகுதிகளில் பெரும்பாலான மக்கள் வானத்தில் பறக்கும் வாகனம் ஒன்றை முதன்முதலில் பார்த்த காலமது.இந்திய அரசியல்வாதிகளில் இந்திரா காந்தி இந்த விஷயத்தில் முன்னோடி.
இந்தியாவின் வட மாநிலங்களிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள ஒரே வழி ஹெலிகாப்டர்தான்.
சாலைகள் மற்றும் ரயில்வே இணைப்புகள் மிக மோசமான பகுதிகள் இவை. பயணிகள் விமானத்தில் பயணித்தால் கூட கண்டிப்பாக சில நாட்கள் தேவைப்படும். அதனால் ஹெலிகாப்டர் பயணம் என்பது தேசிய தலைவர்களுக்கு ஆடம்பரத்திலிருந்து அத்தியாவசிய இடத்திற்கு வந்துவிட்டது.
2014 தேர்தலில் பறந்து பறந்து பிரச்சாரம் மேற்கொள்ளும் தலைவர்களில் முன்னணியில் இருப்பவர் நரேந்திர மோடி. பிப்ரவரி 8 ஆம் தேதி ஒரே நாளில் வடகிழக்கிலுள்ள இம்பால், கௌஹாத்தி பிறகு சென்னை ஆகிய மூன்று ஊர்களில் ஒரே நாளில் அவர் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டதே இதற்கு சான்று. மோடியின் தேர்தல் பயணத்திற்க்காக சில ஹெலிகாப்டர்களும் ஒரு ஜெட் விமானமும் பயன்படுத்தப் படுகின்றன.
இந்தியாவின் 13 மாநில அரசுகள் சொந்தமாக ஹெலிகாப்டர்களை வைத்துள்ளன. ஆனால் தேர்தல் வந்துவிட்டால் தேர்தல் நடத்தை விதிகளின்படி அதை உபயோகிக்க முடியாது. அதனால், தேர்தல் வந்தாலே தனியார் ஹெலிகாப்டர் கம்பெனிகளுக்கு குஷிதான்.எத்தனை கட்சிகள், எத்தனை தலைவர்கள்!
பிரச்சாரத்தில் எத்தனை சினிமா பிரபலங்கள்! எல்லா ஹெலிகாப்டர் கம்பெனிகளும் பிசியாக இருக்கும் ஒரே நேரமும் இதுதான்.
பொதுவாக அரசியல் கட்சிகள் ஹெலிகாப்டர் கம்பெனிகளை நேரடியாக அணுகுவதில்லை. புரோக்கர்கள் மூலமாகவே ஹெலிகாப்டர் கம்பெனிகளை அணுகுகிறார்கள். ஒரு வகையில் கம்பெனிகாரர்களுக்கும் இது வசதிதான். அரசியல்வாதிகளின் பின்னால் பணத்தை வசூல் பண்ண அலைவதை விட இது மேல் அல்லவா..
இந்தியாவில் உத்தர பிரதேசமும், பீகாரும் ஹெலிகாப்டர் உபயோகத்தில் முன்னிலை வகிக்கின்றன. மாநிலத்தின் அளவு, கட்சிகளின் எண்ணிக்கை, சாலை வசதி இது அனைத்தும் சேர்ந்து இன்னும் சில காலத்திற்கு இந்த இரண்டு மாநிலங்களுமே முன்னிலை வகிக்கும் என்று நம்பலாம்.
அரசியல் தலைவர்களுக்கு ஹெலிகாப்டர்கள் சப்ளை செய்வதில் முன்னணியில் இருக்கும் இருவர் சிங் மற்றும் சைமன் ஜாலி.
சிங் 1996-97 லிருந்தே இந்த தொழிலில் இருக்கிறார். பிஜேபி விசுவாசி.பிஜேபி தவிர்த்து லாலு, ராம் விலாஸ் பஸ்வான், நிதிஷ் குமார் ஆகியோரும் சிங்கின் வாடிக் கையாளர்கள். காங்கிரஸ் மட்டும் இவருக்கு ஆவதில்லை. ஏனென்றால் காங்கிரஸ் தலைவர் ஒருவர் பிரச்சாரத்திற்கு ஹெலிகாப்டரை பயன்படுத்திவிட்டு கடைசியில் ‘உன்னுடைய ஹெலிகாப்டர் என்னோட பிரச்சாரத்தைக் கெடுத்து விட்டது’ என்று கைவிரித்து விட்டாராம். அதிலிருந்து இவரும் காங்கிரஸ்காரர்களை கைகழுவிவிட்டார். இன்னொரு அனுபவமிக்க ஜாலி இந்த தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்கு முழுமையாக ஹெலிகாப்டர்களை சப்ளை செய்கிறார்.
இந்த விஷயத்தில் காங்கிரஸ்காரர்கள் கைதேர்ந்தவர்கள். காங்கிரஸில் கமல் நாத்தும் நவீன் ஜிண்டாலும் சொந்தமாக ஹெலிகாப்டர் கம்பெனிகளை வைத்திருக்கிறார்கள். என்ன இருந்தாலும் இத்தனை ஆண்டுகால ஆட்சி அதிகார அனுபவங்கள் அவர்களுக்கு கை கொடுக்கும் தானே?
அரசியல்வாதிகள் ஹெலிகாப்டர்கள் பயணத்தை உறுதி செய்தவுடன், கம்பெனி அதனை கமர்சியல் அலுவலகத்திற்கு தெரிவிக்கும். அவர்கள் இந்த நேரத்தில் பயணிக்கலாம் என்பதையும் பயணிகளுக்கு தேவையான விஷயங்களையும் அறிவுறுத்துவார்கள்.
15 நிமிடங்களுக்கு முன்பாக பயணிகள் வரவேண்டும்(இங்கெல்லாம் வந்திருவாங்க). அங்கு அவர்களுக்கு போர்டிங் பாஸ் கொடுக்கப்பட்டு, செக்யூரிட்டி செக் முடிந்தவுடன் டேக் ஆப் தான்.
டாடா, ரிலையன்ஸ், எஸ்ஸார் போன்ற இந்தியாவின் அனைத்து பெரும் தொழில் நிறுவனங்களும் தனியார் ஹெலிகாப்டர் கம்பெனிகளை வைத்துள்ளன.
வாடகைக்கு விட்டு அவர்கள் பெரிதாக எதையும் சம்பாதித்து விடப்போவதில்லை,கம்பெனி முதலாளியும் நிர்வாகிகளும் பல்வேறு இடங்களிலுள்ள தொழிற்சாலைகளை உடனடியாக பார்வையிட இதை பயன்படுத்துகிறார்கள். மற்ற நேரங்களில் அடுத்தவர்களுக்காக வாடகைக்கு விடுகிறார்கள்.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி ஹெலிகாப்டர் கம்பெனிகள் ஒரு மணி நேரத்திற்கு 75 ஆயிரம் ரூபாய் வசூலிக்கின்றன. தலைவர்களின் பயண செலவுகளை அரசோ,தனி நபரோ ஏற்பதில்லை, கட்சிதான் செலவு செய்கிறது என்று பிஜேபியின் பொருளாளர் பியூஸ் கோயல் சொல்கிறார்.
இன்றைய தேதியில் இந்தியாவில் 67 ஹெலிகாப்டர் கம்பெனிகள் இயங்குகின்றன. 2010-11 காலகட்டத்தில் 277 ஹெலிகாப்டர்கள் இருந்தது தற்போது 190 என்று குறைந்துள்ளது. இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகளின் எண்ணிக்கைக்கும், தலைவர்களின் எண்ணிக்கைக்கும் இது குறைவுதான். ஆனால் அவர்களின் பிரச்னை வேறு மாதிரி இருக்கிறது.தேர்தல் நேரம் தவிர மற்ற நேரங்களில் வியாபாரம் டல் தான்.அதுபோக 2009 களிலேயே ஒரு மணி நேரத்திற்கு 90 ஆயிரம் வரை வசூலித்தவர்கள் இப்போது மணிக்கு 75 ஆயிரம் என விலையை குறைத்துள்ளார்கள்.ஆனால் பைலட்டுகளின் சம்பளம் தற்போது மாதம் 5 லட்சம். கடந்த ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்திருக்கிறது.ஹெலிகாப்டர்களின் எரிபொருள் விலை உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம்.
இப்படி ஒரு பக்கம் ஹெலிகாப்டர் கம்பெனிகள் சொன்னாலும், இவர்களின் வியாபார அளவு குறைவானதல்ல.ஒரு மணி நேரத்திற்கு 75 ஆயிரம் ரூபாய் கணக்கிற்கு,ஒரு வாரத்தில் 10 மணி நேரம் பறந்தால் 7.5 லட்சம் வருகிறது.வருடத்தில் 52 வாரத்திலும் இப்படி பயணித்தால் ஏறக்குறைய 4 கோடி ரூபாய் செலவாகும்.குறைந்தது 30 அரசியல் தலைவர்கள் இப்படி பயணம் மேற்கொண்டால் 120 கோடி வருட வியாபாரம்.இதில் 75 சதவீதம் தான் கணக்கு காட்டப்பட்டிருக்கும். மீதி பணம்,கணக்கில் வராத பணம் தான் என்பவர்களும், இல்லை அப்படி எந்த கோல்மாலும் இதில் கிடையாது என்பவர்களும் உண்டு.தலைவர்களின் பிரச்சார செலவுகளை ரக வாரியாக பிரித்து தருமாறு தேர்தல் கமிஷன் கிடுக்கிப்பிடி போட்டாலும் எந்த கட்சியும் சரியான கணக்கை காட்டும் என்று நம்புவது கடினம்.
இன்றைய தேதியில் தேர்தல் மட்டுமில்லாமல் தலைவர்கள் மற்ற சமயங்களிலும் ஹெலிகாப்டர்களில் பயணம் செய்வது அதிகமாகிக் கொண்டேதான் இருக்கிறது. பறக்கும் தலைவர்களில் முதலிடத்தில் இருப்பவர் நரேந்திர மோடி. இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் ராகுல் மற்றும் சோனியாவிற்கு. நான்காமிடத்தில் இருப்பவர் மாயாவதி. தமிழக தலைவர்களில் ஹெலிகாப்டரை உபயோகிக்கும் ஒரே தலைவர் முதல்வர் ஜெயலலிதா.(தேசிய தலைவராவதற்கு முன்னோட்டம்?). தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் தரையில் கால் படாத அம்மையார் என்று தொடர்ந்து விமர்சித்தாலும்,காலத்தின் கட்டாயத்தில் இனி தமிழக தலைவர்களும் அதிகமாக பறக்க தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
ஆம் ஆத்மி கட்சிக்காரர்கள் மோடியின் தனி விமானப் பயணத்தை தொடர்ந்து கேள்வி கேட்டு வருகிறார்கள். பிப்ரவரி 19 ஆம் தேதி மோடி உபயோகிக்கும் அடானி குழுமத்தின் விமான உரிமையாளர்களையும், அவர்களுக்கு குஜராத்தில் இருக்கும் வியாபாரத் தொடர்புகளையும் ஆம் ஆத்மி கட்சி கேள்வி கேட்டது.இதற்கடுத்து ஆம் ஆத்மியின் அஞ்சலி, ராகுல் காந்தியின் தொடர்ச்சியான விமான பயணங்களை விமர்சித்தார். ஆனால் இந்த விஷயத்தில் தலைகீழாக நடந்த ஒரு விஷயம் மார்ச் 7 ஆம் தேதி கெஜ்ரிவால் டெல்லியிலிருந்து ஜெய்ப்பூருக்கு தனி விமானத்தில் பறந்தார்.செலவு செய்தது இந்தியா டுடே.
ஏற்கெனவே சொன்னபடி இந்தியாவில் உத்திரபிரதேசத்திலும், பீகாரிலும் இந்த தேர்தலுக்காக தலைவர்களும், பாலிவுட் ஸ்டார்களும் நிறைய எண்ணிக்கையில் பறந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஹெலிகாப்டர் சத்தத்திற்கு அங்குள்ள மக்கள் இன்று தலையை திருப்பக்கூட தயாரில்லை. அவர்களுக்குப் பழகிவிட்டது.
ஏப்ரல், 2014.