சிறப்புப்பக்கங்கள்

பம்பையா, பரட்டையா?

இனியன்

பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சி அரசு அலுவலர்கள் குடியிருப்புப் பகுதிதான் என்றாலும் சற்றே ஒதுங்கியிருந்த நிலையில்தான் இருந்தது நான் பிறந்து வளர்ந்த அந்தக் குடியிருப்பு. பன்னிரெண்டு வீடுகளைக் கொண்டது. அங்கே ஐந்து பாட்டிகள் இருந்தார்கள். வீட்டின் முன்பாகப் பெருங்குடையைப் போன்று பரந்து விரிந்து காட்சியளித்துக் கொண்டிருந்த இரு வேப்பமரத்து நிழிலில்தான் அவர்களது கூடுகையும், விளையாட்டுகளும், கதைகளும், நினைவுப் பரிமாற்றங்களும் நடந்து கொண்டியிருக்கும்.

மாலை வேளைகள் மற்றும் விடுமுறை நாட்களின் மதிய நேரங்களில் பன்னிரெண்டு வீடுகளையும் சேர்ந்த சிறுவர்களான நாங்கள் பதினோரு பேரும் இணைந்து கொண்டு கதைகள் கேட்பதும், விளையாடுவதுமாக இருப்போம்.

அவர்களிடத்திலிருந்து தான் பல்லாங்குழி, தாயம், ஒத்தையா ரெட்டையா, பம்பையா பரட்டையா, கொல கொலையா முந்திரிக்கா, ஆடு புலி ஆட்டம், நிலாச்சோறு, கண்ணாமூச்சி ரேரே, நூத்துக்குச்சி (நூற்றுக்குச்சி), கல்லாக்கா, சொல்விளையாட்டு, எனப் பாரம்பரிய விளையாட்டுகள் அறிமுகமாகியிருந்தது எங்களுக்கு. கூட்டாக அமர்ந்து  பாட்டிகளும் நாங்களும் குழுப் பிரித்து இவற்றையெல்லாம் ஆடும் போது சலசலப்புகளும், சச்சரவுகளும் இருந்தாலும் விளையாட்டுகள்  பிரம்மாண்டமானதாக நீண்டு கொண்டேயிருக்கும்.

அந்த விளையாட்டுக் குழுவிற்கு என்றுமே  கேங்க் லீடர் எட்டாம் நம்பர் பாட்டிதான். (பாட்டிகளுக்குப் பெயர் வைத்து அழைத்ததை விட அவர்கள் தங்கியிருந்த வீட்டு எண் வைத்தே அஞ்சாம் நம்பர் பாட்டி, ஏழாம் நம்பர் பாட்டி, எட்டாம் நம்பர் பாட்டி, 12ஆம் நம்பர் அவ்வா, ஆத்தா என்றே அழைப்போம்.) அவருடைய கிராமத்து வீட்டிலிருந்து தேக்கு மரப் பல்லாங்குழி ஒன்றையும்  வைத்திருந்தார். அதே போல் தாயம் விளையாடுவதற்கென்றே பரீட்சை அட்டையின் பின்புறத்தில் கட்டங்கள் வரைந்துப் பாதுகாப்பாக அனைத்தையும் வைத்திருக்கும் பாட்டி. அவர்களுக்கு மட்டுமின்றி எங்களுக்கும் அவைதான் விளையாட்டுப் பொருளாக இருந்தும் வந்தது.

நாங்களெல்லாம் சற்று வளர்ந்தபிறகு மரமேறி- கொம்பேறி, கவன் குச்சி, நாடு பிரித்தல், கில்லி தாண்டு, உப்பு சண்ட, பச்ச குதிர, ஆபியம் போன்ற விளையாட்டுகளையும் அவர்கள் தான் கற்றுக் கொடுத்து விளையாட வைத்தனர்.

இவற்றில் மரமேறி கொம்பேறி விளையாட்டுதான் எனக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டாக இருந்தது. காரணம் விளையாடுவதற்குக் குறைந்தபட்சம் பத்து நபர்களும் அருகருகே மூன்று மரங்களும் தேவைப்படும். மரக்கிளைகளிலிருந்து  கீழிறங்காமல் ஓடிப்பிடித்தும், கிளை விட்டுக் கிளை மற்றும் மரம் விட்டு மரம் தாவிப் பிடித்து விளையாடுவதுதான் மரமேறி கொம்பேறி. ஆனால் எங்கள் காலங்களிலேயே அம்மரங்கள் அழிக்கப்பட்டுக் கான்கிரீட் கட்டிடங்களாக மாற்றப்பட்டு அந்தப் பகுதிக்கென்றேயிருந்த ஒரே விளையாட்டு மைதானமும் எங்களது விளையாட்டுகளும் பிடுங்கப்பட்டன.

இன்று பாரம்பரிய விளையாட்டுகள் புதிய தலைமுறையினருக்கு அறிமுகமே இல்லை. அக்குழந்தைகள் நமது வாழ்வை அழகாக்கும்  முக்கியக் காரணிகளை தொடர்ந்து இழந்து வருகிறார்கள்.

இதிலிருந்து சற்று மாறுதல் ஏற்படுத்தி நேரடியாகப் பாரம்பரியமான விளையாட்டுகளை அறிமுகப்படுத்தும் முயற்சியாகதான் “பல்லாங்குழி” அமைப்பை உருவாக்கி அதன் மூலம் பள்ளிக் குழந்தைகள் மத்தியிலும் வாய்ப்புகள் கிடைக்கும் இடங்களிலும் பாரம்பரிய விளையாட்டுகளை அறிமுகப் படுத்திவருகிறோம்.

இப்படியான நிகழ்வு ஒன்றில் குழந்தைகளுக்கு “கொல கொலையா முந்திரிக்கா” விளையாட்டை அறிமுகப்படுத்தி விளையாட வைத்துவிட்டு, அவர்களுடனான உரையாடலின் போது பத்துவயது சிறுவன் ஒருவன் இந்த விளையாட்டில் “Concentration, Aim, Health,” போன்ற விசயங்களைக் கற்றுக் கொண்டதாகப் பதிலுரைத்தான்.  

பாட்டுப் பாடிக் கொண்டே ஓடவும் வேண்டும்; அதேநேரத்தில் யார் மீது கையிலிருக்கும் தக்கையை எறியவேண்டுமெனச் சிந்திக்க வேண்டும். ஒரே நேரத்தில் இது போன்ற பல வேலைகளைச் செய்வதற்கு concentration அவசியம்தானே. அதே  போல் யார் மீது தக்கையை ஏறியத் திட்டமிட்டுள்ளோமோ அவர்கள் மீது எறிவதற்கு Aim இருந்தால்தானே முடியும். சுற்றிச்சுற்றி ஓடுகிற போது உடல் வலு  பெருகிறதுதானே இது Health க்கு முக்கிமான விசயம்தானே என்று அவன்  பதிலுரைத்த போது எனக்கு விளையாட்டுகள் கற்றுக் கொடுத்த பாட்டிகளும் சரி, இதே விளையாட்டைப் பள்ளியில் விளையாட வைத்த கமலா டீச்சரும் சரி இப்படியொரு விசயம் இந்த விளையாட்டில் இருப்பதாகச் சொல்லிக் கொடுக்கவேயில்லை என்பதுதான் நினைவிற்கு வந்தது.

அதேபோல், மற்றொரு நிகழ்வில் “ஆடுபுலியாட்டம்” விளையாட்டை மைதான விளையாட்டாக மாற்றியமைத்து, அதனது கட்ட அமைப்பை மைதானத்தில் பெரிதாக அமைத்துக் குழந்தைகளையே  15 ஆடுகள் மற்றும் 3 புலிகளாகப் மாற்றி, ஆட்டத்தின் விதிமுறைகளையும் சொல்லிக் கொடுத்து விளையாட வைத்த ஆட்டம் முடிந்தப் பின்பான உரையாடலில் ஆட்டுக் கூட்டத்திற்குத் தலைமைத் தாங்கிய சிறுமி “ஒன்று பட்டால் உண்டு வாழ்வு மற்றும் தலைமைப் பண்பு” ஆகிய இரண்டையும் கற்றுக் கொண்டதாகத் தெரிவித்தாள்.

“எப்படி என்றேன்.”

“விளையாட்டில் பதினைந்து ஆடுகள்; ஆனால் மூன்றே புலிகள்தான். என்னதான் ஆடுகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் புலிகளின் வலிமையால் ஆடுகளை எளிதில் வீழ்த்தி விட முடியும். அதே நேரத்தில் பதினைந்து ஆடுகளும் சரியாகச் சிந்தித்து ஒற்றுமையுடன் செயல் பட்டால் குறைந்த எண்ணிக்கையிலான ஆடுகளின் சேதாரத்தோடு மற்ற ஆடுகள் தப்பிவிடும். ஒரு கூட்டமென்றால் தலைமை கட்டாயம்  இருக்க வேண்டும். தலைமைச் சரியான வழிகாட்டுதல் இருந்தால் நிச்சயம் பலம் பொருந்தியவர்களிடமிருந்தும் தப்பிவிடலாம்” என்றாள்.

நல்ல மழைநாள் ஒன்றின் போது, வகுப்பறை ஒன்றில் குழந்தைகளை நூற்றுக் குச்சி விளையாட வைத்து உரையாடினேன். சிறுவன் ஒருவன் “இதனால் நரம்பு தளர்ச்சி வராது” என்று பதிலுரைத்து, ஒன்றோடொன்றுச் சிக்கிக் கிடக்கும் குச்சிகள் அலுங்காமல் எடுக்கும் போது கடுமையான கட்டுப்பாடுடன் எடுக்கிறோம். அந்தக் கட்டுப்பாடு நரம்பு தளர்ச்சியிருந்தால் கிடைக்காது. அதே நேரத்தில் தொடர்ந்து விளையாடினால் நரம்புத் தளர்ச்சியும் வராது என்று பதிலுரைத்தான். குழந்தைகள் நமது பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடுவதற்கும் அவற்றைப் புரிந்து கொள்வதற்கும் தயாராகத்தான் இருக்கிறார்கள். ஆனால், பெற்றோர்கள்?

(இனியன், பல்லாங்குழி என்கிற பாரம்பரிய விளையாட்டுக்கான அமைப்பை  நடத்துகிறவர்)

ஆகஸ்ட், 2016.