சிறப்புப்பக்கங்கள்

பதிப்பு வரலாறு

பேராசிரியர். தாமரைச்செல்வி

தமிழ் இலக்கியங்களிலேயே முதன்முதலில் அச்சு வடிவம் பெற்ற நூல் திருக்குறளேயாகும். தமிழ் இலக்கியங்களிலேயே அதிகப் பதிப்புகள், உரை நூல்கள், ஆய்வு நூல்கள், பல மொழிப்பெயர்ப்புகளைப் பெற்றதும் இந்நூல் ஒன்றே.

திருக்குறள் மூலப்பதிப்பில் முதல் நூல்

திருக்குறள் மூலப்பதிப்புகளில் (குறள் வெண்பா வடிவம்) முதலில் வெளிவந்த நூல் கி.பி.1812 இல் தஞ்சை மாநகரம் ஞானபிரகாசனால் பதிப்பிக்கப்பட்டது. இது சென்னையில் இருந்த ‘ மாசததினச்சரிதை ’ அச்சுக் கூடத்தில் இருந்து வெளிவந்தது. இது மரவெழுத்தால் அச்சடிக்கப்பட்டது. இதே ஆண்டில்தான் திருக்குறளுக்கு ஆங்கில மொழி பெயர்ப்பு உரைநூலும் வெளிவந்தது. 1812 இல் சென்னைக் கல்விச் சங்கத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் என்பவர்தான் ஆங்கில மொழிபெயர்ப்பையும் உரையையும் எழுதி வெளியிட்டார். இம்மொழிபெயர்ப்பு நூலே ஆங்கில மொழிபெயர்ப்பு நூலுக்கு முன்னோடியாக திகழ்கிறது. கிழக்கிந்தியக் கம்பெனியில் முக்கிய அரசு பொறுப்பில் இருந்த இவர் திருக்குறளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். தாம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது தங்கக்காசில் திருவள்ளுவருக்கு உருவம் பொறிக்கச் செய்தவர். மேலும் குடிநீர்ப்பஞ்சம் ஏற்பட்ட போது குடிநீர்க் கிணறுகளை வெட்டித் திருக்குறளை கல்வெட்டில் பொறித்துப் பெருமை சேர்த்தவர்.

உரைப்பதிப்புகள்

திருக்குறள் தோன்றிய பத்து நூற்றாண்டுகள் கடந்த பிறகு, உரை எழுதுகின்ற முயற்சித் தொடங்கியது. குறளுக்கு உரை எழுதிய பழைய உரையாசிரியர்கள் பத்துபேர். தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர்,பரிதியர், பரிமேலழகர், திருமலையர், மல்லர், பரிபெருமாள், காலிங்கர் என்பவர்கள். இவர்களின் உரைகளில் இன்று நமக்குக் கிடைப்பன ஐவரின் உரைகளே. இதில் அதிகமான உரைப்பதிப்புகளைப் பெற்று சாதனை புரிந்தது பரிமேலழகர் உரைதான். இவர் உரையை முதன்முதலில் பதிப்பித்துப் பெருமை சேர்த்தவர், 1840இல் இராமானுச கவிராயர். இவ்வுரையைத் தொடர்ந்து பல பரிமேலழகர் உரைப்பதிப்புகளும், இவருடைய உரை தழுவிய பதிப்பு சரவண பெருமாளையர் பதிப்பும், ஆறுமுக நாவலர் பதிப்பும் மிகச் சிறப்பான இடத்தைப் பெறுகின்றன. அதேபோல் மணக்குடவர் உரையினை 1917 ஆம் ஆண்டு வ.உ.சிதம்பரனார் முதன்முதலில் அச்சிட்டுப் பெருமை பெற்றார். பின்னால், இவரே வ.உ.சி. உரை எனும் பெயரில் திருக்குறள் முழுமைக்கும் உரை எழுதினார். இவ்வுரை நூல், 2008 ஆம் ஆண்டு பாரி நிலையத்தாரால் வெளியிடப்பட்டது.

பரிமேலழகர் உரை நூலைதான் இன்று வரை பெரும்பாலானோர் பின்பற்றுகின்றனர். மிகச்சிறந்த உரை நூலாகவும் போற்றப்பெறுகிறது. ஆனால் எவ்வளவுக்கு எவ்வளவு பாராட்டப்பெற்றதோ / சிறப்புபெற்றதோ அவ்வளவுக்களவு மறுப்புரை நூல்களைப் பெற்றதும் இந்நூல் ஒன்றே. சமயச் சார்புடன் எழுதப்பட்ட இவ்வுரைநூல் இருபதாம் நூற்றாண்டில் பெருங்கண்டனத்துக்கு உள்ளாக்கியது.

தமிழக வரலாற்றில் திருக்குறள் எழுச்சிப் பெற்ற வரலாறும் ஒன்றுண்டு. 1949இல் தந்தை பெரியார் சென்னையில் திருக்குறளுக்கு என்று மிகப்பெரிய மாநாட்டை நடத்திக் காட்டினார். இம்மாநாட்டின் நோக்கமே, திருக்குறளை மதச்சார்பற்ற நூலாக அடையாளம் காட்டுவதுதான். திராவிடர்களுக்கென்றே(தமிழ்) தனிப்பெரும் நீதி நூல் திருக்குறள் ஒன்றுதான் என்று மக்களுக்கு உணர்த்த வேண்டுவதுதான். இந்த மாநாட்டிற்குப் பிறகுதான் திருக்குறளுக்கு ஏராளமான புத்துரைகள் தோன்றத் தொடங்கின. தமிழகமெங்கும் திருவள்ளுவர் கழகங்கள், இயக்கங்கள், மாநாடுகள் நடத்தப் பெற்றன. திருக்குறள் மக்கள் மத்தியில் மிகச்சிறந்த நூலாகப் பரவத் தொடங்கியது.

பகுத்தறிவு நோக்கில் திராவிட இயக்க உரையை முதன்முதலில்  திருக்குறளுக்கு எழுதியவர் புலவர் குழந்தை ஆவார். 1949இல் இதன் முதற்பதிப்பு வெளிவந்தது. இது பரிமேலழகர் உரையை மறுத்து எழுந்த நூலாகும். இதனைத் தொடர்ந்து சாமி சிதம்பரனார், பாரதிதாசன், கு.ச.ஆனந்தன் போன்றோர் பகுத்தறிவுச் சார்ந்த உரையை எழுதித் திருக்குறளை மாறுபட்ட கோணத்தில் அடையாளம் காட்டினார். இதனைத் தொடர்ந்துதான் இன்று திருக்குறளுக்கு, விரிவுரை (திரு.வி.க), தெளிவுரை(மு.வ), தெள்ளுரை(ச.சாம்பசிவன்), புதிய உரை (சுஜாதா), தமிழ் மரபுரை (பாவாணர்), வாழ்வியலுரை (இளங்குமரனார்), இயல்புரை (இரா.சாரங்கபாணி) எனப்பல நிலைகளில் உரை உருவாகி வெளிவர காரணமாயிற்று. இதோடு இன்று ஒரு வரி உரை, கவிதை வடிவ உரை,ஹைக்கூ கவிதை வடிவ உரை எனப் பல பரிசோதனை முயற்சிகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

நாம் இதுவரை பின்பற்றக் கூடிய திருக்குறள் நூலின் பொது அமைப்பு முறை பரிமேலழகர் வரிசை முறையினைதான். இவ்வரிசை அமைப்பு முறையை மாற்றி வெளியிட்டவர்களும் உண்டு. குறள் நூலின் பால் பகுப்பு, இயல்பகுப்பு, அதிகார வரிசை, குறள் வரிசை எனப்பல நிலைகளில் மாற்றி உரைகண்டவர்களும் உண்டு. அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் சிலர் வருமாறு. சுகாத்தியர் (1889), வ.உ.சிதம்பரனார், புலவர் குழந்தை, திரு.வி.க, கு.ச.ஆனந்தன், சாலமன் பாப்பையா, க.ப.அறவாணன் போன்றோர் ஆவர்.

சுகாத்தியர் எனும் பாதிரியார்(1889) திருக்குறள் மூல வடிவத்தையேத் திருத்தி கடும் எதிர்ப்புக்குள்ளானார்.

திருக்குறளுக்கு முதல் மொழிபெயர்ப்பு நூல் 1730இல் இலத்தீன் மொழியில் வீரமாமுனிவரால் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது. இதனைத்தொடர்ந்து ஃப்ரெஞ்சு, ஜெர்மன், ரஷ்ய, ஆங்கிலம்(40 மொழிபெயர்ப்புகள்), சீனம், ஜப்பான், சிங்களம், பர்மிய, கன்னடம், தெலுங்கு, உருது, மலையாளம், இந்தி எனப் பல மொழிகளில் வெளிவந்து கொண்டே உள்ளன.  நரிக்குறவர் மொழியான ‘ வாக்ரிபோலி ’ மொழியிலும் திருக்குறள் வெளிவந்துள்ளது சிறப்புச் செய்தியாகும்.

ஜனவரி, 2015.