சிறப்புப்பக்கங்கள்

நேருவுக்கு சவால் விட்ட ராஜாஜி

சுதந்திரா கட்சி

அசோகன்

நேரு ஒரு காங்கிரஸ் சர்வாதிகாரி; அவர் ஒரு கண்ணாடி மாளிகையில் வாழ்கிறார். எந்தப் பக்கம் திரும்பினாலும் தன் முகத்தையே காண்கிறார். சிறு எதிர்ப்பும் முளையிலேயே கிள்ளப்படுகிறது' தன் முன்னாள் சகாவான பிரதமர் ஜவஹர்லால் நேருவை 1950களின் இறுதியில் இப்படி விமர்சித்தார் எண்பது வயதை எட்டிய மூத்த தலைவராக இருந்த ராஜாஜி. தமிழக முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய பின்னர் அரசியலில் இருந்து ஓய்வு பெறவோ டெல்லியில் ஏதாவது முக்கியப் பதவிக்குச் செல்லவோ அவருக்கு வாய்ப்புகள் இருந்தன. ஆனால் ராஜாஜி ராமாயாணத்தை தொடராக எழுதினார். அரசியல் விவகாரங்களில் கருத்துகள் சொல்லிவந்தார். ஓய்வு எடுக்கப்போவதாக அவர் சொல்லவே இல்லை.

சுதந்தர இந்தியாவில் காங்கிரசின் கொள்கைகளும் அதன் போக்கும் பிடிக்காமல், காங்கிரசுக்கு மாற்றாக ஒரு கட்சியை உருவாக்கச் சொல்லி அகில இந்திய அளவில் பல தலைவர்கள் அவரிடம் கேட்டுவந்தார்கள். ‘ நான் நீண்டகாலம் காங்கிரஸ் காரனாக இருந்துவிட்டேன். நேருவுக்கு தனிப்பட்ட முறையில் மிக நெருக்கமானவன், அத்தோடு அரசியலில் தீவிரமாக செயல்படும் வயதையும் தாண்டிவிட்டேன்' என்று அவர்களிடம் சொல்லிவந்தார் ராஜாஜி.

நேருவின் கூட்டுறவுப்பண்ணை கொள்கை, காங்கிரசுக்கு அவரது மகள் இந்திரா காந்தி தலைவராக ஆனது, காங்கிரஸின் மூத்த தலைவர்கள் அதை விரும்பாவிட்டாலும் நேருவிடம் அதைச் சுட்டிக்காட்டாதது, நேருவைச் சுற்றி உருவான தனிமனித வழிபாடு உள்ளிட்ட மேலும் பல விஷயங்கள் ராஜாஜியைப் பாதித்தன.

காங்கிரசுக்கு புத்திபுகட்ட புதிய எதிர்க்கட்சி ஒன்றைத் தொடங்குமாறு பலரிடம் ராஜாஜியே ஆலோசனை கூறியபோதும் அவர்கள் அனைவரும் ராஜாஜியே அதற்கு தலைமை தாங்கவேண்டும் என்று பந்தை திருப்பி அடித்துவந்தனர்.

1959, ஜூன் 4. சென்னையில்  அனைத்து இந்திய விவசாயிகள் கூட்டமைப்பின் மாநாடு நடந்தது. மும்பையைச் சேர்ந்த முக்கிய காங்கிரஸ் தலைவர் மினூ மசானி அதில் உரையாற்றுவதாக இருந்தது. அன்று பல அகில இந்திய தலைவர்கள் சென்னையில் இருந்தனர். உட்லண்ட்ஸ் விடுதியில் ஒரு சந்திப்பு. அதில் மசானி. ரங்கா,  விபி மேனன் போன்ற பல தலைவர்கள் கலந்துரையாடினர். அவர்களுக்கெல்லாம் நேருவில் சோஷலிசக் கொள்கைகளில் ஆர்வம் இல்லை. ராஜாஜி இவர்களுடன் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டார்.  புதிய கட்சியைத் தொடங்குவது என அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. கட்சிக்கு என்ன பெயர் வைப்பது என்று முடிவாகவில்லை.

கன்சர்வேட்டிவ் கட்சி என பெயர்வைக்கலாம் என ராஜாஜி சொன்னார். அன்று சென்னைக்கு வந்திருந்த ஜெயப்ரகாஷ் நாராயணனை தலைவராக பொறுப்பேற்கச் சொன்னார் ராஜாஜி. ஆனால் தன் வாழ்த்தை மட்டும் தெரிவித்த ஜேபி, தலைமைப் பொறுப்புக்கு மறுப்புத் தெரிவித்தார்.

அன்று மாலை விவேகானந்தா கல்லூரியில் கூட்டம். மசானி மட்டும் பேசப்போகிறார் என்று எதிர்பார்த்து அமர்ந்திருந்த பார்வையாளர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். மேடையில் ராஜாஜியும் ஜேபியும் ஏறினர்.

ராஜாஜி பேச வந்தார். ‘இன்று காலை ஒரு கட்சி உருவாகி இருக்கிறது' என்று அவர் கூறியதும் கூட்டம் மேலும் ஆச்சரியமடைந்து கைத் தட்டியது. ‘அந்த கட்சியின் பெயர்..' என்று அவர் தொடங்கியபோது ரங்கா, விபி மேனன், மசானி ஆகிய தலைவர்கள் வியப்படைந்தனர். ஏனெனில் கட்சியின் பெயர் அதுவரை முடிவாகி இருக்கவில்லை.

‘சுதந்திரா கட்சி' என்று அவர் அறிவித்ததும் பலத்த கைத்தட்டல். வீட்டில் இருந்து கூட்ட அரங்குக்கு வாகனத்தில் வரும்போதே கட்சியின் பெயரை முடிவு செய்து விட்டிருந்தார் ராஜாஜி.

புதிய கட்சிக்கு ரங்கா தலைவர் ஆனார். மசானி பொதுச் செயலாளர்.  ராஜாஜி கட்சியின் நிறுவனராக செயல்பட்டு வழிகாட்டினார். சுதந்தர சந்தையை விரும்பிய தாராளமயவாதிகளும் காங்கிரஸின் கொள்கைகளுக்கு எதிரான விவசாய சங்கத் தலைவர்களும் சுதந்திரா கட்சியின் பின்னால் அணிவகுத்தனர். ‘இக்கட்சி, வலதுசாரி எதிர்வினையால் உருவானது' என்றனர் காங்கிரஸார்.  ‘ ராஜாஜிக்கு பழைய ஏற்பாடு ( Old testament) பிடிக்கும். எனக்கு புதிய ஏற்பாடு( New testament) பிடிக்கும்' என்று கிண்டல் செய்தார் ஜவஹர்லால் நேரு.

நேருவுடன் கொள்கை அடிப்படையில் விலகி நின்று கடுமையான மோதலில் ஈடுபட்டாலும் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பு கொண்டிருந்தனர். நேருவுடன் தான் இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்றை இறுதிநாள்வரை தன் படுக்கைக்கு அருகே ராஜாஜி வைத்திருந்தார்.

கட்சி தொடங்கிய பின்னர் முதல் முறை ராஜாஜி டெல்லிக்குச் சென்றபோது இரண்டாவது தளத்தில் இருந்த ஒரு வீட்டில் தங்கி இருந்தார். 70 வயதில் சுறுசுறுப்பாக இருந்த பிரதமர் நேரு அவரைக் காண படியேறிச் சென்றார். ‘எவ்வளவு இளமையாகிவிட்டீர்கள் என உங்களைப் பார்க்க வந்தேன்...' என்றார் ராஜாஜியிடம் ஆர்வத்துடன்.

சுதந்திரா கட்சி சந்தித்த முதல் மக்களவைத் தேர்தலில் (1962) 8 சதவீத வாக்குகளை பெற்றது. மக்களவையில் 25 இடங்கள் கிடைத்தன.  பல மாநில சட்டமன்றங்களில் கணிசமான இடங்களைப் பெற்றது. தமிழ்நாட்டில் கிடைத்தது என்னவோ 9 எம்.எல்.ஏக்கள்தான்!

1967 பொதுத்தேர்தலில் மக்களவையில் 44 இடங்களில் வென்று பிரதான எதிர்க்கட்சி ஆனதுதான் அக்கட்சியின் உச்சமாக அமைந்தது!

(கட்டுரையின் பல கருத்துகள், சம்பவங்கள் ராஜ்மோகன் காந்தி எழுதிய The Rajaji Story நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளன)