சிறப்புப்பக்கங்கள்

நேற்று, இன்று, நாளை

தமிழ் பதிப்புலகம்

Staff Writer

கணவன் - மனைவி பிரச்னைக்கு அடுத்து நாட்டில் அதிக அளவில் பேசு பொருளாக இருப்பது எழுத்தாளர் - பதிப்பாளர் பிரச்னைதான். இவ்வளவு சிரமப்பட்டு இந்த புத்தகத்தை எழுதினேன். ஆனால் எனக்கு சரியான ராயல்டி கிடைக்கவில்லை என்பது எழுத்தாளரின் தரப்பு. இவ்வளவு முதலீட்டில் இத்தனை புத்தகம் அச்சிட்டோம். இவ்வளவுதான் விற்றிருக்கிறது. இன்னும் கடைகளுக்கு அனுப்பிய பணம் கைக்கு கிடைக்கவில்லை. பணம் வசூலிப்பதற்கு செய்யும் தொலைபேசி செலவு புத்தக வருமானத்தை தாண்டிவிடுகிறது, இதில் ராயல்டி எங்கிருந்து கொடுப்பது என்பது பதிப்பாளர்களின் வாதம். இலாபம் குறைவான அல்லது சில சமயங்களில் நஷ்டம் ஏற்படும் நிலையில் வியாபாரம் நடக்கும்போது இதுபோன்ற கருத்து வேறுபாடுகள் இயல்பானதுதான்.

அதிகமாக சந்தைப்படுத்தப்படும் பொருள்தான் அதிகமாக விற்பனையாகும். ஆனால் புத்தகத்தை சந்தைப்-படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவதில்லை. எடுக்கப்பட்டாலும் ஏனோதானோ என்று செய்யப்படு-கின்றன. அதேபோல் தமிழகத்திலுள்ள புத்தக விற்பனை நிலையங்கள் எண்ணிக்கையில் மிக மிக குறைவானவை. வாசகர்களின் தேவைக்கும் விற்பனை நிலையங்களுக்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. இதனை பதிப்பாளர்கள் விற்பனையாளர்களுடன் இணைந்து சரிசெய்யவேண்டியது இன்றைய தேவை. இதில் எழுத்தாளர், பதிப்பாளர் இருவருக்கும் சம பங்குள்ளது. இதற்கு சிறந்த உதாரணம் ஆங்கிலத்தில் எழுதும் எழுத்தாளர் அமிஷ் திரிபாதி. அவர் எழுதிய முதல் மூன்று நாவல்களின் விற்பனை 40 கோடி ரூபாயைத் தொட்டது. அவர் செய்த சந்தைப்படுத்தும் முயற்சிகள் இதற்குக் காரணம்.

டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கிலப் பத்திரிகையின் சராசரி விற்பனை 40 லட்சம் பிரதிகள் இருக்கலாம். அமிஷின் ஆங்கில நாவல் சு0 லட்சம் பிரதிகள் விற்கிறது. தமிழின் முதன்மையான செய்தித்தாள் 17 லட்சம் பிரதிகள் தினசரி விற்பனை ஆகும்போது நிச்சயமாக ஒரு தமிழ் நூலும் தாராளமாக 8.5 லட்சம் பிரதிகள் விற்பனையாகும் வாய்ப்பு இருக்கிறதல்லவா?

ஆங்கில எழுத்தாளர்கள் தங்களுடைய நூலைப் பிரபலப்படுத்த பதிப்பாளருடன் இணைந்து பல்வேறு உத்திகளைக் கையாளுகிறார்கள். நூலுக்கான டீசர் வெளியிடுவது, சமூக வலைதளங்களில் அதைப் பற்றிய விவாதங்களை முன்னெடுப்பது, வெவ்வேறு ஊர்களில் நூலின் அறிமுக நிகழ்ச்சிகளை நடத்துவது என்று மக்களிடம் புத்தகத்தைக் கொண்டு சேர்க்கிறார்கள். தமிழிலும் சில எழுத்தாளர்கள் இந்த முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்பதையும் இங்கே குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்! அத்துடன் அவர்கள் புத்தகம் விற்று வரும் வருமானத்தை மட்டுமே கணக்கில் கொண்டு அதை மதிப்பிடுவதில்லை. புத்தகம் எழுதி பிரபலமானவர் அந்த துறை தொடர்பான பேச்சாளராகவும், ஆலோசகராகவும் அந்த நூலினை முன்னிறுத்தி வெவ்வேறு துறைகளில் பரிணமிக்கிறார்கள். நம்மூரிலும் எழுத்தாளராக அறியப்பட்டு தொலைக்காட்சித் தொடருக்கு கதை, வசனம், சினிமா என்று பிரபலமானவர்களை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

தமிழ் பதிப்புத்துறை வளர்ந்த முறை, அதன் இன்றைய நிலை, எதிர் நோக்கியுள்ள சவால்களைப் பற்றி துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்துகளைத் தொகுத்து இந்த சிறப்பிதழை உருவாக்கியிருக்கிறோம். தமிழ்ப்பதிப்புத்துறையின் பல்வேறு கூறுகளை இந்த இதழ் கவனப்படுத்தும் என நம்புகிறோம்.

ஜுன், 2019.