பிரியாணி 
சிறப்புப்பக்கங்கள்

பருவங்களைத் துரத்தும் பிரியாணி!

உணவே உயிரே

ராசி அழகப்பன்

எ ன்னுடைய பதினான்காம் வயதில் முதல் பிரியாணியைப் பார்த்தேன். அன்று என்னால் சுவைக்க முடிந்ததில்லை. அந்த விருந்து படையல்களிலும், உபசாரத்திலும், மாறுபட்ட சூழலிலும், என்னை வரவேற்றுப் பரிமாறிக் கொண்டிருந்த மாமி என்று அழைக்குமாறு கற்றுக் கொடுக்கப்பட்ட என் வயதொத்த குருத்துப் பெண்ணின் ஒளிரும் அழகிலும் பிரமித்து மிரண்டிருந்தேன். அந்த மிரட்சியில் நாவில் சுவை படரவில்லை. தொண்டையைக் கடந்து பை & பாஸில் செல்லும் வாகனம் போல சரசரவென்று விரைந்து
சென்று வயிற்றை அடைத்துக் கொண்டது.

அன்று ரம்ஜான் அல்லது பக்ரீத் பண்டிகையாக இருக்கலாம். என் அப்பா தலைமையாசிரியராகப் பணியாற்றும் பள்ளியின் துணையாசிரியரான உமர் மாமா அப்பாவையும், என்னையும் பண்டிகை விருந்திற்கு அழைத்திருந்தார். அம்மா தம்பி தங்கைகள் சொந்த ஊரில் இருக்க, எனது படிப்பில் சிறப்புக் கவனம் செலுத்துவதற்காக அப்பா தன்னுடனே வைத்துக் கொண்டார். அந்த வயதில் அப்பாவுடன் முரணிக் கொள்ளும் வேலையை வெகு சிறப்பாகவே செய்தேன். ஆம் எத்தனை முக்கியும் ''வாத்தியார் பிள்ளை மக்கு'' உலக வழக்கிற்கு எந்த பங்கமும் வராமல் பார்த்துக் கொண்டேன்.

ஆனால் அவரோ என்னை எல்லா வகையிலும் திருப்திகரமாக வைத்திருப்பதில் குறியாக இருந்தார். ''நாளைக்குப் பண்டிகை உமர் மாமா வீட்டிற்கு மதிய விருந்திற்குப் போகிறோம். நீ ஊர் சுத்தப் போயிறாதே,'' என்று சொல்லி வைத்திருந்தார். அப்பாவுடன் போவது எதுவானாலும் எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது. எனவே விருந்தைப் பற்றிய எந்த முன் யூகமும் இருக்கவில்லை. மறுநாள் காலையில் ஏதோ அவசர அழைப்பின்  பேரில் ''நீ மட்டும் உமர் மாமா வீட்டிற்குச் சென்று வா'' என்று ஒரு பழப்பையை என்னிடம் கொடுத்து விட்டுச் சென்றார். அவருடன் இல்லையென்றானதும் விருந்திற்குரிய மகிழ்ச்சி என்னில் பரவியது.

ஆஜானுபாகுவாகிய உமர் மாமா ஒரு குட்டியாடு போல விசுக்கென்று இருந்த என்னை ''வாங்க போங்க'' என்றது கூச்சமூட்டியது. பச்சை நிறத்தில் ஜிகினாக்கள் பதித்த திரைச் சீலைகளும் அதுவரைப் பார்த்திராத (அரபு) கோல எழுத்துக்களால் ஆன
சட்டகங்களும் முக்காடிட்ட வெளீரென்ற குட்டியூண்டு மாமியும்  ஓர் அந்நிய உணர்வை எனக்குள் ஏற்படுத்தி விட்டது.

பிரியாணி

''கை கழுவிக்கங்க மாப்பிளே'' என்று
வெந்நீர்க் கும்பாவை நீட்டியதும் என்ன செய்வதென்று புரியாமல் தடுமாறினேன். படுக்கிற பாயில் வெள்ளைத் துணியை விரித்து அதில் பீங்கான் கோப்பைகளில் மஞ்சள், சிவப்பு, இளம் பச்சை நிறத்தில் கோழி, ஆட்டு இறைச்சிகள் விதவிதமாக கண்ணுக்குக் கவர்ச்சியாக இருந்தன. கலவையான மணம், இப்போது நினைத்தாலும் உடலெங்கும் பரவுகிறது.  மாமா வெள்ளை நிறத்தில் பூப்போட்ட பீங்கான் தட்டைக் கையில் கொடுத்து இன்னொரு அகன்ற பீங்கான் கும்பாவில் இருந்து பிரியாணியைக் கோதிப் போட்டதோடு விட்டிருந்தால் தேவலாம். தட்டில் ஈரல், சுக்கா, மூளைப் பொறியல் என திணறத் திணற அணி சேர்த்துக் கொண்டே இருந்தார். அன்றைய பிரியாணி விருந்து இப்போது வரைக்கும் உள்ளங்கையில் மணத்துக் கொண்டிருக்கிறது.  ஆனாலும் சுவையை விட திக்குமுக்காடலும் மிரட்சியும் தான் என்னுள் ஆழப் பதிந்து விட்டிருக்கிறது.

அப்படியொன்றும் வசதியான குடும்பம் இல்லையென்றாலும் சாப்பாட்டு விசயத்திற்கு மிகுந்த முன்னுரிமை கொடுப்பவர் அப்பா. காய்கறி, இறைச்சியை ஒவ்வொரு முறையும் மாறுபட்ட ரெசிப்பிகளைச் சொல்லி அம்மாவை இம்சிப்பதோடு அவ்வப்போது அடுப்படிக்குள் புகுந்து கரண்டி சுழற்றும் வித்தகரும் கூட. வீட்டில் சதா காலமும் அம்மா அடுப்படியில் தான் இருப்பார். விதவைப் பெரியம்மா, அவரது இரு பிள்ளைகள் என நிறைந்த வீட்டில் சுமார் பத்துப் பேருக்கும் குறையாமல் ஒவ்வொரு நேரமும் பந்தி விரியும்.

வீட்டு மாடியில் கோழிப் பண்ணை இருந்தது. சுணக்கம் காட்டும் கோழி, முட்டை போடாமல் சும்மா கொக்கரித்து ஏமாற்றி விட்டுப் போகிறவள் என அடையாளம் கண்டு களையெடுக்கும் சாக்கில் ஒவ்வொரு முறையும் வாரத்திற்கு இரண்டிரண்டு கோழிகளாகக் கழுத்துத் திருகப்படும். முழங்கை வரைக்கும் கசிந்து செல்லும் கொழுப்புக் குழம்பில் குழைசோற்றைப் பிசைந்து சாப்பிட்டால் அது இறங்கும் வேகமே தெரியாது.

வெறும் மிளகு சீரகம் மட்டும் அரைத்து வைத்து எலும்புகளாகப் போட்டு வைக்கும் தண்ணிக் குழம்பில் மொறுமொறுப்பான பூரியை ஊற விட்டு விள்ளலை எடுத்து வைத்தால் தொண்டையில் இறங்கும் இஞ்சிச்சாறு, சளியை ஊடறுத்து உடலெங்கும் சூடு பரப்பும். கோழியின் நெஞ்சுக் கறி வறுவலை அந்தக் காலத்திலேயே உருளைக் கிழங்கு சிப்ஸைப் போல சாப்பிட வாய்த்தது.

பிரியாணி

வீட்டில் எத்தனை விதமாகச் சமைத்தாலும் உமர் மாமா வீட்டில் நிதானமாகச் சுவைக்க முடியாத பிரியாணியின் ஏக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது. இந்தக் காலத்தைப் போல பிரியாணி அவ்வளவு பரவலாக இருக்கவில்லை. காசு பணப்புழக்கமும் அத்தனை சரளமாக இல்லை.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளின் இறுதியில் கீழத் தஞ்சையில் கூலித் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு எதிராக நெல் உற்பத்தியாளர்கள் சங்கம் வைத்தது போல எண்பதுகளின் துவக்கத்தில் எங்கள் பகுதியில் முட்டை உற்பத்தியாளர் சங்கம் என்ற ஒன்று இருந்தது. நாமக்கல்லுக்கு முன்னோடியாக எங்கள் பகுதியில் கோழிப்பண்ணைகள் அதிகம் இருந்தன.

முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டத்தில் எனது அப்பாவால் கலந்து கொள்ள முடியவில்லை. அழைப்பிதழை என்னிடம் கொடுத்தார் அப்பா. பதின்மத்தின் இறுதியில் இருந்த நான் அவரைக் கேள்வியோடு பார்த்தேன். நீ அங்க கூட்டத்துல ஒண்ணும் சொல்ல வேண்டியதில்லை. (அதற்கு முன்னர் திராவிட இயக்கக் கூட்டத்தில், மகாஜன சங்கக் கூட்டத்தில் விடலைத் தனமாக பேசியது அவர் காதுக்கு எட்டியிருந்தது) கூட்டம் முடிந்ததும் பிரியாணி போடுவாங்க சாப்புட்டுட்டு வா என்று அனுப்பினார்.

அங்கு வழிந்த மிகைச் செலவு அந்த வயதிலேயே எனக்கு அதிகம் என்றுபட்டது. அதற்காக சும்மா போடும் பிரியாணியை சாப்பிடாமல் இருப்பதாவது. மிதமான மசாலா சுவையில் சொதசொதவென்று நெய் மணத்த பிரியாணியை பேசின் பேசினாகக் கொண்டு வந்து சரித்த தாராள மனதை நினைக்குந்தோறும் வியப்பு மேலிடுவதையும் என்னையறியாமல் நெய் பிசுபிசுக்கும் கை விரல்களை கர்ச்சிப்பில் துடைத்துக் கொள்வதையும் தவிர்க்க முடிவதில்லை.

இடைக்காலத்தில் சுயமாகவும், சற்றே கைக்கு இலகுவாகவும் சம்பாதிக்கத் தொடங்கி விட்ட காலத்தில் பிரியாணியோ பிரியாணி என்று அலைந்து வெறும் கலர்ப்பொடி கொட்டிய சோற்றையும், நெஞ்சை கம்பி பிரஷ் போட்டுச் சுரண்டும் மசாலாக்களையும், பற்களில் கிரீஸ் பசையாக ஒட்டும் டால்டாவையும் இறைத்துச் சமைத்த பிரியாணிகளை உண்டு வெறுத்துப் போய் சாப்பாட்டில் பிரியாணி என்றாலே எனக்குப் பிடிக்காத வார்த்தை என்று அடித்தொண்டையில் கமறிக் கொண்டிருந்த காலம் சில  இருந்தது.

ஒருமுறை ஓசூரில் இருந்து சென்னைக்குப் போகும் வழியில் குறைந்த அவகாசத்தில் வேலூரில் மதிய உணவு சாப்பிட வேண்டி நேர்ந்தது. சம்பிரதாயமாக இலை பரப்பி சாப்பிடத் தோன்றவில்லை. பேருந்து நிலையத்தை ஒட்டி ஒரு தட்டி விலாஸ். சித்தி பிரியாணி என்று போட்டிருந்தது. அந்த சித்தி என்ற சொல் என்னை என்னவோ அந்த நிமிடத்தில் கயிறு கட்டி இழுப்பது போல இழுத்தது. பிரியாணி விரதத்தை முறித்துக் கொண்டு ஒரு கோழி பிரியாணி வாங்கினேன்.

எந்த ஆர்ப்பாட்டமான பிரியாணியையும் விட நெஞ்சுக்கு நெருக்கமாக நிறைந்து விட்டது
சித்தி பிரியாணி. அதற்குப் பின்னர் பலமுறை சித்தி பிரியாணிக்காகவே வேலூர் வழியாகப் பயணிக்கும் வாய்ப்பை உருவாக்கிக் கொண்டதுண்டு. தட்டி விலாஸ்களின் ஆயுளைத் தீர்மானிப்பது வாடிக்கையாளரோ உரிமையாளரோ அல்லவே. நம்மைப் போன்ற ஆயிரக்கணக்கான சுவைஞர்களின் நெஞ்சில் பூட்ஸ்காலால் மிதிக்க வல்ல அதிகார வர்க்கம் சித்தியின் தட்டியைப் பிரித்துப் போட்டு விட்டது போலும். ஒருமுறை ஆவல் மேலிட வேலூர் பேருந்து நிலையத்தில் இறங்கித் தேட அந்தப் பத்துக்குப் பத்து வெற்றிடம் மனதில் பிரமாண்ட பாரத்தை இறக்கியது.

அப்படியே காற்று மாறி அடிக்க ஆம்பூரில் இறங்கி பீப் பிரியாணி சாப்பிடும் வழக்கம் தொற்றிக் கொண்டது. செரிமானம் உச்சத்தில் இருந்த நடு வயதில் ஒருநாளின் எந்தப் பொழுதையும் பொருட்படுத்தாமல் நள்ளிரவு, அதிகாலை எல்லா நேரங்களிலும் அதனைச் சுவைத்துப் பார்த்தாகி விட்டது.    

ஓசூரில் உணவகம் துவங்கிய சில ஆண்டுகளில் அசைவத்திற்கென்று தனியாக ஒரு கிளையைத் துவக்கினோம். எமது உணவகத்தில் மாஸ்டர்கள் மட்டுமே ஆறு பேர் இருந்த நேரத்திலும் கூட பிரியாணி தம் கட்டும் பொறுப்பை எனக்கு நானே இழுத்துப் போட்டுக் கொண்டேன்.

எங்கு சுற்றினாலும் காலையில் பத்து மணிக்கு அடுப்பும் பிரியாணி வட்டையும் எனக்காகக் காத்திருக்கும் அளவிற்குப் பிரியாணி சமையற் காதலனாக என்னை நானே வரித்துக் கொண்டேன்.

முன்னொரு காலத்தில் பணிபுரிந்த ஓசூர் அசோக் லேலண்ட்
தொழிற்சாலை வேலை நிறுத்தத்தில் இருந்தபோது தொழிலாளர்களின் மதிய உணவுப் பொறுப்பை  போராட்டக் குழு ஏற்றிருந்தது. முன்னால் ஊழியன் என்ற வகையில் ஒருநாள் மதிய உணவுப் பொறுப்பு என்னிடம் வந்த பொழுது எனது தோழர்களுக்கு நானே சமைத்தளிப்பது என்று இறங்கினேன். சுமார் இரண்டாயிரம் பேருக்கு ஓரிருவரை மட்டும் துணைக்கு வைத்துக் கொண்டு
சமைத்தது வாழ்நாள் சாதனையாக எனக்கு நானே பெருமைப்பட்டுக் கொள்வதுண்டு.

உணவு சுவைப்பது, சமைப்பது ஆகியவற்றின் மீதான பேரார்வம் இப்பொழுது குறைந்து வருகிற பொழுதும் வாரத்தில் ஒரு வேளையாவது வீட்டில் சமைக்காமல் இருப்பதில்லை. அதில் மாதத்தில் ஒருநாளாவது பிரியாணியாக அமையப் பெற்று விடுகிறது.   

நண்பர்கள் உறவினர்கள் வீடுகளுக்குப் போக நேரும் பொழுதெல்லாம் பிரியாணி சமைப்பதை என் தலையில் கட்டி விடுவதில் சிலர் குறியாக இருக்கிறார்கள்.

இன்று நடுத்தர வர்க்கத்திற்கே முப்பது ரூபாயில் இருந்து முன்னூறு ரூபாய் வரை டொக் டொக்கென்ற தட்டல் நகரங்களில் ஓய்வதில்லை. ஐம்பது ரூபாய்க்குத் தரமான பிரியாணி சாப்பிட்ட அனுபவமும் வாய்க்கிறது. முன்னூறு ரூபாயைப் பறித்துக் கொண்டு த்ராபையாக முகத்தில் சப்பென்று அறையும்படியான சிவப்பு நிறத்தில் கொட்டிய பிரியாணி
சாப்பிட்ட விரல்களை டிடர்ஜென்ட் சோப்புப் போட்டுக் கழுவினாலும் இரண்டு நாளைக்குப் போகாத அனுபவமும் வாய்க்கிறது.

செம்மறியாட்டுக் கறிக் கொழுப்பில் அரிசியைக் கொட்டி வேக வைத்து, நம்மூர் கட்டிச் சோறு மாதிரி பாலைவனப் பயணத்திற்குக் கட்டிக் கொண்டு போவது தான் பிற்காலத்தில் மசாலாக்கள் கூட்டி சமைக்கப்படும் பிரியாணியாகப் பரிணமித்ததாக எனக்குள் ஒரு அனுமானம்.

சமீப காலங்களில் நான் சமைக்கும் பிரியாணி முறையே வேறு. வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு, கறிமசால் போட்டு வழக்கமான முறையில் இறைச்சியைப் புரட்டி எடுத்துத் தனியாக வைத்து விடுவது. ஒரு கிலோ சீரகச் சம்பா அரிசிக்கு இரண்டு தேங்காய்கள் வீதம் பாலெடுத்து வைத்துக் கொள்வது. பொடித்த பட்டை, கிராம்பு, ஏலக்காய் போன்றவற்றைக் குறைந்தளவில் நெய்யில் தாளிப்புப் போட்டு அரிசிக்கு இரண்டு பங்கு என்றளவில் தே.பாலையும், தண்ணீரையும் கூட்டிக் கொதி வந்ததும் அரிசியைப் போட்டு முக்கால் வேக்காடு வெந்து நீர் வற்றியதும் தாராளமாக கொத்துமல்லி, புதினாத் தழைகளைப் போட்டு தனியாக வைத்துள்ள மசாலா இறைச்சியை அரிசியுடன் சேர்த்துக் கலந்து, மேலே வாழையிலைகளைப் போட்டு அதற்கு மேலே மூடியைப் போட்டு அரை மணிநேரம் தம்மில் வைத்திருந்து எடுத்தால் இனம் புரியாத வாசம் நம் கையைத் தானாகவே இழுக்கும். அதிலும் வாழையிலையின் அவிந்த வாசம் இருக்கிறதே அதற்குத் தனி ஈர்ப்பு உண்டு.

சாப்பிடச் சாப்பிடத் திகட்டாது. சாப்பிட்ட பிறகு பிரியாணி சாப்பிட்டதால் தோன்றுமே தாக உணர்வு அது தோன்றாது.

ஒரு சிலருக்குத் தேங்காய்ப்பால் ஏற்காது என்பது உண்மையே என்றாலும் மிதமான மசாலா, எண்ணெய் & நெய்யின் இடத்தை தே.பால் எடுத்துக் கொள்வதால் எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாமல் இறங்கிக் கொண்டே இருக்கும்.  அடுத்த வேளைக்கு முறையாகப் பசிக்கும். அடுத்த வேளைக்குப் பசிக்கச் செய்வதே என்னைப் பொருத்த மட்டில் ஒரிஜினல் பிரியாணி.

அக்டோபர், 2019.