சிறப்புப்பக்கங்கள்

பனிமலையில் பறிபோகும் உயிர்கள்!

முத்துமாறன்

மை னஸ் நாற்பது டிகிரி. கற்பனை செய்துகூடப்பார்க்க முடியாத ஒரு குளிர். நாட்டின் வடமுனையில் கண்களைக் கூசச்செய்யும் வெண்ணிற பனிச் சிகரமான சியாச்சின்.

2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மூன்றாம் தேதி அதிகாலை சியாச்சின் சிகரத்தில் பாகிஸ்தானிய ஆக்கிரமிப்புப் பகுதிகளைக் கண்காணிக்க வசதியான சால்தோரா முனையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்திய ராணுவத்தின் காவல் நிலையில் பத்து ராணுவ வீரர்கள் இருந்தனர். சிலர் தங்கள் கூடாரங்களில் ஓய்வெடுக்க, மீதிப்பேர் கண்காணிப்புப் பணியில் இருந்தனர். உலகின் மிக உயரமான ராணுவ நிலை இது. இதற்கு சோனம் நிலை என்று பெயர். இது ஹவில்தார் சோனம் என்ற ராணுவ வீரரின் பெயரால் அமைந்த இடம். லடாக்கைச் சேர்ந்த இந்த வீரர் 1984&ல் இந்த இடத்தில் இருந்துதான் பாகிஸ்தான் ராணுவத்தின் ஆக்கிரமிப்பு முயற்சியை முறியடித்தார். அவர் பெயரையே இந்த இடத்துக்கும் வைத்துவிட்டார்கள்.

இது ராணுவரீதியாக சாதகமான இடம். ஆனால் மிகுந்த ஆபத்தானது. அடிக்கடி பனிச்சரிவு, ஆழமான இடுக்குகள், பள்ளங்கள் கொண்ட இடம்.

அந்த அதிகாலையில் அவர்களே அறியாமல் பெரும் பனிச்சரிவு நிகழ்ந்தது. மலை உச்சியில் இருந்து பெரும் பனிமலை பெயர்ந்து அவர்களை நோக்கிச் சரிந்தது. பத்துப் பேரும் சுமர் 20 அடி பனியின் அடியில் புதையுண்டார்கள். நாட்டின் பாதுகாப்புக்காக எல்லையில் காத்திருந்தவர்களை பனி மூடிக்கொண்டுவிட்டது. ஓயாது அடித்துக்கொண்டிருந்த எலும்பை ஊடுருவும் குளிர் காற்று சட்டென்று நின்றுவிட அங்கே மயான அமைதி.

அங்கிருந்து கீழே இருந்த ஒரு ராணுவ நிலையில் அதிகாலை 4 மணிக்கு மேலே இருந்துவரும் ரேடியோ தகவலுக்காகக் காத்திருந்தார், மேஜர் விபின் குமார் என்ற அதிகாரி. வழக்கமாக 4 மணிக்கு முதல் ரேடியோ தகவல் சோனம் நிலையில் இருந்து அனுப்பப்படும். அன்று வரவில்லை. மேஜர் உறைநிலைக்கும் கீழான இந்தப் பிராந்தியங்களில் சில நேரம் மின்னணுக் கருவிகள் வேலை செய்யாது என்பதை அறிந்தவர். எனவே, அப்படி ஏதாவது கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்று நினைத்து அடுத்த தகவலுக்காகக் காத்திருந்தார். ஐந்தேகால் மணிக்கு ரேடியோ அலறியது. 'சார், நாங்க எல்லோரும் பனியால் மூடப்பட்டுவிட்டோம்'' என்றது, ஒரு குரல் பதற்றத்துடன். அது, ஏழுமலை என்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்.

மேஜருக்கு மறுநொடியில் என்ன நடந்திருக்கிறது என்பது புலப்பட்டது. கடந்தமாதம்தான் இதேபோல் பனிச்சரிவில் நான்கு வீரர்கள் இறந்திருந்தார்கள். பனிமலை சரிந்தால் அவ்வளவுதான். ஒன்றும் செய்யமுடியாது. சில நாட்கள் கழித்து உயிரற்ற உடல்தான் மீட்கப்படும். மேஜர் பதற்றம் கொண்டார். பனிக்கு அடியில் சிக்கினாலும் ஒரு வீரர் ரேடியோ தகவல் அனுப்பும் அளவுக்கு வாய்ப்புடன் இருக்கிறாரே... உடனே செயல்பட்டால் காப்பாற்றக்கூடும்.

இரண்டு மணி நேரம் கழித்து மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்தடைந்தனர். அவர்கள் கண்ட காட்சி, என்ன நடந்தது என்பதை யூகிக்க வைத்தது. இருபது அடி ஆழத்தில் பனிக்குள் சிக்கியவர்களைத் தோண்டி எடுக்கவேண்டும். மைனஸ் 40 டிகிரியில் சிக்கியவர்களை எவ்வளவு விரைவாக மீட்க முடியுமோ அவ்வளவு விரைவாக மீட்டால்தான் என்னவென்று பார்க்கமுடியும். விரைவில் ஹெலிகாப்டர் மூலம் மேலும் ஆட்கள் வந்து சேர்ந்தனர்.

பகலில் பனியில் சுரங்கம் போலத் தோண்டினார்கள். மீண்டும் பனியும் குளிர்காற்றும் சேர்ந்துகொள்ள, மீட்புப் பணியைத் தொடர்ந்து செய்யமுடியவில்லை. அடிக்கடி நிறுத்திவிட்டு ஓய்வெடுக்கவேண்டி இருந்தது. மேலும் கருவிகளும் ஆட்களும் வந்து சேர்ந்தார்கள். பத்துப்பேர் மட்டுமே இருக்கக்கூடிய அந்த இடத்தில் சுமார் 50 பேர் சேர்ந்திருந்தனர். மோப்பநாய்கள், மருத்துவர்கள், பனிச்சரிவில் மீட்புப்பணி செய்ய பயிற்சி பெற்ற ஆட்கள் கொண்ட குழு அது. 20,500 அடி உயரத்தில் இவர்கள் கடினமான வேலையைச் செய்யவேண்டும். ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் மேலும் சிக்கலாகிவிடும். இரவு சூழ்ந்ததும் வேலை நிறுத்தப்பட்டது.

மறுநாள் காலையில் ஒரு ரேடியோ அலறியது. அது, பனிக்குள் சிக்கிக்கொண்ட ராமமூர்த்தி என்ற வீரர். இதோ அருகில்தான் அவர் 20 அடி ஆழத்தில் புதைந்துள்ளார். ஆனால் அவரால், தான் எங்கே இருக்கிறேன் என்று காண்பித்துக்கொள்ள முடியவில்லை. மீட்புப் பணியினர் பனியின் அடியில் அவர் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிக்கக் கடுமையாக முயன்றனர். ஆனால் பலன் இல்லை. இரண்டுமணி நேரம் அவர் தொடர்பில் இருந்தார். மெல்ல அவரது கருவி பேட்டரி தீர்ந்து ஒய்ந்தது. முதல் நாள் அழைத்து தகவல் சொன்ன ஏழுமலை என்ற வீரரிடம் இருந்து எந்த சமிக்ஞையும் இல்லை. பெரும் அச்சமும் கவலையும் மீட்புப்பணியினரைச் சூழ்ந்தது.

சோர்வுடன் இப்படியே ஆறு நாட்கள் தொடர்ந்தது பணி. அப்போது சுமார் 100 பேருக்கும் மேல் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆறாம் நாள் காலையில் செங்குத்தாகத் தோண்டிச் சென்றபோது ஒரு கேபிள் வயரின் முனை தென்பட்டது. அதைக் குறிவைத்து, பின் தொடர்ந்து சென்றார்கள். பத்துப் பேரில் முதல் உடல் கிடைத்தது. மேலும் மூன்றுமணி நேரம் தேடியபோது இன்னொரு உடல் கிடைத்தது. அந்த உடலை உயிரற்ற உடலாகக் கருதி, பேக் செய்து குழியில் இருந்து மேலே அனுப்ப முயன்றார்கள். அப்போது அந்த உடலில் அசைவு. மூச்சு இருந்தது. ‘சார், இங்கே ஒருத்தர் உயிருடன் இருக்கிறார்,'' எல்லோர் கவனமும் அங்கே குவிந்தது. அது, லேன்ஸ்நாயக் ஹனுமந்தப்பா.

ஹனுமந்தப்பா உடனடியாக அங்கே இருந்த மருத்துவக் கூடாரத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார். பெரும் ஆச்சரியத்துடன் மருத்துவர்கள் அவரை எதிர்கொண்டனர். அவரது உடலுக்கு வெப்பநிலையை சரிசெய்யும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அங்கிருந்து ஸ்ரீநகருக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டுவரப்பட்டு, அங்கே தயாராக இருந்த விமானம் மூலம் டெல்லி ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார் ஹனுமந்தப்பா.

ஆறு நாட்கள் பனிக்குள் சிக்கிய ஒரு மனிதன் உயிருடன் இருக்கிறார் என்பது நாடு முழுக்க பெரும் ஆச்சரியகரமான விவாதமாக மாறியது. அவர் எப்படியும் பிழைக்கவேண்டுமே என்று நாடே பிரார்த்தனை செய்தது. அங்கிருந்து 2000 மைல் தள்ளி கர்நாடகாவில் ஒரு கிராமத்தில், ஹனுமந்தப்பா மீட்கப்பட்ட செய்தியை கன்னட செய்திச் சானல் ஒன்றில் அவரது மனைவி மகாதேவி பார்த்து கண்ணீர் வடித்தார்.  கணவர் இறந்துவிட்டதாக அவர் கருதிக்கொண்டிருந்தார். மகள் நேத்ராவை அணைத்துக்கொண்டார். அவர் கடவுளுக்கு நன்றி சொன்னார். ஊரே வீட்டு வாசலில் கூடிவிட்டது. அவரது குடும்பம் உடனே டெல்லிக்கு அழைத்துவரப்பட்டது.

ராணுவ மருத்துவமனையில் அதற்குள் பிரதமர் முதல் அத்தனை ராணுவ உயர் அதிகாரிகளும் அந்த விந்தை மனிதரைப் பார்த்துவிட்டுச் சென்றிருந்தனர்.

ஆனால் மருத்துவர்கள் கவலை கொள்ளத் தொடங்கினர். ஹனுமந்தப்பா கோமாவுக்குள் சென்றிருந்தார். அவரது உடலுறுப்புகள் செயலிழக்கத் தொடங்கி இருந்தன. நுரையீரலில் கடுமையான தொற்று.

நாட்டின் அனைத்து மக்களின் பிரார்த்தனைகளையும் மருத்துவர்களின் முயற்சிகளையும் மீறி ஹனுமந்தப்பா,  மீட்கப்பட்ட மூன்றாவது நாள் மரணமடைந்தார். அவர் தன்னுடன் இருந்து சடலங்களாக மீட்கப்பட்டொன்பது பேருடன் இறுதியாக இணைந்துகொண்டார்.

மகாதேவிக்கு அவரது கணவர் இரண்டாவது முறையாக இறந்தார். ஆனாலும் அச்செய்தியைத் துணிச்சலுடன் எதிர்கொண்டார். பதினோரு மாதங்கள் கழித்து புதுடெல்லியில் கணவனுக்கு வழங்கப்பட்ட சேனா விருதை மகாதேவி தன் மகளுடன் வந்து பெற்றுக்கொண்டார். மகள் நேத்ரா அவர் அருகே நின்றிருந்தாள். நாட்டுக்காக சேவை செய்ய அதே சியாச்சின் சிகரத்தில் நேத்ரா எதிர்காலத்தில் ஏறக்கூடும்!

ஏப்ரல், 2019.